Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவுக்கு பிரதமர் பிரிவு உபசாரம்


எண்.7 லோக் கல்யாண் மார்கில் இன்று (09.09.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது முதன்மை செயலாளர் திரு. நிருபேந்திர மிஸ்ராவுக்கு பிரிவு உபசாரம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில். பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திரு. மிஸ்ரா ஒரு அரிய பொக்கிஷம் என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த ஐந்தாண்டு காலத்தில் அவருடன் இணைந்து தாம் மேற்கொண்ட பணிகளை நினைவுகூர்ந்தார். முதன்மைச் செயலாளரின் கடின உழைப்பு, குடிமைப்பணி அதிகாரி என்ற முறையில், தாம் மேற்கொள்ளும் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு போன்றவை முதன்மை செயலாளரின் தனிப்பண்பு என்றும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அரசுப் பணியில் தமது அனுபவ முதிர்ச்சியை, பல்வேறு சந்தர்ப்பங்களில் திரு. மிஸ்ரா வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திரு.மிஸ்ரா தகுதி வாய்ந்த அனுபவமிக்க ஒரு அதிகாரி என்று கூறிய பிரதமர், பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் அவர் மிகுந்த வல்லமை பெற்றவர் என்றும் தெரிவித்தார். அவரது எதிர்காலம் அனைத்து வகையிலும் சிறப்பாக அமைய வாழ்த்திய பிரதமர், இந்திய அரசு ஆளுகையில் மிகுந்த பங்களிப்பை வழங்கிய முதன்மை செயலாளருக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

புதிய இந்தியாவை படைப்பதற்காக பணியாற்ற தமக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு முதன்மை செயலாளர் நன்றி தெரிவித்தார். இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோள், தொழில்நுட்ப புதுமைகளை புகுத்துவதோடு மட்டுமின்றி, மனிதநேய தொலைநோக்கு சிந்தனையுடனும் பிரதமர் பணியாற்றுவதாக பாராட்டு தெரிவித்த அவர், புதிய இந்தியாவை படைக்க வேண்டுமென்ற கனவு நிறைவேற ஒட்டுமொத்த அரசு அலுவலர்களும் பாடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

******