Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான வீட்டுவசதி , நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 128 நிலையங்களுடன்

அங்கீகரிக்கப்பட்ட பாதைகளின் மொத்த நீளம் 118.9 கி.மீ.

இத்திட்டத்தை 63,246 கோடி ரூபாய் செலவில் 2027-ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தவுடன், சென்னை மாநகரில் மொத்தம் 173 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் நெட்வொர்க் இருக்கும். இரண்டாம் கட்டத் திட்டம் பின்வரும் மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது:

வழித்தடம் (i): மாதவரம் முதல் சிப்காட் வரை; 45.8 கி.மீ நீளம், 50 ரயில் நிலையங்கள்.

வழித்தடம் – (ii): கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை; 26.1 கி.மீ நீளம், 30 ரயில் நிலையங்கள்.

வழித்தடம் (iii): மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை; 47 கி.மீ நீளம், 48 ரயில் நிலையங்கள்.

இரண்டாம் கட்டத்தில் சுமார் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படும். இரண்டாம் கட்ட வழித்தடங்கள், மாதவரம், பெரம்பூர், திருமயிலை, அடையாறு, சோழிங்கநல்லூர், சிப்காட், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், புனித தோமையர் மலை ஆகிய முக்கிய பகுதிகள் வழியாக சென்னைக்கு மேற்காக வடக்கிலிருந்து தெற்கு மற்றும் கிழக்கை இணைக்கின்றன. மேலும் சென்னை தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தின் மையமாக செயல்படும் சோழிங்கநல்லூர் போன்ற வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளுக்கு இது இணைப்பை விரிவுபடுத்தும். சோழிங்கநல்லூரை எல்காட் வழியாக இணைப்பதன் மூலம், பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் போக்குவரத்து தேவைகளை மெட்ரோ வழித்தடம் பூர்த்தி செய்யும்.

மெட்ரோ ரயில்  பயனுள்ள மாற்று சாலைப் போக்குவரத்தாகவும், இரண்டாம் கட்டமாக சென்னை நகரில் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் விரிவாக்கமாகவும் செயல்படுத்தப்படுவது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், நகரின் நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதன் மூலம் வாகனங்களின் சீரான இயக்கம், பயண நேரம் குறையும். ஒட்டுமொத்த சாலைப் பாதுகாப்பு அதிகரிக்கும்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைச் சேர்ப்பதன் மூலமும், சென்னை நகரில் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் கட்டமைப்பை அதிகரிப்பதன் மூலமும், பாரம்பரிய புதைபடிம எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்துடன் ஒப்பிடும்போது கார்பன் உமிழ்வை கணிசமாகக் குறைக்க முடியும்.

குறைக்கப்பட்ட பயண நேரங்கள், நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மேம்பட்ட அணுகல் ஆகியவை தனிநபர்கள் தங்கள் பணியிடங்களை அதிவிரைவாக அடைய அனுமதிப்பதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும். இரண்டாம் கட்டத்தின் கட்டுமானம் மற்றும் இயக்கம் என்பது கட்டுமானத் தொழிலாளர்கள் முதல் நிர்வாக ஊழியர்கள், பராமரிப்பு ஊழியர்கள் வரை பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைகளை உருவாக்கும். மேலும், மேம்பட்ட இணைப்பு உள்ளூர் வணிகங்களைத் தூண்டும். குறிப்பாக புதிய மெட்ரோ நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில், முன்பு அணுக முடியாத பகுதிகளில் முதலீடு மற்றும் வளர்ச்சியை ஈர்க்க முடியும்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் கட்டமைப்பின் விரிவாக்கம், பொதுப் போக்குவரத்துக்கு மிகவும் சமமான அணுகலை வழங்கும். இதன்மூலம் பல்வேறு சமூக-பொருளாதார பிரிவுகள் பயனடைவதுடன், போக்குவரத்து ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும். பயண நேரத்தைக் குறைத்து, அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கைத் தரத்திற்கு இது பங்களிப்பு செய்யும்.

***

(Release ID: 2061653)

SMB/RR/KR