Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முக்கிய மின்னணு ஊடகவியலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


கொவிட்-19 பரவிவரும் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க, முக்கிய மின்னணு ஊடகவியலாளர்களுடன், பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று கலந்துரையாடினார்.

தொற்று பரவிய நாள் தொடங்கி, அதன் பரிமாணத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டுவரும் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களைப் பாராட்டிய பிரதமர், விழிப்புணர்வைப் பரப்புவதில் முக்கிய பங்காற்றி வருவதற்காக நன்றி தெரிவித்தார். நாடு முழுவதும், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் களத்திலும், செய்தி அறைகளிலும் ஈடுபாட்டு உணர்வுடன் இடையறாது பாடுபட்டு வருவதைப் பாராட்டிய அவர், அவர்களது பணி நாட்டுக்கு செய்யும் பெரும் சேவை என்று கூறினார். வீடுகளில் இருந்தவாறே, நிகழ்ச்சியைத் தொகுக்க சில தொலைக்காட்சிகள் செய்திருந்த புதுமையான ஏற்பாடுகளை அவர் பாராட்டினார்.

கொவிட் -19 வாழ்நாள் சவால் என்று கூறிய பிரதமர், புதிய மற்றும் புதுமையான தீர்வுகள் மூலமாக அதை முறியடிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். மிக நீண்ட போரை நாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வைப் பரப்ப வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். அவ்வப்போதைய தகவல்கள், எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ஆகியவற்றை உடனுக்குடன் தொலைக்காட்சிகள் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான மொழியில் வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் பின்தங்காமல் இருப்பதை தொலைக்காட்சிகள் ஒருபுறம் உறுதி செய்வதுடன், நேர்மறையான தகவல்களை வெளியிடுவதன் வாயிலாக , பீதியையும், அவநம்பிக்கையையும் அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். களத்தில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோர் முன்னணியில் உள்ளதால் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

செய்தி தொலைக்காட்சிகள் மக்களின் உணர்வுகளை அறியும் முக்கிய வடிகால்களாக செயல்பட்டு வருவதால், அதற்கு ஏற்றவாறு அரசு உறுதியாகப் பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார். தொலைக்காட்சிகள் களத்தில் பணியாற்றும் தங்களது செய்தியாளர்களுக்கு துல்லியமான ஒலிவாங்கிகளை வழங்குவதுடன், பேட்டிகளை எடுக்கும் போது, குறைந்தபட்சம் ஒருமீட்டர் இடைவெளியைப் பராமரித்து, முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

.
*****