Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல், 112ஆவது பகுதி – ஒலிபரப்பு நாள்: 28.07.2024


எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது.  ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது.   நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!

     நண்பர்களே, விளையாட்டு உலகத்தில் இந்த ஒலிம்பிக்ஸிலிருந்து சற்று விலகி, சில நாட்கள் முன்பாக கணித உலகிலும் கூட ஒரு ஒலிம்பிக் நடந்தேறியது.  சர்வதேச கணித ஒலிம்பியாட்.  இந்த ஒலிம்பியாடிலே பாரதத்தின் மாணவர்கள், மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள்.  இதிலே நமது அணியின் மிகச் சிறப்பான செயல்பாடு காரணமாக நான்கு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.  சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், மொத்த பதக்கப் பட்டியலில் நமது அணியானது, தலைசிறந்த ஐந்து அணிகளில் ஒன்றாக வெற்றிகரமாக இடத்தைப் பிடித்தது.  தேசத்தின் பெயருக்குப் பெருமை சேர்த்த இந்த மாணவர்களின் பெயர்கள் –

புணேயில் வசிக்கும் ஆதித்ய வேங்கட் கணேஷ், புணேவைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவரான சித்தார்த் சோப்டா, தில்லியின் அர்ஜுன் குப்தா, கிரேட்டர் நொய்டாவின் கனவ் தல்வார், மும்பையின் ருஷீல் மாதுர், தவிர குவாஹாடியைச் சேர்ந்த ஆனந்தோ பாதுரி ஆகியோர்.

     நண்பர்களே, இன்று மனதின் குரலில் நான் இந்த இளைய வெற்றியாளர்களுக்குச் சிறப்பு வரவேற்பு நல்கியிருக்கிறேன்.  இவர்கள் அனைவரும் இப்போது தொலைபேசியில் நம்மோடு இணைந்திருக்கிறார்கள்.  

பிரதமர் – வணக்கம் நண்பர்களே!  மனதின் குரலில் நண்பர்கள் உங்களனைவரையும் வரவேற்கிறேன்.  நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?

மாணவர்கள் – நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் சார்.

பிரதமர் – நல்லது நண்பர்களே, மனதின் குரல் வாயிலா, நாட்டுமக்கள் எல்லாரும் உங்க எல்லாரோட அனுபவங்களையும் கேட்க ரொம்ப ஆவலா இருக்காங்க.  நான் முதல்ல ஆதித்யா, சித்தார்த் இவங்க கிட்டேர்ந்து ஆரம்பிக்கறேன்.  நீங்க புணேயில இருக்கீங்க, இந்த ஒலிம்பியாட் காலகட்டத்தில நீங்க சந்திச்ச அனுபவங்களை எல்லார் கூடவும் பகிர்ந்துக்கங்களேன்.

ஆதித்யா – எனக்கு கணிதத்தில கொஞ்சம் ஆர்வம் உண்டுங்க.  6ஆம் வகுப்பு கணிதத்தை என் ஆசிரியர், ஓம்பிரகாஷ் சார் தான் கத்துக் குடுத்தாங்க, பிறகு அவங்க தான் கணிதம் மேல எனக்கு ஆர்வத்தை வளர்த்தாங்க, என்னால நல்லா கத்துக்க முடிஞ்சுது, எனக்கும் இந்த வாய்ப்பு கிடைச்சுது.

பிரதமர் – உங்க நண்பர் என்ன சொல்றாரு?

சித்தார்த் – சார் என் பேரு சித்தார்த், நான் புணேலேர்ந்து வரேன்.  நானும் கூட இப்ப 12ஆம் வகுப்புல தேர்ச்சி பெற்றிருக்கேன்.  ஐ.எம்.ஓவுல 2ஆவது முறையா பங்கேற்கறேன்.  எனக்கும் கணிதத்தில ஏகப்பட்ட ஆர்வம் இருக்கு.   நான் 6ஆம் வகுப்பு படிக்கறப்ப ஆதித்யாவைப் போலவே ஓம்பிரகாஷ் சார் எனக்கும் பயிற்சி குடுத்தாரு, ரொம்ப உதவி பண்ணாரு.  இப்ப நான் கல்லூரிக்காக சி.எம்.ஐ. போறேன், மேலும் கணிதம் மற்றும் சி.எஸ். படிச்சுக்கிட்டு இருக்கேன்.

பிரதமர் – நல்லது.  இப்ப அர்ஜுன் காந்திநகர்ல இருக்காருன்னும், கனவ் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவருன்னும்  சொன்னாங்க.  அர்ஜுன், கனவ், நாங்க இப்ப ஒலிம்பியாட் பத்தித் தான் பேசினோம், ஆனா நீங்க ரெண்டு பேரும் உங்க தயாரிப்புக்கள் தொடர்பான விஷயமோ, விசேஷமான அனுபவமோ இருந்தா, அதை சொன்னீங்கன்னா, நேயர்கள் ரொம்ப விரும்புவாங்க.

அர்ஜுன் – வணக்கம் சார், ஜய் ஹிந்த்!!  நான் தான் அர்ஜுன் பேசறேன்.

பிரதமர் – ஜய் ஹிந்த் அர்ஜுன்!!

அர்ஜுன் – நான் தில்லியில வசிக்கறேன், எங்கம்மா திருமதி ஆஷா குப்தா தில்லி பல்கலைக்கழகத்தில இயற்பியல் பேராசிரியரா இருக்காங்க, எங்கப்பா திரு. அமித் குப்தா பட்டயக் கணக்காளரா இருக்காரு.  நான் என் தேசத்தோட பிரதமரோட பேசிக்கிட்டு இருக்கேங்கறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சார்.  முதன்மையா என் வெற்றிக்கான முழுப் பாராட்டும் எங்கப்பா அம்மாவுக்குத் தான் போய் சேரும்.  குடும்பத்தில ஒருத்தர் இப்படிப்பட்ட ஒரு போட்டிக்குத் தயார் செய்யறாருங்கற போது, அது அந்த ஒருத்தர் மட்டுமே பங்கெடுக்கற போட்டி கிடையாது, மொத்த குடும்பமுமே இந்தப் போட்டியில பங்கெடுக்குது.  முக்கியமா எங்களோட வினாத்தாள்ல 3 கணிதச் சிக்கல்கள் முன்வைக்கப்படுது, அதுக்கு நாலரை மணிநேரத்தில விடை கண்டு பிடிச்சாகணும்.  அதாவது ஒரு சிக்கலுக்கு விடையை ஒண்ணரை மணி நேரத்தில கண்டுபிடிக்கணும்.  இதுக்கு நாங்க வீட்டில நிறைய உழைக்க வேண்டியிருக்கும்.  சிக்கல்களோட மணிக்கணக்கா போராட வேண்டியிருக்கும், சில சமயத்தில ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கே கூட ஒரு நாள், ஏன் 3 நாள் கூட ஆயிடும்.  இதுக்காகவே நாங்க இணையத்தில ப்ராப்ளம்களைத் தேடுவோம்.  கடந்த ஆண்டு தரப்பட்ட சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்வோம், இப்படியே, மெல்லமெல்ல முயற்சி செய்யும் போது எங்க அனுபவம் அதிகரிக்குது, எங்களுக்கு முக்கியமான தேவையான சிக்கலைத் தீர்க்கும் திறன், அது அதிகரிக்குது.  இது எங்களுக்கு கணிதத்தில மட்டுமில்லை, வாழ்க்கையிலயும் ஒவ்வொரு துறையிலயும் உதவிகரமா இருக்கு.

பிரதமர் – நல்லது, ஏதும் விசேஷமான அனுபவம் இருக்கான்னு கனவ் சொல்ல முடியுமா?  இந்தத் தயாரிப்புகள் எல்லாத்திலயும் ஏதும் சிறப்பா, நம்ம இளைஞர்களுக்கு சுவாரசியமான ஏதாவது உண்டா?

கனவ் தல்வார் – என் பேரு கனவ் தல்வார், நான் உத்தர பிரதேசத்தின் க்ரேட்டர் நோய்டாவில வசிக்கறேன், 11ஆம் வகுப்பு படிக்கறேன்.  கணிதம் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடம்.  சின்ன வயசிலேர்ந்தே எனக்கு கணக்குன்னா உசிரு.  எங்கப்பா எனக்கு நிறைய புதிர்களைத் தீர்க்க வைப்பாரு.  இது எனக்கு ஆர்வத்தை அதிகரிச்சுது.  நான் என் 7ஆம் வகுப்பிலேர்ந்தே ஒலிம்பியாடுக்கான தயாரிப்புகள்ல ஈடுபட ஆரம்பிச்சேன்.  இதில என் சகோதரியோட பங்களிப்பு ரொம்ப அதிகம்.  எங்கப்பா அம்மாவும் கூட எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.  இந்த ஒலிம்பியாட் போட்டியை HBCSE நடத்தாறாங்க.  இது ஒரு ஐந்து கட்டச் செயல்முறை.  கடந்த ஆண்டு எங்க அணியில நான் இருந்தேன், ரொம்ப நெருங்கிட்டேன், ஆனா கிடைக்காம போனது ரொம்ப வருத்தமா இருந்திச்சு.  அப்ப எங்கப்பா அம்மா ஒண்ணு சொன்னாங்க, ஒண்ணு நாம ஜெயிக்கறோம், இல்லை கத்துக்கறோம்னு.   பயணம் ரொம்ப முக்கியமானதே தவிர, வெற்றிதோல்வி இல்லைன்னாங்க.  நான் என்ன சொல்ல வர்றேன்னா, நாம செய்யறதை நாம விரும்பி செய்யணும், அதே போல நாம விரும்பறதை நாம செய்யணும்.  நாம பயணிக்கறோம்ங்கறது தான் முக்கியமே தவிர, வெற்றி ஒன்று மட்டுமே முக்கியம் என்பதில்லை.  நாம ஒரு விஷயத்தை நேசிச்சோம்னா, நமக்கு வெற்றி கண்டிப்பா கிடைக்கும்.  பயணத்தை ரசிக்கணும்.

பிரதமர் – சரி கனவ், நீங்க கணிதத்திலயும் ஆர்வத்தோட இருக்கீங்க, நீங்க பேசறதைப் பார்த்தா உங்களுக்கு இலக்கியத்திலயும் ஆர்வம் இருக்கா மாதிரி இருக்கே.

கனவ் தல்வார் – ஆமாம் சார்!!  என் சின்ன வயசுல நான் பேச்சுப் போட்டி, விவாதங்கள், இதில எல்லாம் நிறைய பங்கெடுப்பேன்.

பிரதமர் – நல்லது, ஆனந்தோ, நீங்க இப்ப குவஹாட்டியில இருக்கீங்க, உங்க நண்பரான ருஷீல் அவரு மும்பையில இருக்காரு.  உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் என்ன கேட்க விரும்பறேன்னா, நான் பரீக்ஷா பே சர்ச்சா – தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சில பங்கெடுக்கறேன், இதைத் தவிர வேற நிகழ்ச்சிகள்லயும் மாணவர்களோட உரையாடறேன்.  நிறைய மாணவர்களுக்கு கணிதம்னு பேரைக் கேட்டாலே உதறல் ஏற்படுதே, ஆனா உங்க ரெண்டு பேருக்கும் கணிதத்தோட எப்படி நட்பு ஏற்பட்டிச்சு?

ருஷீல் மாதுர் – சார், நான் ருஷீல் மாதுர் பேசறேன்.  சின்ன வயசுல, முத முறையா கூட்டல் கத்துக் குடுக்கறப்ப, கேரி ஃபார்வர்ட் புரிய வைப்பாங்க.  ஆனா இந்த கேரி ஃபார்வர்ட் ஏன் செய்யணும்னு சொல்ல மாட்டாங்க.  நாம கூட்டு வட்டி பத்தி படிக்கும் போது, இந்தக் கூட்டு வட்டிக்கான ஃபார்முலா எங்கிருந்து வந்திச்சுன்னு நாம யாரும் கேட்க மாட்டோம்.  என்னைப் பொறுத்த மட்டில கணிதம்ங்கறது சிந்திக்கற, சிக்கல்களைத் தீர்க்கற ஒரு கலையே தான்.  அதனால நாம கணிதத்தில ஒரு புது வினாவை, அதாவது, இதை நாம ஏன் செய்யறோம்ங்கறதை இணைக்கணும்.  இப்படி ஏன் ஆகுது?  அப்ப, கணிதத்தில அதிக ஆர்வம் ஏற்பட வாய்ப்பிருக்கு.  ஏன்னா, எந்த ஒரு விஷயத்தையும் நம்மால புரிஞ்சுக்க முடியலைன்னா, நமக்கு பயம் ஏற்படுறது இயல்பு தானே!!  மேலும் எனக்கு என்ன தோணுதுன்னா, நாம எல்லாரும் கணிதம் ஒரு லாஜிக்கான படிப்புன்னு நினைச்சுக்கறோம்.  ஆனா இதைத் தாண்டி கணிதத்தில நிறைய படைப்புத் திறனும் ரொம்ப அவசியமா தேவைப்படும்.  ஏன்னா படைப்பாற்றல் இருந்தாத்தான் நம்மால out of the box solutions – வழக்கத்துக்கு மாறான புதுமையான தீர்வுகளைச் சிந்திக்க முடியும், இது ஒலிம்பியாட்ல ரொம்ப பயனுடையதா இருக்கும்.  ஆகையால தான் கணிதத்தில ஆர்வத்தை அதிகரிக்கறதுல, கணித ஒலிம்பியாடுக்கு ரொம்ப முக்கியமான சம்பந்தம் இருக்கு.

பிரதமர் – ஆனந்தோ, நீங்க ஏதும் சொல்ல விரும்பறீங்களா?

ஆனந்தோ பாதுரி – வணக்கம் பிரதமர் அவர்களே!!  நான் குவஹாட்டிலேர்ந்து ஆனந்தோ பாதுரி பேசறேன்.  நான் இப்பத் தான் 12ஆம் வகுப்பு பாஸ் செஞ்சிருக்கேன்.  இங்க இருக்கற உள்ளூர் ஒலிம்பியாட்ல நான் 6ஆவது, 7ஆவதுல பங்கெடுத்தேன்.  அதிலேர்ந்து ஆர்வம் அதிகமாயிருச்சு, இது என்னோட ரெண்டாவது ஐ.எம்.ஓ.  ரெண்டு IMOவும் நல்லாவே இருந்திச்சு.  ருஷீல் சொல்றதுல எனக்கு முழுச் சம்மதம்.  மேலும் நான் என்ன சொல்ல விரும்பறேன்னா, யாருக்கு கணிதம்னா பயமோ, அவங்களுக்கு பொறுமை ரொம்ப அவசியம்.  ஏன்னா நமக்கு கணக்கு எப்படி சொல்லிக் குடுக்கப்படுதுன்னா, ஒரு ஃபார்முலாவை குடுத்து அதை நெட்ரு பண்ண வைப்பாங்க, பிறகு அந்த ஃபார்முலாலேர்ந்து 100 கேள்வியை படிக்க வைப்பாங்க.  ஆனா, நீங்க ஃபார்முலாவை புரிஞ்சுக்கறீங்களா இல்லையான்னு யாருக்கும் கவலை இல்லை.  ஃபார்முலாவை நெட்ரு பண்ணிட்டுப் போன பிறகு தேர்வுல ஃபார்முலா மறந்து போச்சுன்னா என்ன செய்ய?   அதனால தான் சொல்றேன், ஃபார்முலாவை புரிஞ்சுக்குங்க.  ருஷீல் சொல்றா மாதிரி, பொறுமையா அதை புரிஞ்சுக்குங்க.  ஃபார்முலாவை சரியா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, 100 வினாக்களை தீர்க்க வேண்டியதே இல்லை.  ஒண்ணுரெண்டு வினாக்களே போதுமானது, கணிதம் ஒண்ணும் பயப்படற விஷயமே இல்லை. 

பிரதமர் – ஆதித்யா, சித்தார்த்.  நீங்க ஆரம்பத்தில பேசினப்ப சரியா உங்ககூட பேச முடியலை, இப்ப இவங்க எல்லார் சொல்றதையும் கேட்ட பிறகு, உங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோணுதா?  உங்க அனுபவங்களை சிறப்பான வகையில பகிர விரும்பறீங்களா?

சித்தார்த் – மத்த நாடுகளைச் சேர்ந்தவங்க பலரோட கலந்து பேசியிருக்கேன், நிறைய கலாச்சாரங்கள், நிறைய விஷயம் நல்லா இருந்திச்சு, மத்த மாணவர்களோட தொடர்பு கொண்டு, புரிதலை ஏற்படுத்தறது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் புகழ்மிக்க பல கணிதவியலார்களும் இருந்தாங்க. 

பிரதமர் – சரி ஆதித்யா.

ஆதித்யா – ரொம்ப நல்ல அனுபவமா இருந்திச்சு, எங்களை எல்லாம் அவங்க Bath cityல சுத்திக் காமிச்சாங்க, ரொம்ப நல்லநல்ல காட்சிகளைப் பார்த்தோம், பூங்காக்களுக்குக் கூட்டிக்கிட்டு போனாங்க, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கும் கூட்டிக்கிட்டு போனாங்க.  ரொம்ப நல்ல அனுபவமா இருந்திச்சு.

பிரதமர் – சரி நண்பர்களே, உங்ககூட பேசறது எனக்கு ரொம்பவே நல்லா இருந்திச்சு.  உங்க எல்லாருக்கும் என்னோட பலப்பல நல்வாழ்த்துக்கள்.  இந்த மாதிரியான போட்டிகள்னா அதுக்கு நிறைய கருத்தூன்றிய செயல்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும், மூளையை கசக்கிப் பிழிய வேண்டியிருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட சில சமயம் எரிச்சலா இருக்கும்.  என்னடா இது, இவன் எப்பப்பாரு கூட்டல் கழித்தல்னே காலத்தைக் கடத்தறானேன்னு.  ஆனா என் தரப்பிலேர்ந்து உங்க எல்லாருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நீங்க தேசத்துக்குப் பெருமை சேர்த்திருக்கீங்க, நன்றி நண்பர்களே!!

மாணவர்கள் – நன்றி சார், தேங்க்யூ.

பிரதமர் – தேங்க்யூ,

மாணவர்கள் – தேங்க்யூ சார், ஜய் ஹிந்த்!!

பிரதமர் – ஜய் ஹிந்த்! ஜய் ஹிந்த்!!

 

மாணவர்களாகிய உங்களனைவரோடும் உரையாடியது மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது.  மனதின் குரலில் இணைந்தமைக்கு நான் உங்களனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கணிதத்தின் இந்த இளைய ஜாம்பவான்கள் கூறுவதைக் கேட்ட பிறகு, கணிதத்தை ரசிக்கவும் அனுபவிக்கவும் ஒரு உத்வேகம் மற்ற இளைஞர்களுக்கு உண்டாகும் என்று நான் நம்புகிறேன்.

 

     எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இப்போது நான் கூறவிருக்கும் விஷயத்தைக் கேட்டு பாரதவாசிகள் அனைவரின் தலைகளும், பெருமிதம் பொங்க நிமிர்ந்து நோக்கும்.  ஆனால் அதற்கு முன்பாக அனைவரிடமும் ஒரு வினாவை முன்வைக்க நான் விரும்புகிறேன்.   நீங்கள் சராயிதேவு மைதாம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா?  கேள்விப்பட்டதில்லை என்றால், இனி நீங்கள் இந்தப் பெயரை மீண்டும்மீண்டும் கேட்பீர்கள், பெரும் உற்சாகத்தோடு மற்றவர்களுக்கும் இதைப் பற்றிச் சொல்வீர்கள்.  அசாமின் சராயிதேவு மைதாம், யுனெஸ்கோ உலக மரபுச் சின்ன இடங்கள் வரிசையில் இடம் பெற இருக்கிறது.  இந்தப் பட்டியலில் பாரதத்தின் இது 43ஆவது இடமாகும்.   ஆனால் வடகிழக்குப் பகுதியைப் பொறுத்த மட்டில், இதுவே முதல் இடமாகும். 

 

     நண்பர்களே, இந்த சராயிதேவு மைதாம் என்றால் என்ன, இதிலே அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்ற வினா உங்கள் உள்ளத்தில் எழலாம்.  சராயிதேவு என்பதன் பொருள், மலைகளில் இருக்கும் பிரகாசமான நகரம் என்பதே.  இது அஹோம் அரசப் பரம்பரையின் முதல் தலைநகரமாக இருந்தது.  அஹோம் ராஜவம்சத்தவர்கள், தங்கள் முன்னோர்களின் பூதவுடல்களையும், அவர்களுடைய விலைமதிப்புமிக்க பொருட்களையும் பாரம்பரியமான முறையிலே மைதாமிலே வைத்தார்கள்.  மைதாம் என்பது சிறப்பான பெரிய மேடான ஒரு அமைப்பு, இதன் மேற்பரப்பில் மண்ணால் மூடி வைக்கப்பட்டிருக்கும், அடிப்பகுதியில் ஒன்று அல்லது மேற்பட்ட அறைகள் இருக்கும்.   இந்த மைதாமானது, அஹோம் சாம்ராஜ்ஜியத்தின் காலஞ்சென்ற அரசர்கள் மற்றும் பிரபலஸ்தர்கள் மத்தியில் சிரத்தையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.   தங்களுடைய முன்னோர்களிடத்தில் மரியாதையை வெளிப்படுத்தும் இந்த வழிமுறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.  இந்த இடத்திலே சமூக அளவிலான வழிபாடுகளும் நடந்தப்படுகின்றன. 

 

     நண்பர்களே, அஹோம் சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய வேறு பல தகவல்கள் உங்களை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைக்கும்.   13ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட இந்த சாம்ராஜ்ஜியம், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீடித்தது.  இத்தனை நீண்ட காலகட்டம் வரை இந்த சாம்ராஜ்ஜியம் நீடித்தது என்பது மிகப்பெரிய விஷயம்.  அஹோம் சாம்ராஜ்ஜியத்தின் சித்தாந்தமும், நம்பிக்கைகளும் மிகவும் பலமானவையாக இருந்ததால் ஒருவேளை இந்த ராஜவம்ஸம் இத்தனை ஆண்டுக்காலமாக நீடித்திருக்க முடிந்திருக்கலாம்.  இதே ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதியன்று, அசாத்தியமான சாகஸம், வீரம் ஆகியவற்றின் சின்னமான மகத்தான அஹோம் வீரரான லசித் போர்ஃபுகனுடைய மிகப்பெரிய உருவச்சிலையைத் திறந்து வைக்கும் பெரும்பேறானது எனக்குக் கிடைத்தது என் நினைவில் இருக்கிறது.  இந்த நிகழ்ச்சியின் போது, அஹோம் சமூகத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் போது எனக்கு வித்தியாசமான ஒரு அனுபவம் உண்டானது.  லசித் மைதாமிலே அஹோம் சமூகத்தின் முன்னோர்களுக்கு மரியாதை அளிக்கும் பாக்கியம் கிடைப்பது எனக்கு மிகப்பெரிய விஷயம்.  இப்போது சராயிதேவு மைதாமினை உலக மரபுச் சின்ன இடங்களில் ஒன்றாக ஆக்குவதன் பொருள் என்னவென்றால், இங்கே மேலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.  நீங்களும் வருங்காலத்தில் உங்களுடைய பயணத் திட்டங்களில் இந்த இடத்தையும் கண்டிப்பாக இணைத்துக் கொள்ளுங்கள். 

 

     நண்பர்களே, தன்னுடைய கலாச்சாரத்தின் மீது பெருமிதம் கொள்ளும் தேசத்தால் மட்டுமே முன்னேற முடியும்.  பாரதத்திலும் கூட இதுபோன்ற பல முயற்சிகள் நடந்து வருகின்றன.  இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் ப்ராஜக்ட் பரி.  பரி மண்ணை சுவர்க்கமாக ஆக்கக் கூடியது.  பரி அதாவது Public Art of India.  இந்தத் திட்டமான பரி, பொதுக்கலையை வெகுஜனங்களுக்குப் பிரியமானதாக ஆக்க, வளர்ந்துவரும் கலைஞர்களை ஒரே மேடையில் நிறுத்துவதற்கான ஒரு பெரிய ஊடகமாக ஆகி வருகிறது.   நீங்களே கூட கவனித்திருக்கலாம், சாலையோரங்களில், சுவர்களின் மீது, சுரங்கப் பாதைகளில் மிக அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.  இந்த ஓவியங்கள், இந்தக் கலைப்படைப்புகளை பரியோடு தொடர்புடைய இந்தக் கலைஞர்கள் தான் உருவாக்குகிறார்கள்.   இதன் காரணமாக நமது பொதுவிடங்களின் அழகு அதிகரிக்கிறது, அதே வேளையில் நமது கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதிலும் உதவிகரமாக இருக்கிறது.  எடுத்துக்காட்டாக, தில்லியின் பாரத் மண்டபத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்.   இங்கே தேசமெங்கிலுமிருந்தும் அற்புதமான கலைப்படைப்புகளை நீங்கள் பார்க்கலாம்.  தில்லியின் சில சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றிலும் கூட நீங்கள் அழகான பொதுக்கலைப்படைப்புக்களைப் பார்க்கலாம்.  பொதுமக்கள் கலை தொடர்பாக மேலும் பணியாற்ற, நான் கலை மற்றும் கலாச்சார பிரியர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.  இவை நம்மிடத்திலே நமது வேர்களின் மீது சுகமான பெருமைஉணர்வை ஏற்படுத்தும்.

 

     எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் இப்போது வண்ணங்களைப் பற்றிப் பேசலாம்.  இவை எப்படிப்பட்ட வண்ணங்கள்?   ஹரியாணாவின் ரோஹ்தக் மாவட்டத்தின் 250க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் வளங்களென்ற வண்ணங்களை நிரப்பியவை.  கைவினைப் பொருள் தயாரித்தலோடு தொடர்புடைய பெண்கள் முதலில் சின்னச்சின்ன கடைகள் மற்றும் சிறிய வேலைகளைச் செய்து வந்தார்கள்.  ஆனால் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் அவசியம் இருக்கும்.   ஆகையால் இவர்கள் உன்னதி சுயவுதவிக் குழுவோடு தங்களை இணைத்துக் கொள்ள முடிவெடுத்தார்கள், இணைத்துக் கொண்டு, ப்ளாக் ப்ரிண்டிங் மற்றும் சாயமிடலில் பயிற்சி பெற்றார்கள்.  துணிகளில் வண்ணங்களின் ஜாலம் செய்யும் இந்தப் பெண்கள் இன்று இலட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.  இவர்கள் தயாரித்த படுக்கை விரிப்பு, புடவைகள், துப்பட்டாக்கள் ஆகியவற்றுக்குச் சந்தையில் பெரும் தேவை இருக்கிறது. 

 

     நண்பர்களே, ரோஹ்தக்கின் இந்தப் பெண்களைப் போலவே பல்வேறு பாகங்களில் கைவினைஞர்கள், நெசவினை வெகுஜனங்களுக்கு விருப்பமானதாக ஆக்குவதில் இணைந்திருக்கிறார்கள்.  அது ஒடிஷாவின் சம்பல்புரி புடவைகளாகட்டும், மத்திய பிரதேசத்தின் மாஹேஷ்வரி புடவைகளாகட்டும், மஹாராஷ்டிரத்தின் பைட்டாணீ அல்லது விதர்ப்பத்தின் ஹேண்ட் ப்ளாக் ப்ரிண்டுகளாகட்டும், ஹிமாச்சலத்தின் பூட்டிகோ கம்பளிப் போர்வை, கம்பளி ஆடைகள் அல்லது ஜம்மு கஷ்மீரத்தின் கனி மேற்போர்வை ஆகட்டும்.   தேசத்தின் அனைத்து இடங்களிலும் நெசவு புரியும் வேலை பரந்திருக்கிறது.  சில நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று தேசிய கைத்தறி தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.   இப்போதெல்லாம், கைத்தறிப் பொருட்கள் மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருப்பதைக் காணும் போது,  இது மிகவும் பலமானதாக, ஆழமானதாக இருக்கிறது.  இப்போது பல தனியார் நிறுவனங்களும் கூட செயற்கை நுண்ணறிவு மூலம் கைத்தறி உற்பத்தி மற்றும் நீடித்த பாணிக்கு ஊக்கமளித்து வருகின்றன.  கோஷா AI, ஹேண்ட்லூம் இண்டியா, டி-ஜன்க், நோவாடேக்ஸ், ப்ரும்மபுத்ரா ஃபேபிள்ஸ் போன்ற பல ஸ்டார்ட் அப்புகளும் கூட கைத்தறிப் பொருட்களை வெகுஜனப்பிரியமானவையாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கின்றன.   பலர் தங்களிடங்களில் இப்படிப்பட்ட உள்ளூர் பொருட்களை மேலும் பிரபலமானவையாக ஆக்குவதில் முனைந்திருக்கிறார்கள் என்ற தகவல் பிடித்த விஷயமாக இருக்கிறது.  நீங்களும் கூட ஹேஷ்டேக் மை ப்ராடக்ட் மை ப்ரைட் என்ற பெயரில் சமூக ஊடகத்தில் இப்படிப்பட்ட உள்ளூர் பொருட்கள் பற்றி தரவேற்றம் செய்யுங்கள்.   உங்களுடைய இந்த முயற்சி, பலரின் வாழ்க்கையையே கூட மாற்ற வல்லது. 

 

     நண்பர்களே, கைத்தறியோடு கூடவே நான் காதி பற்றியும் பேச விரும்புகிறேன்.  உங்களில் பலர் கதராடைகளை முன்பு பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள், ஆனால் இப்போதெல்லாம் மிகப் பெருமையோடு கதராடைகளை உடுத்தி வருவீர்கள்.  காதி கிராமோத்யோக் பவனத்தின் வியாபாரம் முதன்முறையாக ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.  சிந்தித்துப் பாருங்கள்!!  ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாய்!!  காதிப்பொருட்களின் விற்பனை எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது தெரியுமா?  400 சதவீதம்.  காதிப் பொருட்களின், கைத்தறி ஆடைகளின், இந்த வளர்ந்துவரும் விற்பனை, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பின் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி வருகிறது.  இந்தத் தொழிலோடு மிக அதிக அளவில் பெண்கள் இணைந்திருக்கிறார்கள் எனும் போது, மிகப்பெரிய ஆதாயமும் கூட அவர்களுக்குத் தானே ஏற்படுகிறது!!  நான் மீண்டும் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்களிடத்திலே வகைவகையான ஆடைகள் இருக்கலாம், நீங்கள் இதுவரை கதராடைகளை வாங்காமலும் கூட இருந்திருக்கலாம், ஆனால் இந்த ஆண்டு தொடங்குங்கள்.  ஆகஸ்ட் மாதம் வந்தே விட்டது, இது நாடு சுதந்திரம் அடைந்த மாதம், புரட்சிக்கான மாதம்.  கதராடைகளை வாங்க, இதைவிடச் சிறப்பான சந்தர்ப்பம் வேறு என்ன இருக்க முடியும்?

 

     என் மனம் நிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் நான் அடிக்கடி போதைப் பொருட்கள் சவாலைப் பற்றிப் பேசியிருக்கிறேன்.  தங்கள் வீட்டுப் பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்களோ என்ற கவலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கிறது.   ஆனால் அப்படி அடிமையாகிவிட்டவர்களின் உதவிக்காக, அரசாங்கம் ஒரு சிறப்பான மையத்தைத் திறந்திருக்கிறது, இதன் பெயர் மானஸ்.  போதைப்பொருட்களுக்கு எதிரான போரிலே இது மிகப்பெரிய முன்னெடுப்பு.  சில நாட்கள் முன்பாகத் தான் மானஸின் உதவி எண்ணும், இணைய முகப்பும் துவக்கப்பட்டன.  அரசாங்கம் ஒரு இலவச உதவி எண்ணான 1933 என்பதை அறிமுகப்படுத்தியிருக்கிறது.  இதோடு தொடர்பு கொண்டால் கண்டிப்பாகத் தேவையான ஆலோசனைகள் அளிக்கப்படும் அல்லது மறுவாழ்வோடு தொடர்புடைய தகவல்களைப் பெறலாம்.  யாரிடமாவது போதைப் பொருட்களோடு தொடர்புடைய வேறு தகவல்களும் இருந்தால், அவர்கள் இதே எண்ணோடு தொடர்பு கொண்டு Narcotics Control Bureau – போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்திடமும் தெரிவிக்கலாம்.  மானஸ் அமைப்பிடம் தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் இரகசியமானவையாக பாதுகாக்கப்படும்.  பாரதத்தைப் போதைப்பொருட்கள் இல்லாத நாடாக ஆக்குவதில் இணைந்திருக்கும் அனைவரிடத்திலும், அனைத்துக் குடும்பங்களிடத்தாரிடமும், அனைத்து அமைப்புக்களிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், மானஸ் உதவி எண்ணை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான். 

 

     எனதருமை நாட்டுமக்களே, நாளை உலகெங்கும் புலிகள் தினம் கொண்டாடப்படும்.  பாரதத்திலே புலிகள் என்பவை நமது கலாச்சாரத்தோடு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன.  நாமனைவரும் புலிகளோடு தொடர்புடைய கதைகள்-சம்பவங்களைக் கேட்டுக்கேட்டுத் தான் பெரியவர்களாகி இருக்கிறோம்.   எப்படி புலிகளுக்கு இசைவாக வாழ வேண்டும் என்பது, காடுகளுக்குப் பக்கத்திலிருக்கும் கிராமவாசிகளுக்கு நன்கு தெரியும்.  மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே எப்போதும் மோதலுக்கான சந்தர்ப்பமே வராத பல கிராமங்கள் நம்முடைய தேசத்திலே உண்டு.   ஆனால், இப்படிப்பட்ட மோதல் நிலை எங்கே வருகிறதோ, அங்கேயும் கூட புலிகளின் பாதுகாப்பிற்காக இதுவரை இல்லாத அளவுக்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.  மக்களின் பங்களிப்பின் மூலம் செய்யப்படும் இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் குல்ஹாடி பந்த் பஞ்சாயத்து – கோடாரிக்குத் தடை விதித்த பஞ்சாயத்து.  ராஜஸ்தானின் ரண்தம்போரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த குல்ஹாடி பந்த் பஞ்சாயத்து இயக்கம் மிகவும் சுவாரசியமானது.  காடுகளுக்குக் கோடாரிகளைக் கொண்டு செல்ல மாட்டோம், மரங்களை வெட்ட மாட்டோம் என்று உள்ளூர் சமுதாயங்கள், இந்த விஷயம் தொடர்பாக தாமே சபதமேற்றிருக்கிறார்கள்.   இந்த ஒரு முடிவு காரணமாக இங்கே இருக்கும் வனங்கள், மீண்டுமொரு முறை பசுமையானவையாக ஆகி வருகிறது, புலிகளுக்கும் சிறப்பான ஒரு சூழல் தயாராகி வருகிறது.

 

     நண்பர்களே, மஹாராஷ்டிரத்தின் தடோபா-அந்தரி புலிகள் காப்பிடமானது, புலிகளின் முக்கியமான இருப்பிடங்களில் ஒன்று.  இங்கிருக்கும் உள்ளூர் சமூகங்கள், குறிப்பாக கோண்ட் மற்றும் மானா பழங்குடியைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், சூழல் சுற்றுலாவை மிகுந்த வேகத்தோடு முன்னெடுத்துச் செல்கிறார்கள்.  இங்கே புலிகள் தழைக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் காடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   ஆந்திரப் பிரதேசத்தின் நல்லமலையில் வசிக்கும் செஞ்சு பழங்குடிகளின் முயற்சியும் உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும்.  இவர்கள் Tiger Trackers என்ற வகையிலே, காடுகளின் உயிரினங்களின் இயக்கங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்திருக்கிறார்கள்.  இது தவிர, இவர்கள் அந்தப் பகுதியில் சட்டவிரோதமான செயல்பாடுகளின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.  இதைப் போலவே உத்தரப் பிரதேசத்திலே பீலிபீத்தில் நடைபெறும் புலிகளின் நேசன் நிகழ்ச்சியும் பேசுபொருளாகி இருக்கிறது.   இதிலே உள்ளூர்வாசிகளுக்குப் புலிகளின் நேசன் என்ற வகையிலே பணிக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்தப் புலிகளின் நேசர்கள், புலிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் நடக்கா வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.  தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இதைப் போன்று பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  இங்கே நான் சில முயற்சிகளைப் பற்றி மட்டுமே கூறியிருக்கிறேன் என்றாலும், மக்களின் பங்கெடுப்பு புலிகளின் பாதுகாப்புக்கு உதவிகரமாக இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாகவே, பாரதத்தில் புலிகளின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் பெருகி வருகிறது.  உலகெங்கிலும் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீத எண்ணிக்கை நமது தேசத்திலே இருக்கிறது என்பது பெருமையும், சந்தோஷமும் அளிக்கும் விஷயம்.  சிந்தித்துப் பாருங்கள்!!  70 சதவீதம் புலிகள்!!  இதனால் தான் நமது தேசத்திலே பல்வேறு பாகங்களில் பல புலிகள் சரணாலயங்கள் இருக்கின்றன. 

 

     நண்பர்களே, புலிகளின் அதிகரிப்போடு கூடவே நமது தேசத்தின் காட்டுப்பகுதிகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.  இதிலும் கூட சமூகங்களின் முயற்சிகள் காரணமாக பெரும் வெற்றி கிட்டி வருகிறது.  கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில், ஒரு மரம் அன்னையில் பெயரில் நிகழ்ச்சி குறித்து நாம் பேசியிருந்தோம், இல்லையா?  தேசத்தின் பல்வேறு பாகங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இந்த இயக்கத்தோடு தொடர்ந்து இணைந்து வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  சில நாட்கள் முன்பாக, தூய்மைக்குப் பெயர் போன இந்தோரிலே, ஒரு அருமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இங்கே, ஒரு மரம் அன்னையின் பெயரில் நிகழ்ச்சியின்படி, ஒரே நாளில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டன.  தங்கள் அன்னையின் பெயரில் மரம் நடும் இந்த இயக்கத்தோடு நீங்களும் கண்டிப்பாக இணையுங்கள், சுயபுகைப்படம் ஒன்றை எடுத்து, அதை சமூக ஊடகத்தில் தரவேற்றமும் செய்யுங்கள்.  இந்த இயக்கத்தோடு இணையும் போது, உங்களுடைய தாய், பூமித்தாய், இருவருக்கும் விசேஷமான ஒன்றை நீங்கள் செய்ததைப் போல உணர்வீர்கள். 

 

     எனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தொலைவில் இல்லை.  இப்போது ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியோடு இணைந்த மேலும் ஒரு இயக்கம் இணைகிறது.  வீடுகள்தோறும் மூவண்ணக் கொடி இயக்கம்.  கடந்த சில ஆண்டுகளாகவே நாடெங்கிலும் இந்த வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி இயக்கமானது பெரும் உற்சாகத்தோடு நடந்தது.  ஏழையோ, பணக்காரரோ, சிறிய வீடோ, பகட்டான மாளிகையோ, அனைவரும் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டு, பெருமித உணர்வை அனுபவித்தார்கள்.  மூவண்ணக் கொடியோடு கூட சுயபுகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை சமூக ஊடகத்தில் தரவேற்றம் செய்வதிலே பேரார்வம் காணப்பட்டது.  ஒரு குடியிருப்புப் பகுதி அல்லது சுற்றுவட்டாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி பறக்கும் போது, சிறிது நேரத்திலேயே விடுபட்ட மற்ற வீடுகளிலும் காணத் தொடங்கி விடும்.  அதாவது வீடுகள்தோறும் மூவண்ணக் கொடி இயக்கமானது மூவண்ணக் கொடியின் பெருமையைக் கொண்டாடும் ஒரு தனித்தன்மை வாய்ந்த விழாவாக மாறிவிட்டது.  இது தொடர்பாக இப்போது பலவகையான நூதனங்களும் கூட நடந்து வருகின்றன.  ஆகஸ்ட் மாதம் வரவர, வீடுகளிலே, அலுவலகங்களிலே, வாகனங்களிலே, மூவண்ணக் கொடியைப் பதிக்க, பலவகையான பொருட்கள் வரத் தொடங்கிவிட்டன.  சிலரோ, மூவண்ணத்தைத் தங்கள் நண்பர்கள், அண்டை வீட்டார்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.  மூவண்ணக் கொடி தொடர்பாக உற்சாகம், கொண்டாட்ட உணர்வு ஆகியன நம்மை ஒருவரோடு ஒருவர் இணைக்கிறது. 

 

     நண்பர்களே, முன்பைப் போலவே இந்த ஆண்டும் கூட நீங்கள் harghartiranga.com இலே, மூவண்ணக் கொடியோடு கூடவே உங்களின் சுயபுகைப்படத்தைக் கண்டிப்பாக தரவேற்றம் செய்யுங்கள், இது தொடர்பாக நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.  ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு முன்பாக, நீங்கள் ஏராளமான கடிதங்களை, தகவல்களை அனுப்புவீர்கள்.  இந்த ஆண்டும் கூட, நீங்கள் உங்கள் ஆலோசனைகளை எனக்குத் தெரிவியுங்கள்.  நீங்கள் மைகவ் அல்லது நமோ செயலியிலும் கூட உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பலாம்.  நான் அதிகபட்ச ஆலோசனைகளை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உரையிலே தெரிவிக்க முயற்சி செய்கிறேன்.

 

     என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் உங்களோடு இதுகாறும் இணைந்திருந்தது மிகவும் உவப்பாக இருந்தது.  அடுத்த முறை மீண்டும் சந்திப்போம், தேசத்தின் புதிய சாதனைகளோடு, மக்களின் பங்கெடுப்பின் புதிய முயற்சிகளோடு, நீங்கள் மனதின் குரலுக்காக உங்கள் ஆலோசனைகளைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள்.  வரவிருக்கும் காலத்தில் பல திருவிழாக்கள் வரவிருக்கின்றன.  அனைத்துப் பண்டிகைகளுக்குமான ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் உங்கள் குடும்பத்தாரோடு இணைந்து பண்டிகைகளை ஆனந்தமாகக் கொண்டாடுங்கள்.  தேசத்திற்காக புதியதாக ஒன்றைச் செய்யத் தேவையான ஆற்றலைத் தொடர்ந்து உங்களிடம் வைத்திருங்கள்.  பலப்பல நன்றிகள், வணக்கம்.

****