Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டைப் பிரதமர் தொடங்கிவைத்தார்


புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேசக் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

பிரதமரின் உரை அவரது வளமான அரசியல் மற்றும் நிர்வாக அனுபவத்திலிருந்து வெளிப்படும் பல உண்மைச் சம்பவங்கள் மற்றும் கதைகளால் நிரம்பியிருந்தது. அவர் தமது உரையில் இதுபோன்ற உதாரணங்களைத் தந்ததன் மூலம், அரசுப் பணியின் நோக்குநிலை, சாமானியர்களின் விருப்பங்களை  நிறைவேற்றுவதற்கான பொறுப்பேற்பு, படிநிலையை உடைக்க வேண்டியதன் அவசியம், அமைப்பில் உள்ள ஒவ்வொரு நபரின் அனுபவத்தையும் பயன்படுத்துதல், மக்கள் பங்கேற்பின் முக்கியத்துவம், அமைப்பை மேம்படுத்தவும் புதுமைப்படுத்தவுமான மனவுறுதி போன்ற அம்சங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

முன்பு முதலமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றிப் பேசிய பிரதமர், திறமையான, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு கொண்ட அதிகாரிகள் அரசில் ஒருபோதும் குறைவாக இருந்ததில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். ராணுவம் என்ற அமைப்பு பொதுமக்களின் பார்வையில் அப்பழுக்கற்ற நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பியிருப்பது போல், அரசு அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வது அனைத்து அரசு ஊழியர்களின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

இந்தப் பயிற்சி, அதிகாரிகளின் திறனை வளர்ப்பதுடன், அரசின் முழுமையான அணுகுமுறையையும், மக்கள் பங்கேற்பு உணர்வையும் வளர்க்க வேண்டும் என்று  பிரதமர் கூறினார். பயிற்சி நிறுவனங்களில் பணி நியமனம் என்பது தண்டனையாகக் கருதப்பட்ட பழைய அணுகுமுறை மாறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசில்  பணிபுரியும் பணியாளர்களை பல தசாப்தங்களாக வளர்த்துவரும் பயிற்சி நிறுவனங்கள் மிக முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

பொறுப்புடன் செயல்படுதல் மற்றும் சமத்துவம் கோருதல் பற்றி விவாதித்த பிரதமர், அனுபவமுள்ளவர்களைத் தேடும் போது படிநிலையின் தடைகளை உடைக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் மக்கள் பங்கேற்பின் முக்கியத்துவம் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இதனைப் பங்கேற்பாளர்களிடம் விவரித்த அவர், தூய்மை இந்தியா இயக்கம், முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம், நீர்நிலைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் வெற்றி மற்றும் உலகில் டிஜிட்டல் முறை பணம் செலுத்துவதில் இந்தியாவின் கணிசமான பங்கினை  மக்கள் பங்கேற்புக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறினார்.

பயிற்சி என்பது ஒவ்வொரு நிலைக்கும்  ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும், இந்த வகையில், ஐகாட் (iGOT) கர்மயோகி தளம், அனைவருக்கும் பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதால், ஒரு சமதளத்தை உருவாக்கியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். ஐகாட் (iGOT) கர்மயோகி பதிவு 10 லட்சம் பயனர் அளவைத்  தாண்டியிருப்பது, அரசு அமைப்பில் உள்ளவர்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார். அரசு ஊழியர்களின் நோக்குநிலை, மனநிலை மற்றும் அணுகுமுறையை மேம்படுத்தக் கர்மயோகி இயக்கம் முயற்சிப்பதால் அவர்கள் திருப்தியையும் மகிழ்ச்சியையும் உணர்கிறார்கள்,  இந்த முன்னேற்றத்தின் துணை விளைவாக, நிர்வாக அமைப்பு இயல்பாகவே மேம்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாள் முழுதுமான  கலந்தாலோசனைகள் சிறப்பாக அமைய மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துகள் தெரிவித்த அவர், நாட்டின் பயிற்சிக் கட்டமைப்பை மேம்படுத்த உதவும் வகையில்  செயல்திறன் மிக்க  உள்ளீடுகளை வழங்குமாறு யோசனை கூறினார். இத்தகைய மாநாட்டை சீரான இடைவெளியில் நடத்துவதற்கு ஒரு நிறுவன நடைமுறையை உருவாக்கவும் அவர் யோசனை தெரிவித்தார்.

 

***

SM/SMB/DL