மேதகு பிரதமர் டாக்டர் நவீனசந்திர ராம்கூலம் அவர்களே,
திருமதி வீணா ராம்கூலம் அவர்களே,
துணைப் பிரதமர் பால் பெரெங்கர் அவர்களே,
மதிப்பிற்குரிய மொரீஷியஸ் அமைச்சர்களே,
மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
முதலாவதாக, பிரதமரின் உணர்ச்சிகரமான மற்றும் ஊக்கமளிக்கும் எண்ணங்களுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரமாண்டமான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக மொரீஷியஸ் பிரதமருக்கும், அரசு மற்றும் அதன் மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மொரீஷியஸ் பயணம் என்பது ஒரு இந்தியப் பிரதமருக்கு எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வெறும் ராஜாங்க ரீதியான பயணம் மட்டுமல்ல, குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. மொரீஷியஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்தே இந்த நெருக்கத்தை நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் சொந்தம் என்ற உணர்வு உள்ளது. நெறிமுறைகளின் தடைகள் இல்லை. மொரீஷியஸ் தேசிய தினத்தின் சிறப்பு விருந்தினராக நான் மீண்டும் அழைக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது. இந்தத் தருணத்தில், 140 கோடி இந்தியர்களின் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் அவர்களே,
மொரீஷியஸ் மக்கள் உங்களை நான்காவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு, இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்களுக்கு சேவை செய்ய என்னைத் தேர்ந்தெடுத்தனர். இந்தப் பதவிக்காலத்தில் உங்களைப் போன்ற மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவருடன் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது எதிர்பாராத நன்மை என்று நான் கருதுகிறேன். இந்தியா-மொரீஷியஸ் இடையேயான உறவை மேலும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் பெரும் அதிர்ஷ்டம் நமக்கு கிடைத்துள்ளது. இந்தியா, மொரீஷியஸ் இடையேயான ஒத்துழைப்பு நமது வரலாற்று உறவுகளுடன் முற்றுப் பெறவில்லை. இது பகிரப்பட்ட மதிப்புகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பிரகாசமான எதிர்காலம் குறித்த பொதுவான பார்வை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். உங்களது தலைமை எப்போதும் நமது உறவுகளை வழிநடத்தி வலுப்படுத்தி வருகிறது. இந்தத் தலைமையின் கீழ், எங்கள் கூட்டாண்மை அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வலுப்பெற்று விரிவடைந்து வருகிறது. மொரீஷியஸின் வளர்ச்சிப் பயணத்தில் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க கூட்டாளியாக இருப்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. மொரீஷியஸின் ஒவ்வொரு பகுதியிலும் நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் நாம் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம். திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பின் விளைவுகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் தெளிவாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு சவாலான தருணத்திலும், அது இயற்கைப் பேரழிவாக இருந்தாலும் சரி அல்லது கோவிட் பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, நாம் குடும்பம் போல ஒன்றாக இருந்தோம். இன்று நமது வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் விரிவான கூட்டாண்மை வடிவத்தை எடுத்துள்ளன.
நண்பர்களே,
மொரீஷியஸ் நமது நெருங்கிய கடல்சார் அண்டை நாடு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முக்கிய கூட்டாளி ஆகும். கடந்த முறை மொரீஷியஸுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது, தொலைநோக்கு சாகர் திட்டத்தைப் பகிர்ந்து கொண்டேன். இது பிராந்திய வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த உணர்வுடன், ஜி20 தலைமைப் பொறுப்பின் போது உலகளாவிய தென் பகுதியை மையமாகக் கொண்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்தோம். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு மொரீஷியஸுக்கு அழைப்பு விடுத்தோம்.
நண்பர்களே,
நான் ஏற்கெனவே கூறியது போல, இந்தியா மீது உரிமை கொண்ட ஒரு நாடு உலகில் உண்டென்றால் அது மொரீஷியஸ்தான். எங்கள் உறவுக்கு எல்லைகள் இல்லை. நமது உறவுகள் குறித்த நமது நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுக்கு எல்லை கிடையாது. எதிர்காலத்தில், நமது மக்களின் வளத்திற்காகவும், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் நாம் தொடர்ந்து ஒத்துழைப்போம். இந்த உணர்வுடன், பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம், திருமதி வீணா ஜி ஆகியோரின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், மொரீஷியஸ் மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காகவும், இந்தியா, மொரீஷியஸ் இடையேயான வலுவான நட்புறவுக்காகவும் நமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
ஜெய் ஹிந்த்!
வாழ்க மொரீஷியஸ்!
***
(Release ID: 2110567)
TS/IR/RR/KR
My remarks during the banquet hosted by PM @Ramgoolam_Dr of Mauritius. https://t.co/l9bg6Q70iC
— Narendra Modi (@narendramodi) March 11, 2025