பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (சட்டத்திருத்த) மசோதா-2013ஐ திரும்பப் பெற முடிவுசெய்யப்பட்டது. இந்த மசோதா, மாநிலங்களவையில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை ஆய்வுசெய்த நாடாளுமன்ற நிலைக்குழு, மசோதாவில் உள்ள பிரிவுகளில் திருத்தங்களைச் செய்ய பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.
உலகில் அதிக அளவில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களில் 55 சதவீதத்துக்கும் மேலான பொருட்கள், வளர்ந்த நாடுகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம், பெரும்பாலான நாடுகளில் பொது சுகாதாரத்தை குறைந்த செலவில் பேணிப் பாதுகாப்பதில் இந்திய மருந்துப் பொருட்கள் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உடலுக்குள் செலுத்தும் மருத்துவக் கருவிகள் (in-vitro medical devices), மூல உயிரணுக்கள், ஊக்குவிப்பு மருந்துகள், மருத்துவப் பரிசோதனை/ஆய்வு உள்ளிட்ட மருத்துவப் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் திறனை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்கு வழிமுறைகள், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்-1940-ல் இடம்பெற்றுள்ளன.
பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதில் மருந்துத் துறையின் பங்களிப்பை கவனத்தில் கொண்டு, தற்போதைய சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது சரியாக இருக்காது என்று மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. குறிப்பாக, உயிரியல், மூல உயிரணு, ஊக்குவிப்பு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பரிசோதனை/ஆய்வு ஆகியவற்றில் உள்ள புதிய பகுதிகளை ஏற்கனவே உள்ள சட்டத்தின் மூலம், திறமையாக ஒழுங்குபடுத்த முடியாது.
செலவு குறைவு, புவியியல் பரவல், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில் இந்திய மருந்துப் பொருட்களுக்கு சிறப்பான வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. மேலும், உள்நாட்டுத் தேவையை நிறைவுசெய்வதுடன், மருந்துப் பொருட்கள் உற்பத்திக்கு சர்வதேச மையமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இந்தத் துறைக்கு முதலீடுகளும் கிடைக்கும்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் நோக்கத்தை கணக்கில் கொண்டு, ஏற்கனவே உள்ள சட்டத்தை விரிவாக மறுஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் செய்வதை எளிதாக்குவது, நமது மருந்துப் பொருட்களின் தரத்தையும், திறனையும் ஊக்குவிப்பது ஆகிய இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் இந்த மறுஆய்வு செய்யப்படும்.
இதன்படி, மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை, இரண்டு கட்டங்களாக பணிகளை மேற்கொள்ளும். 1. ஏற்கனவே உள்ள சட்டத்தின்கீழ், மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தனி விதிகளை உருவாக்கும். 2. மருத்துவ உபகரணங்கள், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காக தனியாக சட்ட மசோதாவை கொண்டுவரும். அனைத்து தரப்பினரிடமும் விரிவாக ஆலோசனை நடத்தியபிறகு, மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இது, விரைவில் அறிவிக்கப்படும். புதிய சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன.