எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று ஜூலை மாதம் 26ஆம் நாள், இன்றைய தினம் மிகவும் விசேஷம் நிறைந்தது. இன்று ‘கார்கில் விஜய் திவஸ்’, அதாவது கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றதைக் குறிக்கும் நாள் ஆகும். 21 ஆண்டுகள் முன்பாக, இதே நாளன்று தான் கார்கில் யுத்தத்தில் நமது இராணுவமானது இந்தியாவின் வெற்றிக் கொடியை நாட்டியது. நண்பர்களே, கார்கில் போர் நடைபெற்ற போது நிலவிய சூழ்நிலையை பாரதம் என்றுமே மறவாது. பெரிய பெரிய கனவுகளை மனதில் கொண்டு பாரதநாட்டு பூமியை அபகரிக்கவும், தங்கள் நாட்டில் நிலவி வந்த உள்நாட்டுக் பூசல்களிலிருந்து அவர்களது மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் பாகிஸ்தான் இந்த வெற்று சாகசத்தைக் கட்டவிழ்த்து விட்டது. பாரதமோ அப்போது பாகிஸ்தானுடன் நல்லுறவுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது; ஆனால்,
பயரூ அகாரண் சப் காஹூ சோ. ஜோ கர் ஹித் அன்ஹித் தாஹூ சோ.
“बयरू अकारण सब काहू सों | जो कर हित अनहित ताहू सों ||
அதாவது அனைவருடனும் வன்மம் பாராட்டுவது தான் தீயோரின் இயல்பாகும் என்பதே இதன் பொருள். இத்தகைய இயல்பு கொண்டோர், நல்லது செய்வோருக்கும் தீமையை செய்வது பற்றியே சிந்திக்கிறார்கள். ஆகையால் இந்தியாவின் நட்புக் கரத்துக்குப் பதிலாக பாகிஸ்தானம் முதுகில் குத்தும் கயமைத்தனத்தை முயன்றது; ஆனால் பாரதநாட்டின் வீரம் நிறைந்த இராணுவத்தினர் தங்களின் பராக்கிரமத்தை வெளிப்படுத்தினார்கள், உலகம் முழுவதும் இதைக் கண்டது. மலையுச்சிகளில் வீற்றிருக்கும் எதிரிகளோடு அடிவாரத்தில் இருந்தபடி போரிடும் நம் நாட்டு வீரர்கள். ஆனால் வெற்றி என்னவோ மலை உச்சியில் இருப்பவர்களுக்குக் கிடைக்கவில்லை, அடிவாரத்தில் நெஞ்சுரத்தோடும், மெய்யான வீரத்தோடும் போரிட்ட நமது இராணுவத்தினருக்குத் தான் கிடைத்தது, இந்தக் காட்சியை சற்று கற்பனைக்குக் கொண்டு வந்து இருத்திப் பாருங்கள்! நண்பர்களே, அந்த வேளையில் கார்கில் செல்லவும், அங்கே நமது இராணுவத்தினரின் வீரத்தைக் கண்ணாறக் காணவும் எனக்குப் பேறு கிடைத்தது. அந்த நாளை, அன்று வாய்த்த சில கணங்களை, எனது வாழ்வின் மிக விலைமதிப்பே இல்லாத தருணமாக நான் கருதுகிறேன். இன்று கார்கிலில் நாம் பெற்ற வெற்றியை மக்கள் இன்று நினைவுகூருவதை நான் இன்று காண்கிறேன். சமூக ஊடகத்தில் #courageinkargil என்ற ஒரு ஹேஷ்டேகிலே மக்கள் நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள், உயிர்த்தியாகம் செய்தோருக்கு தங்கள் நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்து வருகிறார்கள். நான் இன்று நாட்டுமக்கள் அனைவரின் தரப்பிலிருந்தும், நமது இந்த வீரர்களுடன் கூடவே, பாரத அன்னைக்கு இப்படிப்பட்ட சத்புத்திரர்களை ஈன்றளித்த தாய்மார்களுக்கும் என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். இன்று நாள் முழுவதும் கார்கில் வெற்றியோடு இணைந்த நமது வீரர்கள் பற்றிய கதைகளை, வீரம் நிறைந்த தாய்மார்களின் தியாகத்தைப் பற்றி ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நாட்டின் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். www.gallantryawards.gov.in என்று ஒரு இணையதளம் இருக்கிறது, இதில் நீங்கள் ஒருமுறை நுழைந்து பாருங்கள் என்ற வேண்டுகோளையும் நான் உங்களிடம் விடுக்கிறேன். அங்கே தீரம் நிறை நமது இராணுவ வீரர்களைப் பற்றியும், அவர்களின் பராக்கிரமம் பற்றியும் ஏகப்பட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும், அந்தத் தகவல்களைப் பற்றி நீங்கள் உங்கள் நண்பர்களோடு கலந்துரையாடும் போது உத்வேகத்துக்கான ஊற்றுக்கண் உங்களுக்குள்ளே திறக்கும். கண்டிப்பாக இந்த இணையத்தளத்திற்கு நீங்கள் சென்று பாருங்கள், மீண்டும் மீண்டும் சென்று பாருங்கள் என்று தான் நான் கூறுவேன்.
“காந்தியடிகள் நம்மனைவருக்கும் ஒரு மந்திரத்தை அளித்தார் என்பது நம்மனைவருக்கும் நினைவிருக்கிறது. உங்களுக்கு எப்போதாவது ஒரு சங்கடம் ஏற்பட்டால், அப்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற நிலை ஏற்பட்டால், மிகவும் ஏழ்மையில், நலிவான நிலையில் இருக்கும் இந்தியரைப் பற்றி சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். தாங்கள் செய்ய இருப்பனவற்றால் அந்த மனிதனுக்கு நலன் விளையுமா விளையாதா என்பது தான் அது. காந்தியடிகளின் இந்தக் கருத்தியலை முன்னெடுத்துச் சென்ற அடல் அவர்கள், கார்கில் போரின் போது நமக்கெல்லாம் மற்றுமொரு மந்திரத்தை அளித்தார். எந்த ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவையும் எடுக்கும் முன்பாக, நமது முயல்வுகள், அடைய மிகவும் கடினமான சிகரங்களில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்துவரும் இராணுவத்தினருக்கு கண்ணியம் சேர்ப்பதாக இருக்குமா இருக்காதா என்பது தான் அந்த மந்திரம்.
நண்பர்களே, போர்ச்சூழலில் நாம் செய்யும் செயல்களோ, பேசும் சொற்களோ, எல்லைப்புறங்களில் நெஞ்சுரத்தோடு இருக்கும் வீரர்களின் மனோபலத்தின் மீதும், அவர்களின் குடும்பத்தாரின் மனோபலத்தின் மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விஷயத்தை நாம் என்றும் மறந்து விடக் கூடாது; ஆகையால் நமது நடவடிக்கைகள், நமது செய்கைகள், நமது சொற்கள், நமது அறிக்கைகள், நமது வரையறைகள், நமது இலட்சியம், அனைத்தையும் நாம் உரைகல்லில் உரைத்துப் பார்த்தே புரிய வேண்டும்; இதனால் வீரர்களின் மனோபலமும், மரியாதையும் உயர வேண்டும். பெற்ற பொன்னாடு அனைத்தை விடவும் நனிசிறந்தது என்ற மந்திரச் சொற்களுக்காக, ஒற்றுமை என்ற இழையில் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டுமக்கள், நமது இராணுவத்தினரின் வல்லமையை பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கிறார்கள். ‘சங்கே சக்தி கலௌ யுகே’, அதாவது கலியுகத்தில் ஒற்றுமையே சக்தி என்று நாம் கூறுவதுண்டு.
சில வேளைகளில் இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நாட்டுக்குக் கேடுதரும் விஷங்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். சில வேளைகளில் ஏதோ ஆர்வக் கோளாறு காரணமாக சிலர் அவற்றை பகிரவும் செய்கிறார்கள். இது தவறு என்று அறிந்தும் இதைச் செய்து வருகிறார்கள். இன்று, போர் என்பது எல்லைப்புறங்களில் மட்டுமல்ல, நாட்டின் பல முனைகளில் போரிடப்பட்டு வருகிறது, இதில் நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். தேசத்தின் எல்லைப்புறத்தில், கடினமான சூழ்நிலைகளில் போரிட்டுவரும் நமது வீரர்களை நினைவில் கொண்டு நாம் நமது போக்கைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த சில மாதங்களில் நாடு முழுவதும் ஒன்றுபட்டு கொரோனா பெருந்தொற்றோடு எவ்வாறு போராடியதோ, அது பல சந்தேகங்களைத் தவறு என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இன்று நமது நாட்டிலே நோயிலிருந்து மீண்டு வரும் recovery rate என்ற மீட்சி விகிதம், பிற நாடுகளோடு ஒப்பீடு செய்கையில் சிறப்பாக இருக்கிறது; நமது நாட்டில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை உலகத்தின் பல நாடுகளைக் காட்டிலும் கணிசமாகக் குறைவானதாகவே இருக்கிறது. ஒரு மனித உயிரின் இழப்புக்கூட துக்கமளிப்பது தான் ஐயமில்லை என்றாலும் இந்தியா, தனது இலட்சக்கணக்கான நாட்டு மக்களின் உயிர்களைக் காக்க வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் உண்மை. நண்பர்களே, இன்று கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் அபாயம் இன்னும் விலகி விடவில்லை. பல இடங்களில் இது வேகமாகப் பரவியும் வருகிறது. நாம் அதிக முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தொடக்கத்தில் இது எந்த அளவுக்கு அபாயகரமானதாக விளங்கியதோ, அதே அளவுக்கு இன்றும்கூட இருக்கிறது என்பதால் நாம் முழுமையான எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும், ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், தொடர்ந்து கைகளைக் கழுவி வர வேண்டும், எங்கும் துப்பக்கூடாது, தூய்மையின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். இவையே கொரோனாவிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நம்வசம் இருக்கும் ஆயுதங்கள். சில வேளைகளில் முகக்கவசம் தொல்லையளிப்பதாக இருக்கிறது என்று நாம் கருதி அதை அகற்றுகிறோம். பேசத் தலைப்படுகிறோம். எப்போது முகக்கவசம் அதிகம் தேவையாக இருக்கிறதோ, அந்த வேளையில் அதை அகற்றி விடுகிறோம். முகக்கவசம் காரணமாக சிரமம் ஏதேனும் இருக்கும் வேளையில், அதை அகற்றி விடலாம் என்று எண்ணும் நேரத்தில், ஒரு கணம், கொரோனாவோடு போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனாவுடன் போராடிவரும் பிற போராளிகள் பற்றி சிந்தித்துப் பாருங்கள்; அவர்கள் மணிக்கணக்காக முகக்கவசம் அணிந்து கொண்டு, மனித உயிர்களைக் காக்கும் பெரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள். 8 மணிநேரம், பத்து மணிநேரம் எனத் தொடர்ந்து முகக்கவசத்தை அணிந்தபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு சிரமமாக இருப்பதில்லையா!! சற்றே அவர்களை நினைத்துப் பாருங்கள், நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் நாமும் அசட்டையாக இருக்கக் கூடாது, மற்றவர்களையும் அப்படி இருக்க அனுமதிக்கக் கூடாது. ஒருபுறத்தில் நாம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு எச்சரிக்கையோடும், விழிப்போடும் போராட வேண்டி இருக்கிறது என்றால் வேறொரு புறத்தில் கடினமான உழைப்பால், தொழில், வேலை, படிப்பு என நாம் ஆற்றிவரும் கடமைகளில் வேகத்தைக் கூட்டியாக வேண்டும், அவற்றையும் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். நண்பர்களே, கொரோனா காலத்தில் நமது கிராமப்புறங்கள் தான் நாடு முழுவதற்கும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது. கிராமவாசிகள், கிராமப் பஞ்சாயத்துக்கள் ஆகியோரிடமிருந்து பல நல்ல முயற்சிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. ஜம்முவில் இருக்கும் த்ரேவா கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் பல்பீர் கௌர். தனது பஞ்சாயத்தில் 30 படுக்கைகள் கொண்ட ஒரு quarantine centre, அதாவது தனியிருப்பு மையத்தை ஏற்படுத்தினார் பல்பீர் கௌர் அவர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்துக்கு வருவோருக்கு என வரும் வழியில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. தங்கள் கைகளைக் கழுவுவதில் யாருக்கும் எந்த சிரமமும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல, தனது தோள்களிலே spray pump, அதாவது தெளிப்பானைத் தொங்க விட்டுக் கொண்டு, தன்னார்வலர்களோடு இணைந்து, பஞ்சாயத்து முழுவதிலும் சரி, அக்கம்பக்கத்துப் பகுதிகளிலும் நோய்நீக்கும் பணியை பல்பீர் கௌர் மேற்கொண்டு வருகிறார். இவரைப் போலவே கஷ்மீரைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் பஞ்சாயத்துத் தலைவர் இருக்கிறார். காந்தர்பல்லின் சௌண்ட்லீவாரைச் சேர்ந்த ஜைதூனா பேகம் தான் அவர். கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அதே வேளையில், வருமானத்துக்கும் வழிவகை செய்வது என ஜைதூனா பேகம் அவர்கள் தீர்மானித்தார். அவர் பகுதி முழுவதிலும் இலவச முகக்கவசம், இலவச ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை விநியோகம் செய்ததோடு, மக்களுக்கு நடவுக்கான விதைகளையும், ஆப்பிள் செடிகளையும் அளித்தார்; இதன் வாயிலாக மக்கள் விவசாயத்தில், தோட்டங்களில் தங்கள் தொழிலைத் தொடர முடியும். நண்பர்களே, கஷ்மீரத்திலே மேலும் ஒரு ஊக்கமளிக்கக்கூடிய நிகழ்வு. இங்கே அனந்தநாகின் ஊராட்சித் தலைவர் மொஹம்மத் இக்பால் அவர்களுக்கு தனது பகுதியில் நோய் நீக்கம் செய்ய தெளிப்பான் தேவைப்பட்டது. அவர் தகவல்களைத் திரட்டிய போது, இயந்திரத்தை வேறு ஒரு நகரத்திலிருந்து கொண்டு வர வேண்டியிருக்கிறது, மேலும் இதன் விலை ஆறு இலட்சம் ரூபாய் என்பது தெரிய வந்தது. இப்போது இக்பால் அவர்கள் தானே முயன்று ஒரு தெளிப்பானை வடிவமைத்தார், அதுவும் வெறும் 50,000 ரூபாய் செலவில். இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. நாடு முழுவதிலும், அனைத்து இடங்களிலும், இப்படிப்பட்ட உத்வேகம் அளிக்கவல்ல சம்பவங்கள் தினம் தினம் வந்தவண்ணம் இருக்கின்றன, இவர்கள் அனைவரும் நம் வாழ்த்துக்களுக்கு உரியவர்கள். சவால் என்ற ஒன்று வந்த போது, அதை அதே அளவு வலிமையோடு எதிர்கொள்ளவும் செய்திருக்கிறார்கள் மக்கள்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, சரியான அணுகுமுறை மூலமாக ஆக்கப்பூர்வமான அணுகுமுறை வாயிலாக, எப்போதும், சங்கடங்களை சந்தர்ப்பங்களாகவும், வினைகளை வளர்ச்சியாகவும் மாற்றுவதில் பேருதவி கிடைக்கிறது. இப்போது கொரோனா காலகட்டத்திலும் நமது நாட்டின் இளைஞர்களும் பெண்களும், தங்களுடைய திறன்கள்-திறமைகளை ஆதாரமாகக் கொண்டு புதிய வழிமுறைகளை எப்படித் துவக்கினார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிஹாரில் பல பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், மதுபனி ஓவியம் வரையப்பட்ட முகக்கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள், சில நாட்களிலேயே இது மிகவும் பிரபலமாகிப் போனது. இந்த மதுபனி முகக்கவசம் ஒருபுறம் நமது பாரம்பரியத்தைப் பறைசாற்றும் அதே வேளையில், மக்களுக்கு ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் அளித்து வருகிறது. உங்களுக்கே தெரியும், வடகிழக்கில் மூங்கில் எப்படி ஏராளமாக விளைகிறது என்ற விஷயம். இப்போது இந்த மூங்கிலைக் கொண்டு திரிபுரா, மணிப்பூர், அஸாமைச் சேர்ந்த கைவினைஞர்கள் உயர்தரமான நீர்பாட்டில்கள், டிஃபன் பாக்ஸ்கள் ஆகியவற்றைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள். மூங்கிலில் செய்யப்பட்ட இவற்றின் தரத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அசந்தே போவீர்கள், மூங்கில் பாட்டில் இத்தனை நேர்த்தியா என்று ஆச்சரியப்படுவீர்கள், முக்கியமாக இவை சூழலுக்குக் கேடு விளைவிக்காதவை. இவற்றைத் தயாரிக்கும் போது, மூங்கில் முதலில் வேம்பு மற்றும் பிற மூலிகைச் செடிகளோடு சேர்த்துக் கொதிக்கவிடப்படுகிறது. இதன் காரணமாக இதில் மூலிகைத் தன்மையும் ஏற்படுத்தப்படுகிறது. சிறிய சிறிய உள்ளூர்ப் பொருட்களிலிருந்து எப்படி பெரும் வெற்றி கிடைக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்தும் கிடைக்கிறது. ஜார்க்கண்டின் பிஷுன்புரில் இப்போதெல்லாம் முப்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் lemon grass என்ற எலுமிச்சைப் புல்லினை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எலுமிச்சைப்புல் நான்கே மாதங்களில் விளைந்து பயிராகிறது, இதன் எண்ணெய், சந்தைகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. இப்போதெல்லாம் இதற்கு அதிகத் தேவை உருவாகியிருக்கிறது. நான் நாட்டின் வேறு இரு பகுதிகளைப் பற்றியும் கூற விரும்புகிறேன். இவை இரண்டுமே ஒன்றிலிருந்து மற்றது பல கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பன, இந்தியாவை தற்சார்பு உடையதாக ஆக்க, தத்தம் பாணியில் சற்று வித்தியாசமான முயல்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஒன்று லத்தாக், மற்றது கட்ச். லே-லத்தாக் என்ற பெயர்களைக் கேட்டவுடனேயே அழகு கொஞ்சும் பள்ளத்தாக்குகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் கருத்தை அள்ளும், தூய்மையான தென்றல் காற்று நம்மை ஸ்பர்ஸிக்கும் உணர்வு உண்டாகும். அதே வேளையில் கட்ச் பகுதி என்றவுடன் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பாலைவனம், பசுமையேதும் இல்லாத வறண்ட நிலம் ஆகிய காட்சிகளே நம் மனதில் வந்து அலைமோதும். லத்தாக்கிலே ஒரு சிறப்பான பலம் உண்டு, இதன் பெயர் ஆப்ரிகாட் அதாவது பாதாமி. இந்தப் பொருள் ஒரு பகுதியின் பொருளாதார நிலையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்றாலும், விநியோகச் சங்கிலி, தீவிரமான பருவநிலை போன்ற பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. குறைவான பாதிப்பு ஏற்படும் வகையில் இன்று ஒரு புதுமை புகுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு dual system-இருவகை முறை, இதன் பெயர் solar apricot dryer and space heater, அதாவது சூரிய சக்தியால் இயங்கும் பாதாமி உலர்த்தி மற்றும் சூழல் வெப்பமுண்டாக்கி. இந்தக் கருவி பாதாமியையும் இன்னும் பிற பழங்களையும் காய்கறிகளையும், தேவைக்கேற்ப சுகாதாரமான முறையில் உலர்த்துகிறது. முன்பெல்லாம், பாதாமி நிலங்களுக்கு அருகிலே உலர்த்தும் போது, பாதிப்பு ஏற்பட்டு வந்ததோடு கூடவே, தூசியும், மழைநீரும் காரணமாக பழங்களின் தரம் பாதிக்கப்பட்டு வந்தது. இன்னொரு புறமோ, இப்போது கட்சில் விவசாயிகள் dragon fruits என்ற ட்ராகன் பழங்களைப் பயிர் செய்வதில் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கட்சிலே ட்ராகன் பழங்களா என்று கேட்பவர்கள் ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள். ஆனால் அங்கே, இன்று பல விவசாயிகள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். பழத்தின் தரம், குறைவான நிலத்தில் அதிக விளைச்சல் என்ற திசையில் கணிசமான புதுமை புரியப்பட்டு வருகிறது. இந்தப் பழங்கள் மீது மக்களிடம் இருக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக காலை உணவின் போது இது எடுத்துக் கொள்வது அதிகரித்திருக்கிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ட்ராகன் பழங்களை நாம் இறக்குமதி செய்யத் தேவையில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே கட்ச் விவசாயிகளின் மனவுறுதியாக இருக்கிறது, இது தானே சுயசார்பு பாரதம்!!
நண்பர்களே, புதிய ஒன்றை நாம் புரிய வேண்டும் என்று எண்ணும் போது, யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயங்கள் சாத்தியமாகின்றன. எடுத்துக்காட்டாக, பிஹாரைச் சேர்ந்த சில இளைஞர்கள் சாதாரணமான வேலைகளைச் செய்து வந்தார்கள். தாங்கள் இனி முத்துக்களை உருவாக்கப் போவதாக ஒருநாள் அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்களுடைய பகுதிகளில் யாருக்கும் இதன் வழிமுறை பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் முதன்மையாக அனைத்துத் தகவல்களையும் திரட்டினார்கள், ஜெய்புர் மற்றும் புவநேஸ்வர் சென்று பயிற்சி மேற்கொண்டார்கள், தங்கள் கிராமத்திலேயே முத்துக்களை விளைவிக்கத் தொடங்கினார்கள். இன்று இவர்கள் சுயமாக வருமானம் ஈட்டி வருவதோடு, முஸஃபர்புர், பேகுசராய், பட்னா ஆகிய இடங்களில், பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பயிற்சியும் அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் எத்தனை பேர்களுக்குத் தற்சார்புப் பாதை திறக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்!!
நண்பர்களே, சில நாட்கள் கழித்து ரக்ஷாபந்தன் புனிதமான நாள் வரவிருக்கிறது. பலர், பல அமைப்புகள் இந்த முறை ரக்ஷாபந்தனை வித்தியாசமான முறையில் கொண்டாடும் இயக்கத்தை செயல்படுத்தி வருவதை என்னால் காண முடிகிறது. பலர் இதை உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பதோடு இணைத்தும் வருகிறார்கள். நமது பண்டிகைகள் காரணமாக நமது சமூகத்தில், நமது வீடுகளுக்கு அருகே இருப்போருக்கு வியாபாரம் பெருக வேண்டும், அவர்களும் பண்டிகைகளை சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் எனும் போது தான் பண்டிகையின் ஆனந்தம் உண்மையில் பெருகி உணரப்படுகிறது. நாட்டுமக்கள் அனைவருக்கும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று தேசிய கைத்தறி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் கைத்தறிப் பொருட்கள், நமது கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் பலநூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான கௌரவம் நிறைந்த நமது வரலாறு பொதிந்திருக்கிறது. இந்தியாவின் கைத்தறிப் பொருட்களும், கைவினைப் பொருட்களும் அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதோடு கூடவே இவற்றைப் பற்றி நாம் அதிகம் பேருக்குச் சொல்லவும் வேண்டும் என்பதை நோக்கியே நமது முயற்சிகள் அமைய வேண்டும். இந்தியாவின் கைத்தறிப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் எத்தனை வளமானவையாகவும், வேறுபட்டதாகவும் இருக்கின்றன என்பதை எந்த அளவுக்கு உலகம் உணர்கிறதோ, உணர்கிறதா அந்த அளவுக்கு உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆதாயம் ஏற்படும்.
நண்பர்களே, குறிப்பாக எனது இளைய நேசங்களே, நமது நாடு மாற்றம் கண்டு வருகிறது. எப்படி மாறி வருகிறது? எத்தனை வேகமாக மாறி வருகிறது? எந்தெந்தத் துறைகளில் மாறி வருகிறது? ஆக்கப்பூர்வமான எண்ணத்தோடு நாம் நமது கவனத்தைச் செலுத்தினால், நமக்குத் திகைப்பு மேலிடும். ஒரு காலத்தில், விளையாட்டு தொடங்கி, பிற துறைகளிலும் பெரும்பாலானோர், ஒன்று பெரிய நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் அல்லது பெரும் குடும்பங்கள் அல்லது புகழ்பெற்ற பள்ளிகள்-கல்லூரிகளில் படிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போதோ நாடு மாறி வருகிறது. கிராமங்களிலிருந்து, சிறிய நகரங்களிலிருந்து, எளிய குடும்பங்களிலிருந்து நமது இளைஞர்கள் வெளிப்படுகிறார்கள். வெற்றியின் உச்சங்களைத் தொடுகிறார்கள். இவர்கள் சங்கடங்களுக்கு இடையேயும் கூட, புதியபுதிய கனவுகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறி வருகிறார்கள். இப்படிப்பட்ட சிலரது பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் இதைத் தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இன்று மனதின் குரலில் அப்படிப்பட்ட சில திறமைசாலிக் குழந்தைகளிடம் நாம் பேச இருக்கிறோம். இப்படி ஒரு புத்திகூர்மை மிக்கவர் தான் க்ருத்திகா நாந்தல். கிருத்திகா ஹரியாணாவின் பானீபத்தைச் சேர்ந்தவர்.
மோதி ஜி – ஹெலோ, க்ருத்திகா அவர்களே, வணக்கம்.
க்ருத்திகா – வணக்கம் சார்.
மோதிஜி – தேர்விலே சிறப்பான மதிப்பெண்கள் பெற்றமைக்கு பலப்பல வாழ்த்துக்கள்.
கிருத்திகா – நன்றி சார்.
மோதி ஜி – இப்போதெல்லாம் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லியே நீங்கள் களைத்துப் போயிருப்பீர்கள், இல்லையா. ஏகப்பட்ட பேர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருப்பார்களே!!
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – உங்களை அவர்களுக்குத் தெரியும் என்பதால், உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுபவர்களும் பெருமையாக உணர்வார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
கிருத்திகா – சார், மிகவும் நன்றாக இருக்கிறது. பெற்றோருக்கும் பெருமையாக இருக்கிறது.
மோதி ஜி – சரி, உங்களுக்கு அதிக கருத்தூக்கம் அளித்த விஷயம் என்ன, சொல்லுங்கள்.
கிருத்திகா – சார், என்னுடைய பெரிய உத்வேகம் என்றால் அது என் தாயார் தான்.
மோதி ஜி – பலே, சரி நீங்கள் உங்கள் தாயாரிடம் எதைக் கற்றுக் கொண்டீர்கள்?
கிருத்திகா – சார், அவர் தனது வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களைச் சந்தித்தவர்; இருந்தாலும் கூட, தைரியமும், பலமும் வாய்ந்தவர். அவரைப் பார்த்துப்பார்த்துத் தான் எனக்கு இந்த அளவுக்கு உத்வேகம் கிடைத்தது, நானும் அவரைப் போல ஆக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன்.
மோதி ஜி – உங்கள் தாயார் எதுவரை படித்திருக்கிறார்?
கிருத்திகா – சார், இளங்கலைப் படிப்பு படித்திருக்கிறார் அவர்.
மோதி ஜி – ஓ, இளங்கலை வரை படித்திருக்கிறாரா?
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி, அப்படியென்றால் உங்கள் தாயார் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாரா?
கிருத்திகா – ஆமாம் சார். கற்றுக் கொடுப்பார், மேலும் உலகின் யதார்த்தங்கள் பற்றியும் நிறைய கூறுவார்.
மோதி ஜி – உங்களை அவர் அதட்டுவார் தானே??
கிருத்திகா – ஆஹா, அதட்டவும் செய்வார் சார்.
மோதி ஜி – சரிம்மா, நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?
கிருத்திகா – சார், நான் டாக்டர் ஆக விரும்புகிறேன்.
மோதி ஜி – அட பரவாயில்லையே!!
கிருத்திகா – MBBS
மோதி ஜி – ஆனால் டாக்டராவது ஒன்றும் எளிதான விஷயம் இல்லையே!!
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – பட்டம் வேண்டுமானால் கிடைக்கலாம், ஏனென்றால் நீங்கள் மிகவும் புத்திக்கூர்மையுடைய குழந்தை; ஆனால் டாக்டர்களுடைய வாழ்க்கை, சமூகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – இரவிலும் கூட அவர்களால் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாது. ஒரு நோயாளியுடைய அழைப்பு வரும், மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரும், உடனடியாக விரைய வேண்டியிருக்கும், அதாவது ஒருவகையில் தினமும் 24 மணி நேரம், ஆண்டு முழுக்க 365 நாட்கள் இப்படித் தான். மருத்துவர்களின் வாழ்க்கை, மக்களின் சேவையில் ஈடுபட்டிருக்கிறது.
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – மேலும் அபாயமும் இருக்கிறது; இன்றைய நிலையில் பலவகையான நோய்கள் இருக்கின்றன எனும் போது மருத்துவர்களும் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
கிருத்திகா – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி க்ருத்திகா, ஹரியாணா மாநிலம் விளையாட்டுத் துறையில் இந்தியா முழுவதற்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது, ஊக்கமளிப்பதில் முன்னணி இடத்தை வகிப்பது.
கிருத்திகா- ஆமாம் சார்.
மோதி ஜி – அப்படியென்றால் நீங்களும் ஏதாவது விளையாட்டுக்களில் ஈடுபடுவதுண்டா, ஆர்வம் இருக்கிறதா?
கிருத்திகா – சார், நான் பள்ளியில் கூடைப்பந்து விளையாடுவதுண்டு.
மோதி ஜி – அப்படி என்றால் அதிக உயரமானவராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் உயரம் எத்தனை?
கிருத்திகா – இல்லை சார், என் உயரம் 5 அடி 2 அங்குலம் தான்.
மோதி ஜி – சரி இந்த விளையாட்டில் உங்களுக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது?
கிருத்திகா – சார், அதன் மீது எனக்கு ஆழமான ஆர்வம் உண்டு.
மோதி ஜி – பலே, சரி கிருத்திகா அவர்களே, உங்கள் தாயாருக்கு என் தரப்பிலிருந்து வணக்கங்களைத் தெரிவியுங்கள், அவர் தான் உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர். உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர். உங்கள் தாயாருக்கு வணக்கம், உங்களுக்கு பலப்பல பாராட்டுக்கள், பலப்பல நல்வாழ்த்துக்கள்.
கிருத்திகா – நன்றி சார்.
வாருங்கள், இப்போது கேரளத்தின் எர்ணாகுளம் செல்வோம். கேரளத்தின் ஒரு இளைஞரோடு உரையாடுவோம்.
மோதி ஜி – ஹெலோ
விநாயக் – ஹெலோ சார் வணக்கம்.
மோதி ஜி – சரி விநாயக், வாழ்த்துக்கள்.
விநாயக் – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – சபாஷ் விநாயக், சபாஷ்
விநாயக் – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – உற்சாகம் எப்படி இருக்கு?
விநாயக் – நிறைய இருக்கு.
மோதி ஜி – நீங்கள் ஏதாவது விளையாட்டு விளையாடுவதுண்டா?
விநாயக் – பேட்மிண்டன்
மோதி ஜி – பேட்மிண்டன்
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – பள்ளியிலா அல்லது பயிற்சி ஏதும் எடுத்துக் கொள்ள சந்தர்ப்பம் வாய்த்ததா?
விநாயக் – பள்ளியிலேயே கொஞ்சம் பயிற்சி கிடைத்தது சார்.
மோதி ஜி – ம்ம்
விநாயக் – எங்கள் ஆசிரியர்கள் அளித்தார்கள்.
மோதி ஜி – ம்ம்
விநாயக் – இதனால் வெளியிடங்களில் பங்கெடுக்க எங்களுக்கு வாய்ப்பு அமைந்தது.
மோதி ஜி – பலே.
விநாயக் – பள்ளியின் பிரதிநிதியாக.
மோதி ஜி – எத்தனை மாநிலங்களுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள்?
விநாயக் – நான் கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன்.
மோதி ஜி – கேரளா மற்றும் தமிழ்நாடு மட்டும் தானா.
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி, நீங்கள் தில்லி வர விரும்புகிறீர்களா?
விநாயக் – ஆமாம் சார், இப்போது நான் மேல் படிப்பிற்காக தில்லி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருக்கிறேன்.
மோதி ஜி – அட, நீங்கள் தில்லி வருகிறீர்களா?
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – வரும் ஆண்டுகளில் பள்ளி இறுதித் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்கு நீங்கள் ஏதேனும் செய்தி அளிக்க விரும்புகிறீர்களா?
விநாயக் – கடினமான உழைப்பு, முறையான நேரப் பயன்பாடு.
மோதி ஜி – அதாவது சரியான நேர மேலாண்மை.
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – விநாயக், உங்கள் பொழுதுபோக்குகள் பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
விநாயக் – பேட்மிண்டன், துடுப்புப் படகோட்டுதல்.
மோதி ஜி – சமூக ஊடகங்களில் நீங்கள் அதிகம் பங்கெடுப்பவரா?
விநாயக் – இல்லை சார், பள்ளியில் மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது சார்.
மோதி ஜி – அப்படியென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.
விநாயக் – ஆமாம் சார்.
மோதி ஜி – சரி விநாயக், மீண்டுமொரு முறை வாழ்த்துக்கள், ஆல் தி பெஸ்ட்.
விநாயக் – நன்றி சார்.
வாருங்கள்! நாம் இப்போது உத்திரபிரதேசம் பயணிப்போம். உத்திரபிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த உஸ்மான் சைஃபீயோடு உரையாடுவோம்.
மோதி ஜி – ஹெலோ உஸ்மான், பலப்பல பாராட்டுக்கள்.
உஸ்மான் – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – சரி உஸ்மான் சொல்லுங்கள், நீங்கள் எதிர்பார்த்தது போலவே தேர்வு முடிவுகள் இருந்ததா, இல்லை உங்கள் மதிப்பெண்கள் குறைந்ததா?
உஸ்மான் – இல்லை சார், நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் தாம் கிடைத்திருக்கின்றன. என் பெற்றோரும் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
மோதி ஜி – பலே, சரி உங்கள் குடும்பத்தில் சகோதரர்களும் இருக்கிறார்களா, அவர்களும் உங்களைப் போலவே புத்திக்கூர்மை உடையவர்களா?
உஸ்மான் – எனக்கு ஒரு சகோதரன் உண்டு, சேட்டைக்காரன் அவன்.
மோதி ஜி – சரி.
உஸ்மான் – அவனுக்கு என்னைப் பற்றி மிகவும் பெருமையாக இருக்கிறது.
மோதி ஜி – நல்லது. உங்கள் பாடங்களில் உங்களுக்கு அதிகம் பிடித்தமான பாடம் எது?
உஸ்மான் – கணிதம் சார்.
மோதி ஜி – அட, கணிதம் உங்களுக்கு அதிகம் பிடிக்குமா? எப்படி இது? இதில் உங்களுக்கு அதிகம் உத்வேகம் அளித்த ஆசிரியர் யார்?
உஸ்மான் – சார், எங்களுடைய கணித ஆசிரியர் ரஜத் சார் தான். அவர் தான் எனக்கு உத்வேகம் அளித்தவர், மிக அருமையாக பாடம் எடுப்பார். கணிதப் பாடம் எனக்கு தொடக்கத்திலிருந்தே விருப்பமான பாடம், மிகவும் சுவாரசியமானதும் கூட சார்.
மோதி ஜி – ஓ.
உஸ்மான் – எந்த அளவுக்கு பழகுகிறோமோ, அந்த அளவுக்கு அதிக ஆர்வம் ஏற்படும் ஆகையால் இது எனக்கு விருப்பமான பாடம்.
மோதி ஜி – அப்படியா? சரி, online vedic mathematics வகுப்புகள் நடத்தப்படுகிறதே, உங்களுக்குத் தெரியுமா?
உஸ்மான் – ஆமாம் சார்.
மோதி ஜி – இதை எப்போதாவது முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?
உஸ்மான் – இல்லை சார்.
மோதி ஜி – கணிப்பொறியைக் கொண்டு எத்தனை வேகமாக நீங்கள் கணக்கிட முடியுமோ அதை விட அதிக வேகமாக vedic mathematics வாயிலாக செய்ய முடியும், நீங்கள் இதைப் பழகும் போது, நீங்கள் ஏதோ மாயாஜாலம் செய்கிறீர்கள் என்பதாக உங்கள் நண்பர்களுக்கு. மிக எளிய உத்திகள் பயன்படுத்தப் படுகின்றன, இவையெல்லாம் இப்போது ஆன்லைனிலேயே கிடைக்கின்றன.
உஸ்மான் – சரி சார்.
மோதி ஜி – உங்களுக்குக் கணிதப்பாடத்தில் விருப்பம் இருப்பதால், புதிய புதிய விஷயங்களை நீங்கள் கற்க முடியும்.
உஸ்மான் – சரி சார்.
மோதி ஜி – சரி உஸ்மான், உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
உஸ்மான் – என் ஓய்வு நேரத்தில் நான் ஏதாவது ஒன்றை எழுதுவேன். எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும் சார்.
மோதி ஜி – பலே, அப்படியென்றால் கணிதத்திலும் ஆர்வம், இலக்கியத்திலும் ஆர்வம் என்று சொல்லுங்கள்.
உஸ்மான் – ஆமாம் சார்.
மோதி ஜி – என்ன எழுதுகிறீர்கள்? கவிதைகள்?, பாடல்கள்?
உஸ்மான் – நாட்டுநடப்பு பற்றித் தொடர்புடைய ஏதேனும் ஒன்றைப் பற்றி எழுதுவேன் சார்.
மோதி ஜி – சரி.
உஸ்மான் – புதியபுதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன, ஜிஎஸ்டி, பிறகு நாணயவிலக்கல், இப்படிப்பட்ட விஷயங்கள்.
மோதி ஜி – அட பரவாயில்லையே!! கல்லூரிப் படிப்பு தொடர்பாக உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
உஸ்மான் – கல்லூரிப் படிப்பைப் பொறுத்த மட்டில் jee mainsஇல் எனது முதல் கட்டத் தேர்ச்சி ஆகி விட்டது. வரும் செப்டெம்பர் மாதம் நான் இரண்டாவது முறை முயல இருக்கிறேன். என்னுடைய பிரதான இலக்கு, முதலில் ஐஐடியில் இளங்கலைப் பட்டம் பெற வேண்டும், பிறகு, ஆட்சிப்பணிக்கான தேர்வுகளை எழுதி, அதில் வெற்றி பெற வேண்டும்.
மோதி ஜி – சபாஷ்! அப்படியென்றால் உங்களுக்குத் தொழில்நுட்பத்திலும் ஆர்வம் இருக்கிறதா?
உஸ்மான் – ஆமாம் சார். ஆகையினால் தான் நான் தகவல் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அதுவும் சிறந்த ஐஐடியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மோதி ஜி – நல்லது உஸ்மான். என் தரப்பிலிருந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். உங்கள் சகோதரன் மிகவும் சேட்டை செய்வான் என்பதால் உங்கள் பொழுது நல்லவிதமாகக் கழியும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பெற்றோருக்கும் என் தரப்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். அவர்கள் தாம் உங்களுக்கு இப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள், உங்கள் மனோபலத்தைப் பெருக்கியிருக்கிறார்கள், படிப்புடன் கூட நீங்கள் நாட்டு நடப்புகள் மீதும் கவனம் செலுத்துகிறீர்கள், எழுதுகிறீர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுதுவதால் என்ன ஆதாயம் என்றால், உங்கள் எண்ணங்களில் கூர்மை உண்டாகிறது, பல நன்மைகள் விளைகின்றன. சரி, பலப்பல பாராட்டுக்கள்.
உஸ்மான் – நன்றி சார்.
வாருங்கள்! தென்னாடு செல்வோம். தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கன்னிகாவோடு உரையாடுவோம், கன்னிகா கூறுவது உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.
மோதி ஜி – கன்னிகா அவர்களே, வணக்கம்.
கன்னிகா – வணக்கம் சார்.
மோதி ஜி – எப்படி இருக்கிறீர்கள்?
கன்னிகா – நன்றாக இருக்கிறேன் சார்.
மோதி ஜி – முதன்மையாக நீங்கள் பெற்றிருக்கும் பெரும் வெற்றிக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
கன்னிகா – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – நாமக்கல் என்ற பெயரைக் கேட்டாலே எனக்கு ஆஞ்ஜநேயர் கோயில் தான் நினைவுக்கு வருகிறது.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – இனிமேல் எனக்கு உங்களோடு உரையாடியதும் நினைவுக்கு வரும்.
கன்னிகா – நன்றி சார்.
மோதி ஜி – மீண்டும் வாழ்த்துக்கள்.
கன்னிகா – மிக்க நன்றி சார்.
மோதி ஜி – நீங்கள் தேர்வுகளுக்காக கடுமையாக உழைத்திருப்பீர்கள் இல்லையா? தேர்வுகளுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளும் அனுபவம் எப்படி இருந்தது?
கன்னிகா – நாங்கள் தொடக்கத்திலிருந்தே கடினமாக உழைத்து வருகிறோம் சார். நான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என்றாலும், முடிவு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.
மோதி ஜி – உங்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது?
கன்னிகா – 485 அல்லது 486 கிடைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
மோதி ஜி – ஆனால் இப்போது?
கன்னிகா – 490.
மோதி ஜி – சரி, உங்கள் குடும்பத்தார் ஆசிரியர்களுடைய எதிர்வினை எப்படி இருக்கிறது?
கன்னிகா – அவர்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோஷம், பெருமிதம் சார்.
மோதி ஜி – உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடம் எது?
கன்னிகா – கணிதப்பாடம் சார்.
மோதி ஜி – ஓ, உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
கன்னிகா – நான் முடிந்தால் AFMCயில் ஒரு மருத்துவராக விரும்புகிறேன் சார்.
மோதி ஜி – உங்கள் குடும்பத்தாரும் மருத்துவத் துறையில் இருக்கிறார்களா?
கன்னிகா – இல்லை சார், என் தகப்பனார் ஒரு ஓட்டுநர், என் சகோதரி மருத்துவப் படிப்பு படித்து வருகிறாள்.
மோதி ஜி – அட பரவாயில்லையே! நான் முதற்கண் உங்கள் தகப்பனாருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உங்களையும் உங்கள் சகோதரியையும் நன்கு கவனித்துக் கொண்டு வருகிறார். அவர் செய்து வருவது பெரும் சேவை.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – அவர் அனைவருக்கும் கருத்தூக்கம் அளித்து வருகிறார்.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும், உங்கள் தந்தையாருக்கும், உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கன்னிகா – மிக்க நன்றி சார்.
நண்பர்களே,
இப்படி ஏகப்பட்ட இளைய நண்பர்கள் இருக்கிறார்கள், கடினமான சூழ்நிலைகளிலும்கூட, அவர்களின் தன்னம்பிக்கை, அவர்களுடைய வெற்றிக்கதைகள், இவையெல்லாம் நமக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன. இயன்ற அளவு இளைய நண்பர்களோடு உரையாட வேண்டும் என்ற ஆவல் என்னை உந்தியது; ஆனால் காலம் குறைவாக இருப்பதால் இயலவில்லை. நீங்கள் உங்களைப் பற்றிய விஷயங்களை, உங்கள் எழுத்துக்களிலேயே வடித்து, நாட்டுக்கு ஊக்கமளியுங்கள், உங்களைப் பற்றிய உங்கள் கதையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று என் இளைய நெஞ்சங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, ஏழு கடல்கள் தாண்டி, பாரத நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலே இருக்கும் சிறிய நாட்டின் பெயர் சூரினாம். இந்தியாவுக்கும் சூரினாமுக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 100 ஆண்டுகளை விடவும் வெகு முன்பாக, நம் நாட்டவர் அங்கே சென்றார்கள், அதைத் தங்கள் நாடாக ஆக்கிக் கொண்டார்கள். இன்று 4ஆவது 5ஆவது தலைமுறையாக அங்கே வசிக்கிறார்கள். இன்றைய நிலையில் சூரினாமில் நான்கில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அங்கே இருக்கும் பேசப்படும் மொழிகளில் ஒன்றின் பெயர் சர்நாமீ என்பதை நீங்கள் அறிவீர்களா? இது போஜ்புரியின் ஒரு வழக்குமொழி. இந்தக் கலாச்சாரத் தொடர்புகள் இந்தியர்களான நமக்கு பெரும் பெருமிதத்தைக் கொடுக்கிறது.
உள்ளபடியே, ஸ்ரீ சந்திரிகா ப்ரஸாத் சந்தோகீ என்பவர் சூரிநாம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் இந்தியாவின் நண்பர் என்பதோடு, 2018ஆம் ஆண்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கான நாடாளுமன்ற மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டுமிருக்கிறார். ஸ்ரீ சந்திரிகா பிரஸாத் சந்தோகீ அவர்கள் வேத மந்திரங்கள் முழங்க சபதமேற்றுக் கொண்டார், சம்ஸ்க்ருதத்தில் பேசினார். அவர் வேதங்களை மேற்கோள் காட்டி, ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்பதோடு கூடவே, தனது சபதமேற்பை நிறைவு செய்தார். தனது கரங்களில் வேதத்தை வைத்துக் கொண்டு அவர், நான், சந்திரிகா பிரஸாத் சந்தோகீ என்று தொடங்கி மேலே என்ன சொன்னார் தெரியுமா? அவர் ஒரு வேத மந்திரத்தை உச்சரித்தார்.
ஓம் அக்நே வ்ரதபதே வ்ரதம் சரிஷ்யாமி தச்சகேயம் தன்மேராத்யதாம். இதமஹம்ந்ருதாத் சத்யமுபைமி.
अग्ने-व्रतपते व्रतं चरिष्यामि, तच्छकेयं तन्मे राध्यताम।इदं अहं अनृतात् सत्यम् उपैमि।।
அதாவது, ஹே அக்நே, சங்கல்பத்தின் தேவனே, நான் ஒரு உறுதி மேற்கொள்கிறேன். இதை செயல்படுத்த எனக்குத் தேவையான சக்தியையும், திறமையையும் அளியுங்கள். பொய்மையிலிருந்து நான் விலகி இருக்கவும், வாய்மையை நோக்கி என் பயணம் தொடரவும் எனக்கு ஆசிகளை நல்குங்கள் என்பதே இதன் பொருள். உண்மையிலேயே இது நம்மனைவருக்கும் கௌரவத்தை அளிக்கவல்ல ஒரு விஷயம்.
நான் ஸ்ரீ சந்திரிகா ப்ரஸாத் சந்தோகீ அவர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவருடைய நாட்டுப்பணி மிகச் சிறப்பாக நடந்தேற 130 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என்ற முறையில் பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இது பருவமழைக்காலமும் கூட. கடந்த முறை நான் உங்களிடம் என்ன கூறினேன்! பருவமழைக்காலத்தில் மாசு காரணமாகவும், அவற்றிலிருந்து பெருகக்கூடிய நோய்களால் அபாயம் இருக்கிறது, மருத்துவமனைகளில் கூட்டம் பெருகலாம் என்பதால், நீங்கள் தூய்மையின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத கஷாயம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வாருங்கள். கொரோனா பெருந்தொற்று நிலவும் இந்த வேளையில், நாம், பிற நோய்களிலிருந்து விலகி இருப்போம். நாம் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நாம் நம்மை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
நண்பர்களே, மழைக்காலத்தில் நாட்டின் ஒரு பெரிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. பிஹார், அஸாம் போன்ற மாநிலங்களில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கணிசமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி இருக்கிறது, ஒரு புறம் கொரோனா என்றால் மறுபுறமோ இன்னொரு சவால் என்ற நிலையில் அனைத்து அரசுகளும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் குழுக்கள், மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் பேரிடரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அனைத்து வகைகளிலும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஆதரவாக நாடு ஒன்று திரண்டிருக்கிறது.
நண்பர்களே, அடுத்த முறை நாம் மனதின் குரலில் சந்திக்கும் வேளையில், அதற்கு முன்பாக, ஆகஸ்ட் மாதம் 15 வந்து விடும். இந்த முறை ஆகஸ்ட் 15ம், வித்தியாசமான சூழ்நிலைகளில் இருக்கும் – கொரோனா என்ற பெருந்தொற்றுக்கு இடையே. என்னுடைய இளைய நண்பர்களிடமும், நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நாம் இந்த சுதந்திரத் திருநாளன்று பெருந்தொற்றிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற மனவுறுதியை மேற்கொள்வோம், தற்சார்பு பாரதம் உருவாக்குவோம், புதியன ஏதாவது ஒன்றைக் கற்போம், கற்பிப்போம், நமது கடமைகளை ஆற்றுவோம் என்ற உறுதிப்பாடுகளை நாம் மேற்கொள்வோம். பல மகத்தான மனிதர்களின் தவம்-தியாகத்தின் காரணமாகவே நாம் இன்று இந்த உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறோம். நாட்டை உருவாக்குவதில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்த அப்படிப்பட்ட மனிதகுல மாணிக்கங்களில் ஒருவர் தான் லோக்மான்ய திலகர். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி லோக்மான்ய திலகருடைய 100ஆவது நினைவு நாள் வருகிறது. லோகமான்ய திலகருடைய வாழ்க்கை நம்மனைவருக்கும் மிகவும் உத்வேகமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய ஒன்று. அது நமக்குக் கற்பிக்கும் பாடங்களும் படிப்பினைகளும் ஏராளம்.
அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, மீண்டும் ஏகப்பட்ட விஷயங்களைப் பரிமாறிக் கொள்வோம், புதியன கற்போம், அவற்றை அனைவரோடும் பகிர்வோம். நீங்கள் அனைவரும் உங்களை நன்றாகப் பராமரித்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். நாட்டுமக்கள் அனைவருக்கும், வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
Today, 26th July is a very special day for every Indian. #CourageInKargil pic.twitter.com/pSXmuddxjt
— PMO India (@PMOIndia) July 26, 2020
Thanks to the courage of our armed forces, India showed great strength in Kargil. #CourageInKargil pic.twitter.com/O0IWO7BThL
— PMO India (@PMOIndia) July 26, 2020
PM @narendramodi recalls his own visit to Kargil.
— PMO India (@PMOIndia) July 26, 2020
He also highlights how people have been talking about the courage of the Indian forces. #CourageInKargil #MannKiBaat pic.twitter.com/sS3SJ1iUe5
An appeal to every Indian... #CourageInKargil #MannKiBaat pic.twitter.com/SiLzgVEAw9
— PMO India (@PMOIndia) July 26, 2020
Recalling the noble thoughts of Bapu and the words of beloved Atal Ji during his Red Fort address in 1999. #MannKiBaat pic.twitter.com/7pZIvvDLcX
— PMO India (@PMOIndia) July 26, 2020
Let us do everything to further national unity. #MannKiBaat pic.twitter.com/dNFkvyoQp1
— PMO India (@PMOIndia) July 26, 2020
We have to keep fighting the COVID-19 global pandemic. #MannKiBaat pic.twitter.com/U7fIV45yk7
— PMO India (@PMOIndia) July 26, 2020
Social distancing.
— PMO India (@PMOIndia) July 26, 2020
Wearing masks.
The focus on these must continue. #MannKiBaat pic.twitter.com/vhzJOjGtCs
Sometimes, do you feel tired of wearing a mask?
— PMO India (@PMOIndia) July 26, 2020
When you do, think of our COVID warriors and their exemplary efforts. #MannKiBaat pic.twitter.com/u4oFgwfiGe
We are seeing how Madhubani masks are becoming increasingly popular across India. #MannKiBaat pic.twitter.com/iyXvJ3GQd4
— PMO India (@PMOIndia) July 26, 2020
Inspiring efforts in the Northeast. #MannKiBaat pic.twitter.com/9hTinMyZPp
— PMO India (@PMOIndia) July 26, 2020
Ladakh and Kutch are making commendable efforts towards building an Aatmanirbhar Bharat. #MannKiBaat pic.twitter.com/aC5HZj5cAg
— PMO India (@PMOIndia) July 26, 2020
Being vocal for local. #MannKiBaat pic.twitter.com/Auxy4GxZTK
— PMO India (@PMOIndia) July 26, 2020
India is changing.
— PMO India (@PMOIndia) July 26, 2020
There was a time, when whether in sports or other sectors, most people were either from big cities or from famous families or from well-known schools or colleges.
Now, it is very different: PM @narendramodi #MannKiBaat
Our youth are coming forward from villages, from small towns and from ordinary families. New heights of success are being scaled. These people are moving forward in the midst of crises, fostering new dreams. We see this in the results of the board exams too: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 26, 2020
Here is something interesting from Suriname... #MannKiBaat pic.twitter.com/NVcQJtiq4r
— PMO India (@PMOIndia) July 26, 2020
Our solidarity with all those affected by floods and heavy rainfall across India.
— PMO India (@PMOIndia) July 26, 2020
Centre, State Governments, local administrations, NDRF and social organisations are working to provide all possible assistance to those affected. #MannKiBaat pic.twitter.com/zwtXIpIfoi