Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேம்படுத்தப்பட்ட இந்திய-ஆஸ்திரிய கூட்டாண்மை குறித்த கூட்டறிக்கை


பிரதமர் திரு. கார்ல் நெஹாமர் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜூலை 9 முதல் 10 வரை ஆஸ்திரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின்போது, ஆஸ்திரிய அதிபர் மேதகு திரு அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனை சந்தித்த அவர்பிரதமர் திரு நெஹாமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா செல்வது இதுவே முதல் முறையாகும். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75 வது ஆண்டாகும்.

ஜனநாயகம், சுதந்திரம், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகள், ஐக்கிய நாடுகள் சாசனத்தை மையமாகக் கொண்ட விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு, பகிரப்பட்ட வரலாற்று இணைப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவுகள் ஆகியவை வளர்ந்து வரும் மேம்பட்ட கூட்டாண்மையின் மையமாக உள்ளன என்று இருநாட்டு பிரதமர்களும் வலியுறுத்தினர். மேலும் நிலையான, வளமான மற்றும் நீடித்த உலகை உருவாக்க இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் தங்களது முயற்சிகளைத் தொடர அவர்கள் உறுதிபூண்டனர்.

இரு நாடுகளும் தங்களது இருதரப்பு கூட்டாண்மையை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன என்பதை திரு நெஹாமர் மற்றும் திரு மோடி ஆகியோர் அங்கீகரித்தனர். இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உத்திசார் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்த நோக்கத்திற்காக, நெருக்கமான அரசியல் மட்ட பேச்சுவார்த்தைகள் தவிர்த்து, புதிய முன்முயற்சிகள் மற்றும் கூட்டுத் திட்டங்கள், கூட்டு தொழில்நுட்ப மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள், பசுமை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மேலாண்மை, வாழ்க்கை அறிவியல், இயக்கம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய எதிர்காலம் சார்ந்த இருதரப்பு நீடித்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை அவர்கள் வலியுறுத்தினர்.

சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் வளத்திற்கு பங்களிக்க இந்தியா, ஆஸ்திரியா போன்ற ஜனநாயக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை திரு மோடியும், திரு நெஹாமரும் அடிக்கோடிட்டுக் காட்டினர். இந்தச் சூழலில், சமீப ஆண்டுகளில் தங்களது வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான வழக்கமான மற்றும் கணிசமான ஆலோசனைகளை அவர்கள் குறிப்பிட்டனர். பல்வேறு துறைகளில் மேம்பட்ட நிறுவன உரையாடலின் போக்கை பராமரிக்க தங்கள் அதிகாரிகளை அவர்கள் ஊக்குவித்தனர்.

ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா / மத்திய கிழக்கு நாடுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஆழமான மதிப்பீடுகளை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர். அமைதியை நிலைநாட்டுதல், ஆயுத மோதல்களைத் தவிர்த்தல், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா சாசனத்தை கடுமையாகப் பின்பற்றுதல் ஆகியவற்றுக்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இரு நாடுகளின் அணுகுமுறைகளில் உள்ள பரஸ்பர அம்சங்களை அவர்கள் குறிப்பிட்டனர்.

உக்ரைன் போரைப் பொறுத்தவரை, இரு தலைவர்களும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா சாசனத்திற்கு இணங்க ஒரு அமைதியான தீர்வை எளிதாக்குவதற்கான எந்தவொரு கூட்டு முயற்சிக்கும் ஆதரவு தெரிவித்தனர். உக்ரைனில் ஒரு விரிவான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கு அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதும், மோதலில் இரு தரப்பினருக்கும் இடையே நேர்மையான மற்றும் ஆர்வமுள்ள ஈடுபாடும் தேவை என்று இரு தரப்பினரும் நம்புகின்றனர்.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கும் தங்களது தெளிவான கண்டனத்தை மீண்டும் வலியுறுத்திய இரு தலைவர்களும், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பவர்கள், திட்டமிடுபவர்கள், ஆதரவு தெரிவிப்பவர்கள் அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த நாடும் பாதுகாப்பான புகலிடத்தை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தினர். ஐ.நா. பாதுகாப்பு சபையின் தடைகள் குழுவால் பட்டியலிடப்பட்டுள்ள குழுக்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் உட்பட அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க இரு தரப்பினரும் அழைப்பு விடுத்தனர்.

2023 செப்டம்பரில் தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டையொட்டி இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம்  தொடங்கப்பட்டதை இரு தலைவர்களும் நினைவு கூர்ந்தனர். இந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்முயற்சிக்குத் தலைமை தாங்கியதற்காக திரு. நரேந்திர மோடிக்கு திரு நெஹமர் பாராட்டு தெரிவித்தார். இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே வர்த்தகம் மற்றும் எரிசக்தியின் சாத்தியக்கூறுகள் மற்றும் முதலீட்டை கணிசமாக மேம்படுத்தும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டணியை ஒரு உத்திசார் நோக்கமாக இரு தலைவர்களும் அடையாளம் கண்டனர். இந்தச் சூழலில், இந்தப் பயணத்தின்போது பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் பங்கேற்புடன் முதலாவது உயர்மட்ட இருதரப்பு வர்த்தக அமைப்பு வியன்னாவில் கூட்டப்பட்டிருப்பதை அவர்கள் வரவேற்றனர். வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய இரு தலைவர்களும், பல்வேறு துறைகளில் புதிய மற்றும் மிகவும் துடிப்பான கூட்டணியை உருவாக்க பணியாற்றுமாறு வர்த்தக பிரதிநிதிகளை ஊக்குவித்தனர்.

இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் ஆராய்ச்சி, அறிவியல் உறவுகள், தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் புதுமைப் படைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் அங்கீகரித்ததுடன், பரஸ்பர நலனுக்காக இதுபோன்ற அனைத்து வாய்ப்புகளையும் கண்டறிய அழைப்பு விடுத்தனர். புதிய வர்த்தகம், தொழில் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மை மாதிரிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், வணிகமயமாக்கவும் வலுவான ஒத்துழைப்பின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

எரிசக்தி மாற்ற சவால்களை எதிர்கொள்வதற்காக ஆஸ்திரிய அரசின் ஹைட்ரஜன் உத்தி மற்றும் இந்தியா தொடங்கியுள்ள தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் ஆகியவற்றின் பின்னணியில் ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளை அவர்கள் குறிப்பிட்டனர். புதுப்பிக்கத்தக்க / பசுமை ஹைட்ரஜனில் இரு நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு இடையே விரிவான கூட்டாண்மைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தூய்மையான போக்குவரத்து, தண்ணீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிற தூய்மையான தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான பல்வேறு சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்களை தலைவர்கள் அடையாளம் கண்டனர். இந்தத் துறைகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொது மற்றும் தனியார் நிறுவனங்களை அவர்கள் ஊக்குவித்தனர்.

கலாச்சார பரிமாற்றங்களின் நீண்ட பாரம்பரியத்தை, குறிப்பாக ஆஸ்திரிய இந்தியவியலாளர்கள் மற்றும் ஆஸ்திரியாவுடன் ஈடுபட்ட முன்னணி இந்திய கலாச்சார ஆளுமைகளின் பங்களிப்பை இரு தலைவர்களும் பாராட்டினர். யோகா மற்றும் ஆயுர்வேதத்தில் ஆஸ்திரியர்கள் ஆர்வம் அதிகரித்து வருவதையும் தலைவர்கள் குறிப்பிட்டனர். இசை, நடனம், இசைநாடகம், நாடகம், திரைப்படங்கள், இலக்கியம், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் இருதரப்பு கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அவர்கள் வரவேற்றனர்.

பன்முகத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளுக்கான தங்களது உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். வழக்கமான இருதரப்பு ஆலோசனைகள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒருங்கிணைப்பு மூலம் இந்த அடிப்படைக் கொள்கைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தங்களின் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். 2027-28 காலகட்டத்தில் ஆஸ்திரியாவின் யு.என்.எஸ்.சி வேட்பாளருக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது, அதே நேரத்தில் 2028-29 காலகட்டத்தில் இந்தியாவின் வேட்புமனுவுக்கு ஆஸ்திரியா தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

இந்தப் பயணத்தின்போது ஆஸ்திரிய அரசும், மக்களும் அளித்த சிறப்பான உபசரிப்புக்காக திரு நெஹாமருக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவுக்கு வருகை தருமாறு திரு நெஹாமருக்கு பிரதமர் விடுத்த அழைப்பை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032251

***

VL/BR/KV