எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மீண்டுமொரு முறை மனதின் குரல் வாயிலாக எனது கோடானுகோடிச் சொந்தங்களான உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். சில நாட்களுக்கு முன்பாகத் தான் தேசம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது, இது நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. பாரதத்தின் திறமைகள் மீதான ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. கிரிக்கெட் மைதானத்தில் டீம் இண்டியாவைச் சேர்ந்த மட்டையாட்டக்காரர் யாராவது சதம் அடித்தார்கள் என்றால் சந்தோஷப்படுவீர்கள் தானே! ஆனால் பாரதம் வேறு ஒரு மைதானத்தில் சதம் அடித்திருக்கிறது, அதிலும் அது மிகவும் விசேஷமானது. இந்த மாதம் 5ஆம் தேதியன்று தேசத்தின் யூனிகார்ன்களின் எண்ணிக்கை 100 என்ற எண்ணிக்கையை எட்டி விட்டது. ஒரு யூனிகார்ன் என்பது குறைந்தபட்சம் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டார்ட் அப் ஆகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த யூனிகார்ன்களின் மொத்த மதிப்பு 330 பில்லியன் டாலர்கள் ஆகும், அதாவது 25 இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமானது. இந்த விஷயம் ஒவ்வொரு இந்தியருக்கும் கண்டிப்பாகப் பெருமிதம் அளிக்கவல்லது. நம்மிடத்திலே மொத்தம் 44 யூனிகார்ன்கள் கடந்த ஆண்டு உருவானது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இது மட்டுமல்ல, இந்த ஆண்டில் 3-4 மாதங்களிலே, மேலும் 14 புதிய யூனிகார்ன்கள் உருவாயின. இதன் பொருள் என்னவென்றால் உலகளாவிய பெருந்தொற்று என்ற இந்த காலகட்டத்திலும் கூட, நமது ஸ்டார்ட் அப்புகள், செல்வத்தையும், மதிப்பையும் உருவாக்கிக் கொண்டே வந்திருக்கின்றன. இந்திய யூனிகார்ன்களின் சராசரி வருடாந்தர வீதம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை விடவும் அதிகமானது. இனிவரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு இருக்கும் என்பது ஆய்வாளர்களின் முடிவு. மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் நமது யூனிகார்ன்கள் பல்வகைப்படுத்தி வருகின்றன. இவை e-commerce மின்னணு வர்த்தகம், Fin-Tech நிதிசார் தொழில்நுட்பம், Ed-Tech கல்விசார் தொழில்நுட்பம், Bio-Tech உயிரி தொழில்நுட்பம் போன்ற பல துறைகளிலும் பணியாற்றி வருகின்றன. மேலும் ஒரு விஷயம், இதை நான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறேன். அது என்னவென்றால், ஸ்டார்ட் அப்புகள் உலகம், புதிய இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது.
இன்று பாரதத்தின் ஸ்டார்ட் அப் சூழலமைப்பு பெருநகரங்களோடு மட்டுமே நின்று விடவில்லை. சின்னச்சின்ன நகரங்கள், பகுதிகளிலிருந்தும் கூட தொழில்முனைவோர் முன்வருகிறார்கள். பாரதத்திலே புதுமையான எண்ணம் இருக்கிறது, அதனால் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது.
நண்பர்களே, தேசத்தின் இந்த வெற்றிக்குப் பின்னாலே, தேசத்தின் இளையோர் சக்தி, தேசத்தின் திறன்கள், அரசு ஆகிய அனைத்தும் இணைந்து முயற்சிக்கிறார்கள், அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது ஆனால், இதிலே மேலும் ஒரு மகத்துவம் வாய்ந்த விஷயமும் இருக்கிறது. அது என்னவென்றால் ஸ்டார்ட் அப் உலகிலே சரியான மெண்டரிங் என்று சொல்லப்படும் வழிகாட்டி உருவாக்குதல் மிக முக்கியமானது. ஒரு நல்ல வழிகாட்டியானவர், எந்த ஒரு ஸ்டார்ட் அப்பையும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வார். நிறுவனர்கள் சரியான முடிவு எடுக்க உதவி செய்து, அனைத்து விதங்களிலும் இவர்கள் வழிகாட்டுகிறார்கள். ஸ்டார்ட் அப்புகளை முன்னே கொண்டு செல்லும் பொருட்டு, தங்களையே அர்ப்பணித்திருக்கும் பல வழிகாட்டிகள் பாரதத்திலே இருக்கிறார்கள் என்பது எனக்கு பெருமிதம் தரும் விஷயம்.
ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு இப்போது தான் பத்ம விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அவர் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் தான் என்றாலும், தற்போது, மேலும் பல தொழில் முனைவோர்களை உருவாக்குவது என்ற சவாலை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஸ்ரீதர் அவர்கள் தனது பணியை ஊரகப் பகுதியிலே தொடங்கியிருக்கிறார். அவர் கிராமங்களிலேயே வசித்திருந்து, ஊரகப் பகுதி இளைஞர்களை, இந்தப் பகுதியில் பங்களிப்பு அளிக்கும் வகையில் உற்சாகப்படுத்தி வருகிறார். நமது நாட்டிலே மதன் படாகீ போன்றவர்களும் கூட, ஊரகப்பகுதி தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டு 2014இலே One Bridge என்ற பெயருடைய தளத்தை உருவாக்கினார். இன்று இந்த அமைப்பு, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் 75ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய 9000த்திற்கும் மேற்பட்ட ஊரகப்பகுதி தொழில்முனைவோர், கிராமப்புற நுகர்வோருக்குத் தங்களுடைய சேவைகளை அளித்து வருகிறார்கள். மீரா ஷெனாய் அவர்களும் கூட இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தான். அவர் ஊரக, பழங்குடியின இளைஞர்கள், மாற்றுத் திறனாளி இளைஞர்கள் ஆகியோருக்காக, சந்தையோடு தொடர்புடைய திறன்களுக்கான பயிற்சித் துறையில் குறிப்பிடத்தக்க செயல்களை ஆற்றி வருகிறார். நான் இங்கே சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால், இன்று நம்மிடையே வழிகாட்டிகளுக்குக் குறைவே கிடையாது. தேசம் முழுக்க முழு அளவிலான ஒரு ஆதரவு அமைப்பு தயாராகி வருகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம். இனிவருங்காலத்திலே, பாரதத்தின் ஸ்டார்ட் அப் உலக முன்னேற்றத்தின் புதிய முன்னோக்கிய பாய்ச்சலை நாம் காண்போம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக இதே போன்ற ஒரு சுவாரசியமான, கவர்ச்சிகரமான விஷயத்தைப் பார்க்க நேர்ந்தது, இதிலே நாட்டுமக்களின் படைப்புத் திறன், கலைத்திறன் ஆகியவை பளிச்சிட்டது. தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சுயஉதவிக் குழுவானது எனக்கு ஒரு பரிசினை அனுப்பி இருக்கிறது. இந்தப் பரிசினிலே பாரத நாட்டின் மணம் வீசுகிறது, தாய்மை சக்தியின் ஆசிகள் நிரம்பியிருக்கின்றன. என் மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசமும் பாசமும் கனிவை ஏற்படுத்துகின்றன. அது ஒரு சிறப்பான தஞ்சாவூர் பொம்மை, இதற்கு புவிசார் குறியீடு கூட இதற்குக் கிடைத்திருக்கிறது. வட்டார கலாச்சார மணம் வீசும் பரிசினை எனக்கு அனுப்பியமைக்கு, நான் தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவிற்கு என் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தஞ்சாவூர் பொம்மை எத்தனை அழகானதாக இருக்கிறதோ, அத்தனை அழகானது, பெண்களின் அதிகாரப் பங்களிப்பின் புதிய காதை. தஞ்சாவூர்ப் பெண்களுடைய சுயஉதவிக் குழுக்கள் ஒரு அங்காடியையும், ஒரு சிறுகடையையும் திறந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிறுகடை, அங்காடி வாயிலாக, தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் இந்தப் பெண்களால் நேரடியாகக் கொண்டு சேர்க்க முடிகிறது. இந்த முயல்விற்கு, தாரகைகள் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த முயற்சியோடு 22 சுயஉதவிக் குழுக்கள் இணைந்திருக்கின்றன என்பது தான். இந்த மகளிர் சுயவுதவிக் குழுக்கள், பெண்களின் சுயசேவை சமூகமே நடத்தும் இந்த அங்காடியை, தஞ்சாவூரின் பிரதானமான இடத்திலே திறந்திருக்கின்றார்கள். இதன் பராமரிப்புப் பொறுப்பு முழுவதையுமே கூட இந்தப் பெண்களே ஏற்றிருக்கின்றார்கள். இந்தப் பெண்கள் சுயஉதவிக் குழு, தஞ்சாவூர் பொம்மை, வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீட்டுப் பொருட்களைத் தவிர, பிற பொம்மைகள், தரை விரிப்புகள், செயற்கை நகைகள் ஆகியவற்றையும் கூட தயாரிக்கிறார்கள். ஒரு கடையின் மூலமாக புவிசார் குறியீட்டோடு, கைவினைப் பொருட்களின் விற்பனையில் கணிசமான முன்னேற்றம் காணக் கிடைக்கிறது. இந்த முயல்வு காரணமாக, கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் வருவாயும் அதிகரிப்பதால் அவர்களின் அதிகாரப் பங்களிப்பும் ஏற்படுகிறது. மனதின் குரல் நேயர்களே, உங்கள் பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் யாராவது பணியாற்றி வருகிறார்களா என்று நீங்களும் ஆராய்ந்து பாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் விற்பனைப் பொருட்கள் பற்றிய தகவல்களைச் சேகரியுங்கள், இப்படிப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துங்கள். இப்படிச் செய்வதால், நீங்கள் சுயஉதவிக் குழுக்களுடைய வருமானத்தை அதிகரிக்க உதவுவதோடு, தற்சார்பு பாரத இயக்கத்திற்கும் வேகமளிப்பீர்கள்.
நண்பர்களே, நமது தேசத்திலே பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்கள், வழக்கு மொழிகள் என, இது ஒரு நிறைவான பொக்கிஷம். பல்வேறு பகுதிகளில் பல்வேறு ஆடைகள், உணவுமுறைகள், கலாச்சாரம்….. இவையே நமது அடையாளம். இந்தப் பன்முகத்தன்மை, இந்த வேற்றுமை, ஒரு தேசம் என்ற வகையிலே, நம்மை மேலும் ஆற்றல் படைத்தவர்களாக ஆக்குவதோடு, இணைத்தும் வைக்கின்றது. இதோடு தொடர்புடைய மிகவும் கருத்தூக்கம் அளிக்கும் எடுத்துக்காட்டு, ஒரு சிறுமி கல்பனாவினுடையது, இதை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவருடைய பெயர் கல்பனா ஆனால், இவருடைய முயற்சியில், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மெய்யான உணர்வு நிரம்பி இருக்கிறது. உள்ளபடியே, கல்பனா இப்போது தான் கர்நாடகத்திலே 10ஆம் வகுப்பிலே தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்றாலும், இவருடைய வெற்றியின் சிறப்பான விஷயம் என்னவென்றால், கல்பனாவுக்கு சில நாட்கள் முன்பு வரை கன்னட மொழியே சரியாகத் தெரியாது. இவர், மூன்றே மாதங்களில் கன்னட மொழியைக் கற்றுக் கொண்டதோடு இல்லாமல், இவர் கன்னட மொழிக்கான தேர்விலே 92 மதிப்பெண்களையும் பெற்றுக் காட்டினார். இது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம், ஆனால் இது உண்மை. இவரைப் பற்றிய மேலும் பல விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை மட்டுமல்லாமல், உத்வேகத்தையும் அளிக்க வல்லவை. கல்பனா, அடிப்படையிலே உத்தராகண்டின் ஜோஷீமட்டிலே வசிப்பவர். இவர் முன்பு காசநோயால் பீடிக்கப்பட்டிருந்தார், பிறகு இவர் 3ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, இவருடைய கண்களிலே பார்வை இழப்பு ஏற்பட்டது. ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள் இல்லையா?! பின்னர் கல்பனா மைசூரூவில் வசிக்கும் பேராசிரியர் தாராமூர்த்தியின் தொடர்பிலே வந்தார்; இந்தப் பேராசிரியர், கல்பனாவுக்கு ஊக்கம் மட்டும் அளிக்கவில்லை, இவருக்கு உதவிகரமாகவும் இருந்தார். இன்று இவர் தனது உழைப்பின் காரணமாக நம்மனைவருக்கும் எடுத்துக்காட்டாய் மிளிர்கிறார். கல்பனாவின் அனைத்து முயற்சிகளுக்கும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் போலவே நமது தேசத்தில் பலரும் கூட, தேசத்தின் மொழிப் பன்முகத்தன்மையை பலப்படுத்தும் பணியைப் புரிந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நண்பர் தான் மேற்கு வங்கத்தின் புரூலியாவைச் சேர்ந்த ஸ்ரீபதி டூடூ அவர்கள். டூடூ அவர்கள், புருலியாவின் சித்தோ கானோ பிர்ஸா பல்கலைக்கழகத்தில் சந்தாலி மொழியின் பேராசிரியர். இவர் சந்தாலி சமூகத்திற்காக, அவர்களுடைய ஓல் சிகீ எழுத்து வடிவத்தில், தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதியை உருவாக்கி இருக்கிறார். நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம், நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய அதிகாரங்கள்-கடமைகள் குறித்த அறிவை அளிக்கிறது என்று ஸ்ரீபதி டூடூ அவர்கள் கூறுகிறார். ஆகையால் அனைத்துக் குடிமக்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் சந்தாலி சமூகத்திற்காக, அவர்களுடைய எழுத்து வடிவத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரித்து, இதை ஒரு அன்பளிப்பாக அவர்களுக்கு அளித்திருக்கிறார். ஸ்ரீபதி அவர்களின் எண்ணத்திற்கும் அவரது முயற்சிகளுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் உணர்விற்கான உயிர்ப்புநிறைந்த ஒரு எடுத்துக்காட்டு. இந்த உணர்வினை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இப்படிப்பட்ட பல முயற்சிகள் பற்றி ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் இணையத்தளத்திலும் கூட பல தகவல்கள் கிடைக்கும். இங்கே உங்களுக்கு உணவுமுறை, கலை, கலாச்சாரம், சுற்றுலா உட்பட இப்படிப்பட்ட பல விஷயங்கள் தொடர்பான செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இயலும். நீங்கள் இந்தச் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம், இதனால் உங்களுக்கு, நமது தேசம் பற்றிய தகவல்களும் கிடைக்கும், மேலும் நீங்களும் தேசத்தின் பன்முகத்தன்மையை உணர ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, இந்த சமயத்தில், நமது தேசத்தில் உத்தராகண்டின் சார்தாம் புனித யாத்திரை நடைபெற்று வருகிறது. சார்தாம், அதுவும் குறிப்பாக கேதார்நாத்திலே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பக்தர்கள் அங்கே குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். மக்கள் தங்களுடைய சார்தாம் யாத்திரை பற்றிய சுகமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டும் வருகிறார்கள். ஆனால் சில பயணிகள் ஏற்படுத்தும் மாசு காரணமாக, பக்தர்களுக்கு வருத்தமும் ஏற்படுகிறது என்பதையும் என்னால் காண முடிகிறது. சமூக ஊடகத்திலும் கூட பலர் தங்களுடைய கருத்தைக் கூறியிருக்கிறார்கள். நாம் புனித யாத்திரையை மேற்கொள்ளும் போது, அங்கே குப்பைக்கூளமாக இருந்தால், அது சரியல்ல. ஆனால் நண்பர்களே, இந்தப் புகார்களுக்கு இடையே பல நல்ல காட்சிகளையும் காண முடிந்தது. எங்கே சிரத்தை உள்ளதோ, அங்கே படைப்புத் திறனும், ஆக்கப்பூர்வமான நிலையும் இருக்கும். பல பக்தர்களும், பாபா கேதாரை தரிசித்துப் பூஜிப்பதைத் தவிர, தூய்மை வழிபாட்டையும் மேற்கொண்டு வருகிறார்கள். சிலர் தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கருகே தூய்மைப் பணியை மேற்கொள்கிறார்கள் என்றால், சிலரோ பயணப்பாதையில் இருக்கும் குப்பைக்கூளங்களைத் துப்புரவு செய்கிறார்கள். தூய்மை பாரத இயக்கத்தின் குழுவோடு இணைந்து பல அமைப்புக்களும், சுயசேவை அமைப்புக்களும் கூட பணியாற்றி வருகின்றன. நண்பர்களே, எப்படி நம் நாட்டிலே புனித யாத்திரைக்கு என மகத்துவம் இருக்கிறதோ, அதே போல, புனிதத்தலச் சேவைக்கும் மகத்துவம் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது, நான் மேலும் என்ன கூறுவேன் என்றால், தல சேவையில்லாமல், தலயாத்திரை என்பதே கூட முழுமை அடையாது. தேவபூமியான உத்தராகண்டில் எத்தனையோ நபர்கள் தூய்மை மற்றும் சேவை என்ற வழிபாட்டைப் புரிந்து வருகிறார்கள். ருத்ர பிரயாகையில் வசிக்கும் மனோஜ் பேன்ஜ்வால் அவர்களிடமிருந்து கூட உங்களுக்கு நிறைய உத்வேகம் பிறக்கும். மனோஜ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற சவாலை எதிர்கொண்டிருக்கிறார். இவர் தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்துவதோடு கூடவே, புனிதத் தலங்களை, நெகிழிப் பொருட்களிலிருந்து விடுவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அதே போல குப்தகாசியில் வசிக்கும் சுரேந்திர பக்வாடி அவர்களும் தூய்மையைத் தனது வாழ்க்கை மந்திரமாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் குப்தகாசியில், செம்மையான வகையிலே தூய்மைத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த இயக்கத்தின் பெயரைக் கூட மன் கீ பாத் என்றே வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது. இவரைப் போலவே தேவர் கிராமத்திலே சம்பாதேவி அவர்கள் மூன்று ஆண்டுகளாகத் தன் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, கழிவுப் பொருள் மேலாண்மையைக் கற்பித்து வருகிறார். சம்பா அவர்கள், பலநூறு மரங்களையும் நட்டிருக்கிறார், இவர் தனது உழைப்பின் காரணமாக ஒரு பசுமையான வனத்தையே உருவாக்கியிருக்கிறார். நண்பர்களே, இப்படிப்பட்ட மனிதர்களின் முயற்சிகள் காரணமாகவே தேவபூமி மற்றும் புனிதத்தலங்களில் தெய்வீக உணர்வு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. இந்த அனுபவத்தைப் பெறத் தானே நாம் அங்கே செல்கின்றோம்! அப்படியென்றால், இந்த தெய்வீகத்தையும், ஆன்மீகத்தையும் தொடர்ந்து காத்தளிப்பது என்பது நம்மனைவரின் கடமையாகும். இல்லையா? இப்போது நமது தேசத்திலே சார்தாம் யாத்திரையோடு கூடவே, அமர்நாத் யாத்திரை, பண்டர்புர் யாத்திரை, ஜகன்னாதர் யாத்திரை போன்ற பல யாத்திரைகள் வரவிருக்கின்றன. மழைக்கால மாதங்களில், ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோ ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கும்.
நண்பர்களே, நாம் எங்கே சென்றாலும், இந்தப் புனிதத் தலங்களின் மாட்சிமையை நாம் பாதுகாக்க வேண்டும். தூய்மை, சுத்தம், ஒரு புனிதமான சூழலை பராமரிப்பதை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது, இதைக் கட்டிக் காக்க வேண்டும், தூய்மை பற்றிய நமது உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சில நாட்கள் கழித்து ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று உலக சுற்றுச் சூழல் நாளை நாம் கொண்டாடவிருக்கிறோம். சுற்றுச்சூழல் தொடர்பாக நாம் நமது அக்கம்பக்கத்திலே ஆக்கப்பூர்வமான இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும், இது தொடர்ந்து நாம் செய்யக்கூடிய பணி. நீங்கள், இந்த முறை அனைவரோடும் இணைந்து தூய்மைக்காகவும், மரம்நடுதலுக்காகவும், சில முயல்வுகளைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். நீங்களே கூட மரங்களை நடுங்கள், மற்றவர்களையும் நடவு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாம் 8ஆவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இந்த முறை யோகக்கலை தினத்தின் மையக்கரு, மனித சமூகத்துக்காக யோகக்கலை என்பதே. யோகக்கலை தினத்தை மிகுந்த உற்சாகத்தோடு நீங்கள் கொண்டாடுங்கள் என்று உங்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்கிறேன். ஆம், கொரோனாவோடு இணைந்த முன்னெச்சரிக்கைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்; உலகம் முழுவதிலும் கொரோனா தொடர்பான நிலை, முன்பிருந்ததை விட மேம்பட்டிருக்கிறது, அதிக அளவிலான தடுப்பூசி போடப்படுவதன் காரணமாக இப்போது மக்கள் முன்பை விட அதிகமாக வெளியே வரத் தொடங்கி இருக்கிறார்கள். ஆகையால் உலகம் முழுவதிலும் யோகக்கலை தினம் தொடர்பாக பல தயாரிப்பு முஸ்தீபுகளை நம்மால் காண முடிகிறது. நமது வாழ்க்கையிலே, ஆரோக்கியம் என்பது எத்தனை மகத்துவம் வாய்ந்தது, இதிலே யோகக்கலை நம் உடல் நலத்தைப் பாதுகாக்க எத்தனை வலிமையான சாதனம் என்பதை, கொரோனா பெருந்தொற்று நம்மனைவருக்கும் புரிய வைத்திருக்கிறது. யோகக்கலையானது உடல்-ஆன்ம-அறிவுசார் நலன்களுக்கு எத்தனை ஊக்கமளிக்கிறது என்பதை மக்கள் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள். உலகின் தலைசிறந்த வணிகர்கள் முதல் திரைப்பட-விளையாட்டுத் துறை ஆளுமைகள் வரை, மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை, அனைவருமே யோகக்கலையைத் தங்களுடைய இணைபிரியா அங்கமாக ஆக்கிக் கொண்டு வருகிறார்கள். உலகெங்கிலும், யோகக்கலையின் பெருகி வரும் புகழைப் பார்க்கும் போது, உங்கள் அனைவருக்கும் கூட மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நண்பர்களே, இந்த முறை நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, யோகக்கலை தினம் தொடர்பாக நடைபெற உள்ள சில சிறப்பான நூதன எடுத்துக்காட்டுகள் பற்றி எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இவற்றில் ஒன்று தான் guardian ring – ஒரு மிகப்பெரிய தனித்தன்மை வாய்ந்த நிகழ்ச்சி. இதிலே சூரியனின் இயக்கம் கொண்டாடப் படுகிறது, அதாவது சூரியன் எங்கெல்லாம் பயணிக்கிறதோ, உலகின் பல்வேறு பாகங்களில் நாம் யோகக்கலை வாயிலாக சூரியனுக்கு வரவேற்பளிப்போம். பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள், அங்கே உள்ளூர் நேரத்திற்கேற்ப, சூரியோதய வேளையில் யோகக்கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்ச்சிகள் தொடங்கும். கிழக்கு முதல் மேற்கு வரை பயணம் தொடர்ந்தபடி இருக்கும், பிறகு இதே போல சென்று கொண்டே இருக்கும். இந்த நிகழ்ச்சிகளின் நேரலையுமே கூட, இதே போல ஒன்றன்பின் ஒன்றாக ஒருங்கிணைக்கப்படும். அதாவது ஒரு வகையில், இது தொடர் யோகக்கலை நேரலை நிகழ்வாக இருக்கும். கண்டிப்பாக நீங்களும் இதைப் பாருங்கள்.
நண்பர்களே, நமது நாட்டிலே இந்த முறை அமுதப் பெருவிழாவைக் கருத்திலே கொண்டு, தேசத்தின் 75 முக்கியமான இடங்களிலும் கூட சர்வதேச யோகக்கலை தின ஏற்பாடுகள் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்தில் பல அமைப்புகளும் நாட்டுமக்களும், அவரவர் நிலைகளுக்கேற்ப, அவரவர் பகுதிகளின் சிறப்பான இடங்களில் ஏதோ ஒரு வகையில் புதுமையாகச் செய்யும் தயாரிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த முறை யோகக்கலை தினத்தைக் கொண்டாட, நீங்கள், உங்களுடைய நகரத்தில், பகுதியில் அல்லது கிராமத்தில் ஏதோ ஒரு சிறப்பான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். இந்த இடம் ஒரு பழமையான ஆலயமாகவோ, சுற்றுலா மையமாகவோ இருக்கலாம், அல்லது ஒரு பிரசித்தமான நதி, நீர்வீழ்ச்சி அல்லது குளக்கரையாகவும் இருக்கலாம். இதனால் யோகக்கலையோடு கூடவே உங்கள் பகுதியின் அடையாளமும் மிகுந்து, சுற்றுலாவுக்கும் ஊக்கம் கிடைக்கும். இதுவே எனது வேண்டுகோள். இந்த வேளையில், யோகக்கலை தினம் தொடர்பாக 100 நாள் கவுண்ட் டவுன் ஏற்கனவே தொடங்கி இருக்கிறது, அல்லது தனிப்பட்ட மற்றும் சமூக முயல்வுகளோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள், 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டன. அதாவது தில்லியில் 100ஆவது நாளன்றும், 75ஆவது நாளன்றும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதே போல அஸாமின் சிவசாகரில் 50ஆவது, ஹைதராபாதிலே 25ஆவது கவுண்ட் டவுன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. நீங்களும் உங்கள் இடத்திலே, இப்போதிலிருந்தே யோகக்கலை தினத்திற்கான தயாரிப்புகளைத் தொடங்கி விடுங்கள். அதிக அளவிலான மக்களைச் சந்தியுங்கள், அனைவரையும் யோகக்கலை தினத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ள ஊக்கப்படுத்துங்கள், உத்வேகமளியுங்கள். நீங்கள் அனைவரும் யோகக்கலை தினத்தோடு மிகுந்த உற்சாகத்தோடு இணைந்து கொள்வீர்கள் என்பதும், கூடவே யோகக்கலையை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பீர்கள் என்ற முழு நம்பிக்கையும் எனக்கு உள்ளது.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாகத் தான் நான் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்தேன். என்னுடைய பல நிகழ்ச்சிகளுக்கு இடையே, சில அற்புதமான மனிதர்களைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவர்களைப் பற்றி மனதின் குரலில் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், பாரத நாட்டிடம் இவர்களுக்கு அலாதியான ஒரு ஈடுபாடும், பாசமும் இருந்தன. இவர்களில் ஒருவர் தான் ஹிரோஷி கோயிகே அவர்கள், இவர் மிகப் பிரபலமான ஒரு கலை இயக்குநர். இவர் தான் மஹாபாரத நிகழ்ச்சியை இயக்கினார் என்பதை அறிந்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் தொடக்கம் கம்போடியா நாட்டில் நடந்தது; கடந்த 9 ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹிரோஷி கோயிகே அவர்கள் ஒவ்வொரு பணியையும் மிக வித்தியாசமான முறையிலே செய்கிறார். இவர், ஒவ்வொரு ஆண்டும், ஆசியாவின் ஏதோ ஒரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார், அங்கே இருக்கும் உள்ளூர் கலைஞர், இசைக்கலைஞர்களோடு இணைந்து மஹாபாரதத்தின் சில கூறுகளைத் தயாரிக்கிறார். இந்தத் திட்டத்தின் வாயிலாக இவர் இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா உட்பட, 9 நாடுகளில் தயாரிப்பு செய்திருக்கிறார், மேடை நிகழ்ச்சிகளையும் அளித்திருக்கிறார். பல்வேறுபட்ட பாரம்பரிய ஆசிய கலைவடிவங்களின் கலைஞர்களை ஹிரோஷி கோயிகே அவர்கள் ஒன்றாக அழைத்து வருகிறார். இதன் காரணமாக அவருடைய பணியில் பல்வேறு வண்ணங்கள் காணக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், ஜாவா நடனம், பாலீ நடனம், தாய்நாட்டு நடனம் ஆகியவற்றைக் கொண்டு மேலும் கவரக்கூடியதாக ஆக்குகிறார். சிறப்பான விஷயம் என்னவென்றால், இதில் இருக்கும் ஒவ்வொரு கலைஞரும் தனது தாய்மொழியிலேயே பேசுகிறார், நடன அமைப்பும் மிகவும் அழகாக இந்த பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது, இசையின் பன்முகத்தன்மை இந்தத் தயாரிப்பை மேலும் உயிர்ப்புடையதாக ஆக்குகிறது. நமது சமூகத்தில் பன்முகத்தன்மையும், கூட்டாக வாழ்தலும் மிகவும் மகத்துவமானவை என்பதையும், அமைதியான வாழ்க்கைமுறை என்பது எப்படிப்பட்டது என்பதையும் முன்வைப்பதே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தவிர, நான் ஜப்பானில் வேறு இருவரைச் சந்திக்க நேர்ந்தது, அவர்கள் ஆத்சுஷி மாத்சுவோ அவர்கள், பிறகு கேஞ்ஜி யோஷீ அவர்கள். இவர்கள் இருவரும் TEM தயாரிப்பு நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள். இந்த நிறுவனமானது 1983ஆம் ஆண்டு வெளிவந்த ராமாயணம் தொடர்பான ஜப்பானிய அனிமேஷன் – இயங்குபட ரகத் திரைப்படத்தோடு தொடர்புடையது. இந்தத் திட்டம் ஜப்பானின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர் யுகோ சாகோ அவர்களோடு தொடர்புடையதாக இருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் முன்பாக, 1983இலே, அவருக்கு இராமாயணம் பற்றி முதன்முறையாகத் தெரிய வந்தது. இராமாயணம் அவருடைய இதயத்தைத் தொட்டது, இதன் பிறகு அவர் இது பற்றி ஆழமான ஆய்வினைத் தொடங்கினார். இது மட்டுமல்ல, அவர் ஜப்பானிய மொழியில் இராமாயணத்தின் 10 விதமான பதிப்புகளைத் தேடிப் படித்ததோடு நிற்கவில்லை, இதை இயங்குபடமாக வடிவமைக்க விரும்பினார். இதிலே இந்திய இயங்குபட வல்லுநர்களின் கணிசமான உதவி இவருக்குக் கிடைத்தது. படத்தில் காட்டப்படும் இந்தியப் பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் பற்றியெல்லாம் விளக்குவதிலும், தெரியச் செய்வதிலும் அவர்கள் துணையாக இருந்தார்கள். இந்தியாவிலே மக்கள் எப்படி வேட்டியைக் கட்டுவார்கள், புடவையை எப்படி உடுத்துவார்கள், முடியை எப்படித் திருத்துவார்கள் என்பதெல்லாம் புரிய வைக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்துகிறார்கள், ஆசியளிப்பது என்ற பாரம்பரியம் இவை பற்றியெல்லாம் விளக்கப்பட்டது. காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் பெரியோரை வணங்குவது, அவர்களின் ஆசியைப் பெறுவது என இவை அனைத்தும் இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இயங்குபடம் வாயிலாக 4K யிலே, மீண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை விரைவாகவே நிறைவேற்றும் சாத்தியக்கூறும் இருக்கிறது. நம்மிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலே இருக்கும் ஜப்பானியர்களுக்கு நமது மொழியும் புரியாது, நமது பாரம்பரியங்களைப் பற்றியும் அதிகம் தெரியாது. ஆனால் அவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீது இருக்கும் அர்ப்பணிப்பு, சிரத்தை, மரியாதை ஆகியன மிகவும் பாராட்டுதலுக்குரியவை. இதெல்லாம் எந்த இந்தியருக்குத் தான் பெருமிதத்தை அளிக்காது!
என் மனம் நிறை நாட்டுமக்களே, தான் என்ற நிலையிலிருந்து உயர்ந்து சமூகத்திற்கான சேவை எனும் மந்திரம், சமுதாயத்திற்காக நான் எனும் மந்திரம் ஆகியவை நமது நற்பண்புகளின் ஓர் அங்கம். நமது தேசத்திலே எண்ணிலடங்காதோர் இந்த மந்திரத்தைத் தங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரத்திலே இருக்கும் மர்க்காபுரத்தில் வசிக்கும் ஒரு நண்பரான ராம்பூபால் ரெட்டி அவர்கள் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. ராம்பூபால் ரெட்டி அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு தனக்குக் கிடைத்த அனைத்துப் பணத்தையும், பெண் குழந்தைகள் கல்விக்காக தானமளித்து விட்டார் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். அவர் கிட்டத்தட்ட 100 பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ருத்தித் திட்டத்தின்படி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, அதிலே ரூ.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட தன்னுடைய தொகையைச் செலுத்தி இருக்கிறார். இதே போன்ற சேவைக்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டு உத்தரபிரதேசத்தின் ஆக்ராவின் கசோரா கிராமத்தில் நம்மால் காண முடியும். பல ஆண்டுகளாக இந்த கிராமத்திலே, சுவையான குடிநீர்க்குத் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதற்கிடையே, கிராமத்திலிருந்து 6 முதல் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது வயலில், கிராமத்தின் ஒரு விவசாயியான குன்வர் சிங்கிற்கு சுவையான குடிநீர் கிடைத்தது. இது அவருக்கு பேருவகை தரும் விஷயம். இந்த நீரை நான் என் சக கிராமவாசிகளோடு பகிர்ந்து கொள்வேன் என்று அவர் நினைத்தார். ஆனால் வயலிலிருந்து கிராமத்திற்குக் குடிநீரைக் கொண்டு வர 30-32 இலட்சம் ரூபாய் செலவாகும். சில காலம் கழித்து குன்வர் சிங்கின் இளைய சகோதரன் ஷ்யாம் சிங், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று கிராமம் திரும்பினார், இந்த விஷயம் அவருக்குத் தெரிய வந்தது. ஷ்யாம் சிங், அவர் ஓய்வு பெற்ற போது கிடைத்த பணம் அனைத்தையும் உடனடியாக இந்தப் பணிக்கு அளித்தார், கிராமம் வரையிலான குழாய் இணைப்பை ஏற்படுத்தி, கிராமத்து மக்களுக்கு சுவையான குடிநீர் கிடைக்கச் செய்தார். ஈடுபாடு இருந்தால், தனது கடமைகள் மீது அர்ப்பணிப்பு இருந்தால், ஒரு தனிமனிதனாலும் கூட, சமுதாயத்தின் எதிர்காலத்தை எப்படி மாற்ற முடியும் என்பதற்கு இந்த முயற்சி மிகப்பெரிய ஒரு கருத்தூக்கம். நாம் நமது கடமைப்பாதையில் ஏகிக் கொண்டே, சமுதாயத்தை பலப்படுத்த முடியும், தேசத்தை பலப்படுத்த இயலும். சுதந்திரத்தின் இந்த அமுத காலத்தில் இந்த மனவுறுதி ஏற்பட வேண்டும், இதுவே நமது வழிபாடாக இருக்க வேண்டும், இதற்கான ஒரே பாதை – கடமை, கடமை, கடமை மட்டுமே.
என் கனிவான நாட்டுமக்களே. இன்றைய மனதின் குரலில் நாம் சமூகத்தோடு தொடர்புடைய மகத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் பற்றி விவாதித்தோம். நீங்கள் அனைவரும், பல்வேறு விஷயங்களோடு தொடர்புடைய முக்கியமான ஆலோசனைகளை எனக்கு அனுப்பி வருகிறீர்கள், இவற்றையே ஆதாரமாகக் கொண்டு நமது ஆய்வு மேற்கொண்டு தொடர்கிறது. மனதின் குரலின் அடுத்த பதிப்பிற்கான உங்களுடைய அருமையான ஆலோசனைகளை அனுப்ப மறந்து விடாதீர்கள். இப்போது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் நீங்களும் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், அவை பற்றியும் கூட நீங்கள் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நமோ செயலியிலும், மைகவ் செயலியிலும் நீங்கள் உங்கள் ஆலோசனைகளை அனுப்புங்கள், காத்துக் கொண்டிருப்பேன். அடுத்த முறை நாம் மீண்டும் சந்திப்போம், நாட்டுமக்களோடு இணைந்திருக்கும் இப்படிப்பட்ட விஷயங்கள் குறித்து நாம் மீண்டும் ஆய்வு செய்வோம். நீங்கள் உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் அருகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் பராமரியுங்கள். கோடைக்காலமான இப்போது நீங்கள் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவும் குடிநீரும் அளிப்பது என்பதை, மனித இனத்துக்கான பொறுப்பாக எண்ணிக் கடைப்பிடியுங்கள். இதை மறந்து விடாதீர்கள். அடுத்த முறை சந்திப்போம். பலப்பல நன்றிகள்.
••••••••••••
Sharing this month's #MannKiBaat. Tune in. https://t.co/pa2tlSlVCD
— Narendra Modi (@narendramodi) May 29, 2022
Today's #MannKiBaat begins with an interesting topic- India's rise in the StartUp eco-system and the number of unicorns in our country. pic.twitter.com/T3fsmv89Ba
— PMO India (@PMOIndia) May 29, 2022
Do you know that our unicorn eco-system growth rate is faster than many other nations?
— PMO India (@PMOIndia) May 29, 2022
It is also gladdening that there is diversification in unicorns. #MannKiBaat pic.twitter.com/M5IYgv6YTv
In the StartUp eco-system, the role of a mentor becomes very important. During #MannKiBaat, PM @narendramodi lauds all those who are mentoring StartUps and young talent. pic.twitter.com/leMdL8K6H1
— PMO India (@PMOIndia) May 29, 2022
PM @narendramodi talks about something interesting which he received from Tamil Nadu... #MannKiBaat pic.twitter.com/uQYhK7E2Hx
— PMO India (@PMOIndia) May 29, 2022
India's strength is our diversity. #MannKiBaat pic.twitter.com/CItC7BjLZ5
— PMO India (@PMOIndia) May 29, 2022
Like Teerth Yatra is important, Teerth Seva is also important and we are seeing instances of it in our sacred places. #MannKiBaat pic.twitter.com/TbzLaUGI0I
— PMO India (@PMOIndia) May 29, 2022
Whenever one embarks on a pilgrimage, one should ensure the local surroundings are kept clean. #MannKiBaat pic.twitter.com/FUCHV6qzW6
— PMO India (@PMOIndia) May 29, 2022
On 21st June, the world will mark Yoga Day...the theme this year is 'Yoga For Humanity.' #MannKiBaat pic.twitter.com/fVTSRLodJi
— PMO India (@PMOIndia) May 29, 2022
Do plan how you will mark Yoga Day 2022.
— PMO India (@PMOIndia) May 29, 2022
One of the ways to do so would be to mark it at an iconic place of your town, village or city. This way, you can promote Yoga and tourism. #MannKiBaat pic.twitter.com/3gIzmDqBrG
During today's #MannKiBaat the Prime Minister recalls his recent Japan visit in which he met three interesting individuals who are passionate about Indian culture.
— PMO India (@PMOIndia) May 29, 2022
These individuals are Mr. Kenji Yoshii, Mr. Atsushi Matsuo and Mr. Hiroshi Koike. pic.twitter.com/vtQSdi5HD8
As we mark Azadi Ka Amrit Mahotsav, let us collectively work and make India stronger and more prosperous. #MannKiBaat pic.twitter.com/T89KxXwX5P
— PMO India (@PMOIndia) May 29, 2022