Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் இன்று காலை நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


எனதருமை நாட்டுமக்களே, மரியாதைக்குரிய வணக்கங்கள். ஒருபுறம் நாடு கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறது, இன்னொருபுறம், இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது பற்றிய செய்தி வரும் பொழுது, தேசத்தில் கவலை ஏற்படுவது இயல்பான விஷயம் தானே. இந்த நமது தேசம் புத்தரும் காந்தியும் பிறந்த தேசம், தேசத்தின் ஒற்றுமைக்காக முழுமனத்தோடு ஈடுபட்ட சர்தார் படேல் பிறந்த மண்ணிது. பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள், பொதுவாக கடைபிடிக்கப்பட வேண்டிய வாழ்க்கை விழுமியங்களுக்காகவும், அஹிம்சைக்காகவும், பெருமதிப்பு அளித்து வந்திருக்கிறர்கள், நமது மனங்களிலும் இது நிறைந்திருக்கிறது. அஹிம்சை பரமோதர்ம: – இந்த வாக்கியத்தை நாம் நம் சிறுவயது முதற்கொண்டே கேட்டு வந்திருக்கிறோம், கூறியும் வந்திருக்கிறோம். நம்பிக்கை பெயரால் வன்முறையை நம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று நான் செங்கோட்டையிலிருந்து கூட கூறியிருந்தேன். அது மதம் தொடர்பான நம்பிக்கையாகட்டும், அரசியல் எண்ணப்பாடு தொடர்பான நம்பிக்கையாகட்டும், தனிநபர் மீது கொண்ட நம்பிக்கையாகட்டும், மரபுகள்-பாரம்பரியங்கள் தொடர்பான நம்பிக்கையாகட்டும் – நம்பிக்கையின் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை. டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை அளித்திருக்கிறார்; அதில் ஒவ்வொருவருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் அனைத்து விதமான அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சட்டத்தைத் தங்கள் கைகளிலே எடுத்துக் கொள்பவர்கள், வன்முறைப் பாதையைப் பின்பற்றுபவர்கள் – அவர்கள் தனிநபர்களாகட்டும், ஒரு சமுதாயத்தினர் ஆகட்டும், அவர்கள் யாராக இருந்தாலும், இந்த தேசமும் அதை எப்போதும் பொறுத்துக் கொள்ளாது, எந்த அரசும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன். யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன்பு தலைவணங்கித் தான் ஆக வேண்டும், சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும், சட்டம் தான் முடிவு செய்யும், சட்டம் கண்டிப்பாக தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கியே தீரும்.

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய தேசம் பன்முகத்தன்மைகள் நிறைந்தது; இந்தப் பன்முகத்தன்மை உணவுப் பழக்கம், வசிக்குமிடங்கள், உடுக்கும் உடை என்பதில் மட்டும் காணப்படுவதில்லை; வாழ்வின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இந்தப் பன்முகத்தன்மை காணப்படுகிறது. எந்த அளவுக்கு இது இருக்கிறது என்றால், நமது பண்டிகைகளிலும் இது நிறைந்திருக்கிறது, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்டவர்கள் நாம் என்பதால், நமது கலாச்சாரப் பாரம்பரியமாகட்டும், சமூகப் பாரம்பரியமாகட்டும், வரலாற்று நிகழ்வுகளாகட்டும், ஆண்டின் 365 நாட்களில் ஏதாவது ஒரு பண்டிகையோடு தொடர்பில்லாத ஒரு நாளைக் காண்பது அரிதான விஷயமாக இருக்கும். நமது அனைத்துப் பண்டிகைகளும் இயற்கையின் அட்டவணைக்கு ஏற்பவே அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவையனைத்தும் இயற்கையோடு நேரடித் தொடர்பு கொண்டிருப்பவை. நமது பல பண்டிகைகள் விவசாயிகளோடும், மீனவர்களோடும் தொடர்புடையவையாக இருக்கின்றன.

நான் இன்று உங்களுடன் பண்டிகைகள் பற்றிப் பேசும் வேளையில், உங்கள் அனைவருக்கும் மிச்சாமீ துக்கடம் என்று கூற விரும்புகிறேன். ஜைனர்கள் நேற்று சம்வத்ஸரீ விழாவைக் கொண்டாடினார்கள். பாத்ர மாதத்தில் பர்யுஷண் திருவிழா கொண்டாடப்படுகிறது. பர்யுஷண் கொண்டாட்டங்களின் கடைசி நாளாக சம்வத்ஸரீ வருகிறது. இது உள்ளபடியே ஒரு அற்புதமான பாரம்பரியம். சம்வத்ஸரீ என்ற நாள் மன்னித்தல், அகிம்சை, நட்பு ஆகியவற்றைக் குறிப்பது. இது ஒரு வகையில் மன்னிக்கும் சொற்கள் பேசும் திருநாளாகக் கூடக் கருதப்படுகிறது. இந்த நாளில் தான் ஒருவருக்கு ஒருவர் மிச்சாமீ துக்கடம் என்று கூறிக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. நமது சாத்திரங்களிலும் கூட, क्षमा वीरस्य भूषणम, அதாவது மன்னித்தல் வீரர்களுக்கு அணிகலன் என்று கூறப்பட்டிருக்கிறது. யாரிடம் மன்னிக்கும் திறன் இருக்கிறாதோ, அவர்களே வீரர்கள். காந்தியடிகள் கூட, மன்னித்தல் தான் சக்திபடைத்த மனிதனின் சிறப்பு என்று அடிக்கடி கூறுவார்.

ஷேக்ஸ்பியர் தனது நாடகமான தி மெர்ச்சன்ட் ஆப் வெனிசில், மன்னிக்கும் குணத்தின் மகத்துவம் பற்றி என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? Mercy is twice blest, it blesseth him that gives and him that takes, அதாவது மன்னிப்பவர்கள், மன்னிக்கப்படுபவர்கள் – இருவருமே இறைவனின் ஆசிக்குப் பாத்திரமானவர்கள் என்பது இதன் பொருள்.

எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் அனைத்து மூலை முடுக்குகள் எங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளை இது; விநாயகர் சதுர்த்தி பற்றிப் பேசும் போது, சமூக அளவில் கொண்டாடப்படும் திருவிழா பற்றிப் பேசுவது இயல்பான விஷயம். பாலகங்காதர லோகமான்ய திலகர் 125 ஆண்டுகள் முன்பாக, இந்தப் பாரம்பரியத்தை ஏற்படுத்தினார்; கடந்த 125 ஆண்டுகளாக, சுதந்திரம் அடைவதற்கு முன்பு இது சுதந்திரப் போராட்டத்தைக் குறிப்பதாகவும், சுதந்திரம் அடைந்த பிறகு, இது சமூகக் கல்வி, சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விட்டது. விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டக் காலம், ஒற்றுமை, சமத்துவம், தூய்மை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

இப்பொழுது கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாரதத்தின் வண்ணமயமான பண்டிகைகளில் கேரளத்தின் ஓணம் பண்டிகை முதன்மையான ஒன்றாகத் திகழ்கிறது. இந்தத் திருநாள் சமூக, கலாச்சார மகத்துவத்துக்குப் பெயர் பெற்றது. ஓணம் திருவிழாக் காலத்தில் கேரளத்தின் முழுமையான கலாச்சாரப் பாரம்பரியமும் வெளிச்சம் போட்டுக் காட்டப் படுகிறது. இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் நேசம், சுமூகம் பற்றிய செய்தி பரப்பப்படுவதோடு, மக்கள் மனங்களில் ஒரு புதிய உற்சாகம், புதிய எதிர்பார்ப்பு, ஒரு புதிய நம்பிக்கை ஆகியவற்றைத் தட்டி எழுப்புகிறது. இப்பொழுதெல்லாம் நமது பண்டிகைகள்,, சுற்றுலா ஈர்ப்புக்கான காரணிகளாகி இருக்கின்றன. குஜராத்தில் நவராத்திரி உற்சவமாகட்டும், வங்காளத்தில் துர்க்கா உற்சவமாகட்டும், இவை ஒருவகையில் சுற்றுலா ஈர்ப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளாகி இருக்கின்றன என்பதையே நான் நாட்டுமக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். நமது மற்ற பண்டிகைகளும் கூட, அயல் தேசத்தவர்களை ஈர்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இந்தத் திசையில் நாம் மேலும் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

இந்தப் பண்டிகைத் தொடரில் இன்னும் சில நாட்களில் வர இருப்பது ஈத் உல் சுஹா. தேசத்தின் அனைத்து மக்களுக்கும் ஈத் உல் சுஹாவுக்கான நல் வாழ்த்துகள். பண்டிகைகள் நம்மிடத்தில் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன; அதே வேளையில் புதிய பாரதத்தில், பண்டிகைகள் தூய்மைக்கான காரணிகளாகவும் இருக்க வேண்டும். குடும்ப வாழ்கையில் பண்டிகைகளும் தூய்மையும் இணைந்தே இருக்கின்றன. பண்டிகைக்குத் தயாராவது என்பது, சுத்தம்-சுகாதாரம் மீது கவனம் செலுத்துவது தான். இது நமக்கெல்லாம் புதிய விஷயம் இல்லையென்றாலும், இது ஒரு சமூக இயல்பாகவே மாறுதல் என்பது அவசியமான விஷயம். பொதுவாக தூய்மை தொடர்பான நமது கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்றால், தூய்மை என்பது நமது வீட்டில் மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த கிராமத்தில், அனைத்து நகரங்களில், நமது அனைத்து மாநிலங்களில், நமது நாடு முழுக்க என, இது பண்டிகைகளோடு இணைபிரியாத அங்கமாக மாற வேண்டும்.

எனதருமை நாட்டுமக்களே, நவீனமயமாதல் என்பது மாறிக் கொண்டே இருக்கும் ஒரு நிலை. இப்பொழுதெல்லாம் ஒரு புதிய கோணம், ஒரு புதிய அளவீடு ஏற்பட்டிருக்கிறது – நீங்கள் எத்தனை தான் நாகரீகமானவராக இருந்தாலும், எத்தனை தற்காலத்தியவராக இருந்தாலும், உங்கள் சிந்தனா செயல்முறை எத்தனை நவீனமானதாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள, ஒரு தராசு இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது, அதாவது சுற்றுச்சூழல் தொடர்பாக நீங்கள் எத்தனை விழிப்போடு இருக்கிறீர்கள் என்பது தான் அது. நீங்கள் உங்கள் நடைமுறைகளில் சூழலுக்கும், சுற்றுப்புறத்துக்கும் நேசமான வகையில் செயல்படுகிறீர்களா இல்லையா என்று பார்க்கப் படுகிறது. சூழலுக்கு எதிரான வகையில் நீங்கள் செயல்படுபவர் என்றால், நீங்கள் மோசமானவராகக் கருதப்படுவீர்கள். இந்தக் கண்ணோட்ட மாற்றத்தின் விளைவை நான் கண்கூடாகப் பார்க்கிறேன் – விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களில் சூழலுக்கு நேசமான பிள்ளையார் உருவங்கள், ஒரு பெரிய இயக்கத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கின்றன. நீங்கள் யூ ட்யூபில் சென்று பார்த்தீர்கள் என்று சொன்னால், வீடுதோறும் குழந்தைகள், வெளியிலிருந்து மண்ணெடுத்து வந்து, பிள்ளையார் உருவங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவற்றில் வண்ணங்களைப் பூசுகிறார்கள், ஒருவர் காய்கறி நிறத்தைப் பூசுகிறார், ஒருவர் அதில் காகிதத் துண்டை ஒட்ட வைக்கிறார். பலவகையான பிரயோகங்களை ஒவ்வொரு குடும்பமும் செய்து வருகிறது. ஒருவகையில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு என்ற மிகப்பெரிய பயிற்சி, இந்த கணேச உற்சவத்தில், முதன்முறையாகக் காணக் கிடைத்திருக்கிறது. ஊடகங்களும் மிகப்பெரிய அளவில் சூழலுக்கு நேசமான பிள்ளையார் உருவங்களை உருவாக்குவதில் மக்களுக்கு பயிற்சிகள் அளிக்கிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள், வழிகாட்டுகிறார்கள். எத்தனை பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். நமது தேசம் கோடிக்கணக்கான புத்திக்கூர்மை உடையவர்கள் நிரம்பிய தேசம். புதுமை ஒன்று படைக்கப்படும் போது, மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. பொறியாளர் ஒருவர், சிறப்பான வகையில் மண்ணை சேகரித்து, அதன் மூலம் ஒரு கலவையை ஏற்படுத்தி, பிள்ளையார் உருவங்களை உருவாக்குவதில் மக்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார், மேலும் ஒரு சிறிய பக்கெட்டில், நீரில் பிள்ளையார் உருவச்சிலை கரைக்கப்படுகிறது, நீரில் வைத்தால் உடனடியாக கரைந்து விடுகிறது. இதோடு அவர் நின்று விடவில்லை, அதில் துளசிச் செடி ஒன்றையும் நட்டார்.

3 ஆண்டுகள் முன்பாக தூய்மை இயக்கத்தைத் தொடங்கினோம், அக்டோபர் மாதம் 2ஆம் தேதியோடு 3 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன. இதன் ஆக்கப்பூர்வமான விளைவுகள் வெளிப்பட்டு வருகின்றன. கழிப்பறைகள் இருக்கும் பகுதிகள் 39 சதவீதத்திலிருந்து சுமார் 67 சதவீதத்தை எட்டியிருக்கிறது. 2 லட்சம் 30000த்திற்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டதாக அறிவித்திருக்கின்றன.

கடந்த தினங்களில் குஜராத்தில் பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. கணிசமானோர் இறந்தார்கள், ஆனால் வெள்ளப்பெருக்கு முடிந்து நீர் வடிந்த பிறகு, ஒரே குப்பைக் கூளமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், குஜராத்தின் பனாஸ்காண்டா மாவட்டத்தின் தானேராவில், ஜமீயத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 கோயில்கள் மற்றும் 3 மசூதிகளில் படிப்படியாக தூய்மைப்பணியை மேற்கொண்டார்கள். தாங்களே உழைத்தார்கள், அனைவரும் இதில் ஈடுபட்டார்கள். தூய்மையின் பொருட்டு, ஒற்றுமையை வலியுறுத்தும் சிறப்பானதொரு எடுத்துக்காட்டு, அனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்ல ஒரு எடுத்துக்காட்டினை, ஜமீயத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து காட்டி இருக்கிறார்கள். தூய்மையின் பொருட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யப்படும் முயற்சிகள், நமது நிரந்தரமான இயல்பாகவே மாறி விட்டால், நமது தேசத்தால் எந்த சிகரத்தைத் தான் எட்ட இயலாது!!

எனதருமை நாட்டுமக்களே, நான் உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் – காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதிக்கு 15-20 நாட்கள் முன்பிருந்தே, ‘தூய்மையே சேவை’ என்ற வகையிலான ஒரு இயக்கத்தை நடத்தலாமே. தேசம் முழுமையிலும் தூய்மை தொடர்பான ஒரு சூழலை உருவக்கலாம். எப்போது வாய்ப்பு கிடைக்கும், எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நாம் சந்தர்ப்பங்களைத் தேடுவோம். ஆனால் இதில் நாம் அனைவருமாக இணைய வேண்டும். இதை தீபாவளியை முன்னிட்ட ஒருவகையான தயாரிப்பு என்றோ, நவராத்திரியை முன்னிட்ட தயாரிப்பு என்றோ, துர்க்கா பூஜையை முன்னிட்ட தயாரிப்பு என்றோ நாம் கருதிக் கொள்வோம். உடல்ரீதியிலான சேவை செய்வோம். விடுமுறை நாட்களிலோ, ஞாயிற்றுக் கிழமைகளிலோ அனைவருமாக இணைந்து பணிபுரிவோம். அக்கம் பக்கத்தில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வோம், அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் செல்வோம், ஆனால் இதையெல்லாம் ஒரு இயக்கமாக நாம் செய்யலாம். நான் அனைத்து அரசு சாரா அமைப்புகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூக-கலாச்சார-அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என அனைவரிடமும் விண்ணப்பிக்கிறேன் – காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு 15 நாட்கள் முன்னதாகவே, நாம் தூய்மை தொடர்பான ஒரு சூழலை ஏற்படுத்துவோம், இது உண்மையிலேயே காந்தியடிகள் கனவு கண்ட ஒரு அக்டோபர் 2 ஆக இருக்க வேண்டும். குடிநீர் மற்றும் தூய்மை அமைச்சகம், MyGov.inஇல் ஒரு பகுதியை ஏற்படுத்தியிருக்கிறது; கழிப்பறை அமைக்கப்பட்ட பிறகு, உங்கள் பெயர், கழிப்பறை அமைக்க நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்களோ அவர்களின் பெயர் ஆகியவற்றை அதில் பதிவு செய்யலாம். என் சமூகவலைத்தள நண்பர்கள் சில ஆக்கப்பூர்வமான இயக்கங்களை முடுக்கி விடலாம், களமட்டத்தில் பணிகளை உறுதி செய்யும் வகையில் நீங்கள் கருத்தூக்கத்தை ஏற்படுத்தலாம். ”தூய்மை பற்றிய உறுதிப்பாடு மூலமாக, தூய்மை அடைவதில் வெற்றி”, என்ற கருத்தினடிப்படையிலான போட்டிகள் நடத்தப்படும்; குடிநீர் மற்றும் தூய்மை அமைச்சகம் வாயிலாக நடத்தப்படும் இயக்கத்தில் கட்டுரைப் போட்டி, குறும்படம் தயாரிக்கும் போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் பல மொழிகளில் கட்டுரைகள் எழுதலாம், வயதுவரம்பு ஏதும் கிடையாது. நீங்கள் குறும்படம் தயாரிக்கலாம், உங்கள் செல்பேசியிலேயே அதைத் தயாரிக்கலாம். 2-3 நிமிடக் குறும்படமாகத் தயாரிக்கலாம், தூய்மைக்கான உத்வேகம் அளிக்க கூடியதாக இது இருக்க வேண்டும். எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம், வசனம் ஏதும் இல்லாததாகக் கூட இருக்கலாம். போட்டியில் பங்கெடுப்பவர்களின், சிறந்த 3 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்; மாவட்ட அளவில் மூவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; இதே போல, மாநில அளவில் மூவர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தூய்மை தொடர்பான இந்த இயக்கத்தில் நீங்கள் அனைவரும் இணையுங்கள் என்று உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

இந்த முறை காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை, தூய்மை நிறைந்த அக்டோபர் 2 என்று கொண்டாட நாம் மனவுறுதி பூண வேண்டும், அதற்காக செப்டம்பர் மாதம் 15 தேதி தொடங்கி, ‘தூய்மையே சேவை’ என்ற இந்த மந்திரத்தை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டும். தூய்மையின் பொருட்டு நாம் ஏதேனும் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நாமே உழைப்பதன் மூலம், இதில் பங்களிப்பு நல்க முடியும். இப்படிச் செய்தால், காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதி எப்படி பளிச்சிடும் என்று நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். 15 நாட்கள் தூய்மையே சேவை என்ற இந்தத் தூய்மை இயக்கத்தை நடத்திய பிறகு, அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை நாம் கொண்டாடும் பொழுது, வணக்கத்திற்குரிய காந்தியடிகளுக்கு நாம் அளித்திருக்கும் காணிக்கையில், எத்தனை தூய்மையான ஆனந்தம் கிடைக்கும் என்பதை அனுபவித்துப் பாருங்கள்.

எனதருமை நாட்டுமக்களே, நான் இன்று குறிப்பாக உங்கள் அனைவருக்கும் என் நன்றிக்கடனைத் தெரிவிக்க விரும்புகிறேன். என் மனத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றிகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்; நீங்கள் நீண்ட காலமாக மனதின் குரலோடு உங்களை இணைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பது மட்டுமல்லாமல், இந்த மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இலட்சோபலட்சம் பேர்களோடு என்னால் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதற்காகவும் நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மனதின் குரலில் பங்கெடுப்பவர்கள் பல இலட்சங்கள் என்றால், இதைக் கேட்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்; இலட்சக்கணக்கானோர் கடிதங்கள் எழுதுகிறார்கள், தகவல்கள் அளிக்கிறார்கள், பலர் தொலைபேசி வாயிலாகச் செய்திகளை அளித்து வருகிறார்கள், இது என்னைப் பொறுத்த மட்டில் பெரிய செல்வக் களஞ்சியமாக இருக்கிறது.

நாட்டுமக்களின் மனங்களைப் புரிந்து கொள்ள மிகப்பெரியதொரு வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு மனதின் குரலுக்காகக் காத்திருக்கிறீர்களோ, அதை விட அதிகமாக நான் நீங்கள் அளிக்கும் செய்திகளுக்காகக் காத்திருக்கிறேன். நான் தாகத்தோடு இருக்கிறேன், ஏனென்றால் உங்களின் ஒவ்வொரு விஷயமும் எனக்கு கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. நான் ஈடுபடும் செயலை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இது இருக்கிறது. பல விஷயங்களைப் புதிய கோணத்தில் சிந்தித்துப் பார்க்க, நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்ளும் சின்னச்சின்ன விஷயங்கள் கூட உதவிகரமாக இருக்கின்றன, ஆகையால் உங்களின் இந்தப் பங்களிப்புக்காக நான் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை வெளிப்படுத்துகிறேன், உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், மேலும் மேலும் நீங்கள் கூறும் விஷயங்களை நானே காண வேண்டும், கேட்க வேண்டும், படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலே தான், என் அனைத்து முயற்சிகளும் இருக்கின்றன. இந்தத் தொலைபேசி அழைப்போடு நீங்கள் ஒத்திசைவாக உணரலாம். ஆமாம், நானுமே கூட இது போன்ற தவறை இழைத்திருக்கிறேன். சில வேளைகளில் சில விஷயங்கள் எந்த அளவுக்கு நம் இயல்பாகவே மாறி விடும் என்றால், நாம் தவறு செய்கிறோம் என்பது கூட நமக்கு உரைக்காது.

”பிரதமர் அவர்களே, நான் பூனாவிலிருந்து அபர்ணா பேசுகிறேன். நான் என்னுடைய தோழி பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன்; அவள் எப்பொழுதும் அனைவருக்கும் உதவி புரிய முயற்சி செய்து கொண்டிருப்பாள், ஆனால் அவளது ஒரு நடவடிக்கை எனக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது. ஒருமுறை நான் அவளோடு பொருட்கள் வாங்க வணிக வளாகம் சென்றிருந்தேன். ஒரு புடவை வாங்க எந்த சிரமமும் படாமல் 2000 ரூபாய் செலவு செய்தாள், பின்னர் 450 ரூபாய் செலவு செய்து பீட்ஸா வாங்கினாள்; ஆனால் வளாகம் வரப் பயன்படுத்திய ஆட்டோ ஓட்டுனரிடம், 5 ரூபாய்க்கான பேரத்தில் தீவிரமாக ஈடுபட்டாள். திரும்பிச் செல்லும் வழியில் காய்கறி வாங்கிய போது, ஒவ்வொரு காய்கறிக் விலையிலும் பேரம் பேசி, 4-5 ரூபாய் மிச்சப்படுத்தினாள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நாம் பெரிய பெரிய இடங்களில் எல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் பொருட்களை வாங்குகிறோம், உழைத்துப் பிழைப்பு நடத்தும் நம் சகோதர சகோதரிகளிடம் சில்லறைப் பணத்துக்காக சண்டை போடுகிறோம். அவர்கள் மீது அவநம்பிக்கை கொள்கிறோம். நீங்கள் உங்கள் மனதின் குரலில் இதைக் கண்டிப்பாகக் கூற வேண்டும்”.

இந்தத் தொலைபேசி அழைப்பைக் கேட்ட பின்னர், உங்களுக்கும் திகைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏன் வெட்கம் கூடப் பிடுங்கித் தின்னலாம், இனி இப்படி நான் நடந்து கொள்ள மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் உறுதி செய்து கொண்டும் இருக்கலாம். நம் வீட்டருகில் பொருள் விற்க வருபவரிடமோ, சிறிய கடை வைத்திருப்பவரிடமோ, காய்கறிக் கடைக்காரர்களிடமோ, சில வேளைகளில் ஆட்டோ ஓட்டுனர்களிடமோ – இல்லை இந்த விலை கிடையாது, 2 ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள், 5 ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசுவதில் ஈடுபடுகிறோம்.

நாம் பெரிய பெரிய உணவு விடுதிகளில் உணவு உண்ணச் செல்லும் போது, ரசீதில் என்ன எழுதி இருக்கிறது என்று கவனிப்பது கூட இல்லை. டக்கென்று பணத்தை எடுத்துக் கொடுத்து விடுகிறோம். இது மட்டுமல்ல, பெரிய கடைகளில் புடவை வாங்கச் சென்றால், எந்த பேரம் பேசுவதிலும் நாம் ஈடுபடுவதில்லை; அதே வேளையில் ஒரு ஏழையிடத்தில், பேரம் பேசாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. அந்த ஏழையின் மனதில் என்ன ஓடும் என்பதை எப்போதாவது நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? கேள்வி 2 ரூபாய், 5 ரூபாய் பற்றியதல்ல. அவர் ஏழை என்பதால், அவரது நாணயத்தின் மீது உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, என்று அவரது இதயம் காயப் படுகிறது. 2 ரூபாய், 5 ரூபாய் எல்லாம் உங்கள் வாழ்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் உங்களின் இந்த அற்பப் பழக்கம், அந்த ஏழையின் மனதில் எத்தனை பெரிய வலியை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மேடம், நான் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன், நீங்கள் மனதைத் தொடும்படியான ஒரு தொலைபேசி அழைப்பு மூலமாக ஒரு தகவலை அளித்திருக்கிறீர்கள். நாட்டுமக்களும் இனி ஏழையோடு பேரம் பேசும் பழக்கத்தைக் கண்டிப்பாக கைவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

எனதருமை இளைய நண்பர்களே, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியை ஒட்டுமொத்த தேசமும் அனைத்திந்திய விளையாட்டுகள் தினமாகக் கொண்டாடவிருக்கிறது. இது ஹாக்கி விளையாட்டு வீரரும், ஹாக்கி உலகின் மாயாஜாலக்காரர் என்று கருதப்படும் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளாகும். ஹாக்கிக்கு அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. நமது தேசத்தின் இளைய சமுதாயம் விளையாட்டுகளோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே, நான் இந்த விஷயத்தை நினைவு கூர்கிறேன். விளையாட்டுகள் நம் வாழ்வின் அங்கமாக மாற வேண்டும். நாம் உலகில் இளையோர் மிகுந்த தேசம் என்பதால், நமது இந்த இளமைத் துடிப்பு விளையாட்டு மைதானங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். உடலுறுதி, விழிப்பான மனம், ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை விளையாட்டுகள் அளிக்கின்றன – இவற்றை விட வேறு என்ன வேண்டும் கூறுங்கள். விளையாட்டுகள் ஒரு வகையில் மனங்களை இணைக்கும் ஒரு அருமருந்து. நமது தேசத்தின் இளைய தலைமுறையினர் விளையாட்டு உலகில் முன்னேற வேண்டும், அதுவும் இன்றைய கணிப்பொறி உலகில், விளையாட்டு மைதானம், கணிப்பொறி விளையாட்டுக் கருவியை விட மகத்துவம் வாய்ந்தது என்பதை நான் அறுதியிட்டுக் கூற விரும்புகிறேன். கணிப்பொறியில் FIFA கால்பந்தாட்டம் எல்லாம் விளையாடலாம், ஆனால் மைதானத்தில் கால்பந்தாட்டம் ஆடித் தான் பாருங்களேன். நீங்கள் கணிப்பொறியில் கிரிக்கெட் விளையாடலாம், ஆனால் மைதானத்தில், வானத்தின் கீழே விளையாடுங்கள், அதன் ஆனந்தமே அலாதி தான். ஒரு காலத்தில் வீட்டில் குழந்தைகள் எல்லாரும் வெளியே செல்லும் போது, அன்னை எப்போது திரும்பி வருவீர்கள் என்று கேட்பாள். இன்றைய காலகட்டத்தில் இது எப்படி மாறி விட்டிருக்கிறது என்றால், குழந்தைகள் வீட்டுக்கு வந்தவுடனேயே, ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, கார்ட்டூன் படம் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள் அல்லது மொபைல் கேம்களில் மூழ்கி விடுகிறார்கள்; நீ எப்போது வெளியே போய் விளையாடுவாய் என்று தாய்மார்கள் அவர்களைப் பார்த்துக் கத்த வேண்டியிருக்கிறது. இது காலத்தின் கோலம். நீ எப்பொழுது திரும்பி வீடு வந்து சேர்வாய் என்று தாய்மார்கள் கேட்டது அந்தக் காலம்; மகனே, நீ எப்பொழுது வெளியே சென்று விளையாடுவாய் என்று தாய் பிள்ளையிடம் கேட்க வேண்டியிருப்பது இந்தக் காலம்.

இளைய நண்பர்களே, விளையாட்டு அமைச்சகம், விளையாட்டுகளில் திறன்களை இனம்கண்டு அவற்றை மேலும் மெருகேற்ற விளையாட்டுத் திறனாளிகளைத் தேடும் தளம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இங்கே விளையாட்டுத் துறையில் ஏதேனும் ஒரு சாதனை படைத்த, தேசத்தின் எந்த ஒரு குழந்தையும், அவர்களிடம் திறமை இருந்தால், அவர்கள் இந்த போர்டலில் தங்களைப் பற்றிய விவரங்கள் அல்லது வீடியோவை தரவேற்றம் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு அமைச்சகம் பயிற்சி அளிக்கும், அமைச்சகம் நாளை தான் இந்த போர்ட்டலை தொடக்க இருக்கிறது. பாரதத்தில், 6 முதல் 28 அக்டோபர் வரை, FIFA 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கால்பந்தாட்டக் கோப்பைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருந்தும் 24 அணிகள் பாரதத்தில் வந்து விளையாடவிருக்கின்றன.

பல நாடுகளிலிருந்து வரும் இளைய சமுதாய விருந்தாளிகளை நாம் விளையாட்டுக் கொண்டாட்டங்கள் மூலமாக வரவேற்போம் வாருங்கள். விளையாட்டுகளை அனுபவிப்போம், நாட்டில் இப்படிப்பட்டதொரு சூழலை ஏற்படுத்துவோம். விளையாட்டுகள் பற்றிப் பேசும் வேளையில், கடந்த வாரங்களில் என் மனதைத் தொடும் நிகழ்வு நடந்தது, அது பற்றி உங்களிடம் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். இளவயது பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, அவர்களில் சில பெண்கள் இமயமலைப் பகுதியில் பிறந்தவர்கள். அவர்கள் தங்கள் வாழ்கையில் கடல்களைப் பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட 6 பெண்கள் கடற்படையில் பணிபுரிகிறார்கள். அவர்களின் உணர்வுகள், அவர்களின் ஊக்கம் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இந்த 6 பெண் செல்வங்களும் ஒரு சின்னஞ்சிறிய படகான INS TARINIயில் பயணித்து, கடல்களைக் கடந்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் செயல்பாட்டுக்கு அளிக்கப்பட்ட பெயர் நாவிகா சாகர் பரிக்ரமா, அதாவது பெண் மாலுமிகளின் கடல்சுற்று; அவர்கள் உலகம் முழுவதையும் சுற்றி, பல மாதங்கள் கழித்து பாரதம் திரும்புவார்கள். சில வேளைகளில் சுமார் 40 நாட்கள் நீரிலேயே கழிப்பார்கள். சில வேளைகளில் சுமார் 30 நாட்கள் தொடர்ந்து நீரில் கழிக்க வேண்டியிருக்கலாம். கடலின் அலைகளுக்கிடையே, சாகஸத்தோடு நமது 6 பெண் செல்வங்கள் பயணிக்கிறார்கள், உலகிலேயே இப்படி முதல்முறையாக நடைபெறுகிறது. தேசத்தின் எந்தக் குடிமகனுக்குத் தான் இந்தப் பெண்கள் மீது பெருமிதம் பொங்காது. நான் இந்தப் பெண்களின் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன், உங்கள் அனுபவங்களை ஒட்டுமொத்த தேச மக்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். நானும் NarendraModi Appஇல் அவர்களின் அனுபவங்களுக்காக பிரத்யேகமாக ஒரு வழிவகையை உருவாக்கி, நீங்கள் படிக்க ஏற்பாடு செய்கிறேன்; நீங்கள் கண்டிப்பாக அதைப் படியுங்கள், ஏனென்றால், இது ஒருவகையான துணிவு நிரம்பிய கதை, சுய அனுபவம் நிறைந்த கதை, இந்தப் பெண் செல்வங்களின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். இந்தப் பெண்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள், ஏராளமான நல்லாசிகள்.

எனதருமை நாட்டுமக்களே, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகிறோம். நமது தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் இது. அவர் குடியரசுத் தலைவராக இருந்தார் என்றாலும், தன் வாழ்நாள் முழுவதும், தன்னை ஒரு ஆசிரியராகவே முன்னிலைப்படுத்திக் கொண்டார். அவர் எப்பொழுதும் ஒரு ஆசிரியராக வாழவே விரும்பினார். அவர் கல்வியிடத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்தார். ஒரு அறிஞராக, ஒரு ராஜதந்திரியாக, பாரதத்தின் குடியரசுத் தலைவராக இருந்தார் என்றாலும், ஒவ்வொரு கணமும் அவர் உயிர்ப்பு கொண்ட ஆசிரியராகவே விளங்கினார். நான் அவரை நினைவு கூர்கிறேன்.

மகத்தான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை கூறினார் – ”It is the supreme art of the teacher to awaken joy in creative expression and knowledge – மாணவர்களிடம் படைப்புத் திறனையும் அறிவையும் தட்டி எழுப்புவது தான் ஒரு ஆசிரியரின் மகத்துவம் வாய்ந்த குணம் என்பது அதன் பொருள். இந்த முறை நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், நாமனைவரும் இணைந்து ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ளலாமா? இலக்கு ஒன்றைக் குறிவைத்து நாம் ஒரு இயக்கத்தை நடத்தலாமா? Teach to Transform, Educate to Empower, Learn to Lead – மாற்றத்தை ஏற்படுத்த பயிற்றுவிப்போம், அதிகாரம் பரவலாக்கப்பட கல்வி அளிப்போம், தலைமையேற்க கல்வி பெறுவோம். இந்த உறுதிப்பாட்டோடு நாம் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமில்லையா? ஒவ்வொருவரையும் 5 ஆண்டுகளுக்கு ஏதாவது ஒரு உறுதிப்பாட்டோடு கட்டிப் போடுங்கள், அதை அடையும் வழியினைக் காட்டுங்கள், அந்த இலக்கை அவர்கள் 5 ஆண்டுகளில் அடையட்டும், வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஆனந்தத்தை உணரட்டும் – இந்த வகையிலான சூழலை நமது பள்ளிகள், கல்லூரிகள், நமது ஆசிரியர்கள், நமது கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும், தேசத்தில் நாம் மாற்றம் என்பது பற்றிப் பேசும் பொழுது, எப்படி குடும்பத்தில் தாய் நினைவுக்கு வருகிறாளோ, அதே போல சமுதாயம் என்ற வகையில், ஆசிரியர் நினைவுக்கு வருகிறார். மாற்றம் ஏற்படுத்துவதில் ஆசிரியருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. தனது முயற்சிகள் காரணமாக, யாருடைய வாழ்விலாவது மாற்றம் ஏற்படுத்துவதில் வெற்றியடைந்த சம்பவங்கள், ஒவ்வொரு ஆசிரியரின் வாழ்கையிலும் கண்டிப்பாக இருக்கும். நாம் சமூகரீதியில் முயற்சிகள் மேற்கொண்டால், தேசத்தில் நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், இதில் நம்மால் மிகப் பெரிய பங்களிப்பு நல்க முடியும். மாற்றம் காணக் கல்வி கற்பிப்போம், இந்த மந்திரத்தை முன்னெடுத்துச் செல்வோம், வாருங்கள்.

“வணக்கம் பிரதமர் அவர்களே. என்னுடைய பெயர் டா. அனன்யா அவஸ்தி. நான் மும்பை நகரில் வசிக்கிறேன், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வு மையத்திற்காகப் பணிபுரிகிறேன். ஒரு ஆய்வாளர் என்ற முறையில், நிதிசார் உள்ளடக்கல் மீதும், இதோடு தொடர்புடைய சமூகத் திட்டங்கள் மீதும் எனக்கு சிறப்பான ஆர்வம் இருக்கிறது. நான் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், 2014ஆம் ஆண்டில் நீங்கள் ஜன் தன் திட்டத்தைத் தொடங்கினீர்கள்; இன்று 3 ஆண்டுகள் கழிந்த நிலையில், பாரதம் நிதிரீதியாக அதிக பாதுகாப்பானதாக இருக்கிறதா, சக்தி அதிகரித்திருக்கிறதா, இந்த அதிகாரப் பரவலாக்கமும், வசதிகளும் நமது பெண்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை, கிராமங்களை, பட்டிதொட்டிகளை எல்லாம் சென்று அடைந்திருக்கிறதா, புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்ன, சொல்லுங்கள். நன்றி”.

எனதருமை நாட்டுமக்களே, ‘பிரதம மந்திரி ஜன் தன் திட்டம்’ பற்றிக் கேட்கப் பட்டிருக்கிறது. நிதிசார் உள்ளடக்கல் – இது பாரதத்தில் மட்டுமல்ல, பொருளாதார உலகெங்கும் வல்லுனர்களின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மனதில் ஒரு கனவைச் சுமந்து கொண்டு, நான் இந்தத் திட்டத்தைத் தொடக்கினேன். நாளை ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியுடன், இந்த பிரதம மந்திரி ஜன் தன் திட்டம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றது. 30 கோடி புதிய குடும்பங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள், வங்கிக் கணக்குகள் திறக்கப் பட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளின் மக்கட் தொகையை விட, இது அதிக எண்ணிக்கை. இன்று, எனக்கு மிகப்பெரிய நிறைவு அளிக்கும் விஷயம் என்னவென்றால், 3 ஆண்டுகளுக்கு உள்ளாக, சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கும் என் ஏழைச் சகோதரன் ஒருவன் கூட, தேசத்தின் பொருளாதார அமைப்பின் பிரதான நீரோட்டத்தில் இணைந்திருக்கிறான், அவனது பழக்கம் மாறியிருக்கிறது, அவன் வங்கிக்குச் சென்று வரத் தொடங்கியிருக்கிறான், பணத்தைச் சேமிக்க ஆரம்பித்திருக்கிறான், பணம் தரும் பாதுகாப்பை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறான் என்பது தான். சில வேளைகளில், பணம் கையில் புழங்கினாலோ, பையில் இருந்தாலோ, வீட்டில் இருந்தாலோ, வீண் செலவு செய்ய மனம் தூண்டும். இப்பொழுது கட்டுப்பாடான ஒரு சூழல் உருவாக்கப் பட்டிருக்கிறது, மெல்ல மெல்ல பணம் குழந்தைகளின் செலவுக்குப் பயனாகும் என்று அவனுக்கும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. வருங்காலத்தில் ஏதாவது நல்ல காரியத்துக்கு இந்தப் பணம் உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறான். இதுமட்டுமல்ல, ஒரு ஏழை, தனது பையில் ரூபே அட்டை இருப்பதைக் காணும் பொழுது, தன்னை ஒரு செல்வந்தராக எண்ணிக் கொள்கிறான், தெம்படைகிறான்; அவர்கள் பைகளில் கடன் அட்டை இருக்கிறது, என்னிடத்தில் ரூபே அட்டை இருக்கிறது என்று எண்ணி, சுய கவுரவத்தை உணர்கிறான். பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் மூலம் நமது ஏழைகள் வாயிலாக, வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் பணம் 65000 கோடி ரூபாய். ஒருவகையில் ஏழைகளின் இந்தச் சேமிப்பு, இது வருங்காலங்களில் அவர்களுடைய பலமாக இருக்கும். பிரதம மந்திரி ஜன் தன் திட்டம் வாயிலாக, யார் வங்கிக் கணக்கு திறந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு காப்பீட்டுப் பயனும் கிடைக்கிறது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு, பிரதம மந்திரி விபத்துக் காப்பீடுத் திட்டம் – ஒரு ரூபாய், 30 ரூபாய் என்ற மிக எளிமையான கட்டணம் செலுத்தி, இன்று அந்த ஏழைகளின் வாழ்வில், ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல குடும்பங்களில் இந்த ஒரு ரூபாய் கட்டணம் காரணமாக, ஏழைக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டால், குடும்பத் தலைவன் இறக்க நேர்ந்தால், அந்தக் குடும்பத்துக்கு 2 இலட்சம் ரூபாய் கிடைக்கிறது. பிரதம மந்திரி முத்ரா திட்டம், ஸ்டார்ட்டப் திட்டம், ஸ்டாண்ட் அப் திட்டம் – இவற்றில் தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், பழங்குடி இனத்தவர்களாகட்டும், பெண்களாகட்டும், படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்களாகட்டும், சொந்தக் கால்களில் நின்று சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களாகட்டும், அப்படிப்பட்ட கோடிக்கணக்கான இளைஞர்கள் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்படி, வங்கிகளிடமிருந்து எந்த வித பிணையும் இல்லாமல், பணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது; அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதோடு மட்டுமல்லாமல், ஒன்றிரண்டு பேர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வெற்றிகரமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த நாட்களில் வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள் சிலர், என்னை சந்திக்க வந்திருந்த போது, ஜன் தன் திட்டம், காப்பீட்டுத் திட்டங்கள், ரூபே அட்டை, பிரதம மந்திரி முத்ரா திட்டம் ஆகியவை காரணமாக, சாமான்ய மக்களுக்கு எந்த வகையில் பயன் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றியதொரு ஆய்வை அவர்கள் மேற்கொண்ட போது, உத்வேகம் அளிக்கக் கூடிய பல விஷயங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்று சொன்னார்கள். இன்று அதிக நேரமில்லை ஆனால், இப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டிப்பாக MyGov.in தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும் என்று நான் வங்கிப் பணியாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்; இதனை மக்கள் படித்து உத்வேகம் அடைவார்கள். எப்படி ஒரு திட்டம் ஒரு நபரின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, எப்படி புதிய சக்தியை நிரப்புகிறது, புதியதொரு நம்பிக்கையை தோற்றுவிக்கிறது என்பனவுக்கான ஏராளமான எடுத்துக்காட்டுகள் என் முன்னே வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை உங்கள் பார்வைக்குக் கொண்டு வர, நான் முழு முயற்சிகளையும் மேற்கொள்வேன்; ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கூட, இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய நிகழ்வுகள் இவற்றில் அடங்கியிருக்கின்றன. அவர்களும் இப்படிப்பட்ட நபர்களோடு நேர்காணல்கள் நிகழ்த்தி, புதிய தலைமுறைக்குப் புதிய கருத்தூக்கம் ஏற்படுத்தலாம்.

எனதருமை நாட்டுமக்களே, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் மிச்சாமீ துக்கடம். மிக்க நன்றி.

******