Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொரீஷியஸ் பிரதமர் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது பிரதமர் அளித்த பத்திரிகை செய்தி (மே 27, 2017)

மொரீஷியஸ் பிரதமர்  இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது  பிரதமர்  அளித்த பத்திரிகை செய்தி  (மே 27, 2017)


மேதகைமை வாய்ந்த பிரதமர் பிரவிந்த் ஜுக்னவுத் அவர்களே,

ஊடகத் துறையினரே

மதிப்புக்குரிய இருபாலோரே,

பிரதமர் பிரவிந்த் ஜுக்னவுத் மற்றும் அவருடன் வந்துள்ள குழுவினரை இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேதகமையாளரே, இந்த ஆண்டின் முற்பகுதியில் மொரீஷியஸின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதலாவது கடல்கடந்த பயணமாக இந்தியாவுக்கு வருவதற்கு நீங்கள் தேர்வு செய்ததில் நாங்கள் உண்மையில் பெருமைகொள்கிறோம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நமக்கு இடையில் பேணிப் பாதுகாத்து வந்துள்ள, மேம்படுத்தியுள்ள ஆழமான உறவுகளைப் பிரதிபலிப்பதாக உங்களுடைய பயணம் அமைந்துள்ளது. நமது பிணைப்புகள் அரசாங்கங்கள் என்ற வரையறைக்கு உட்பட்டவை அல்ல. நம்முடைய வேர்களைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்ளக்கூடிய நமது மக்கள் மற்றும் சமுதாயங்கள் என அது

பரவிக் கிடக்கிறது. காலம் மற்றும் தூரத்தைக் கடந்து நமது பிணைப்புகள் செழித்துள்ளன. இன்றைக்கு பலதரப்பட்ட துறைகளில் நமது நட்பை மேலும் பலப்படுத்தியுள்ளோம்.

நண்பர்களே,

பிரதமர் ஜுக்னவுத் உடன் நான் மேற்கொண்ட கலந்துரையாடல் இனியதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் அமைந்திருந்தது. மார்ச் 2015-ல் நான் மொரீஷியஸ் நாட்டுக்கு மேற்கொண்ட, நினைவில் நிற்கக் கூடிய பயணத்தை நினைவுபடுத்துவதாக எங்களது கலந்துரையாடல் இருந்தது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நான் மேற்கொண்ட முதலாவது பயணமாக அது இருந்தது. ஒத்துழைப்புக்கு பலமான திட்டங்களைத் தருவதாக அது அமைந்திருந்தது. நமது மதிப்புகள், நலன்கள் மற்றும் முயற்சிகளில் உள்ள பொதுவான அம்சங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அது இருந்தது.

நண்பர்களே,

நமது இருதரப்பு உறவுகளில் இன்றைக்கு நாங்கள் மற்றொரு பெரிய அடியெடுத்து வைத்துள்ளோம். இந்தியப் பெருங்கடலில், முதன்மை நிலையில் இருக்கும் அரசுகள் என்ற வகையில், நமது கடலோரங்களிலும் மற்றும் நமது பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியிலும் கடல்சார் பாதுகாப்பை கூட்டாக உறுதி செய்ய வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று பிரதமர் ஜுக்னவுத்தும் நானும் ஒப்புக்கொண்டோம். பொருளாதார வாய்ப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், நமது சமுதாயங்களில் வாழ்க்கை நிலையை பாதுகாப்பதற்கும், நமது மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும், இந்தியப் பெருங்கடலில் உள்ள அனைத்து வகையான ஆபத்துகளையும் சிறப்பாகக் கையாள வேண்டும் என்பதிலும் ஒப்புக் கொண்டோம். இதற்கு இந்திய – மொரீஷியஸ் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமானதாக உள்ளது.

பின்வருவனவற்றுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் :

• வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கடல் கொள்ளை;

• போதை மருந்து கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச் செல்வது;

• சட்டவிரோத மீன்பிடி தொழில், மற்றும்

• கடல்வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தும் இதர தவறான நடைமுறைகள்

இன்று ஏற்பட்ட இருதரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முடிவு காரணமாக, நமது பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் திறன்கள் பலப்படுத்தப்படும். அமைதியான மற்றும் பாதுகாப்பான கடல்சார் துறையை உருவாக்க நீர்வள வரைவியலில் பரவலான ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். டிரைடண்ட் திட்டத்தின் மூலம் மொரீஷியஸ் தனது திறனை மேம்படுத்திக் கொள்ளக் கூடிய மொரீஷியஸ் தேசிய கடலோரப் பாதுகாப்பு திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. மானிய உதவித் திட்டத்தின் கீழ், மொரீஷியஸுக்கு அளிக்கப்பட்ட கார்டியன் என்ற கடலோர பாதுகாப்பு கப்பலின் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

மொரீஷியஸ் உடன் பலமான வளர்ச்சிக்கான பங்கேற்பு நமது பங்கேற்பின் சிறப்பம்சமாக இருக்கிறது. மொரீஷியஸில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக பங்கேற்றிருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. மொரீஷியஸுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்தியா கடனாக அளிப்பது என இன்று ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், மொரீஷியஸின் வளர்ச்சியில் நமது பலமான மற்றும் தொடர்ந்த உறுதிப்பாட்டைக் காட்டும் நல்லதொரு உதாரணமாக உள்ளது. முன்னுரிமைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும். தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றங்களை பிரதமர் ஜுக்னவுத்தும் நானும் வரவேற்கிறோம். நம் இரு நாடுகளுக்கு இடையில் அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்களை உரிய காலத்தில் முடிப்பதற்கு இந்திய முழுமையான ஆதரவை அளிக்கும். இந்தத் திட்டங்கள் மொரீஷியஸின் பொருளாதாரத்தை துடிப்புமிக்கதாக ஆக்கி, நமது உறவுகளில் சிறந்த மாற்றங்களை உருவாக்கும். மொரீஷியஸுடன் தொழில் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடலின் போது நாங்கள் கவனம் செலுத்தினோம். மொரீஷியஸுடன் பன்முக திறன் கட்டமைப்பு திட்டங்களின் கீழ் எங்களது இப்போதைய கருத்துப் பரிமாற்றத்தில் தீவிர அம்சமாக இது உள்ளது. இந்தத் துறையில் எங்களது பரிமாற்றங்களை மேலும் பலப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

நண்பர்களே,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முக்கியத்துவம் குறித்து கவனத்தை ஈர்ப்பதில் பிரதமர் ஜுக்னவுத் வெளிப்படுத்திய தலைமைப் பண்பை நாங்கள் பாராட்டுகிறோம். மொரீஷியஸ் கையெழுத்திட்டு, ஏற்பளிப்பு செய்த சர்வதேச சூரியசக்தி கூட்டணி வரையறையானது, இந்தத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் பிராந்திய பங்கேற்பில் புதிய கதவுகளைத் திறந்துள்ளது.

நண்பர்களே,

மொரீஷியஸ் நாட்டின் தேசிய வாழ்வில் இந்திய பூர்வீக சமுதாயத்தினரின் இந்த பங்களிப்பில் நாங்கள் பெருமை அடைகிறோம். மொரீஷியஸ் நாட்டில் உள்ள தொழில் துறையினருடன் நமது தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கு, மொரீஷியஸ் நாட்டுக்கு மட்டும் விசேஷமாக உருவாக்கப்பட்ட OCI கார்டுகளை, கடந்த ஜனவரியில் இந்தியா அறிவித்தது. நமது நாட்டு விமான நிறுவனங்கள், புதிய நகரங்களுக்கு தங்களுடைய பயண ஏற்பாடுகளை விரிவாக்கம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. நம் இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா வளர்ச்சிக்கும், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் வளர்வதற்கும் இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நண்பர்களே,

இருதரப்பு பிரச்சினைகளைத் தாண்டி, பிராந்திய மற்றும் உலகளாவிய பல பிரச்சினைகள் பற்றி பிரதமர் ஜுக்னவுத்தும் நானும் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். பலதரப்பு களங்களில் பரஸ்பரம் ஆதரவு அளிப்பதைத் தொடர்வது என்றும், நம்முடைய பொதுவான சவால்கள் மற்றும் நலன்கள் சார்ந்த விஷயங்களில் நெருக்கமாக ஒத்துழைப்பைத் தொடரவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். பிரதமர் ஜுக்னவுத்தின் பயணம், எங்களின் பாரம்பரியமான தொடர்புகள் என்ற அடித்தளத்தின் மீது எங்கள் உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதில் பங்களிப்பு செய்வதாக இருக்கும். எங்கள் உறவின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் ஆதரவுக்காக பிரதமர் ஜுக்னவுத்துக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இன்று நாங்கள் எடுத்த முடிவுகளை, வரக்கூடிய மாதங்களில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரும்போது அவருடன் நெருக்கமாக செயல்படும் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை, பிரதமர் ஜுக்னவுத்துக்கு கனிவான வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் அவருடைய பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன்.

நன்றி.

மிகுந்த நன்றி.

*****