‘மனதின் குரல் 2.0’ 9-வது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, இந்தியர்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடிய, பீகார் பற்றிய குட்டிக்கதை ஒன்றை எடுத்துரைத்தார். பீகாரின் பூர்னியா பகுதி நாடு முழுவதும் உள்ள மக்களை ஈர்க்கக் கூடியது என்று அவர் கூறியுள்ளார். இந்தப் பகுதி பல்லாண்டு காலமாக வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு அவதிக்கு ஆளான பகுதி. இதனால் அப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதோ, வருமானத்திற்கான இதர வாய்ப்புகளை உருவாக்குவதோ மிகவும் சிரமமானது. முற்காலத்தில் பூர்னியாவில் உள்ள பெண்கள், பட்டுப்பூச்சிகளிலிருந்து குக்கூன் சாகுபடி செய்து குறைந்த வருவாய் ஈட்டிய வேளையில், வியாபாரிகள் இதனை வாங்கி பட்டு நூல் இழைகளாக உற்பத்தி செய்து அதிக லாபம் அடைந்து வந்தனர். சிரமமான இந்த சூழ்நிலையில், பூர்னியாவை சேர்ந்த சில பெண்கள் வித்தியாசமான பாதை ஒன்றை தேர்வு செய்தனர். தற்போது பூர்னியாவில் உள்ள பெண்கள் அரசு உதவியுடன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் ஒன்றைத் தொடங்கி, பட்டு நூல் இழைகளை உற்பத்தி செய்து, அதிலிருந்து தயாரிக்கப்படும் பட்டுச்சேலைகளை விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.
12 வயதில் அகோன்காகுவா மலை மீது ஏறிய காம்யா கார்த்திகேயன் என்பவரைப் பற்றிய சாதனை சரித்திரம் ஒன்றையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். தென் அமெரிக்காவின் ஆன்டஸ் மலையில் உள்ள மிக உயரமான இந்த சிகரம், சுமார் 7 ஆயிரம் மீட்டர் உயரமுடையது என்று அவர் குறிப்பிட்டார். “தற்போது ‘மிஷன் சாஹாஸ்’ என்ற பெயரில் புதிய பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அந்த இளம்பெண், அனைத்து கண்டங்களிலும் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரங்களை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான உடற்கட்டை பராமரிப்பதன் மூலம் ஆக்கப்பூர்வ முடிவுகளை அடையலாம் என்று அனைவரையும் ஊக்குவிப்பதற்காக, அவரை பாராட்டியுள்ள பிரதமர், அந்தப் பெண்ணின் ‘மிஷன் சாஹாஸ்’ பயணம் வெற்றியடையவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புவியியல், நாட்டில் சாகச விளையாட்டுக்களுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பளிக்கிறது என்பதை எடுத்துரைத்துள்ள பிரதமர், நாட்டு மக்கள் அனைவரும் அவரவருக்கு விருப்பமான இடங்களுக்கு சென்று, அவரவருக்கு பிடித்த செயல்களில் ஈடுபடுவதன் மூலம், தத்தமது வாழ்க்கையை சாகசம் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளாவின் கொல்லம் பகுதியில் வசித்து வரும் 105 வயது மூதாட்டி பாகீரதி அம்மா-வின் வெற்றிச் சரித்திரத்தை சுட்டிக் காட்டிய அவர், மிகவும் இளம் வயதில் தாயையும், கணவனையும் இழந்தவர் ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த மூதாட்டி 105 வயதில் பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்துள்ளார்! அவர் மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளார்! மிகவும் முதுமையான வயதிலும், பாகீரதி அம்மா
4-ம் நிலை தேர்வை எழுதியிருப்பதோடு, அதன் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார். இதுவரை எழுதிய தேர்வுகளில் 75 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள அவர், படிப்பைத் தொடர விரும்புகிறார். பாகீரதி அம்மா போன்றவர்கள்தான் இந்த நாட்டின் வலிமை; அனைவருக்கும் உற்சாகமூட்டக் கூடியவராக திகழ்கிறார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மொராதாபாத்தின் ஹாமிர்பூர் கிராமத்தில் வசித்து வரும் பிறவி மாற்றுத் திறனாளியான சல்மான் என்பவரையும் பிரதமர் உதாரணமாக எடுத்துரைத்துள்ளார். மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் கூட, நம்பிக்கையை இழக்காமல் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அனைத்திற்கும் உச்சமாக, பிற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்கும் அவர் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சல்மான் விரைவில் தமது கிராமத்திலேயே காலணிகள் மற்றும் சலவை சோப்புகள் உற்பத்தி செய்ய இருக்கிறார். அவருடன் 30 மாற்றுத் திறனாளிகள் இணைந்துள்ளனர்.
குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள அஜ்ரக் வாழ் மக்கள் சிலரும் இதே போன்ற மனஉறுதிப்பாட்டுடன் செயல்படுவதையும் அவர் எடுத்துரைத்துள்ளார். 2001 ஆம் ஆண்டு பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு, பெரும்பாலான கிராமவாசிகள் அந்த கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். ஆனாலும் இஸ்மாயில் கத்ரி என்பவர், அந்த கிராமத்திலேயே தங்கியிருந்து பாரம்பரியமான ‘அஜ்ரக் அச்சு’ கலையை மேற்கொண்டு வருகிறார். இந்த அஜ்ரக் கலையில் பயன்படுத்தப்படும் இயற்கை வண்ணங்கள் அனைவருக்கும் உற்சாகமூட்டுகிறது. தற்போது ஒட்டுமொத்த கிராமமும் அவர்களது பாரம்பரிய கைவினைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமது நல்வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார். “மகா சிவராத்திரி தினத்தில் உங்கள் அனைவருக்கும் போலே பாபாவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்… உங்களது எதிர்பார்ப்புகளை சிவபெருமான் நிறைவேற்றுவார்… நீங்கள் உற்சாகத்துடனும், ஆரோக்கியமாகவும் இருந்து… நாட்டிற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை தொடருங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“வரும் நாட்களில், ஹோலி பண்டிகையை நாம் கொண்டாட இருக்கிறோம். அதன் பிறகு குடிபடவா கொண்டாடப்பட உள்ளது. வசந்த காலத்தையொட்டி நவராத்திரி திருவிழாவும் வரவுள்ளது. ராம நவமியும் கொண்டாடப்பட உள்ளது. திருவிழாக்களும், கொண்டாட்டங்களும் நம் நாட்டின் சமூக கட்டமைப்பில் பிரிக்க முடியாதவையாகும். ஒவ்வொரு திருவிழாவும் மறைமுகமாக ஒரு சமூகக் கருத்தை கொண்டிருப்பதோடு, சமுதாயத்தை மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டையும் ஒற்றுமை உணர்வு மூலம் பிணைக்கிறது” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Inspiring anecdote from Bihar that would inspire many Indians... #MannKiBaat pic.twitter.com/j1f0CbNIII
— PMO India (@PMOIndia) February 23, 2020