Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மெக்சிகோவில் பிரதமர் பயணம் மேற்கொண்ட போது வெளியிடப்பட்ட இந்தியா­மெக்சிகோ கூட்டறிக்கை (ஜூன் 08 2016)

மெக்சிகோவில் பிரதமர் பயணம் மேற்கொண்ட போது வெளியிடப்பட்ட இந்தியா­மெக்சிகோ கூட்டறிக்கை (ஜூன் 08 2016)


1. ஐக்கிய மெக்சிக மாநிலங்கள் சார்பாக அதன் அதிபர் மாண்புமிகு திரு. என்ரிக் பினா நியேட்டோ அவர்கள் அழைப்பின் பேரில் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி மெக்சிகோவில் 2016, ஜூன் 8­ம் தேதிஅரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2015 செப்டம்பர் 28­ம் தேதி நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 70­வது வழக்கமான கூட்டத்தின் போது இந்த இரண்டு தலைவர்களும் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையிலான நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் பயணம் அமைந்தது.

2. 21­ம் நூற்றாண்டுக்கான இந்தியா­மெக்சிகோ முன்னுரிமை பங்களிப்பின் திட்டங்களை வரையறை செய்வதற்கான வாய்ப்பாக இந்தப் பயணத்தை இருதலைவர்களும் அங்கீகரித்தனர். இதன்மூலம் பொருளாதாரம், அறிவியல்தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் வளர வாய்ப்பு ஏற்படும் என்றும், நீண்டகால அரசியல் பொருளாதார பாதுகாப்பு இலக்குகள் தொடர்பான விரிவான கருத்து ஒருமைப்பாட்டுக்கான மிக முக்கிய பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் இரு தலைவர்களும் ஏற்றும் கொண்டனர்.

3. மெக்சிகோவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கென நடைபெறும் அமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து அதிபர் திரு என்ரிக் பினா நியேட்டோ பிரதமரிடம் விவரித்தார். தமது பங்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய மக்களின் பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத்தர மேம்பாடு ஆகியவற்றில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கினார்.

இதுதொடர்பாக இரு தலைவர்களும்

அரசியல் பேச்சு வார்த்தை தொடர்பாக

4. 2016­ம் ஆண்டில் மெக்சிகோவில் நடைபெற உள்ள 7­வது மெக்சிகோ ­ இந்தியா கூட்டுக்குழு கூட்டத்தின் கட்டமைப்புக்கு உகந்த 21­ம் நூற்றாண்டுக்கான முன்னுரிமை பங்களிப்பு தொடர்பான கால இலக்குடன் கூடிய திட்ட வரைபடம் உருவாக்க இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டனர்.

5. 2016­ம் ஆண்டின் பிற்பாதியில் மெக்சிகோவில் நடைபெற உள்ள விஞ்ஞான தொழில்நுட்பம் சார்ந்த ஆறாவது கூட்டுக்குழு கூட்டம், வர்த்தகம், முதலீடு, கூட்டுறவு சார்ந்த நான்காவது உயர்நிலைக் குழு கூட்டம் ஆகியவற்றை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டனர்.

6. ஒருமைப்பாடான விரிவான திட்டத்தின் அடிப்படையில் ஒத்துழைப்பு அடித்தளத்தை இருநாடுகளும் வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை மதிப்பீடு செய்யவும், இருதரப்பு உறவுகள் அலுவல் பட்டியலை வலுப்படுத்தும் வகையில் புதிய நோக்கங்களையும், கருத்துக்களையும் உருவாக்கவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.

7. லத்தீன் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் சமுதாயம், ( CELAC ) பசிபிக் கூட்டணி ஆகியவற்றின் அரசியல் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பரஸ்பரம் அக்கறையுள்ள வட்டார பிரச்சினைகள் குறித்து விரிவான கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.

பொருளாதார பங்களிப்பு

8. பொருளாதார பரிவர்த்தனையை பல தரப்பு தன்மைக் கொண்டதாக மாற்றுவதன் மூலம் இத்துறையில் உண்மையான திறனுக்கு ஏற்ற நிலைக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

9. இருநாடுகளுக்கும் இடையே மேலும் பெரிய அளவு தொடர்புகளை மேம்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், மருந்து பொருட்கள் உற்பத்தி, மின்சாரம், மோட்டார் வாகனத்துறை, தகவல் தொலைத் தொடர்பு தொழில் நுட்பம், விவசாயம், உணவுப் பதனீடு மற்றும் அதுசார்ந்தத் துறைகளில் அடிப்படை வசதி குறித்த ஒத்துழைப்புக்கு ஊக்கமளித்தல் வலியுறுத்தப்பட்டது.

10. மின்சாரத் துறையில் இந்திய நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள மெக்சிகோவில் முதலீட்டுக்கான ஆர்வ வளர்ச்சியை இருதரப்பும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டது. அதேபோல இந்தியச் சந்தையில் மெக்சிகோ நிறுவனங்களுக்குள்ள வாய்ப்புகளும் உணரப்பட்டன.

11. சூரியசக்தி மின்சார உற்பத்தித் துறையில் முதலீட்டை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு முக்கியமானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியின் நோக்கங்களை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய இருதரப்பும் உடன்பட்டன.

12. பண்பாடு, கல்வி, சுற்றுலா ஆகிய துறைகளில் இருதரப்பு
இணைப்புகளை வலுப்படுத்தவும், புரிந்துணர்வை மேம்படுத்தவும் இருநாட்டு மக்களுக்கும் இடையே பரிவர்த்தனையை உயர்த்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இருதரப்பு ஒத்துழைப்பு

13. பொதுவான நோக்கங்களை பகிர்ந்து கொண்டுள்ள மெக்சிகோவின் தேசிய டிஜிட்டல் அணுகுமுறைத் திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வாய்ப்புகளை வரவேற்று இருதரப்பும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டன.

14. தொலையுணர்வு, பேரிடர் தடுப்பு தொடர்பான முன் எச்சரிக்கை, மெக்சிகோ விண்வெளி அமைப்பு மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான செயற்கைக்கோள் செலுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவிலும், மெக்சிகோவிலும் உள்ள விண்வெளி சார்ந்த ஆதாரங்களை திறம்பட பயன்படுத்திக் கொள்வது, விண்வெளி ஆய்வு, புவி ஆய்வு, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பினை இருதரப்பும் வரவேற்றன.

15. இருநாடுகளும் இதர வெளிநாடுகளில் அதிக அளவிலான குடியேறிய மக்களைக் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு இரு தலைவர்களும் கருத்து, தகவல் பரிமாற்றம் மற்றும் கட்டமைப்புகள், சங்கங்கள், தனிநபர்கள் குறித்த சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துக் கொள்ளவும் இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா, மெக்சிகோ நாட்டவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுப்பது என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

உலக விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை

16. இருநாடுகளுக்கும் ஏற்புடைய அணுஆயுதக் குறைப்பு, அணுஆயுதப் பரவல் தடுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து பாடுபடுவது என உறுதியேற்கப்பட்டது. சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்த முயற்சி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

17. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும். வகைகளிலும் வலுவாக கண்டனம் செய்து எதிர்ப்பது என்ற உறுதிப்பாடு வலியுறுத்தப்பட்டது.

18. ஐ.நா.வை மத்தியமாகக் கொண்ட திறம்பட்ட பலதரப்பு முறையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விரிவான சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான நடைமுறையை தொடர்ந்து ஆதரிப்பது என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

19. ஜி­20 நாடுகளில் பங்கேற்பதன் அடிப்படையில் ஏற்பட்டுள்ள பலனுள்ள குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பையும் இருநாடுகளும் உணர்ந்து கொண்டன.

20. பாரீஸ் நகரில் 2015 டிசம்பரில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது குறித்து இருநாடுகளும் மன நிறைவு தெரிவித்தன. 2016 ஏப்ரல் 22­ம் தேதி பாரீஸ் உடன்பாட்டில் இருநாடுகளும் கையெழுத்திட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாரீஸ் உடன்பாட்டை கூடிய விரைவில் அங்கீகரிப்பதில் தங்கள் உறுதிப்பாட்டை இருநாடுகளும் வெளிப்படுத்தின. இருநாடுகளிலும் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மேம்பாட்டுச் சவால்களை சந்திப்பதில் உறுதிப்பாட்டையும் இருநாடுகளும் வெளியிட்டன.

21. அடுத்த சில ஆண்டுகளில் மெக்சிகோவில் மீண்டும் ஒருமுறை அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அதிபர் திரு என்ரிக் பினா நியேட்டோ அழைப்பு விடுத்தார். அதேபோல, இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள வருமாறு அதிபர் திரு பினா நியேட்டோவுக்கு பிரதமர் திரு மோடி அழைப்பு விடுத்தார். இந்தப் பயணங்களுக்கான தேதிகள் தூதரக வழிமுறைகள் மூலம் இறுதி செய்யப்படும் என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.