2017-18ஆம் நிதியாண்டிற்கு அரசிதழ் பதிவுபெறாத தகுதியுள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் (ஆர்.பி.எஃப். / ஆர்.பி.எஸ்.எஃப் ஊழியர்கள் நீங்கலாக) 78 நாள் ஊதியத்திற்கு இணையாக உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்குவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.2044.31 கோடி நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போனஸ் பெறுவதற்கான ஊதிய உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.7,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 கிடைக்கும். இந்த முடிவால் அரசிதழ் பதிவுபெறாத சுமார் 11.91 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்று தெரிகிறது.
மத்திய அமைச்சரவை முடிவின்படி ஒவ்வொரு ஆண்டும் தசரா / ஆயுத பூஜை விடுமுறை நாட்களுக்கு முன்னதாக, போனஸ் வழங்கப்படுவதுபோல், இந்த ஆண்டும் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும். 2017-18க்கு 78 நாட்களுக்கு இணையாக உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்கப்படுவது ரயில்வேயின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.