பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளிடையே மாற்று மருத்துவம் தொடர்பான கூட்டுப் பிரகடனத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த கூட்டு பிரகடனத்தின் மூலமாக இரு நாடுகளிடையே பாரம்பரியம் மற்றும் மாற்று மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பு நல்கப்படும். கூட்டு ஆராய்ச்சி, பயிற்சி, மற்றும் மாற்று மருத்துவத் துறையில் திறன் வளர்ச்சி, ஆயுஷ் துறையில் வேலை வாய்ப்பை பெருக்குதல் ஆகியவற்றுக்கு இந்த கூட்டுப் பிரகடனம் உதவும்.
இதன் காரணமாக கூடுதல் செலவினம் ஏதும் கிடையாது. கூட்டு ஆராய்ச்சி, பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள், போன்றவற்றை நடத்துவதற்கு ஏற்படும் செலவினம் ஆயுஷ் துறைக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.
பின்னணி :
உலக சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் அளவுக்கு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம் நன்கு வளர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டுக்கு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் பெரும் ஆர்வம் உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை உலகெங்கும் பரவச் செய்யும் ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்த அமைச்சகம் சீனா, மலேசியா, ட்ரிடாட் மற்றும் டொபாகோ, ஹங்கேரி, வங்காளதேசம், நேபாளம், மொரீஷியஸ், மங்கோலியா மற்றும் மியான்மர் நாடுகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தின் துணையோடு ஜெர்மனியில் ஆயுர்வேத மருத்துவ முறைகளை வளர்க்க அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக மூட்டு வலி தொடர்பாக மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பெர்லினின் சாரைட் பல்கலைக்கழகம், ஆகியவை இணைந்து ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சிகளின் முடிவு நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளது. பல நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
ஆயுஷ் துறைக்கான இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் அவர்கள் தலைமையிலான குழு 15-19, அக்டோபர் 2016ல் ஜெர்மனி சென்று, ஐரோப்பிய ஆயுர்வேத மாநாட்டில் கலந்து கொண்டு, ஜெர்மன் அதிகாரிகளாடு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த மாநாட்டுக்கு ஆயுஷ் அமைச்சகம் முழு ஆதரவு அளித்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜெர்மனியின் நாடாளுமன்ற செயலர் இங்கிரிட் ஃபிஷ்பாக் அவர்களோடு மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் ஆயுஷ் மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பாக கூட்டு பிரகடனம் வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டுப் பிரகடனம் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும்.