எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.
என் குடும்பச் சொந்தங்களே, நவம்பர் மாதம் 26ஆம் தேதியான இன்றைய தினம், மேலும் ஒரு காரணத்திற்காகவும் மிகவும் மகத்துவம் மிக்கதாக இருக்கின்றது. 1949ஆம் ஆண்டில், இன்றைய நாளன்று தான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப் பேரவையானது பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 2015ஆம் ஆண்டிலே, நாம் பாபாசாகேப் ஆம்பேட்கரின் 125ஆவது பிறந்த நாளினைக் கொண்டாடிய வேளையிலே, ஒரு எண்ணம் தோன்றியது; அதாவது நவம்பர் மாதம் 26ஆம் தேதியை அரசியலமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாட வேண்டும் என்பதே அது. அப்போதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும், இன்றைய இந்த தினத்தை நாம் அரசியலமைப்புச்சட்ட தினம் என்ற வகையிலே கொண்டாடி வருகிறோம். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்ட தினத்திற்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாமனைவரும் இணைந்து, குடிமக்களின் கடமைகளுக்கு முதன்மை அளிக்கும் அதே வேளையிலே, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டினைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
நண்பர்களே, அரசியலமைப்புச்சட்டத்தின் உருவாக்கலில் ஈராண்டுகளும், 11 மாதங்களும், 18 நாட்களும் ஆகின என்பதை நாமனைவரும் நன்கறிவோம். ஸ்ரீ சச்சிதானந்த சின்ஹா அவர்கள் அரசியலமைப்புச் சட்டப் பேரவையில் வயதில் மிக மூத்த உறுப்பினராக இருந்தார். 60க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை ஆய்வு செய்து, நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டது. வரைவு தயாரான பிறகு, இதற்கு நிறைவான வடிவம் அளிக்கும் முன்பாக, அதிலே ஈராயிரத்திற்கும் மேற்பட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. 1950இலே அரசியலமைப்புச் சட்டம் அமல் செய்யப்பட்ட பிறகும், இதுவரை மொத்தம் 106 அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. காலம், சூழல், தேசத்தின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரசுகள், பல்வேறு காலகட்டங்களில் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டன. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான உரிமைகளைக் கட்டுப்படுத்தவே மேற்கொள்ளப்பட்டது. அதே வேளையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 44ஆவது சட்டத்திருத்தம் வாயிலாக, அவசரநிலையின் போது மேற்கொள்ளப்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்டன என்பது துரதிர்ஷ்டமான விஷயம்.
நண்பர்களே, அரசியலமைப்புச்சட்டப் பேரவையின் சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள், இவர்களில் 15 பேர் பெண்கள். இப்படிப்பட்ட ஒரு உறுப்பினர் தாம் ஹம்ஸா மெஹ்தா அவர்கள் என்பது உத்வேகமளிக்கும் விஷயம்; இவர் பெண்களின் உரிமைகளுக்கும், நியாயத்துக்குமான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார். அந்தக் காலகட்டத்தில், பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்டரீதியாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த வெகு சில நாடுகளில் பாரதமும் ஒன்று. தேசத்தின் நிர்மாணத்தில் அனைவரின் பங்களிப்பும் உறுதிப்படுத்தப்படும் போது, அனைவருக்குமான முன்னேற்றமும் ஏற்படும். அரசியலமைப்புச்சட்ட பிதாமகர்கள், மிகவும் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டது எனக்கு நிறைவை அளிக்கிறது. இந்த வழியை அடியொற்றி இன்று நாடாளுமன்றம், ”நாரீ சக்தி வந்தன் அதிநியம்:, அதாவது பெண்சக்திக்குப் பெருமை சேர்க்கும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. நமது ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டின் ஒரு எடுத்துக்காட்டு இது. மேலும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உள உறுதிப்பாட்டிற்கு உரமும், வேகமும் சேர்ப்பதில் மிகவும் உதவிகரமாக இது இருக்கும்.
எனது குடும்ப உறவுகளே, தேச நிர்மாணத்தின் தலைமைப் பொறுப்பை மக்களே ஏற்றுக் கொள்ளும் வேளையிலே, உலகின் எந்த ஒரு சக்தியாலும், அந்த தேசத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து விட முடியாது. பல மாற்றங்களுக்குத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பது என்றால், அது 140 கோடி நாட்டு மக்கள் தாம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதற்கான ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டு என்று சொன்னால், பண்டிகைக்காலமான இப்போது அதைப் பார்த்தோம். கடந்த மாதங்களில், மனதின் குரலில் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம், அவற்றை வாங்குவோம் என்பதில் அழுத்தமளித்திருந்தோம். கடந்த சில நாட்களுக்கு உள்ளாக, தீபாவளி, பையா தூஜ், சட் பூஜை போன்றவற்றின் போது, நாடெங்கிலும் நான்கு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் நடந்திருக்கிறது. இந்த வேளையில், பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் பரபரப்பான உற்சாகம் மக்களிடத்திலே காணக் கிடைத்தது. இப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் குழந்தைகளும் கூட கடைகளில் பொருட்களை வாங்கும் வேளையில், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா என்று பார்க்கத் தொடங்கி விட்டார்கள். இது மட்டுமல்ல, இணையவழி பொருட்களை வாங்குவோர் கூட பொருட்களை வாங்கும் போது, Country of Origin அதாவது, எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காண மறப்பதில்லை.
நண்பர்களே, தூய்மை பாரதம் இயக்கத்தின் வெற்றி எப்படி அதற்கே ஒரு ஊக்கமாக ஆகியிருக்கிறதோ, அதே போல, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தின் வெற்றி, வளர்ந்த பாரதம்-தன்னிறைவான பாரதத்திற்கான கதவுகளை அகலத் திறந்து கொண்டிருக்கிறது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இந்த இயக்கம், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திற்குமே பலம் சேர்க்கிறது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இது வளர்ச்சிக்கான உத்திரவாதம், இது தேசத்தின் சரிசமமான வளர்ச்சிக்கான உத்திரவாதம். இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் சமமான சந்தர்ப்பங்கள் வாய்க்கும். இதன் வாயிலாக, வட்டார உற்பத்திப் பொருட்களின் மதிப்புக்கூட்டலுக்கான பாதையும் பிறக்கிறது, ஒருவேளை உலகப் பொருளாதாரத்தில் ஏற்றம்-வீழ்ச்சி வருமானால், உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரம், நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் செய்கிறது.
நண்பர்களே, பாரதநாட்டு உற்பத்திப் பொருட்களிடத்தில் இருக்கும் இந்த உணர்வு, பண்டிகைகளோடு மட்டும் நின்று போய் விடக்கூடாது. அடுத்து திருமணக்காலம் தொடங்கியாகி விட்டது. சில வணிகச் சங்கங்களின் அனுமானம் என்னவென்றால், திருமணங்களின் இந்தக் காலத்தில் கிட்டத்தட்ட 5 இலட்சம் கோடி ரூபாய் வியாபாரத்திற்கான சாத்தியக்கூறு இருக்கிறதாம். திருமணங்களோடு தொடர்புடைய வாங்குதலிலும் கூட, நீங்கள் அனைவரும் பாரதநாட்டுப் பொருட்களுக்கே மகத்துவம் அளிக்க வேண்டும். மேலும், திருமணப் பேச்சு என்று வரும் போது, ஒரு விஷயம் நீண்டநெடுங்காலமாகவே என் மனதை அரித்துக் கொண்டு வந்தது, என் மனதின் இந்த வலியை நான் என் குடும்ப உறவுகளிடத்திலே தெரிவிக்கவில்லை என்றால் யாரிடம் சென்று தெரிவிக்க? நீங்களே சிந்தித்துப் பாருங்கள், இப்போதெல்லாம் சில குடும்பங்களில் அயல்நாடுகளுக்குச் சென்று திருமணம் செய்யும் ஒரு புதிய பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இது தேவையா என்று யோசியுங்கள். பாரதநாட்டு மண்ணில், பாரத நாட்டவருக்கு இடையே நாம் திருமணங்களைக் கொண்டாடினோம் என்றால், தேசத்தின் பணம், தேசத்திலேயே இருக்கும். தேசத்தின் மக்களுக்கு உங்களுடைய திருமணத்தில் ஏதாவது ஒரு சேவை செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும், சிறிய-எளிய ஏழைபாழைகள் கூட தங்கள் குழந்தைகளிடத்திலே உங்களுடைய திருமணத்தைப் பற்றிப் பேசுவார்கள். உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற நோக்கத்திற்கு மேலும் உங்களால் வலு சேர்க்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஏன் நாம் நமது நாட்டிலேயே நடத்திக் கொள்ளக்கூடாது? நீங்கள் விரும்பிய அமைப்பு ஒருவேளை இன்று இல்லாமல் இருக்கலாம் ஆனால், நாம் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்தால், தாமாகவே அமைப்புகள் மேம்பாடு அடையுமே. இது பெரிய செல்வந்தர்களின் குடும்பங்களோடு தொடர்புடைய விஷயம். என்னுடைய இந்த வலி, பெரியபெரிய குடும்பங்களைச் சென்று எட்டும் என்று நான் நம்புகிறேன்.
எனது குடும்பச் சொந்தங்களே, பண்டிகைகளின் இந்தப் பருவத்தில், மேலும் ஒரு பெரிய போக்கு காணக்கிடைக்கிறது. தீபாவளியை முன்னிட்டு, ரொக்கப்பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கக்கூடிய வழிமுறை மெல்லமெல்லமெல்ல இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்து குறைந்து வருவதை நாம் காண்கிறோம். அதாவது இப்போது மக்கள் அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். இதுவும் கூட மிகவும் உற்சாகமளிக்கும் விஷயமாகும். நீங்கள் மேலும் ஒரு வேலையைச் செய்யலாம். ஒரு மாதக்காலத்திற்கு, நான் யுபிஐ மூலமோ, ஏதோ ஒரு டிஜிட்டல் வழி மூலமாக மட்டுமே பணத்தை அளிப்பேன், ரொக்கமாக அளிக்க மாட்டேன் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். பாரதத்தின் டிஜிட்டல் புரட்சியின் வெற்றி தான் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு மாதம் ஆன பிறகு, நீங்கள் உங்களுடைய அனுபவங்கள், உங்கள் புகைப்படம் ஆகியவற்றைக் கண்டிப்பாக என்னோடு பகிருங்கள். நான் இப்போதே உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை அளித்து விடுகிறேன்.
எனது குடும்ப உறவுகளே, நமது இளைய நண்பர்கள் தேசத்திற்கு ஒரு பெரிய சந்தோஷமான சமாச்சாரத்தை அளித்திருக்கிறார்கள், இது நம்மனைவரையும் கௌரவத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயமாகும். புத்திக்கூர்மை, கருத்து, புதுமைக்கண்டுபிடிப்பு – இவையே இன்று பாரதநாட்டு இளைஞர்களின் அடையாளம் ஆகும். இதிலே தொழில்நுட்பத்தின் இணைவு காரணமாக அவர்களின் அறிவுசார் இயல்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது, இது உள்ளபடியே தேசத்தின் வல்லமைக்கு வளம் சேர்க்கும் மகத்துவமான முன்னேற்றமாகும். 2022ஆம் ஆண்டிலே, பாரத நாட்டவரின் காப்புரிமைக் கோரல்கள் 31 சதவீதத்திற்கும் மேற்பட்டு அதிகரிப்பினைக் கண்டிருக்கிறது என்பது உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். உலக அறிவுசார் சொத்து அமைப்பு, ஒரு மிகப்பெரிய சுவாரசியமான அறிக்கையை அளித்திருக்கிறது. இந்த அறிக்கையின்படி, காப்புரிமை கோரும் முதல் பத்து தேசங்கள் விஷயத்தில் கூட இப்படி எப்போதுமே நடைபெற்றது கிடையாது. இந்த அருமையான சாதனைக்காக நான் நமது இளைய நண்பர்களுக்குப் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசம் அனைத்துக் கட்டங்களிலும் உங்களுக்குத் துணை நிற்கிறது என்று இளைய நண்பர்களே, உங்களுக்கு நம்பிக்கை அளிக்க நான் விரும்புகிறேன். அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நிர்வாக மற்றும் சட்டரீதியான மேம்பாடுகளுக்குப் பிறகு, இன்று நமது இளைஞர்கள் புதியதோர் சக்தியோடு, பெரிய அளவில் புதுமைகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பத்தாண்டுகள் முன்பாக இருந்த புள்ளிவிவரங்களோடு ஒப்பீடு செய்து பார்க்கையில், இன்று, நமது காப்புரிமைகளுக்கு பத்து மடங்கு அதிக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காப்புரிமைகள் மூலம் தேசத்தின் அறிவுசார் சொத்து அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, இதனால் புதியபுதிய சந்தர்ப்பங்களுக்கான வாயிலும் திறக்கிறது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். இதுமட்டுமல்ல, இவை நமது ஸ்டார்ட் அப்புகளின் பலத்தையும், திறனையும் கூட மேம்படுத்துகின்றன. இன்று நமது பள்ளிக்கூடக் குழந்தைகளிடத்திலும் கூட நூதனம் படைக்கும் உணர்வுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. அடல் டிங்கரிங்க் லேப், அடல் புதுமைகள் படைக்கும் திட்டம், கல்லூரிகளில் இன்குபேஷன் மையங்கள், ஸ்டார்ட் அப் இண்டியா இயக்கம் போன்ற தொடர் முயற்சிகளின் விளைவுகள் நாட்டுமக்கள் முன்பாக இருக்கின்றது. இதுவும் கூட பாரதத்தின் இளைஞர் சக்தி, பாரதத்தின் நூதனம் படைக்கும் சக்தி ஆகியவற்றுக்கான பிரத்யட்சமான உதாரணங்கள். இதே உணர்வோடு மேலே நாம் பயணித்து வளர்ந்த பாரதம் என்ற நமது உறுதிப்பாட்டினை அடைந்தே தீருவோம்; ஆகையால் தான் நான் மீண்டும்மீண்டும் கூறுகிறேன், ஜய் ஜவான், ஜய் கிஸான், ஜய் விஞ்ஞான், ஜய் அனுசந்தான், அதாவது வாழ்க ஆய்வு.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, பாரத நாட்டிலே பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரளாகக் கூடும் திருவிழாக்கள் பற்றி சிலகாலம் முன்பாக மனதின் குரலில் விவாதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது ஒரு போட்டி பற்றிய எண்ணமும் எழுந்தது. மக்கள் திருவிழாக்களோடு தொடர்புடைய புகைப்படங்களை தரவேற்றம் செய்வார்கள் என்பதே அந்த எண்ணம். கலாச்சார அமைச்சகம் இது தொடர்பாக Mela Moments Contest, அதாவது திருவிழா கணங்கள் என்ற ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதிலே ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தார்கள், பலர் பரிசுகளையும் பெற்றார்கள் என்ற விஷயம் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கலாம். கோல்காத்தாவில் வசிக்கும் ராஜேஷ் தர் அவர்கள், சரக் மேளாவில் பலூன்கள் மற்றும் விளையாட்டுச் சாமான்களை விற்பனை செய்பவரின் அருமையான புகைப்படத்திற்காக பரிசினை வென்றார். இந்தத் திருவிழா ஊரகப்பகுதி வங்காளத்தில் மிகவும் பிரபலமானது. வாராணசியில் ஹோலியைக் காட்சிப்படுத்த அனுபம் சிங் அவர்கள் திருவிழாப் படங்களுக்கான விருதினைப் பெற்றார். அருண்குமார் நலிமேலா அவர்கள், குல்சாயி தசராவோடு தொடர்புடைய ஈர்ப்புடைய கோணத்தை வெளிப்படுத்தியமைக்கு விருதினைப் பெற்றார். இதே போல, பண்டர்புரின் பக்தியை வெளிப்படுத்திய புகைப்படம், மிகவும் அதிகமாக விரும்பப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக இருந்தது, இதை மஹாராஷ்டிரத்தின் ஒரு நபரான ஸ்ரீமான் ராகுல் அவர்கள் அனுப்பியிருந்தார். இந்தப் போட்டியில் பல படங்கள், திருவிழாக்களின் போது கிடைக்கும் வட்டாரத் தின்பண்டங்கள் தொடர்பாகவும் இருந்தது. இதிலே புரலியாவில் வசிக்கும் அலோக் அவிநாஷ் அவர்களின் படம் விருதினை வென்றது. இவர் ஒரு திருவிழாக்காலத்தில் வங்காளத்தின் ஊரகப்பகுதியின் உணவு பற்றிக் காட்டியிருந்தார். பிரணப் பஸாக் அவர்களின் படமும் விருதினைப் பெற்றது. இதிலே பகோரியா மஹோத்சவத்தின் போது பெண்கள் குல்ஃபியை சுவைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் அனுப்பப்பட்டிருந்தது. இதுவும் விருதினைப் பெற்றது. ரூமிலா அவர்கள் சத்திஸ்கட்டின் ஜக்தல்பூரின் ஒரு கிராமத்தில் நடைபெற்ற விழாவிலே, பஜியா தின்பண்டத்தைச் சுவைத்துக் கொண்டிருந்த பெண்களைப் படம்பிடித்து அனுப்பியிருந்தார், இதற்கும் பரிசு கிடைத்தது.
நண்பர்களே, மனதின் குரல் வாயிலாக இன்று ஒவ்வொரு கிராமத்தின், ஒவ்வொரு பள்ளியின், ஒவ்வொரு பஞ்சாயத்தின் முன்பாகவும் வைக்கப்படும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து இவை போன்ற போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்பது தான். இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் எந்த அளவுக்கு சக்தி இருக்கிறது என்றால், தொழில்நுட்பம் மற்றும் செல்பேசி ஆகியன வீடுதோறும் சென்றடைந்து விட்டன. உங்களுடைய உள்ளூர் திருவிழா அல்லது பொருள் ஆகட்டும், அவற்றை நீங்கள் உலக அளவுக்குக் கொண்டு செல்ல முடியும்.
நண்பர்களே, கிராமங்கள்தோறும் நடைபெறும் திருவிழாக்களைப் போல நமது நாட்டிலே பல்வேறு வகையான நடனங்கள் என்ற நமக்கே உரித்தான மரபு உள்ளது. ஜார்க்கண்ட், ஒடிஷா, வங்காளம் ஆகியவற்றின் பழங்குடியினத்தவரின் பகுதிகளில் ஒரு மிகவும் பிரபலமான நடனத்தின் பெயர் சஉ. நவம்பர் 15 முதல் நவம்பர் 17 வரை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வோடு ஸ்ரீநகரில் சஉ விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது அனைவரும் சஉ நடனத்தின் ஆனந்தத்தை அனுபவித்தார்கள். ஸ்ரீநகரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சஉ நடனத்தில் பயிற்சி அளிக்கப்பட ஒரு பட்டறைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைப் போலவே, சில வாரங்கள் முன்பாக, கடுவா மாவட்டத்தில் பஸோஹலி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இடம் ஜம்முவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த விழாவில் வட்டாரக் கலைகள், நாட்டுப்புற நடனம் மற்றும் பாரம்பரியமிக்க ராம்லீலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நண்பர்களே, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் அழகு சௌதி அரேபியா நாட்டிலும் கூட அனுபவிக்கப்பட்டு வருகிறது. இதே மாதம் தான் சவுதி அரேபியா நாட்டிலே சம்ஸ்கிருத உத்ஸவ், அதாவது சம்ஸ்கிருத திருவிழா என்ற பெயரில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மிகவும் வித்தியாசமானதாக இருந்தது ஏனென்றால், நிகழ்ச்சி முழுவதுமே சம்ஸ்கிருதத்திலேயே இருந்தது. உரையாடல், இசை, நடனம் என அனைத்துமே சம்ஸ்கிருதத்தில் அமைந்திருந்தது, இதிலே அங்கிருக்கும் வட்டார மக்கள் பங்கெடுத்ததையும் காண முடிந்தது.
என் குடும்பச் சொந்தங்களே, தூய்மை பாரதம் இப்போது நாடு முழுவதிலும் பிரியமான விஷயமாகி விட்டது, எனக்குப் பிடித்தமான விஷயம் தான் ஐயமில்லை, மேலும் இதோடு தொடர்புடைய செய்தி ஏதேனும் எனக்குக் கிடைத்தால், என்னுடைய மனது இயல்பாகவே அதன்பால் சென்று விடுகிறது. தூய்மை பாரதம் இயக்கமானது, தூய்மையாக இருத்தல்-வைத்திருத்தல், பொது இடங்களில் தூய்மை ஆகியவை தொடர்பாக மக்களின் எண்ணத்தில் மாற்றமேற்படுத்தி இருக்கிறது. இந்த முன்னெடுப்பு இன்று தேசிய உணர்வின் அடையாளமாக மாறி விட்டது, இது கோடிக்கணக்கான நாட்டுமக்களின் வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கியிருக்கிறது. இந்த இயக்கமானது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை, குறிப்பாக இளைஞர்களிடத்திலே சமூகப் பங்களிப்பிற்கான உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் போலவே மேலும் ஒரு மெச்சக்கூடிய முயற்சி சூரத்திலே காணக் கிடைக்கிறது. இளைஞர்களின் ஒரு அணியானது இங்கே ப்ராஜெக்ட் சூரத், அதாவது சூரத் திட்டத்தை தொடக்கியிருக்கிறது. தூய்மை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக சூரத் பகுதியை ஒரு மாதிரி-நகராக மாற்ற வேண்டும் என்பதே இதன் இலக்கு. சஃபாய் சண்டே, அதாவது தூய்மை ஞாயிறு என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சியில் சூரத்தின் இளைஞர்கள் முதலில் பொது இடங்களில், டூமாஸ் கடற்கரையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்கள். பிறகு இவர்கள் தாபி நதிக் கரைகளில் தூய்மைப்பணியில் மிக அர்ப்பணிப்போடு ஈடுபட்டார்கள், சில காலத்திலேயே இதோடு தொடர்புடைய நபர்களின் எண்ணிக்கை 50,000ற்கும் அதிகமானது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மக்கள் அளித்த ஆதரவு, குழுவினரின் மனங்களில் தன்னபிக்கையை அதிகப்படுத்தியது; இதன் பிறகு அவர்கள் குப்பைக் கூளங்களைச் சேகரிக்கும் பணியைத் தொடக்கினார்கள். இந்தக் குழுவானது, இலட்சக்கணக்கான கிலோ அளவுக்கு குப்பைகளை அகற்றியது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். கள அளவில் மேற்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட முயற்சி, மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது.
நண்பர்களே, குஜராத்திலிருந்தே மேலும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. சில வாரங்கள் முன்பாக, அம்பாஜியில் பாதர்வீ பூனம் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதிலே 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதன் மிகப்பெரிய சிறப்பம்ஸம் என்னவென்றால், இந்தத் திருவிழாவிற்கு வந்த அனைவரும் கப்பர் குன்றின் ஒரு பெரிய பகுதியில் தூய்மை இயக்கத்தை மேற்கொண்டார்கள். கோயில்களுக்கு அருகிலே இருக்கும் பகுதிகள் அனைத்தையும் தூய்மையாக வைத்திருக்க இந்த இயக்கம் மிகவும் கருத்தூக்கம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
நண்பர்களே, தூய்மை என்பது ஏதோ ஒரு நாள் கூத்து அல்ல, ஒரு வார இயக்கமல்ல, மாறாக இது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பணியாகும் என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன். நாம் நமக்கருகிலே இருக்கும் சிலரைப் பார்க்கிறோம், அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையுமே தூய்மையோடு தொடர்புடைய விஷயங்களில் ஈடுபடுத்துகிறார்கள். தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் வசிக்கும் லோகநாதன் அவர்கள் ஈடிணையில்லாதவர். சிறுவயதிலேயே ஏழைக் குழந்தைகளின் கிழிந்த உடைகளைப் பார்த்து இவர் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாவார். இதன் பிறகு இவர் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற உறுதி மேற்கொண்டார், தனது வருமானத்தின் ஒரு பகுதியில் இவர் தானம் செய்வதைத் தொடக்கினார். பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட வேளையில், லோகநாதன் அவர்கள் கழிப்பறைகளைக் கூட தூய்மை செய்து, ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார். கடந்த 25 ஆண்டுகளில் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு தனது இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு மீண்டும் ஒரு முறை என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நாடெங்கிலும் நடைபெறும் இவை போன்ற பல முயற்சிகள் நமக்கு உத்வேகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், புதியதாக நாமும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பேரார்வத்தையும் ஏற்படுத்துகின்றது.
எனது குடும்ப உறவுகளே, 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பு. நீரைப் பாதுகாப்பது, வாழ்க்கையைக் காப்பதற்கு ஈடான ஒன்று. நாம் சமூகத்தன்மையின் இந்த உணர்வோடு கூட ஒரு பணியைப் புரியும் போது, வெற்றியும் கிடைக்கிறது. இதற்கான ஒரு உதாரணம், தேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உருவாகி வரும் அமுத நீர்நிலைகளும் ஆகும். அமுதப் பெருவிழாக் காலத்தில் பாரதம் 65,000க்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளை உருவாக்கியிருக்கிறது, இது வரவிருக்கும் தலைமுறையினருக்குப் பேருதவியாக இருக்கும். இப்போது நமது பொறுப்பு என்னவென்றால், எங்கெல்லாம் அமுத நீர்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அதைத் தொடர்ந்து நாம் பராமரித்து வர வேண்டும், இவை நீர்பராமரிப்பின் முதன்மையான ஊற்றாக இருந்து வர வேண்டும்.
நண்பர்களே, நீர் பாதுகாப்பு பற்றிய இப்படிப்பட்ட விவாதங்களுக்கு இடையே குஜராத்தின் அம்ரேலியில் நடந்த ஜல உத்சவம் பற்றியும் தெரிய வந்தது. குஜராத்திலே 12 மாதங்களும் பெருகியோடும் நதிகளும் இல்லை, ஆகையால் மக்கள் பெரும்பாலும் மழைநீரையே சார்ந்து வாழ வேண்டியிருக்கிறது. கடந்த 20-25 ஆண்டுகளில் அரசாங்கமும், சமூக அமைப்புக்களும் முயற்சி மேற்கொண்ட பிறகு, நிலைமையில் மாற்றம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கிறது. இதிலே ஜல் உற்சவத்தின் பெரும் பங்களிப்பு இருக்கிறது. அம்ரேலியில் நடந்த ஜல் உற்சவத்தின் போது, நீர் பாதுகாப்பு மற்றும் ஏரிகளின் பராமரிப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதிலே நீர் விளையாட்டுக்களுக்கும் ஊக்கமளிக்கப்பட்டது, நீர் பாதுகாப்பு வல்லுநர்களோடு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கெடுத்த மக்களுக்கு மூவண்ண நீரூற்றுக்கள் மிகவும் பிடித்துப் போயிற்று. இந்த நீர் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை சூரத்தில் வைர வியாபாரத்திற்குப் பெயர் போன சாவ்ஜி பாயி டோலகியா அவர்களின் நிறுவனம் செய்திருந்தது. நான் இதில் பங்கெடுத்த ஒவ்வொரு நபருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், நீர் பாதுகாப்பிற்காக இப்படிப்பட்ட பணிகளைப் புரிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
எனக்குப் பிரியமான குடும்ப உறவுகளே, இன்று உலகெங்கிலும் திறன் மேம்பாட்டின் மகத்துவத்திற்கு ஏற்புத்தன்மை கிடைத்து வருகிறது. நாம் ஒருவருக்கு ஏதோ ஒரு திறனைக் கற்பிக்கும் போது, அவருடைய திறனை மட்டும் நாம் வளப்படுத்தவில்லை, மாறாக வருமானத்திற்கான ஒரு வழியையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஒரு அமைப்பு 40 ஆண்டுகளாக திறன் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டு வருகிறது என்ற தகவல் எனக்குக் கிடைத்த போது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்த அமைப்பு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் இருக்கிறது, இதன் பெயர் பெல்ஜிபுரம் யூத் கிளப். திறன் மேம்பாட்டின் மீது கவனம் செலுத்தும் பெல்ஜிபுரம் யூத் கிளப்பானது, கிட்டத்தட்ட 7000 பெண்களுக்கு அதிகாரப்பங்களிப்பு அளித்திருக்கிறது. இதிலே பெரும்பாலான பெண்கள் இன்று தங்களுடைய சுய முயற்சியில் பணியாற்றி வருகிறார்கள். இந்த அமைப்பானது குழந்தைத் தொழிலாளர்களுக்கும் கூட ஏதோ ஒரு திறனைக் கற்பித்து அவர்களை இந்தக் கொடிய வளையத்திலிருந்து மீட்டெடுக்க உதவி புரிகிறது. பெல்ஜிபுரம் யூத் கிளப்பின் குழுவானது, விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் அதாவது FPOக்களோடு தொடர்புடைய விவசாயிகளுக்கும் புதிய திறனைக் கற்பித்து, இதனால் பெரிய அளவில் விவசாயிகளும் அதிகாரப் பங்களிப்பு பெற்றவர்களாக ஆகியிருக்கிறார்கள். தூய்மை தொடர்பாகவும் யூத் கிளப்பானது கிராமங்கள்தோறும் விழிப்புணர்வைப் பரப்பி வருகிறது. பல கழிப்பறைகளை உருவாக்குவதிலும் கூட இவர்கள் உதவி புரிந்திருக்கிறார்கள். இந்த அமைப்போடு தொடர்புடைய அனைவருக்கும், திறன் மேம்பாட்டுப் பணிகளுக்காக பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இன்று தேசத்தின் கிராமங்கள்தோறும் திறன் மேம்பாட்டிற்கென இப்படிப்பட்ட சமூக அளவிலான முயற்சிகளின் தேவை இருக்கிறது.
நண்பர்களே, ஒரு இலக்கினை அடைய சமூகரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது வெற்றியின் உயரமும் கூட மேலும் அதிகமாகி விடுகிறது. நான் உங்கள் அனைவரோடும் லத்தாக்கின் ஒரு உத்வேகமளிக்கக்கூடிய உதாரணத்தைப் பகிர விரும்புகிறேன். நீங்கள் பஷ்மீனா சால்வையைப் பற்றி அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடந்த சில காலமாக லத்தாக்கைச் சேர்ந்த பஷ்மீனா பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. லத்தாக்கி பஷ்மீனா, Looms of Ladakh என்ற பெயரில், உலகெங்கும் உள்ள சந்தைகளைச் சென்று சேர்கிறது. இதைத் தயார் செய்ய 15 கிராமங்களைச் சேர்ந்த 450க்கும் அதிகமான பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். முன்பெல்லாம் இவர்கள் தங்களுடைய தயாரிப்புக்களை அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே விற்று வந்தார்கள். ஆனால் இப்போது டிஜிட்டல் பாரதம் என்ற நிலையில் இவர்கள் தயாரித்த பொருட்கள், நாடெங்கிலும், உலகெங்கிலும் பல்வேறு சந்தைகளைச் சென்றடையத் தொடங்கியிருக்கிறது. அதாவது நமது உள்ளூர் பொருட்கள் உலகளாவிய அளவுக்குச் சென்றிருக்கிறது, இதனால் இந்தப் பெண்களின் வருவாயும் அதிகரித்திருக்கிறது.
நண்பர்களே, பெண்சக்தியின் இப்படிப்பட்ட வெற்றிகள் தேசத்தின் அனைத்து மூலைமுடுக்கெங்கும் காணக் கிடைத்திருக்கின்றன. இத்தகைய விஷயங்களை அதிக அளவில் வெளிக்கொணருவது தான் அவசியமான ஒன்று. இதை வெளிச்சம் போட்டுக் காட்ட மனதின் குரலை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும்? நீங்களும் கூட இப்படிப்பட்ட உதாரணங்களை என்னோடு அதிக அளவில் பகிருங்கள். நானும் கூட அவற்றை உங்கள் மத்தியில் கொண்டு தர முழு முயற்சியை மேற்கொள்வேன்.
எனதருமை குடும்பச் சொந்தங்களே, மனதின் குரலில் நாம் இப்படிப்பட்ட சமூக முயற்சிகள் குறித்து விவாதித்து வந்திருக்கிறோம், இதன் காரணமாக சமூகத்தில் பெரியபெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மனதின் குரலின் மேலும் ஒரு சாதனை என்றால், இது வீடுதோறும் வானொலியை மேலும் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக ஆக்கியிருக்கிறது என்பது தான். மைகவ் தளத்தில் உத்தர பிரதேசத்தின் அம்ரோஹாவின் ராம் சிங் பௌத் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. ராம் சிங் அவர்கள் கடந்த சில தசாப்தங்களாகவே வானொலி சேகரிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மனதின் குரலுக்குப் பிறகு தன்னுடைய வானொலி காட்சியகத்தின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதாக இவர் கூறுகிறார். இதே போல மனதின் குரல் அளித்த கருத்தூக்கத்தால் உந்தப்பட்டு, அஹ்மதாபாதுக்கு அருகே ப்ரேரணா தீர்த் புனித அமைப்பு, சுவாரசியமான ஒன்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இதிலே நாடு-அயல்நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பழைமையான வானொலிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கே மனதின் குரலின் இதுவரையிலான அனைத்துப் பகுதிகளையுமே செவிமடுக்க முடியும். மேலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, இவற்றிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், மக்கள் எப்படி மனதின் குரலால் ஊக்கப்பட்டுத் தங்களின் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது தான். இப்படிப்பட்ட மேலும் ஒரு உதாரணம் கர்நாடகத்தின் சாம்ராஜ்நகரின் வர்ஷா அவர்களுடையது. தற்சார்பு உடையவராக இவர் ஆக, மனதின் குரல் இவருக்கு உத்வேகமளித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியால் ஊக்கமடைந்து இவர் வாழைப்பழத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியை ஆரம்பித்தார். இயற்கையின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் வர்ஷா அவர்களின் இந்த முன்னெடுப்பு, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வாய்ப்பினை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
என் இதயம் நிறைந்த குடும்பச் சொந்தங்களே, நாளை நவம்பர் மாதம் 27ஆம் தேதி, கார்த்திகைப் பௌர்ணமித் திருநாள். இந்த நாளன்று தான் தேவ் தீபாவளியும் கொண்டாடப்படுகிறது. காசியிலே தேவ் தீபாவளியைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது. இந்த முறை என்னமோ நான் காசிக்குச் செல்ல இயலாது என்றாலும், மனதின் குரல் வாயிலாக பனாரஸின் மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைக் கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன். இந்த முறையும் கூட காசியின் படித்துறைகளில் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும், பிரமாதமான ஆரத்தி நடைபெறும், லேஸர் காட்சி நடக்கும், இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் நாடு-அயல்நாடுகளிலிருந்து வந்திருப்போர் தேவ தீபாவளியின் ஆனந்தத்தில் திளைப்பார்கள்.
நண்பர்களே, நாளை பௌர்ணமி தினத்தன்று தான் குரு நானக் அவர்கள் பிறந்த நாளும் ஆகும். குரு நானக் அவர்களின் விலைமதிப்பில்லாத செய்தி பாரதத்திற்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கும், இன்றும் உத்வேக காரணியாகவும், பேசப்படும் கருத்தாகவும் இருக்கிறது. இது நமக்கு எளிமை, நல்லிணக்கம், மற்றோரிடம் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றுக்கான கருத்தூக்கத்தை அளிக்கிறது. குரு நானக் தேவ் அவர்களின் சேவையுணர்வு, சேவைப் பணிகளுக்கான கற்பித்தலை அளித்திருக்கிறது, அதனைப் நமது சீக்கிய சகோதர-சகோதரிகள், உலகெங்கிலும் பின்பற்றி வருவதை நாம் கண்டு வருகிறோம். நான் மனதின் குரலின் அனைத்து நேயர்களுக்கும் குரு நானக் தேவ் அவர்கள் பிறந்த நாளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமைக் குடும்பச் சொந்தங்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே. கண்மூடித் திறக்கும் வேளையிலே 2023ஆம் ஆண்டு நிறைவை நோக்கி முன்னேறி விட்டது. ஒவ்வொரு முறையைப் போலவும் நாம் எல்லோரும் என்ன நினைக்கிறோம் என்றால், அட, இத்தனை விரைவாக இந்த ஆண்டு கடந்து விட்டதே, என்று தான். ஆனால், இந்த ஆண்டு கணக்கில்லாத சாதனைகளை பாரதத்திற்கு அளிப்பதாக அமைந்தது, பாரதத்தின் சாதனைகள், ஒவ்வொரு பாரத நாட்டவரின் சாதனைகளும் ஆகும். மனதின் குரல் பாரத நாட்டவரின் இப்படிப்பட்ட சாதனைகளை வெளிப்படுத்துவதில் சக்திவாய்ந்த ஊடகமாக ஆகியிருக்கிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை நாட்டுமக்களின் ஏராளமான வெற்றிகளோடு மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன். அது வரை எனக்கு விடை தாருங்கள் அன்பு நெஞ்சங்களே. பலப்பல நன்றிகள். வணக்கம்.
*****
AD/DL
#MannKiBaat has begun. Do tune in! https://t.co/sPUxL9UyPX
— PMO India (@PMOIndia) November 26, 2023
We can never forget 26th of November. It was on this very day that the country had come under the most dastardly terror attack. pic.twitter.com/Li1m04jxjp
— PMO India (@PMOIndia) November 26, 2023
Best wishes to all countrymen on the occasion of Constitution Day: PM @narendramodi #MannKiBaat pic.twitter.com/iNWEUI750H
— PMO India (@PMOIndia) November 26, 2023
In consonance with the times, circumstances and requirements of the country, various Governments carried out Amendments at different times. #MannKiBaat pic.twitter.com/ZNuczFnwdx
— PMO India (@PMOIndia) November 26, 2023
The Nari Shakti Vandan Adhiniyam is an example of the Sankalp Shakti, the strength of the resolve of the Democracy. This will provide a fillip to the pace of accomplishing our resolve of a developed India. #MannKiBaat pic.twitter.com/MZVVJ6oZWg
— PMO India (@PMOIndia) November 26, 2023
The success of 'Vocal For Local' is opening the doors to a 'Developed India'. #MannKiBaat pic.twitter.com/EzddBE5Jxj
— PMO India (@PMOIndia) November 26, 2023
People are making more and more digital payments. This is an encouraging sign. #MannKiBaat pic.twitter.com/To4CN1a1JR
— PMO India (@PMOIndia) November 26, 2023
'Intelligence, Idea and Innovation' are the hallmarks of India's youth. #MannKiBaat pic.twitter.com/BXSjHxFgCT
— PMO India (@PMOIndia) November 26, 2023
Similar to the festivals in each village, diverse dance styles also possess their own cultural legacy. #MannKiBaat pic.twitter.com/sYTuQwJ1Vh
— PMO India (@PMOIndia) November 26, 2023
Swachh Bharat Abhiyan has changed people's mindset regarding cleanliness and public hygiene. #MannKiBaat pic.twitter.com/lYRAcAKTXp
— PMO India (@PMOIndia) November 26, 2023
Cleanliness is not a campaign for a day or a week but it is an endeavour to be implemented for life. Here is an inspiring example from Coimbatore. #MannKiBaat pic.twitter.com/oCpN8ZPtd7
— PMO India (@PMOIndia) November 26, 2023
Conserving water is no less than saving life. #MannKiBaat pic.twitter.com/Eu50oxxAYu
— PMO India (@PMOIndia) November 26, 2023
Commendable effort by Beljipuram Youth Club of Andhra Pradesh... #MannKiBaat pic.twitter.com/NxEhIWZti6
— PMO India (@PMOIndia) November 26, 2023
Ladakhi Pashmina is reaching the markets around the world. #MannKiBaat pic.twitter.com/B1rrQYKpDW
— PMO India (@PMOIndia) November 26, 2023
#MannKiBaat has made radio more popular in every household. pic.twitter.com/SgKdZZXe5J
— PMO India (@PMOIndia) November 26, 2023
Motivated by an episode of #MannKibaat, Varsha Ji of Chamarajanagar started the work of making organic fertilizer from bananas. pic.twitter.com/JDwhyxNr11
— PMO India (@PMOIndia) November 26, 2023