Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாலத்தீவு அதிபரின் இந்திய பயணத்தை முன்னிட்டு இந்திய- மாலத்தீவு கூட்டறிக்கை


இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மாலத்தீவு அதிபர் மேதகு திரு இப்ராஹிம் முகமது சோலே அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 2018- ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற பின் திரு சோலே இந்தியாவிற்கு வருவது இது மூன்றாவது முறை. மாலத்தீவின் நிதி அமைச்சர் மேதகு திரு இப்ராஹிம் அமீர், பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் மேதகு திரு ஃபயஸ் இஸ்மாயில், பாலினம், குடும்ப நலன் மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் மேதகு திரு ஐஷாத் முகமது திதி மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலை குழுவினர் அதிபருடன் வந்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்த அதிபர் திரு சோலே, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய மக்களின் மனதிலும், “அண்டை நாடுகளுக்கு முதல் முக்கியத்துவம்” என்ற இந்தியாவின் கொள்கையிலும் மாலத்தீவு சிறப்பு இடம் வகிப்பதாக பிரதமர் திரு மோடி தெரிவித்தார். “இந்தியாவிற்கு முதல் முன்னுரிமை” என்ற தமது அரசின் கொள்கையை அதிபர் திரு சோலே மீண்டும் வலியுறுத்தினார். இரு நாட்டு மக்கள் பயனடையும் வகையில் அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரு தரப்பு உறவுகளின் விரிவாக்கத்திற்கு தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்த உறவை மேலும் வலுப்படுத்த தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் முன்வைத்தனர்.

 

கொவிட்-19 பெருந்தொற்றின் போது மாலத்தீவு மக்களுக்கும், அரசுக்கும் துணைபுரிந்த இந்திய அரசுக்கும், பிரதமர் திரு மோடிக்கும் அதிபர் திரு சோலே நன்றி தெரிவித்தார். ராணுவம் மற்றும் பாதுகாப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, மனிதவள மேம்பாடு, உள்கட்டமைப்பு வளர்ச்சி, பருவநிலை மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க பிரதமர் திரு மோடியும் அதிபர் திரு சோலேயும் ஒப்புதல் தெரிவித்தனர்.

மாலத்தீவின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கப்படும் என்ற இந்திய அரசின் புதிய அறிவிப்பை பிரதமர் திரு மோடி வெளியிட்டார். இந்திய அரசுக்கு நன்றி கூறிய அதிபர் சோலே, பல்வேறு கட்ட ஆலோசனைகளில் உள்ள ஏராளமான மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை அமல்படுத்துவதற்கு இந்தக் கூடுதல் நிதி உதவிகரமாக இருக்கும் என்று  தெரிவித்தார்.

******

(Release ID: 1847627)