பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, சிறு தொழில் கடன் மறு முதலீட்டு நிறுவனம் வழங்கும் கடன்களுக்காக, மறு முதலீட்டு நிதியை உருவாக்க ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், சிறுதொழில் கடன் மறு முதலீட்டு நிறுவனத்தை, சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமாக மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, முதல் கட்டமாக ரூ. 1,00,000 கோடி மதிப்பிலான சிறு மற்றும் குறு தொழில்களுக்கு நிதி உத்தரவாதம் வழங்கும்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
1) முத்ரா யூனிட்டுகள் மூலம் வழங்கப்படும் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், 8 ஏப்ரல் 2015 முதல், கடன் உத்தரவாதம் வழங்கப்படும். இந்த கடன் உத்தரவாதத்தின் மூலம், கடன் வழங்கும் வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், இதர நிதி நிறுவனங்கள், ஆகியவற்றுக்கு உத்தரவாதம் வழங்குவதன் மூலமாக அவற்றுக்கு இருக்கும் சிக்கல்களை குறைக்க முடியும்.
2) தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் முழுமையான அரசு நிறுவனமாகும், இது 1956ம் ஆண்டு கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம், பல்வேறு கடன் உத்தரவாதத் திட்டங்களை செயல்படுத்தும். இந்த நிதிக்கு அறங்காவலராகவும் இந்நிறுவனம் செயல்படும்.
3) மொத்த கடனில் 50 சதவிகிதத்துக்கான உத்தரவாதம் அளிக்கப்படும். அந்த உத்தரவாதம் பிரிவு வாரியாக வழங்கப்படும்.
முத்ரா வங்கி மறு முதலீடுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு, சேவைகளை கவனிப்பது, இணையதளத்தை கவனிப்பது, விவரங்களை ஆராய்வது மற்றும் அரசு வழங்கும் இதர பணிகளை கவனிப்பது ஆகிய பணிகளை செய்யும்.
பின்னணி :
2015-16 நிதி நிலை அறிக்கையில், முத்ரா வங்கிக்கு ரூ. 20,000 கோடியும், கடன் உத்தரவாத நிதிக்கு ரூ. 3000 கோடியும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா ஏப்ரல் 2015ல் அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாக, மார்ச் 2015ல், முத்ரா நிறுவனம் ஓர் துணை கார்ப்பரேட் நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இதற்கென மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 20,000 கோடியை ஒதுக்கி, முதல் கட்டமாக 5000 கோடியை முத்ரா நிறுவனத்துக்கு மறு முதலீடாக வழங்கியுள்ளது.