Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொசாம்பிக் அதிபர் மேதகு ஃபிலிப் ஜெசின்டோ நியூசி-யுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு.


மொசாம்பிக் அதிபர் மேதகு ஃபிலிப் ஜெசின்டோ நியூசி-யுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்வதால், இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த சுகாதார நெருக்கடி சமயத்தில், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மொசாம்பிக்-குக்கு ஆதரவு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் எடுத்துரைத்தார். சுகாதாரம் மற்றும் மருந்து விநியோகத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு இருந்து வருவதற்கு அதிபர் நியூசி வரவேற்பு தெரிவித்தார்.

மொசாம்பிக்-கில் மேற்கொள்ளப்படும் இந்திய முதலீடுகள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட பிற முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் ஒட்டுமொத்தக் கூட்டு நடவடிக்கைகளில் முக்கியத் தூணாக மொசாம்பிக் திகழ்வதாக பிரதமர் குறிப்பிட்டார். மொசாம்பிக்கின் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள மிகப்பெரும் முதலீடுகளை பிரதமர் குறிப்பிட்டார்.

ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ந்து வருவதற்கு இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மொசாம்பிக்-கின் வடக்குப்பகுதியில் அதிகரித்துவரும் தீவிரவாத சம்பவங்கள் குறித்த அதிபர் நியூசி-யின் கவலையை பிரதமர் பகிர்ந்துகொண்டார். மொசாம்பிக்கின் காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படைகளின் திறனை அதிகரிப்பது உள்ளிட்டவற்றின் மூலம், அனைத்து வகையான ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

மொசாம்பிக்கில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மொசாம்பிக் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தற்போதைய பெருந்தொற்று காலத்தில், இருதரப்புக்கும் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்துவது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

****

VRRK/KP