Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முதலாவது தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு


இந்திய விடுதலைப் போராட்டத்தில் சுதேசி எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதோ, அதுபோல வறுமையை எதிர்த்து போராட கைத்தறியை கருவியாக பயன்படுத்தலாம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார். கதரும், கைத்தறிப் பொருட்களும் அன்னையின் அன்பைப்போல இதம் தருபவை என்றும் அவர் வர்ணித்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற முதலாவது தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு பேசினார்.

ஒரு காலத்தில் கண்டங்களைக் கடந்து இந்திய கைவினைப் பொருட்களுக்கு இருந்த தேவை போய், தற்போது கைத்தறி பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் வேதனை தெரிவித்தார். சுற்றுச்சூழல், பரந்துபட்ட மருத்துவ வசதி ஆகியவை குறித்து உலகம் அதிக விழிப்புணர்வைப் பெற்று வருகையில், கைத்தறி பொருட்களின் சுற்றுச் சூழலுக்கு இசைவான அம்சங்களை முதன்மைப் படுத்த வேண்டியதன் தேவையை பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் “மனதின் குரல்” (மன்-கீ-பாத்) வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு கதர் வகையாவது இருக்க வேண்டும் என்று தாம் வேண்டுகோள் விடுத்ததை திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். அதற்கு பிறகு கதர் விற்பனை 60 விழுக்காடு அதிகரித்தது என தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். இதைப் போன்ற முயற்சி தற்போது கைத்தறி பொருட்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நெசவாளர், புடவை போன்ற துணி வகைகளை நெய்யும் போது, மொத்த குடும்பமும் இப்பணியில் இணைந்து கொள்ளும் என்று பிரதமர் உணர்ச்சி பெருக்குடன் விவரித்தார். தாய் தன் மகளை வளர்ப்பது போன்று, மொத்தக் குடும்பமும் புடவையை உருவாக்குகிறது. திருமணத்திற்கு பிறகு மகளை வழி அனுப்புவது போல, தயாரான புடவையை மொத்தக் குடும்பமும் வழியனுப்பும் என்று திரு. மோடி குறிப்பிட்டார்.

இந்திய கைத்தறி முத்திரையை வெளியிட்ட பிரதமர், சந்த் கபீர் விருதுகள் மற்றும் தேசிய விருதுகளை வழங்கினார்.

தமிழக ஆளுநர் டாக்டர் கே. ரோசைய்யா, மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்குவார், மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், தமிழக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.