எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் தொடக்கத்தில் நான் உங்கள் அனைவரோடும் ஒரு சந்தோஷமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேவி அன்னபூர்ணாவின் ஒரு மிகப் பழமையான விக்ரஹம், கனடாவிலிருந்து மீண்டும் இந்தியா வருகிறது என்பதை அறிந்து இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் அடைவார்கள். இந்த விக்ரஹம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் முன்பாக, 1913ஆம் ஆண்டு வாக்கில், வாராணசியின் ஒரு ஆலயத்திலிருந்து களவாடப்பட்டு, நாட்டை விட்டுக் கடத்திச் செல்லப்பட்டது. நான் கனடாவின் அரசு புரிந்திருக்கும் இந்தப் புண்ணியச் செயலுக்கும், இதைச் சாதிக்கக் காரணமாக இருந்த அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். அன்னை அன்னபூரணிக்கும், காசிக்கும் இடையே விசேஷமான சம்பந்தம் உண்டு. இப்போது அன்னையின் விக்ரஹம் மீண்டு வருவது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்னை அன்னபூரணியின் விக்ரஹத்தைப் போலவே, நமது பாரம்பரியத்தில் பல விலை மதிப்புமிக்க மரபுச் சின்னங்களும், அடையாளங்களும் சர்வதேச அளவிலான சிலை திருட்டு கும்பல்களுக்கு இரையாகி வந்திருக்கின்றன. இந்தக் கும்பல்கள் சர்வதேச சந்தைகளில், இவற்றை மிக அதிகமான விலைக்கு விற்று விடுகின்றார்கள். இப்போது கடத்தலைத் தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது என்றாலும், ஏற்கெனவே கடத்திச் செல்லப்பட்டவைகளை மீட்டுக் கொண்டு வரும் இந்தியாவின் முயற்சிகள் அதிகப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளில், பல சிலைகளையும், கலைப்பொருள்களையும் மீட்டுக் கொண்டு வருவதில் நாம் வெற்றியும் அடைந்து வருகிறோம். அன்னை அன்னபூரணியின் விக்ரஹத்தை மீட்டுக் கொண்டு வருவதோடு, தற்செயல் பொருத்தம் ஒன்றும் இணைந்திருக்கிறது. சில நாட்கள் முன்பாகத்தான் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டது. உலகப் பாரம்பரிய வாரம் என்பது கலாச்சார விரும்பிகளுக்கு, பழங்காலத்தினுள்ளே செல்லவும், வரலாற்றின் முக்கியமான கட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஒரு அற்புதமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. கொரோனா காலகட்டத்தையும் தாண்டி, இந்த முறை நாம் நூதனமான வழிவகைகளில் இந்தப் பாரம்பரிய வாரத்தை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்தோம். கலாச்சாரம் என்பது நெருக்கடியில் பெரிதும் கைக்கொடுக்கிறது, நெருக்கடிகளைச் சமாளிப்பதில் பெரும்பங்காற்றுகிறது. தொழில்நுட்பம் வாயிலாகவும் கலாச்சாரம் ஒரு உணர்வுரீதியிலான புதுத்தெம்பைப் போல செயலாற்றுகிறது. இன்று நாடெங்கிலும் பல அருங்காட்சியகங்களும், நூலகங்களும் தங்களின் திரட்டுக்களை முழுவதுமாக டிஜிட்டல்மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். தில்லியில் நமது தேசிய அருங்காட்சியகம் இது தொடர்பாக பாராட்டத்தக்க முயல்வுகளை மேற்கொண்டிருக்கிறது. தேசிய அருங்காட்சியகம் வாயிலாக சுமார் 10 மெய்நிகர் காட்சிக்கூடங்களை அறிமுகப்படுத்தும் திசையில் பணிகள் நடந்து வருகின்றன. சுவாரசியமாக இருக்கிறது இல்லையா!! இப்போது நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே தில்லியின் தேசிய அருங்காட்சியகக் காட்சிக்கூடங்களைச் சுற்றிப் பார்க்க முடியும். ஒருபுறத்தில் கலாச்சார மரபுகளையும் அடையாளங்களையும் தொழில்நுட்பம் வாயிலாக பெருவாரியான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது முக்கியம் எனும் அதே வேளையில், இந்த அடையாளங்களையும், மரபுச்சின்னங்களையும் பாதுகாக்க தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிக மகத்துவம் வாய்ந்தது. ஒரு சுவாரசியமான திட்டம் பற்றி தற்போது தான் நான் படித்துக் கொண்டிருந்தேன். நார்வே நாட்டின் வடபாகத்தில் ஸ்வால்பார்ட் என்ற பெயர் கொண்ட ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவில் ஒரு செயல்திட்டமான Arctic world Archive அதாவது ஆர்க்டிக் உலக ஆவணக்காப்பகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆவணக்காப்பகத்தில் மிக மதிப்பு வாய்ந்த மரபுத் தரவுகள், மனிதனோ, இயற்கையோ ஏற்படுத்தக்கூடிய எந்தவிதமான பேரிடர்களால் பாதிப்படையாத வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் ஒரு தகவல் என்னவென்றால், அஜந்தா குகைகளின் மரபுச்சின்னங்களையும் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி, இந்த செயல்திட்டத்தில் இணைக்கப்படவிருக்கிறது. இதிலே அஜந்தா குகைகளின் முழுமையான மகோன்னதமும் காணக் கிடைக்கும். இதிலே டிஜிட்டல் வழிமுறை மற்றும் மீட்டெடுக்கப்பட்ட ஓவியங்களோடு கூடவே, இவற்றோடு தொடர்புடைய ஆவணங்களும் மேற்கோள்களும் அடங்கும். நண்பர்களே, பெருந்தொற்று ஒரு புறத்தில் நாம் பணியாற்றும் வழிமுறைகளை மாற்றியமைத்திருந்தாலும், வேறொரு புறத்தில் இயற்கையை புதியதொரு கோணத்தில் அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. இயற்கையைக் கண்ணுறும் நமது பார்வையிலுமே ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாம் குளிர்காலத்தில் கால்பதிக்க இருக்கிறோம். இயற்கையை பலவகையான வண்ணங்களில் நாம் காண இருக்கிறோம். கடந்த சில நாட்களாக இணையத்தில் செர்ரி பூக்களின் படங்கள் அங்கிங்கெனாதபடி பரவி விரவிக் காணப்படுகின்றன. நான் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றால் ஜப்பான் நாட்டின் இந்த பிரபலமான அடையாளம் பற்றிப் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணமிடலாம்; ஆனால் அப்படி அல்ல!! இவை ஜப்பான் நாட்டின் படங்கள் அல்ல. இவை நமது மேகாலயாவின் ஷில்லாங்கின் படங்கள். மேகாலயாவின் அழகுக்கு இந்த செர்ரி மலர்கள் மேலும் அழகு கூட்டியிருக்கின்றன.
நண்பர்களே, இந்த மாதம் நவம்பர் 12ஆம் தேதி முதல், டாக்டர் சலீம் அலி அவர்களுடைய 125ஆம் பிறந்த ஆண்டு தொடங்கி இருக்கிறது. டாக்டர் சலீம் அவர்கள் பறவைகள் உலகில் bird watching என்று அழைக்கப்படும் பறவைகள் கண்காணிப்பிற்காக அருஞ்செயல்களை ஆற்றியவர். உலகின் பறவைகள் கண்காணிப்பாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தவர். நான் என்றைக்குமே பறவைகளைக் கண்காணிப்பதில் நாட்டம் இருப்பவர்களைப் பாராட்டி வந்திருக்கிறேன். மிகுந்த பொறுமையோடு, மணிக்கணக்காக, காலை முதல் மாலை வரை அவர்களால் பறவைகளைக் கண்காணித்து வர முடியும், இயற்கையின் விசித்திரமான காட்சிகளை ரசிக்க முடியும், தங்களின் ஞானத்தை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இந்தியாவிலும் பல பறவைகள் கண்காணிப்பு அமைப்புகள் இயங்கி வருகின்றன. நீங்களும் கண்டிப்பாக இந்தச் செயல்பாட்டோடு இணையுங்கள். எனது பரபரப்பான வாழ்க்கையில், எனக்குமே கூட, கடந்த சில நாட்களின் போது கேவடியாவில், பறவைகளோடு காலம் கழிக்கும் மிகவும் நீங்கா நினைவுகள் நிறைந்த ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. பறவைகளோடு கழிக்கும் நேரம், உங்களை இயற்கையோடு இணைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உங்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சாத்திரங்கள், என்றுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மையங்களாக இருந்து வந்திருக்கின்றன. இவை தொடர்பான தேடலுக்காகவே பலர் இந்தியாவுக்கு வந்தார்கள். இவர்களில் சிலர் இந்தியாவிலேயே தங்கிப் போனார்கள் என்றால், சிலரோ தங்கள் நாடுகளுக்கு மீண்டும் திரும்பி, இந்தக் கலாச்சாரத்தின் பரப்புநர்கள் ஆனார்கள். ஜோனஸ் மேசெட்டியின் பணி பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, இவர் விஷ்வநாத் என்றும் அறியப்படுகிறார். ஜோனஸ் ப்ராஸீலில் இருப்போருக்கு வேதாந்தத்தையும் கீதையையும் கற்பிக்கிறார். விஸ்வவித்யை என்ற பெயர் கொண்ட ஒரு அமைப்பை நடத்தி வருகிறார், இது ரியோ டி ஜெனேரோ நகரத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் வரும் பெட்ரோபோலிஸ் என்ற இடத்தில் இருக்கும் மலைகளில் அமைந்திருக்கிறது. ஜோனஸ் இயந்திரப் பொறியியல் படித்த பிறகு, பங்குச் சந்தையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு, அவரது நாட்டம் இந்தியக் கலாச்சாரம், குறிப்பாக வேதாந்தத்தை நோக்கித் திரும்பியது. பங்குச்சந்தை தொடங்கி ஆன்மீகம் வரை, அவர் நெடிய பயணத்தை மேற்கொண்டார். ஜோனஸ் இந்தியாவுக்கு வந்து வேதாந்தத்தை நன்கு பயின்றார், நான்கு ஆண்டுகள் வரை கோவையில் இருக்கும் ஆர்ஷ வித்யா குருகுலத்தில் வசித்திருக்கிறார். ஜோனஸிடம் இருக்கும் ஒரு சிறப்பியல்பு என்னவென்றால், அவர் தனது செய்தியைக் கொண்டு செல்ல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார் என்பது தான். இணையவழி நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட ஒரு முறையில் நடத்துகிறார். தினமும் பாட்காஸ்ட் என்ற ஒலிபரப்பை நிகழ்த்துகிறார். கடந்த 7 ஆண்டுகளில் வேதாந்தம் பற்றி இலவசப் படிப்புகள் வாயிலாக ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார் ஜோனஸ். இவர் மகத்தானதொரு பணியை மட்டும் புரியவில்லை; மாறாக, அதிக எண்ணிக்கையிலான மக்கள் புரிந்து கொள்ள வசதியான மொழியிலும் முறையிலும் கற்பிக்கிறார். கொரோனா, தனிமைப்படுத்தல் போன்றவை நிலவும் இந்த வேளையிலே, வேதாந்தம் எவ்வாறு நன்மை பயக்கும் என்பது குறித்து, மக்களிடத்தில் இதுபற்றிய கணிசமான அளவில் ஆர்வம் இருக்கிறது. மனதின் குரல் வாயிலாக நான் ஜோனஸின் முயல்வுகளுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவரது வருங்கால முயல்வுகளுக்கு நல்வாழ்த்துக்களையும் அளிக்கிறேன்.
நண்பர்களே, இதைப் போலவே, இப்போது மேலும் ஒரு செய்தியின் மீது உங்கள் கவனம் சென்றிருக்கும் என்று நம்புகிறேன். நியூசிலாந்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர். கௌரவ் ஷர்மா அவர்கள் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சம்ஸ்க்ருதத்தில் உறுதிமொழி ஏற்றார். ஒரு இந்தியன் என்ற வகையில், இந்தியக் கலாச்சாரத்தின் இந்தப் பரப்புரை, நம்மனைவருக்கும் பெருமிதத்தை அளிக்கிறது. மனதின் குரல் வாயிலாக நான் கௌரவ் ஷர்மா அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியூசிலாந்து நாட்டு மக்களின் சேவையில் அவர் பல புதிய சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசைகளும் கூட.
என் இனிய நாட்டுமக்களே, நாளை நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 551ஆவது பிறந்த ஆண்டினை நாம் கொண்டாட இருக்கிறோம். உலகம் முழுவதிலும் குருநானக் தேவ் அவர்களின் தாக்கம் தெள்ளத்தெளிவாகக் காணக் கிடைக்கிறது. வான்கூவர் முதல் வெல்லிங்டன் வரை, சிங்கப்பூர் முதல் தென்னாப்பிரிக்கா வரை அவருடைய செய்தி அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கிறது. குருக்ரந்த் சாஹிபில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், सेवक को सेवा बन आई, சேவக் கோ சேவா பன் ஆயீ, அதாவது சேவை செய்பவருடைய பணி, தொடர்ந்து சேவை ஆற்றி வருவது தான். கடந்த சில ஆண்டுகளாக பல முக்கியமான கட்டங்கள் வந்தன, ஒரு சேவகன் என்ற வகையில் பல செயல்களைச் செய்யக்கூடிய ஒரு சந்தர்ப்பம் நமக்கெல்லாம் வாய்த்தது. குரு சாஹப் அவர்கள் நமது சேவைகளை ஏற்றார். குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்தநாளன்றே, ஸ்ரீ குருகோவிந்த் சிங்க் அவர்களின் 350ஆவது பிறந்தநாளும், அடுத்த ஆண்டு ஸ்ரீ குரு தேக்பஹாதுர் அவர்களின் 400அவது பிறந்த நாளும் வருகின்றன. என் மீது குரு சாஹிபிற்கு சிறப்பான கருணை இருக்கிறது என்று நான் உணர்கிறேன்; ஏனென்றால் அவர் என்றைக்குமே தனது செயல்களுக்கு மிக நெருக்கமாக என்னை இணைத்திருக்கிறார்.
நண்பர்களே, கட்ச் பகுதியில் இருக்கும் குருத்வாரா பற்றி நீங்கள் அறிவீர்களா? அதன் பெயர் லக்பத் குருத்வாரா சாஹிப். ஸ்ரீ குருநானக் அவர்கள் தனது புனிதப்பயணத்தின் போது லக்பத் குருத்வாராவில் தங்கினார். 2001ஆம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தின் போது இந்த குருத்வாவிற்கும் பாதிப்பு ஏற்பட்டது. குரு சாஹிபின் அருங்கருணை காரணமாகவே என்னால் இதன் ஜீர்ணோத்தாரணத்தை நடத்த முடிந்தது. அந்த வேளையில் குருத்வாரா செப்பனிடப்பட்டதோடு, அதன் மாட்சியையும், மகோன்னதத்தையும் மீண்டும் நிறுவவும் முடிந்தது. எங்கள் அனைவருக்கும் குரு சாஹிபின் நிறைவான ஆசிகளும் கிட்டின. லக்பத் குருத்வாராவின் பராமரிப்பு முயல்வுகளுக்கு 2004ஆம் ஆண்டிலே யுனெஸ்கோ அமைப்பின் ஆசிய பசிஃபிக் பாரம்பரிய விருதுக்குட்பட்டு மேன்மைக்கான விருது அளிக்கப்பட்டது. செப்பனிடப்படும் பணியின் போது, சிற்பங்களின் நுணுக்கங்களின் மீது சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்ததை, விருதினை அளித்த நடுவர்கள் பாராட்டினார்கள். நடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கியதோடு, அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இது நடந்திருக்கிறது என்பது தான். லக்பத் குருத்வாராவிற்குச் செல்லும் பேறு, நான் முதல்வராக இல்லாத காலத்திலும் எனக்குக் கிட்டியது. அங்கே செல்லும் போது எனக்கு அளப்பரிய சக்தி பிறந்து வந்துள்ளது. இந்த குருத்வாரா செல்லும் அனைவரும் தாங்கள் பெரும்பாக்கியம் அடைந்தவர்களாக உணர்வார்கள். குருசாஹிப் அவர்கள் தொடர்ந்து என்னுடைய சேவையை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு நான் என் நன்றியறிதல்களைக் காணிக்கையாக்குகிறேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கர்த்தார்புர் சாஹிப் இடைவழித் திறப்பு மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நான் என் வாழ்நாள் முழுக்க எனது இதயத்தில் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பேன். நமக்கெல்லாம் ஸ்ரீ தர்பார் சாஹிபிற்கு சேவை செய்யக்கூடிய மேலும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது நாம் அனைவருமே செய்த பேறு என்று தான் சொல்ல வேண்டும். அயல்நாடுகளில் வசிக்கும் நமது சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு இப்போது தர்பார் சாஹிபில் சேவையாற்ற நிதி அனுப்புவது மேலும் சுலபமாகி இருக்கிறது. இந்த நடவடிக்கை காரணமாக உலகெங்கிலும் இருக்கும் சீக்கிய சமுதாயம் தர்பார் சாஹிபிற்கு மேலும் நெருக்கமாகி இருக்கிறது.
நண்பர்களே, குருநானக் தேவ் அவர்கள் தாம் லங்கர் பாரம்பரியத்தைத் தொடக்கி வைத்தார், இன்று உலகெங்கிலும் சீக்கிய சமூகத்தினர் எந்த வகையில் கொரோனா நிலவும் இந்த வேளையில் மக்களுக்கு உணவளிக்கும் தங்கள் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்தார்கள், மனிதசேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளிக்கக்கூடிய பணியை நமக்கெல்லாம் புரிகிறது. நாமனைவருமே சேவகர்கள் என்ற உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். குருசாஹிப் என்னிடத்திலும் சரி, நாட்டுமக்களிடத்திலும் சரி இப்படியேதான் சேவையைத் தொடர்ந்து ஏற்றுவர வேண்டும். மீண்டும் ஒருமுறை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு எனது பலப்பல நல்வாழ்த்துக்கள்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் நாடெங்கிலும் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களோடு உரையாடவும், அவர்களின் கல்விப்பயணத்தின் மகத்துவம் வாய்ந்த சம்பவங்களில் பங்கெடுக்கவும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தொழில்நுட்பம் வாயிலாக நான் குவாஹாட்டி மற்றும் தில்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், காந்திநகரின் தீன் தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம், தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் லக்னௌ பல்கலைக்கழங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தொடர்பு கொள்ள முடிந்தது. நாட்டின் இளைஞர்கள் மத்தியில் இருப்பது புத்துயிரையும், புதுச்சக்தியையும் அளிக்கவல்ல ஒரு நல்ல அனுபவம். பல்கலைக்கழகத்தின் வளாகம் என்பது ஒரு வகையில் ஒரு சிறிய இந்தியாவைப் போன்றே இருக்கும். ஒருபுறம் இந்த வளாகங்கள், பாரத நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலித்தாலும், வேறொரு புறத்தில் அங்கே புதிய இந்தியா தொடர்பான பல பெரிய மாற்றங்களுக்கான தாகங்களும் வெளிப்படுகின்றன. கொரோனாவுக்கு முந்தைய நாட்களில் ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு நான் செல்லும் வேளையில், அக்கம்பக்கத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுப்பதுண்டு. இந்தக் குழந்தைகள் அந்தக் கூட்டத்தில் எனது சிறப்பு விருந்தினர்களாக இருப்பார்கள். ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு சிறுவன், யாரோ ஒரு இளைஞர் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, விஞ்ஞானியாகவோ ஆவதைப் பார்த்தால், ஒருவருக்கு பதக்கம் கிடைப்பதைப் பார்த்தால், அந்தச் சிறுவனிடத்தில் புதிய கனவுகள் உதயமாகும், என்னாலும் இப்படிச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும், அவனுள்ளே மனவுறுதிப்பாட்டுக்கான கருத்தூக்கம் உதிக்கும்.
நண்பர்களே, மேலும் ஒரு விஷயம் பற்றித் தெரிந்து கொள்ள எப்போதுமே எனக்கு ஆர்வம் இருக்கிறது; அதாவது அந்த கல்வி நிறுவனத்தின் பழைய மாணவர்கள் யார், இந்த நிறுவனத்தில் கடந்த கால மாணவர்களோடு தொடர்பு என்ற அமைப்புமுறை இருக்கிறதா, அவர்களின் கடந்தகால மாணவர்களின் தொடர்பு வலைப்பின்னல் எத்தனை உயிர்ப்போடு இருக்கிறது என்பனவற்றை நான் தெரிந்து கொள்ள விரும்புவதுண்டு.
எனக்குப் பிரியமான இளைய நண்பர்களே, எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் நீங்கள் படித்து முடிக்கும் காலம் வரை மட்டுமே மாணவர்களாக இருக்க முடியும்; ஆனால் அந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களாக நீங்கள் நிரந்தரமாக இருக்க முடியும். பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து வெளியேறிய பின்னர், இரண்டு விஷயங்களுக்கு முடிவேற்படுவதில்லை – ஒன்று நீங்கள் கற்ற கல்வியின் தாக்கம், மற்றது நீங்கள் படித்த பள்ளி-கல்லூரியின் மீதான நாட்டம். முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொள்ளும் போது பள்ளி, கல்லூரிகளைப் பற்றிய நினைவலைகளில் புத்தகங்கள் மற்றும் படிப்பை விடவும் அதிகமாக வளாகத்தில் கழித்த கணங்கள், நண்பர்களோடு செலவிட்ட காலங்கள் போன்றவற்றிலிருந்து, தாங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தங்களின் பங்களிப்பாக எதையாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு பிறக்கின்றது. எங்கே உங்களின் தனித்துவம் மலர்ந்ததோ, அந்த இடத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எதையாவது செய்யும் போது மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் இல்லையா? அப்படிப்பட்ட சில முயல்வுகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன்; இவற்றில் சில முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் முன்னாள் மாணவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் ஊக்கத்தோடு செயல்படுகின்றார்கள். இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு மாநாட்டு மையங்கள், மேலாண்மை மையங்கள், இன்குபேஷன் மையங்கள் போன்ற பலவகையான அமைப்புக்களைத் தாங்களே உருவாக்கி அளித்திருக்கின்றார்கள். இந்த முயற்சிகள் அத்தனையும், தற்போதைய மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும். தில்லியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஒரு அறக்கட்டளை நிதி தொடங்கப் பட்டிருக்கிறது, இது அருமையான ஒரு திட்டம். உலகின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் இப்படிப்பட்ட அறக்கட்டளைகளை நிறுவும் ஒரு கலாச்சாரம் உண்டு. இவை மாணவர்களுக்கு உதவிகரமாக இருப்பவை. இந்தக் கலாச்சாரத்தை நெறிப்படுத்தி நிறுவனப்படுத்தும் வல்லமை இந்தியாவின் பல்கலைக்கழகங்களிடம் உண்டு என்று எனக்குப் படுகிறது. ஒன்றைத் திரும்பக் கொடுப்பது என்று வரும் போது, சிறியது என்றோ பெரியது என்றோ எதுவுமே கிடையாது. சின்னசின்ன உதவிகூட பெருமதிப்பு உடையதாக இருக்கும். ஒவ்வொரு முயற்சியும் மகத்துவம் வாய்ந்தது தான். பல நேரங்களில் முன்னாள் மாணவர்கள் தங்கள் நிறுவனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு, கட்டிட அமைப்பு, விருதுகள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை ஆகியவற்றிலும், திறன் மேம்பாட்டு செயல்திட்டங்களைத் தொடக்குவதிலும், பெரும் மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை அளிக்கிறார்கள். சில பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை தொடங்கியிருக்கின்றார்கள். இவற்றில் அவர்கள் பல்வேறு குழுக்களில் இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். தவிர, கல்வி சாத்தியக்கூறுகள் பற்றியும் விவாதிக்கிறார்கள். பல பள்ளிகளில், அதுவும் குறிப்பாக தங்கிப் படிக்கும் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்கள் மிகவும் வலுவுள்ளவை; விளையாட்டுப் போட்டிகள், சமூகசேவை போன்ற வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றார்கள். எந்தப் பள்ளிகளில் நீங்கள் படித்தீர்களோ, அவற்றோடு உங்களின் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் முன்னாள் மாணவர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். அது பள்ளிகளாகட்டும் அல்லது கல்லூரிகளாகட்டும் அல்லது பல்கலைக்கழகங்களாகட்டும். முன்னாள் மாணவர்களுடனான தொடர்புகளில் நீங்கள் புதிய, நூதனமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று நான் நிறுவனங்களிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். படைப்பாற்றல் கொண்ட தளங்களை மேம்படுத்தினால், முன்னாள் மாணவர்களால் ஆக்கப்பூர்வமான ஒரு பங்களிப்பை அளிக்க முடியும். பெரிய கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மட்டுமல்ல, நமது கிராமங்களில் இருக்கும் பள்ளிகளிலும் கூட பலமான, உயிர்ப்பான செயல்படும் முன்னாள் மாணவர்களின் வலைப்பின்னல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று ஸ்ரீ அரவிந்தர் மறைந்த நாள். ஸ்ரீ அரவிந்தரை நாம் எந்த அளவுக்குப் படிக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்குள்ளே ஆழம் ஏற்படுகிறது. எனது இளைய நட்புகளே, ஸ்ரீ அரவிந்தரை எத்தனை அறிவீர்களோ, அந்த அளவுக்கு உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள், மேம்படுவீர்கள். வாழ்க்கையின் எந்த உணர்வுநிலையில் நீங்கள் இருக்கின்றீர்களோ, எந்த உறுதிப்பாடுகளை சாதிக்க நீங்கள் முயல்கின்றீர்களோ, அவற்றுக்கு இடையே, எப்போதும் ஸ்ரீ அரவிந்தர் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உத்வேகம் அளித்து வருவதை, ஒரு புதிய பாதையைத் துலக்கிக் காட்டுவதை உங்களால் கவனிக்க முடியும்.
இன்று நாம் உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, ஸ்ரீ அரவிந்தரின் சுதேசிக் கோட்பாடு நம்முடைய பாதையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வங்காளத்தில் மிகவும் தாக்கம் நிறைந்த கவிதை ஒன்றுண்டு.
ஷுயி ஷுதோ பொர்ஜொந்தோ, ஆஷே துங்கோ ஹோதே.
தியஷலாய் காடீ தாஊ ஆஷே போதே.
ப்ரோதிப்தீ ஜாலிதே கேதே ஷூதே ஜேதே,
கிச்சுதேயி லோக் நோய் ஷாதீன்.
அதாவது, நம்நாட்டிலே ஊசி முதல் தீப்பெட்டி வரையிலான அனைத்துப் பொருள்களுமே அயல்நாடுகளிலிருந்து தான் கப்பல்களில் வருகின்றன. உணவு, உடை, உறக்கம் என்ற எந்த ஒரு விஷயத்திலும் நம் மக்கள் சுதந்திரமாக இல்லை என்பதே இதன் பொருள்.
சுதேசியின் பொருள் பற்றிக் கூறுகையில், நாம் நமது இந்தியத் தொழிலாளர்கள்-கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருள்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும் என்பார் அவர். இதனால் அயல்நாடுகளிடமிருந்து நாம் எதையும் கற்க கூடாது என்பதல்ல ஸ்ரீ அரவிந்தரின் கோட்பாடு. எங்கே புதுமை படைக்கப்படுகிறதோ, அதிலிருந்து நமது தேசத்திற்கு நன்மை பயப்பனவற்றை நாம் கற்க வேண்டும், இவற்றிலிருந்து நாம் பயனடையக் கூடியவற்றிற்கு உதவி செய்து, ஊக்கப்படுத்த வேண்டும், இதுவே தற்சார்பு பாரத இயக்கத்தில், உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தின் உணர்வு. குறிப்பாக சுதேசியைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அவர் கூறியவற்றை இன்று நாட்டுமக்கள் அனைவரும் படிக்க வேண்டும். நண்பர்களே, இதைப் போன்றே கல்வி தொடர்பாகவும் ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்கள் மிகவும் தெளிவானவையாக இருந்தன. இந்தக் கல்வி ஏட்டுக்கல்வியையும், பட்டங்களையும், வேலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதையுமே தனது எல்லைகளாகக் கொள்வதில்லை. நமது தேசியக் கல்வி, நமது இளைய தலைமுறையினரின் மனதிற்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கவல்லதாக இருக்க வேண்டும்; அதாவது மூளைக்கு அறிவியல் ரீதியான மேம்பாட்டையும், மனதில் இந்திய உணர்வுகளை எழுப்பக்கூடியனவாகவும் இருக்க வேண்டும், அப்போது தான் ஒரு இளைஞனால் தேசத்தின் ஆகச்சிறந்த குடிமகனாக மாற முடியும் என்பதே ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் உறுதி. தேசியக் கல்வி பற்றி ஸ்ரீ அரவிந்தருக்கு அந்தக் காலத்தில் இருந்த எதிர்பார்ப்புகள், இன்று புதிய தேசியக் கல்விக் கொள்கை வாயிலாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
என் இனிய நாட்டுமக்களே, இந்தியாவில் விவசாயம் மற்றும் அதோடு தொடர்புடையவற்றுடன் ஒரு புதிய பரிமாணம் இணைகிறது. கடந்த நாட்களில் நிறைவேற்றப்பட்ட விவசாயத் துறை சீர்திருத்தங்கள், விவசாயிகளின் வாழ்வுகளில் புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பல ஆண்டுகளாக விவசாயிகள் எந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்களோ, அவற்றை ஏதோ ஒரு காலகட்டத்தில், அரசியல் கட்சிகள் அனைத்துமே நிறைவேற்றித் தருவதாக வாக்களித்திருந்தார்கள், அந்தக் கோரிக்கைகள் இன்று நிறைவேறியிருக்கின்றன. தீவிரமான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் இந்தியப் பாராளுமன்றம் இந்த விவசாயத்துறை சீர்திருத்தங்களுக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தை நல்கியிருக்கிறது. இந்தச் சீர்திருத்தங்கள், விவசாயிகளை பல்வேறு தளைகளிலிருந்து மட்டும் விடுவிக்கவில்லை, மாறாக, அவர்களுக்குப் பல உரிமைகளையும் பெற்றுத் தந்திருக்கிறது, புதிய சாத்தியக்கூறுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த உரிமைகள் மிகக்குறைந்த காலகட்டத்தில், விவசாயிகளின் பிரச்சனைகளைக் குறைக்கத் தொடங்கி விட்டன. மஹாராஷ்ட்ரத்தின் துலே மாவட்ட விவசாயியான ஜிதேந்த்ர போயிஜி, புதிய விவசாய சட்டங்களை எப்படிப் பயன்படுத்தினார் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். ஜிதேந்த்ர போயிஜி மக்காச்சோளத்தைப் பயிரிட்டிருந்தார், சரியான விலைக்கு அதை அவர் வியாபாரிகளிடம் விற்கத் தீர்மானித்தார். விளைச்சலுக்கான மொத்த விலை, சுமார் மூன்று இலட்சத்து, முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஜிதேந்த்ர போயி அவர்களுக்கு 50,000 ரூபாய்க்கான முன்பணமும் கிடைத்தது. பாக்கித் தொகையை அவர்கள் 15 நாட்களுக்கு உள்ளாக செலுத்தி விடுவது என்பதும் தீர்மானம் செய்யப்பட்டது. ஆனால் பின்னர் சூழ்நிலைகள் காரணமாக எஞ்சிய தொகை அவருக்குக் கிடைக்கவில்லை. விவசாயியிடமிருந்து விளைச்சலை வாங்கிக் கொள், மாதக்கணக்கில் அவருக்குத் தொகையை அளிக்காதே. மக்காச்சோளம் வாங்குபவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்த வழக்கத்தினை ஒருவேளை பின்பற்றியிருக்கலாம். நான்கு மாதங்கள் வரை ஜிதேந்த்ர அவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் செப்டெம்பர் மாதம் இயற்றப்பட்ட புதிய விவசாயத் துறைச் சட்டம் அவருக்குப் பேருதவியாக விளங்கியது. விளைச்சலை வாங்கிய மூன்று நாட்களுக்கு உள்ளாக, விவசாயிகளிடம் முழுத் தொகையும் செலுத்தி விடவேண்டும் என்பதும், அப்படி ஒருவேளை பணம் செலுத்தப்படவில்லை என்றால், விவசாயி புகார் அளிக்கலாம் என்பதும் இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்தச் சட்டத்தில் மேலும் ஒரு மகத்தான விஷயம் என்னவென்றால், இதன் ஒரு உட்பிரிவுக்கு உட்பட்டு, அந்தப் பகுதியின் சார்பு உட்கோட்ட நீதிபதி ஒரு மாதத்திற்குள்ளாக விவசாயி அளித்திருக்கும் புகாரின் மீது முடிவை எடுத்தாக வேண்டும். இப்படிப்பட்ட வலுவானதொரு சட்டம் விவசாயிக்குப் பக்கபலமாக இருக்கும் போது, அவரது பிரச்சனைக்கான தீர்வு காணப்பட்டே ஆகும். இங்கே ஜிதேந்த்ரா அவர்கள் புகாரளித்தார், இவருடைய புகாரும் சில நாட்களுக்குள்ளாகவே தீர்க்கப்பட்டது. அதாவது சட்டம் பற்றிய சரியான-முழுமையான புரிதலே, ஜிதேந்த்ராவின் பலமானது. எந்த இடமாக இருந்தாலும், அனைத்து வகையான தவறான புரிதல்கள்-வதந்திகளைத் தாண்டி, சரியான தெரிதல், அனைவருக்கும் மிகப்பெரிய வகையில் பலம் சேர்க்கும். விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பணியை ராஜஸ்தான் மாநிலத்தின் பாரா மாவட்டத்தைச் சேர்ந்த மொஹம்மத் அஸ்லம் அவர்கள் செய்து வருகிறார். இவர் ஒரு விவசாயிகள் உற்பத்திச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். ஆம், நீங்கள் சரியாகத் தான் கேட்டிருக்கிறீர்கள், உங்கள் காதுகளில் சரியாகவே ஒலித்திருக்கிறது. விவசாயிகள் உற்பத்திச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இப்போது தேசத்தின் தொலைவான பகுதிகளில் பணியாற்றி வரும் விவசாயக் குழுமங்களிலும் கூட தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாகி வருகிறார்கள் என்பதை அறிந்து பெரியபெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சரி நண்பர்களே, மொஹம்மத் அஸ்லம் அவர்கள் தனது பகுதியின் பல விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு வாட்ஸப் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் ஒவ்வொரு நாளும் அவர் அக்கம்பக்கத்தில் இருக்கும் சந்தைகளின் விலை நிலவரம் பற்றிய தகவல்களை அளித்து வருகிறார். இவருடைய விவசாயிகள் உற்பத்தி அமைப்பே கூட விவசாயிகளிடமிருந்து அவர்களின் விளைச்சலை வாங்கிக் கொள்கிறது, ஆகையால் இவரது முயற்சிகள் காரணமாக விவசாயிகளுக்குத் தீர்மானம் செய்வதில் உதவிகரமாக இருக்கிறது.
நண்பர்களே, விழிப்புணர்வு இருந்தால், உயிர்ப்பிருக்கும். தனது விழிப்புணர்வு வாயிலாக ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் தாக்கமேற்படுத்திய ஒரு முற்போக்கு விவசாயி தான் ஸ்ரீ வீரேந்த்ர யாதவ் அவர்கள். வீரேந்த்ர யாதவ் அவர்கள் முன்னர் ஆஸ்த்ரேலிய நாட்டில் வசித்து வந்தார். ஈராண்டுகள் முன்பாக அவர் பாரதம் வந்து, இப்போது ஹரியாணாவின் கைத்தலில் வசித்து வருகிறார். மற்றவர்களைப் போன்றே இவருக்கும் வயலில் இருந்த பயிர் அடித்தட்டைகள் ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்தது. இதற்கான தீர்வு காணப்பட பரவலான வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாலும், இன்று மனதின் குரலில் நான் வீரேந்த்ரா அவர்களை சிறப்பான வகையில் குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால், அவரது முயற்சியே அலாதியானது, ஒரு புதிய திசையைக் காட்டுவது. பயிர் அடித்தட்டைகளுக்கான தீர்வு காணப்பட வீரேந்த்ரா அவர்கள், பயிர் அடித்தட்டைகளைக் கட்டவல்ல straw baler என்ற ஒரு இயந்திரத்தை வாங்கினார். இதை வாங்க இவருக்கு விவசாயத் துறையிடமிருந்து நிதியுதவியும் கிடைத்தது. இந்த இயந்திரத்தைக் கொண்டு இவர் பயிர் அடித்தட்டைகளை தனித்தனிக் கட்டுகளாக ஒன்றிணைத்துக் கட்டத் தொடங்கினார். இப்படிச் செய்த பிறகு இவர் அவற்றை விவசாயப் பொருள்கள் எரிசக்தி ஆலைக்கும் காகித ஆலைக்கும் விலைக்கு விற்று விட்டார். வீரேந்த்ரா அவர்கள் வெறும் பயிர் அடித்தட்டைகளைக் கொண்டு மட்டுமே, ஈராண்டுகளில் ஒன்றரை கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக வியாபாரம் செய்து விட்டார், அதிலும் சுமார் 50 இலட்சம் ரூபாய் அளவுக்கு இலாபம் சம்பாதித்திருக்கிறார் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். எந்த விவசாயிகளின் நிலங்களிலிருந்து இவர் பயிர் அடித்தட்டைகளை அகற்றுகிறாரோ, அவர்களுக்கும் இதனால் ஆதாயம் ஏற்படுகிறது. கழிவைப் பொன்னாக்குவது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் பயிர் அடித்தட்டைகளிலிருந்து பணத்தையும், புண்ணியத்தையும் சம்பாதிக்கும் அலாதியான ஒரு எடுத்துக்காட்டு இது. என் மனதுக்கு நெருக்கமான இளைஞர்களே, குறிப்பாக விவசாயப் படிப்பு படிக்கும் இலட்சக்கணக்கான மாணவர்களே, உங்களிடத்தில் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான் – நீங்கள் உங்கள் அருகிலே இருக்கும் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு நவீனமுறை விவசாயம் குறித்தும், விவசாயத் துறையில் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இப்படிச் செய்வதால் நாட்டில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களின் பங்குதாரர்களாக நீங்களும் ஆவீர்கள்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் பலதரப்பட்ட, பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசி வருகிறோம். ஆனால் எதை நினைத்து நாம் சந்தோஷம் அடைய விரும்ப மாட்டோமோ, அப்படிப்பட்ட ஒரு விஷயம் நடந்து சுமார் ஓராண்டாகி இருக்கிறது. சுமார் ஓராண்டுக்கு முன்பாக கொரோனாவின் முதல் நிகழ்வு பற்றி உலகத்திற்குத் தெரிய வந்தது. அப்போதிலிருந்து இன்றுவரை, உலகெங்கிலும் பல ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்து விட்டோம். பொதுமுடக்கத்திலிருந்து வெளிப்பட்டு இப்போது தடுப்பூசி பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கொரோனா விஷயத்தில், எந்த வகையானதொரு கவனக்குறைவையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது, ஏனென்றால் இது இப்போதும் ஆபத்தானது. நாம் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரை முழுச்சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்.
நண்பர்களே, சில நாட்களுக்குப் பின்னர், டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று பாபாசாஹேப் அம்பேட்கர் அவர்களின் நினைவுநாள் வரவிருக்கிறது. இந்த நாளன்று பாபாசாஹேபுக்கு நாம் நினைவாஞ்சலியைச் செலுத்தும் அதே வேளையில், நாட்டிற்கு நமது உறுதிப்பாடுகளையும், ஒரு குடிமகன் என்ற முறையிலே நமது கடமைகளையும் செவ்வனே நிறைவேற்ற அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்திருக்கும் கற்றல்களையும், நாம் மீள்பதிவு செய்து கொள்ள வேண்டும். நாட்டின் பல பாகங்களில் குளிர்காலம் தீவிரமடையத் தொடங்கி இருக்கிறது. பல இடங்களில் பனிப்பொழிவு இருக்கிறது. இந்தச் சூழலில் நாம் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள்-பெரியோர், நோயுற்றோர் ஆகியோர் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், நம்மையும் நாம் பராமரித்துக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்திலிருக்கும் வறியவர்களைப் பற்றியும் மக்கள் கரிசனம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கம்பளி ஆடைகளை அளித்து அவர்களின் குளிரைப் போக்குகிறார்கள். ஆதரவற்ற விலங்குகளுக்கும் குளிர் என்பது மிகுந்த சிரமத்தைக் கொண்டு தருகிறது. இவற்றுக்கு உதவி புரியவும் பலர் முன்வருகிறார்கள். நமது இளைய தலைமுறையினர் இவை போன்ற செயல்களில் மிகவும் ஆர்வத்தோடு பணியாற்றுகிறார்கள். நண்பர்களே, அடுத்த முறை நாம் மனதின் குரலில் சந்திப்போம், 2020 என்ற இந்த ஆண்டு நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகளோடு, நாம் முன்னேறுவோம். உங்கள் கருத்துக்கள், எண்ணங்கள் ஆகியவற்றை எனக்குக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள். உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள், நாட்டுக்காக ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். பலப்பல நன்றிகள்.
****
Starting this month's #MannKiBaat with good news, which pertains to our rich culture. pic.twitter.com/tIFcHOy0Gw
— PMO India (@PMOIndia) November 29, 2020
A special link with beloved Kashi. #MannKiBaat pic.twitter.com/NfZVrcV3s0
— PMO India (@PMOIndia) November 29, 2020
Strengthening cultural bonds in the time of the global pandemic. #MannKiBaat pic.twitter.com/VB1FS68VPX
— PMO India (@PMOIndia) November 29, 2020
Innovative ways to connect our citizens with India's cultural ethos. #MannKiBaat pic.twitter.com/58QYiWBQcZ
— PMO India (@PMOIndia) November 29, 2020
India remembers the work of Dr. Salim Ali.
— PMO India (@PMOIndia) November 29, 2020
There are many clubs and societies that are passionate about bird watching. I hope you all discover more about them. #MannKiBaat pic.twitter.com/ChaNqbwsSr
The culture of India is gaining popularity all over the world.
— PMO India (@PMOIndia) November 29, 2020
One such effort is by @JonasMasetti, who is based in Brazil and popularises Vedanta as well as the Gita among people there.
He uses technology effectively to popularise our culture and ethos. #MannKiBaat pic.twitter.com/NX4jZtPzJX
Remembering Sri Guru Nanak Dev Ji. #MannKiBaat pic.twitter.com/cF1ukJYlcs
— PMO India (@PMOIndia) November 29, 2020
We are deeply inspired by the noble ideals of Sri Guru Nanak Dev Ji. #MannKiBaat pic.twitter.com/cWVYo8Rv6m
— PMO India (@PMOIndia) November 29, 2020
PM @narendramodi talks about a Gurudwara in Kutch, which is considered very sacred and special. #MannKiBaat pic.twitter.com/3fhoGZtTT9
— PMO India (@PMOIndia) November 29, 2020
Connecting the Sangat with the sacred Darbar Sahib. #MannKiBaat pic.twitter.com/N4CFYOWmn1
— PMO India (@PMOIndia) November 29, 2020
Greatness inspired by Sri Guru Nanak Dev Ji, something that the world has seen. #MannKiBaat pic.twitter.com/RVaLaten6X
— PMO India (@PMOIndia) November 29, 2020
Connecting with India's Yuva Shakti. #MannKiBaat pic.twitter.com/WpwlKeemAb
— PMO India (@PMOIndia) November 29, 2020
A unique initiative started by PM @narendramodi when he would visit colleges and universities during convocations. #MannKiBaat pic.twitter.com/Yj01sjZv2k
— PMO India (@PMOIndia) November 29, 2020
During #MannKiBaat, PM @narendramodi emphasises on each institution harnessing the strengths and talents of their alumni.
— PMO India (@PMOIndia) November 29, 2020
Alumni associations can play a key role, be it in donating latest infrastructure, providing scholarships and more. pic.twitter.com/w74kX5xbdm
Today, when we talk about Aatmanirbhar Bharat, we remember Sri Aurobindo.
— PMO India (@PMOIndia) November 29, 2020
His vision of self-reliance included keeping our mind open to best practices from all over and excelling.
He also had a dream of furthering education and learning among the youth of India. #MannKiBaat pic.twitter.com/oMYn6IVh5I
Committed to the welfare of the hardworking Indian farmer. #MannKiBaat pic.twitter.com/9HCnAEfyrE
— PMO India (@PMOIndia) November 29, 2020