Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின்” வெற்றிகரமான அமல்படுத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

“மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின்” வெற்றிகரமான அமல்படுத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


மத்திய அமைச்சரவையின்  எனது நண்பர் திரு. அமித் ஷா அவர்களே, சண்டிகர் நிர்வாகி திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, மாநிலங்களவை உறுப்பினர் திரு சத்னம் சிங் சந்து அவர்களே, ஏனைய பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே, வணக்கம்!

வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்துடன் நாடு முன்னேறி வரும் நேரத்தில், நமது அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வேளையில், அரசியலமைப்பு கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இந்திய நியாயச் சட்டத்தின் தொடக்கம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இந்தத் தருணத்தில், இந்திய நியாயச் சட்டம் மற்றும் இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதற்காக அனைத்து குடிமக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், சண்டிகர் நிர்வாகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,
புதிய இந்திய நியாயச் சட்டம், விரிவானது மட்டுமல்ல, விரிவான செயல்முறையின் மூலம் உருவாக்கப்பட்டதும் கூட. இது பல அரசியலமைப்பு மற்றும் சட்ட நிபுணர்களின் கடின உழைப்பை உள்ளடக்கியது. உள்துறை அமைச்சகம் 2020 ஜனவரியில் இது குறித்த பரிந்துரைகளைக் கோரியது. நாட்டின் தலைமை நீதிபதிகளின் வழிகாட்டுதலும் உள்ளீடும் குறிப்பிடத்தக்கவை. நம் நாடு 1947-இல் சுதந்திரம் பெற்றது. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட பிறகு, நமது தேசம் இறுதியாக சுதந்திரம் பெற்ற போது, எண்ணற்ற அர்ப்பணிப்புள்ள தனிநபர்களின் பல தலைமுறைகளின் காத்திருப்பு மற்றும் தியாகங்களுக்குப் பிறகு சுதந்திரத்தின் விடியல் வந்தபோது, ஆங்கிலேயர்கள் வெளியேறியதோடு, அவர்களின் அடக்குமுறை சட்டங்களும் முடிவுக்கு வரும் என்று மக்கள் நம்பினர். 

1860-இல், ஆங்கிலேயர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தை (ஐ.பி.சி) அறிமுகப்படுத்தினர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் இந்திய சாட்சியச் சட்டத்தைக் கொண்டு வந்தனர், அதைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி) கட்டமைப்பைக் கொண்டு வந்தனர். இந்த சட்டங்களின் பின்னணியில் உள்ள முதன்மை நோக்கமும் மனநிலையும் இந்தியர்களைத் தண்டிப்பதும், அடிமைப்படுத்துவதும், அவர்கள் தொடர்ந்து அடிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகும், பல தசாப்தங்களாக, நமது சட்டங்கள் இந்த தண்டனை கட்டமைப்பு மற்றும் தண்டனை மனநிலையைச் சுற்றியே இருந்தன. காலப்போக்கில் சிறிய சீர்திருத்தங்கள் முயற்சிக்கப்பட்டாலும், இந்த சட்டங்களின் அடிப்படைத் தன்மை மாறாமல் இருந்தது. இந்த காலனித்துவ மனநிலை பாரதத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பயணத்திற்கு கணிசமாக தடையாக இருந்தது.

நண்பர்களே,
காலனித்துவ மனநிலையிலிருந்து நாடு விடுபட வேண்டும், தேசத்தின் திறன்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கி இயக்கப்பட வேண்டும். இதற்கு ஒரு தேசிய முன்னோக்கு அவசியம். அதனால்தான், ஆகஸ்ட் 15 அன்று, அடிமைத்தன மனநிலையிலிருந்து தேசத்தை விடுவிப்பதற்கான தீர்மானத்தை செங்கோட்டையிலிருந்து நான் முன்வைத்தேன். தற்போது இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்(நகரிக் சன்ஹிதா) வாயிலாக நாடு இந்தத் திசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. “மக்களின், மக்களால், மக்களுக்காக” என்ற கோட்பாட்டை நமது நீதி அமைப்பு வலுப்படுத்துகிறது, இது ஜனநாயகத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது.

நண்பர்களே,

புதிய சட்டங்கள், ஒவ்வொரு துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன், நாட்டின் முன்னேற்றத்தையும் துரிதப்படுத்தும். முன்பு ஊழலுக்கு எரியூட்டி வந்த சட்ட இடையூறுகள் இப்போது குறைக்கப்படும். முன்னதாக, பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கினர், ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்களில் சிக்கிக் கொள்வார்கள் என்று அஞ்சினர். இந்த அச்சங்கள் நீங்கினால், முதலீடுகள் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும்.

ஒரு நாட்டின் வலிமை அதன் குடிமக்களிடம் உள்ளது, குடிமக்களின் வலிமை சட்டத்தில் உள்ளது. சட்டத்தின் மீதான இந்த அர்ப்பணிப்பு ஒரு பெரிய தேசிய சொத்தாகும். சட்டத்தின் மீதான இந்த நம்பிக்கை அப்படியே இருப்பதை உறுதி செய்வது நமது கூட்டுப் பொறுப்பாகும். ஒவ்வொரு துறை, நிறுவனம், அதிகாரி மற்றும் காவல்துறை பணியாளர்கள் புதிய விதிகளையும் அவற்றின் நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். 

மிகவும் நன்றி!

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080162 

*********************

TS/BR/KV