எனது நண்பர் அதிபர் சோலி அவர்களே,
அன்பர்களே,
இரண்டாவது முறையாக பிரதமராக நான் பதவியேற்ற பின், எனது முதல் அயல்நாட்டுப் பயணமாக உங்கள் அழகான நாடான மாலத்தீவுக்கு வந்தது எனக்கு பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. உங்களைப் போன்ற நெருங்கிய நண்பரை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது குறித்து மேலும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்புக்கும், உங்களது அருமையான விருந்தோம்பலுக்கும் என் சார்பாகவும், என் குழுவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை உங்களுக்கும், மாலத்தீவு அரசுக்கும் உரித்தாக்குகிறேன். சில நாட்களுக்கு முன்பு நமது நாடுகள் ஈத் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடின. இந்தப் பண்டிகையின் ஒளி, நமது குடிமக்களின் வாழ்வை என்றும் பிரகாசமாக்கட்டும்.
அதிபர் அவர்களே,
இன்று மாலத்தீவின் மிக உயரிய விருதை எனக்கு அளித்து என்னை மட்டும் நீங்கள் கவுரவிக்கவில்லை, ஒட்டு மொத்த இந்தியாவையும் கவுரவித்துள்ளீர்கள். மிகச் சிறப்பான இசுதீன் விருதின் கவுரவம் எனக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தந்துள்ளது. இது எனக்கு மட்டும் அளிக்கப்பட்ட கவுரவம் அல்ல, நட்புக்கும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவுகளுக்கும் அளிக்கப்பட்ட மரியாதை ஆகும். அனைத்து இந்தியர்களின் சார்பாகவும் நான் இதை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக் கொள்கிறேன். பல்லாயிரமாண்டுகளாக இரு நாடுகளும் இந்தியப் பெருங்கடலின் அலைகளால், வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. அசைக்க முடியாத இந்த நட்பு கடினமான காலகட்டத்தில் நமக்கு வழிகாட்டியுள்ளது. அது, 1988-ல் நிகழ்ந்த வெளியிலிருந்து வந்த தாக்குதலாகட்டும், சுனாமி போன்ற இயற்கை பேரிடராகட்டும், சமீபத்திய குடிநீர் பற்றாக்குறையாகட்டும், எதுவானாலும் மாலத்தீவுகளுடன் இந்தியா எப்போதும் உடன் இருக்கிறது. உதவி செய்ய எப்பொழுதும் முதலில் வந்து நிற்கிறது.
நண்பர்களே,
இந்தியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், மாலத்தீவில் நடந்த அதிபர் மற்றும் மக்கள் தேர்தலிலும் ஒன்று தெளிவாகப் புரிகிறது, இரு நாட்டு மக்களும், நிலையான அரசையும், வளர்ச்சியையும் விரும்புகிறார்கள். இதனால் மக்களை மையப்படுத்திய, உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நல்ல நிர்வாகத்தை தரும் எங்களின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அதிபர் சோலியுடன் மிக விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனைகளை நான் தற்போதுதான் நடத்தினேன். இரு தரப்பு நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் எங்களது இரு தரப்பு ஒத்துழைப்பை விரிவாக மீளாய்வு செய்தோம். எங்கள் கூட்டிணைவு வருங்காலத்தில் செல்லும் திசை குறித்து இருவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கிறோம். அதிபர் அவர்களே, நீங்கள் பதவியேற்ற பிறகு இரு தரப்பு ஒத்துழைப்பில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது, வேகம் கூடியுள்ளது. 2018 டிசம்பரில் நீங்கள் இந்தியா வந்தபோது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், முனைப்புடனும், உரிய காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
மாலத்தீவின் உடனடி நிதித் தேவையானது, அதிபர் சோலி இந்தியா வந்தபோது அறிவிக்கப்பட்ட, 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வாயிலாக நிறைவேற்றப்படும். இதோடு சமூக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல புதிய திட்டங்களும் துவக்கப்பட்டுள்ளன. 800 மில்லியன் டாலர் கடனுதவியுடன் வளர்ச்சிப் பணிகள் புதிய தடங்களில் துவக்கப்பட்டுள்ளன.
இந்தியா, மாலத்தீவுகள் இடையில் வளர்ச்சிக்கான நட்புறவை மேலும் வலுப்படுத்த, மாலத்தீவின் எளிய குடிமக்களும் பயனடையக் கூடிய திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
இன்று எமது இருதரப்பு ஒத்துழைப்பானது மாலத்தீவு வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டுச் செல்கிறது.
இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இது போன்ற திட்டங்கள் மாலத்தீவு மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.
கட்டுமான வளர்ச்சிக்கும், அட்டுவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வெள்ளிக்கிழமை மசூதியை பாதுகாப்பதற்கும் உதவுவதாக நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இரண்டு நாடுகளிலும் உள்ள குடிமக்களிடையே தொடர்பினை அதிகரிப்பதற்காக, மாலத்தீவில் உள்ள குல்ஹுதுபுசி மற்றும் மாலேவுக்கும், இந்தியாவில் உள்ள கொச்சிக்கும் இடையில் படகுப் போக்குவரத்தை துவக்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளோம். மாலத்தீவில் ரூபே அட்டையை வெளியிட்டால் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதற்கான நடவடிக்கை மிக விரைவில் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான விவாதமும் நடைபெற்றது. இன்று, மாலத்தீவு பாதுகாப்பு படைகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தையும், கடலோர கண்காணிப்புக்கான ரேடார் அமைப்பையும், நாங்கள் இருவரும் இணைந்து துவக்கி வைத்தோம். இது மாலத்தீவின் கடல்சார் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்தும். மாலத்தீவுடனான உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நாங்கள் இருவரும் ஆழமான மற்றும் வலுவான கூட்டுறவை விரும்புகிறோம். வளமான, அமைதியான, ஜனநாயகமான மாலத்தீவானது ஒட்டு மொத்த பிராந்தியத்திற்கும் பயனளிக்கும். இந்தியா தன்னாலான அனைத்து வகையிலும் மாலத்தீவுக்கு உதவி செய்யும் என்று நான் மீண்டும் உறுதி அளிக்கிறேன். அன்பான விருந்தோம்பலை நல்கிய அதிபருக்கும், மாலத்தீவு மக்களுக்கும் நான் மீண்டும் நன்றி கூறுகிறேன். இந்திய- மாலத்தீவு நட்பு என்றும் செழிக்கட்டும்.
நன்றி
PM @narendramodi is addressing a joint press meet with President @ibusolih. https://t.co/qCCTwPCqw4
— PMO India (@PMOIndia) June 8, 2019