Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொரிஷியசில் மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவமனை கூட்டு திறப்பு விழா


பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரிஷியஸ் பிரதமர் மாண்புமிகு திரு பிராவிந்த் ஜுகுநாத் ஆகியோர் இன்று (03.10.2019) மொரிஷியசில் மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் புதிய காது, மூக்கு, தொண்டை மருத்துவமனையை கூட்டாக காணொலி இணைப்பு மூலம் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரிஷியசில் மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்துவதில் மெட்ரோ ரயிலும், மருத்துவ வசதியும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறினார். இருநாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இவை உதவும் என்றும் அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி இந்தியா மற்றும் மொரிஷியஸ் தலைவர்களை இந்துமாக்கடலைத் தாண்டி காணொலி மூலம் இணைக்கும் முதலாவது தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலகு ரக ரயில் போக்குவரத்தான மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம், மொரிஷியசின் மக்கள் போக்குவரத்தை திறம்பட்ட, விரைவான, தூய்மையான பொது போக்குவரத்துத் திட்டமாக மாற்றிவிடும் என்று பிரதமர் கூறினார். அதிநவீன காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை தரமான மருத்துவ வசதியை குறிப்பிடத்தக்க அளவு விரிவாக்கும் என்றும், இதனால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் கூறினார். மேலும், மொரிஷியசில் இந்த மருத்துவமனை, முதலாவது காகிதம் இல்லாத மின்னணு மருத்துவமனையாக அமையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஜுகுநாத், மொரிஷியசில் பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளித்து வருவது போல இந்தத் திட்டங்களுக்கு இந்தியா அளித்துள்ள உதவியை பெரிதும் பாராட்டுவதாகக் கூறினார். இந்த இரண்டு மக்கள் சேவைத் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற உதவிய சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

மொரிஷியசில் சிறுநீரக மருத்துவப் பிரிவு, மருத்துவ கிளினிக்குகள், மண்டல மருத்துவ மையங்கள் ஆகியவற்றை மானிய உதவி மூலம் கட்டுவதற்கு இந்தியா முடிவெடுத்திருப்பதாகவும் பிரதமர் திரு மோடி தெரிவித்தார்.

இருநாட்டு மக்களின் நலனுக்கான மற்றும் இந்துமாக்கடல் பகுதியிலும் உலகின் இதர பகுதிகளிலும், அமைதி மற்றும் வளத்துக்கான இந்தியா- மொரிஷியஸ் ஒத்துழைப்பு முயற்சிகளை இரு தலைவர்களும் பாராட்டினார்கள்.