Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல், 101ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 28.05.2023


எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் நெஞ்சம் நிறைய வரவேற்கிறேன்.  இந்த முறை மனதின் குரலின் இந்தப் பகுதி இரண்டாவது சதத்தின் தொடக்கம்.  கடந்த மாதம் நாமனைவரும் இதன் சிறப்பான சதத்தினைக் கொண்டாடினோம்.  உங்களனைவரின் பங்களிப்பு மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலம்.  100ஆவது பகுதி ஒலிபரப்பான வேளையிலே, ஒருவகையில் நாடு முழுவதும் ஒரே இழையில் இணைந்தது என்று கூறலாம்.  துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் நம்முடைய சகோதர சகோதரிகள் ஆகட்டும், அல்லது பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லநர்கள் ஆகட்டும், மனதின் குரலானது அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியைப் புரிந்திருக்கிறது.  நீங்கள் அனைவரும் மனதின் குரலின் மீது வெளிப்படுத்தியிருக்கும் நேசம், பாசம், இது, இதுவரை காணாதது, உணர்ச்சிவயப்படச் செய்யக்கூடியது.  மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்ட போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நேர மண்டலங்களிலும், ஓரிடத்தில் மாலையாக இருக்கலாம், ஓரிடத்தில் இரவாக இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி, அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த 100ஆவது பகுதியைக் கேட்கத் தங்கள் நேரத்தை ஒதுக்கினார்கள்.  ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் நியூசிலாந்தின் ஒரு காணொளியை நான் பார்க்க நேர்ந்தது, இதிலே 100 வயது நிரம்பிய ஒரு தாய் தனது நல்லாசிகளை வழங்கிக் கொண்டிருந்தார்.  மனதின் குரல் தொடர்பாக நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் இருக்கும் மக்களும் சரி, தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள்.  பலர் இதனை ஆக்கப்பூர்வமாக ஆராயவும் செய்திருக்கிறார்கள்.  மனதின் குரலில் நாடு மற்றும் நாட்டுமக்களின் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது என்ற இந்த விஷயத்தைப் பலர் பாராட்டியிருக்கிறார்கள்.  நான் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும், உங்களுடைய இந்த நல்லாசிகளுக்காக, மிகுந்த மரியாதையோடு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் மனதின் குரலில் நாம் காசியில் நடைபெற்ற தமிழ்ச்சங்கமம் பற்றியும், சௌராஷ்டிரத்தின் தமிழ்ச் சங்கமம் குறித்தும் பேசினோம்.  சில நாட்கள் முன்பாக வாராணசியில், காசி தெலுகு சங்கமமும் அரங்கேறியது.  ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு வலு சேர்க்கும் மேலும் ஒரு அருமையான முயற்சி தேசத்தில் நடந்தேறியது.  இந்த முயற்சி தான் இளைஞர்கள் சங்கமம் பற்றியது.  இதைப் பற்றி விரிவான முறையில், இந்த முயற்சியோடு தொடர்புடையவர்களிடத்திலேயே ஏன் பேசக் கூடாது என்று நான் சிந்தித்தேன்.  ஆகையால் இப்போது இரண்டு இளைஞர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்பில் இருக்கிறார்கள் – ஒருவர் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த கியாமர் நியோகும் அவர்கள்.  அடுத்ததாக, பிஹாரைச் சேர்ந்த பெண்ணான விசாகா சிங் அவர்கள். வாருங்கள் முதலில் நாம் கியாமர் நியோகும் அவர்களோடு பேசுவோம்.

 

பிரதமர்:  கியாமர் அவர்களே, வணக்கம்.

 

கியாமர்:  வணக்கம் மோதி ஜி

 

பிரதமர்:  சரி கியாமர் அவர்களே, முதல்ல நான் உங்களைப் பத்தி தெரிஞ்சுக்க விரும்பறேன்.

 

கியாமர்:  மோதி ஜி, முதல் விஷயம், உங்களுக்கும், பாரத அரசுக்கும் மிகப்பெரிய நன்றிகளை நான் தெரிவிச்சுக்கறேன்; ஏன்னா நீங்க உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி, என்னோட உரையாற்றறீங்க, எனக்கு ஒரு வாய்ப்பு குடுத்திருக்கீங்க.  நான் அருணாச்சல பிரதேசத்தின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில இயந்திரப் பொறியியல் படிப்போட முதலமாண்டுல படிச்சுட்டு இருக்கேன்.

 

பிரதமர்:  வீட்டில என்ன செய்யறாங்க, அப்பா என்ன பண்றாரு?

 

கியாமர்:  என்னோட அப்பா சின்ன அளவுல வியாபாரம் செய்யறாங்க, கொஞ்சம் விவசாயத்திலயும் ஈடுபட்டிருக்காங்க.

 

பிரதமர்:  இளைஞர்கள் சங்கமம் பத்தி உங்களுக்கு எப்படி தெரிய வந்திச்சு, இளைஞர் சங்கமத்துக்குன்னு நீங்க எங்க போனீங்க, எப்படி போனீங்க, என்ன நடந்திச்சு?

 

கியாமர்: மோதி ஜி, இளைஞர் சங்கமம் பத்தியும், அதில நான் பங்கெடுத்துக்கலாம்னும் என்னோட கல்வி நிறுவனம் தான் எனக்கு சொன்னாங்க.  நானும் கொஞ்சம் இணையதளத்தில தேடிப் பார்த்த போது தெரிய வந்திச்சு, இது ரொம்ப சிறப்பான நிகழ்ச்சி, ஒரே பாரதம் உன்னத பாரதம் அப்படீங்கற தொலைநோக்கு வகையில நிறைய பங்களிப்பு அளிக்கக் கூடியதுன்னு தோணிச்சு.  மேலும் இதில புதுசா கத்துக்க முடியும்னு பட்ட போது, உடனடியா நான் அந்த இணைய முகவரியில என்னை பதிவு செஞ்சுக்கிட்டேன்.   எனக்கு ஏற்பட்ட அனுபவம் ரொம்ப சுவாரசியமா, நல்லா இருந்திச்சு.

 

பிரதமர்:  நீங்க ஏதாவது தேர்வு செய்ய வேண்டி இருந்திச்சா?

 

கியாமர்:  இணையதளத்தைத் திறந்த போது, அருணாச்சல் காரங்களுக்கு ஒரு தேர்வு இருந்திச்சு.  முதல்ல ஆந்திர பிரதேசம்னு இருந்திச்சு; இதில ஐஐடி திருப்பதி இருந்திச்சு, அடுத்தபடியா ராஜஸ்தானைச் சேர்ந்த மத்திய பல்கலைக்கழகம் இருந்திச்சு.  நான் ராஜஸ்தானைத் தான் என் முதல் தேர்வாவும், ஐஐடி, திருப்பதியை என்னோட இரண்டாவது தேர்வாவும் செய்தேன்.  நான் ராஜஸ்தானுக்காக தேர்வு செய்யப்பட்டேன், நான் ராஜஸ்தான் போயிருந்தேன்.

 

பிரதமர்:  எப்படி இருந்திச்சு ராஜஸ்தான் பயணம்?  முத முறையா நீங்க ராஜஸ்தான் போனீங்க இல்லை!

 

கியாமர்:  ஆமாம், நான் முத முறையா அருணாச்சல்லேர்ந்து வெளிய போனேன்.  ராஜஸ்தானத்துக் கோட்டைகளை எல்லாம் நான் திரைப் படங்கள்லயும், ஃபோன்லயும் மட்டுமே பார்த்திருக்கேன்.  ஆனா முத முறையா போனப்ப, என்னோட அனுபவம் ரொம்ப ரொம்ப நல்லா இருந்திச்சு, அங்க இருக்கற மக்கள் நல்லாயிருந்தாங்க, அவங்க ரொம்பவே இனிமையா என்னை நடத்தினாங்க.  நிறைய புது விஷயங்களைக் கத்துக்கிட்டேன்னு சொன்னா, ராஜஸ்தானத்து ஏரி, அங்க இருக்கறவங்க எப்படி மழைநீர் சேகரிப்பை செய்யறாங்க, இது பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுது, இது எனக்கு முன்ன சுத்தமா தெரியாது.  அந்த வகையில இந்த ராஜஸ்தான் பயணம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்திச்சு.

 

பிரதமர்:  பாருங்க, மிகப்பெரிய ஆதாயம்னு பார்த்தா, அருணாச்சலும் கூட வீரம் நிறைஞ்ச பூமி, ராஜஸ்தானும் வீரர்களோட பூமி தான்.  ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பலர் இராணுவத்தில இருக்காங்க, மேலும் அருணாச்சல எல்லையில இருக்கற இராணுவத்தினர், அதில ராஜஸ்தான்காரங்க இருந்தாங்கன்னா அவங்க கூட கண்டிப்பா பேசிப் பாருங்க.  நான் ராஜஸ்தான் போயிருந்தேன், இது தான் என்னோட அனுபவமா இருந்திச்சுன்னு பேசிப் பாருங்களேன், உங்களுக்குள்ள இருக்கற பரஸ்பர நெருக்கம் ரொம்ப அதிகமாயிடும்.  சரி, அங்க ஏதும் ஒப்புமைகளை உங்களால பார்க்க முடிஞ்சுதா, அட இது நம்ம அருணாச்சலத்திலயும் இருக்கே அப்படீங்கற வகையில!

 

கியாமர்:  மோதி ஜி, கண்டிப்பா என்னால ஒரு ஒப்புமையைப் பார்க்க முடிஞ்சுது, அது என்னென்னா, நாட்டுப்பற்று தான்.  மேலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் பத்தின தொலைநோக்கு மற்றும் உணர்வை என்னால பார்க்க முடிஞ்சுது.  ஏன்னா அருணாச்சல்லயும் மக்கள் தாங்கள் பாரத நாட்டவர்கள்ங்கற பெருமித உணர்வு அதிகம் இருக்கறவங்க.  இந்த விஷயத்தை என்னால அதிகம் காண முடிஞ்சுது, குறிப்பா இளைய தலைமுறையினர் மத்தியில; எப்படீன்னா நான் அங்க குறிப்பா பல இளைஞர்களோட பேசிப் பார்த்த போது, எனக்கு பல ஒப்புமைகள் மனசுல பட்டுச்சு.  அதாவது அவங்க பாரதத்துக்காக ஏதாவது செய்யணும்னு விரும்பறாங்க, நாட்டுப்பற்று நிறைய இருக்கு, இந்த விஷயம் இரண்டு மாநிலங்களைச் சேர்ந்தவங்க கிட்டயும் இருக்கற ஒப்புமையா என்னால பார்க்க முடிஞ்சுது.

 

பிரதமர்:  அங்க நண்பர்களை ஏற்படுத்திக்கிட்டு நெருக்கத்தை உருவாக்கிக்கிட்டீங்களா இல்லை இங்க வந்த பிறகு மறந்துட்டீங்களா?

 

கியாமர்:  இல்லை, நெருக்கத்தை அதிகமாக்கிட்டு இருக்கேன்.

 

பிரதமர்:  ஆஹா…. நீங்க சமூக ஊடகங்கள்ல ஆக்டிவா இருக்கீங்களா?

 

கியாமர்:  ஆமாம், ஆக்டிவா இருக்கேன்.

 

பிரதமர்:  அப்ப நீங்க ப்ளாக்ல கண்டிப்பா எழுதணும், இளைஞர்கள் சங்கமத்தில உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எப்படி இருந்திச்சு, எப்படி அதில பதிஞ்சுக்கிட்டீங்க, ராஜஸ்தான அனுபவம் எப்படி இருந்திச்சுன்னு எழுதணும்.  இதனால நாடெங்கிலும் இருக்கும் இளைஞர்களுக்கும், ஒரே பாரதம் உன்னத பாரதத்தோட மகிமை என்ன, இந்தத் திட்டம் என்ன அப்படீங்கறது தெரிய வரும்.  இதை எப்படி இளைஞர்கள் பயன்படுத்திக்க முடியும் அப்ப்டீங்கறதைப் பத்தின முழுமையான உங்க அனுபவத்தை ப்ளாகா நீங்க எழுதணும், பலர் இதைப் படிச்சுப் பயன் பெறுவாங்க.

 

கியாமர்:  கண்டிப்பா எழுதறேங்க.

 

பிரதமர்:  கியாமர் அவர்களே, உங்களோட பேசினது எனக்கு ரொம்ப நல்லா இருந்திச்சு, இளைஞர்களான நீங்க எல்லாரும் தான் தேசத்தோட பிரகாசமான எதிர்காலத்தின் நம்பிக்கைகள்.  ஏன்னா அடுத்த 25 ஆண்டுகள் ரொம்பரொம்ப மகத்துவமானது.  இது உங்க வாழ்க்கைக்கும் சரி, தேசத்தோட வாழ்க்கைக்குமே சரி.  அப்ப உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள், நன்றி.

 

கியாமர்:  உங்களுக்கும் நன்றி மோதி ஜி.

 

பிரதமர்:  நன்றி சகோதரா!

 

     நண்பர்களே, அருணாச்சலத்து மக்கள் நெருங்கிப் பழகக்கூடியவர்கள், அவர்களோடு உரையாடுவது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது.  இளைஞர்கள் சங்கமத்தில் கியாமர் ஜியுடைய அனுபவம் மிகச் சிறப்பானதாக இருந்தது.  இப்போது பிஹாரின் பெண்ணான விசாகா சிங் அவர்களோடு நாம் உரையாடுவோம் வாருங்கள்.

 

பிரதமர்:  விஷாகா அவர்களே, வணக்கம்.

 

விஷாகா:  முதன்மையா பாரதத்தோட மதிப்புமிக்க பிரதமர் அவர்களுக்கு என்னோட நல்வணக்கங்கள்.  மேலும் என்னோட கூட இருக்கற எல்லா பிரதிநிதிகள் தரப்பிலிருந்தும் பலப்பல வணக்கங்கள்.

 

பிரதமர்:  நல்லது விசாகா அவர்களே, முதல்ல நீங்க எனக்கு உங்களைப் பத்திச் சொல்லுங்க.  பிறகு இளைஞர்கள் சங்கமம் பத்தியும் தெரிஞ்சுக்க விரும்பறேன்.

 

விசாகா:  நான் பிஹாரோட சாசாராம்ங்கற ஒரு நகரத்தில வசிக்கறேன், இந்த இளைஞர்கள் சங்கமம் பத்தி எங்க கல்லூரியோட வாட்ஸப் குழுவுல முதல்ல ஒரு செய்தியா வந்திச்சு.  இதுக்கு அப்புறமா இதைப் பத்தின விபரத்தை நான் தேடிப் பிடிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்.  அப்பத் தான் தெரிய வந்திச்சு, இது பிரதமரோட, ஒரே பாரதம் உன்னத பாரதம்ங்கற ஒரு திட்டம் வாயிலாத் தான் இந்த இளைஞர்கள் சங்கமம் அப்படீங்கறதே நடத்தப்படுதுங்கற விபரமே.  அப்புறம் நானும் விண்ணப்பிச்சேன், இதில சேரணும்னு எனக்கு ரொம்ப ஆர்வமா இருந்திச்சு, இது மூலமா நான் தமிழ்நாட்டைச் சுத்திப் பார்த்துட்டு வந்திருக்கேன்.  இதில எனக்குக் கிடைச்ச அனுபவம் பத்தி நான் ரொம்பவே பெருமையா உணர்றேன், அதாவது நானும் இந்தத் திட்டத்தில பங்கெடுத்திருக்கேன்னு.  இதில பங்கெடுக்க வாய்ப்பு கிடைச்சதுக்கு நான் என் நன்றிகளை உங்களுக்குத் தெரிவிச்சுக்கறேன்.  எங்களை மாதிரியான இளைஞர்களுக்கு இந்த மாதிரியான அருமையான திட்டத்தை உருவாக்கி இருக்கீங்க, இது மூலமா பாரத நாட்டோட பல்வகையான இடங்கள்ல இருக்கற கலாச்சாரங்களுக்கு ஏத்த வகையில எங்களைத் தகவமைச்சுக்க முடியும். 

 

பிரதமர்:  விசாகா அவர்களே, நீங்க என்ன படிச்சுக்கிட்டு இருக்கீங்க?

 

விசாகா:  நான் கணிப்பொறி அறிவியல் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டுல படிச்சுட்டு இருக்கேன்.

 

பிரதமர்:  நல்லது விசாகா அவர்களே, நீங்க எந்த மாநிலத்துக்குப் போகணும், எப்படி அணுகணும், இந்த முடிவை எப்படி எடுத்தீங்க?

 

விசாகா:  நான் இளைஞர்கள் சங்கமம் பத்தி இணையத்தில தேடிப் பார்த்த போது, பிஹாரோட பிரதிநிதிகளுக்கும், தமிழ்நாட்டின் பிரதிநிதிகளுக்கும் பரிமாற்றம் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.  தமிழ்நாடு கலாச்சார ரீதியா ரொம்ப வளமான மாநிலம், பிஹார்காரங்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பறாங்கன்னு தெரிஞ்சுது, இதுக்குனு ஒரு படிவத்தை நிரப்பணும்னு தெரிய வந்திச்சு.  உண்மையிலே சொல்றேன், நான் இதை ஒரு பெரிய கௌரவமா உணர்றேன், இதில பங்கெடுத்ததுல எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

 

பிரதமர்:  முத முறையா நீங்க தமிழ்நாடு போனீங்களா?

 

விசாகா:  ஆமாங்க, முத முறையா போனேன்.

 

பிரதமர்:   சரி, ரொம்ப விசேஷமான நினைவு இல்லை சம்பவம்னு சொன்னா நீங்க எதைச் சொல்லுவீங்க?  நாட்டோட இளைஞர்கள் நீங்க சொல்றதை ஆர்வத்தோட கேட்டுக்கிட்டு இருக்காங்க.

 

விசாகா:  சரிங்கய்யா.  பயணம் முழுக்கவுமே ரொம்பவும் நினைவுல வச்சுக்கும்படியா இருந்திச்சு.  ஒவ்வொரு கட்டத்திலயும் என்னால ரொம்ப நல்லநல்ல விஷயங்களைக் கத்துக்க முடிஞ்சுது.  தமிழ்நாட்டுக்குப் போய் பல நல்ல நண்பர்களை என்னால ஏற்படுத்திக்க முடிஞ்சுது.  அங்க இருக்கற கலாச்சாரத்துக்கு ஏத்த வகையில என்னை தகவமைச்சுக்க முடிஞ்சுது.  அந்த மக்களோட பழகினேன்.  இதில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்னு பார்த்தா, இந்த வாய்ப்பு பலருக்கும் கிடைச்சிருக்காது.  அது என்னென்னா, பிரதிநிதிகளான எங்களுக்கு இஸ்ரோவுக்குப் போகற வாய்ப்பு கிடைச்சுது.  ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம் என்னென்னா, நாங்க ஆளுநர் மாளிகைக்குப் போனப்ப, அங்க தமிழ்நாட்டின் ஆளுநரை சந்திக்க முடிஞ்சுது.  இந்த இரண்டு விஷயங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்திச்சு, எனக்கு என்ன தோணிச்சுன்னா, நாங்க இப்ப இருக்கற இந்த வயசுல, இந்த இளைஞர் சங்கமம் மட்டும் இல்லைன்னா, இந்த வாய்ப்பு எங்களுக்குக் கண்டிப்பா கிடைச்சிருக்காது.  இது எனக்கு ரொம்ப அருமையான, மறக்கவே முடியாத கணங்களா இருந்திச்சு. 

 

பிரதமர்:  பிஹார்ல உணவுமுறையே வேற, தமிழ்நாட்டுல வேறயா இருக்கும்.

 

விசாகா:  ஆமாம்.

 

பிரதமர்:  இது எப்படி உங்களுக்கு சரிப்பட்டு வந்திச்சு?

 

விசாகா:  அங்க தென்னிந்திய உணவு தமிழ்நாட்டுல இருந்திச்சு.  அங்க போனவுடனேயே எங்களுக்கு தோசை, இட்லி, சாம்பார், ஊத்தப்பம், வடை, உப்புமால்லாம் பரிமாறினாங்க.  முதமுறையா நாங்க சாப்பிட்ட போது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்திச்சு.  அங்க இருக்கற உணவு ரொம்ப ஆரோக்கியமானதா, உள்ளபடியே ரொம்ப சுவையானதா இருந்திச்சு, அருமையா இருந்திச்சு.  நம்ம வட இந்திய உணவுலேர்ந்து ரொம்பவே வித்தியாசமானது, எனக்கு அங்க இருந்த உணவு ரொம்ப பிடிச்சிருந்திச்சு, அங்க இருந்த மக்களும் ரொம்ப நல்லவங்க.

 

பிரதமர்:  அப்ப தமிழ்நாட்டுல நண்பர்களை நீங்க ஏற்படுத்திட்டு இருப்பீங்களே?

 

விசாகா:  ஆமாம்.  நாங்க அங்க திருச்சியில தேசிய தொழில்நுட்பக் கழகத்திலயும், பிறகு சென்னையில இந்திய தொழில்நுட்பக் கழகத்திலயும் தங்கி இருந்தோம்.  இந்த இரண்டு இடங்கள்லயும் இருந்த மாணவர்களோடயும் எனக்கு நட்பு ஏற்பட்டிச்சு.  இதுக்கு இடையில இந்திய தொழில்கூட்டமைப்போட ஒரு வரவேற்பு நிகழ்ச்சி வேற இருந்திச்சு.  இதில அங்க அக்கம்பக்கத்தில இருந்த கல்லூரிகள்லேர்ந்தும் கூட பல மாணவர்கள் வந்தாங்க.  அந்த மாணவர்களோட ஊடாடினோம், இது ரொம்ப நல்லா இருந்திச்சு, நிறைய நண்பர்கள் உருவானாங்க.  சில பிரதிநிதிகள் தமிழ்நாட்டிலேர்ந்து பிஹாருக்குப் போயிட்டு இருந்தாங்க, அவங்களோட பேசவும் வாய்ப்பு கிடைச்சுது, பரஸ்பரம் பேசிக்கிட்டோம், ரொம்ப அருமையான அனுபவமா இருந்திச்சு.

 

பிரதமர்:  அப்ப விசாகா அவர்களே, நீங்க கண்டிப்பா ஒரு ப்ளாக் எழுதுங்க, சமூக ஊடகத்தில உங்க மொத்த அனுபவத்தையும் பத்தி எழுதுங்க.  ஒண்ணு இந்த இளைஞர்கள் சங்கமம், அப்புறம் ஒரே பாரதம் உன்னத பாரதம் பத்தியும், இன்னொண்ணு, தமிழ்நாட்டு மக்கள் உங்களை எப்படி நேசத்தோட ஏத்துக்கிட்டாங்க, உங்களுக்கு வரவேற்பு அளிச்சாங்க, அவங்களோட பாசம் இது பத்தி எல்லாம் தேசத்துக்கு நீங்க தெரிவிக்கணும் இல்லையா. எழுதுவீங்க தானே?

 

விசாகா:  ஆஹா, கண்டிப்பாய்யா.

 

பிரதமர்:  சரி, அப்ப என் தரப்பிலிருந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள், பற்பல நன்றிகள்.

 

விசாகா:  ரொம்ப ரொம்ப நன்றி ஐயா, வணக்கம்.

 

பிரதமர்:  தேங்க்யூ சோ மச்.  வணக்கம்.

 

கியாமர், விசாகா இவர்கள் இருவருக்கும் என் பலப்பல நல்வாழ்த்துக்கள்.  இளைஞர்கள் சங்கமத்தில் நீங்கள் கற்றவை, இவை உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு இணைந்து பயணிக்கட்டும்.  உங்களுக்கு என் தரப்பிலிருந்து நல்விருப்பங்கள்.

 

     நண்பர்களே, பாரதத்தின் சக்தியே அதன் பன்முகத்தன்மை தான்.  நமது தேசத்தில் பார்க்கத் தகுந்த இடங்கள் ஏராளமாக இருக்கின்றன.  இதைக் கருத்தில் கொண்டு தான், நமது கல்வி அமைச்சகம், யுவாசங்கமம், அதாவது இளையோர் சங்கமம் என்ற பெயரிலான ஒரு அருமையான முன்னெடுப்பைச் செய்திருக்கிறார்கள்.   இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்னவென்றால், மக்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்பெறச் செய்வதோடு, தேசத்தின் இளைஞர்களுக்கு இடையே பரஸ்பர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பமைத்துக் கொடுப்பது தான்.  பல்வேறு மாநிலங்களின் உயர்கல்வி நிறுவனங்கள் இதோடு இணைக்கப்பட்டிருக்கின்றன.  யுவாசங்கமத்தில், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்ற மாநிலங்களின் நகரங்கள்-கிராமங்களுக்குச் செல்கிறார்கள், அங்கே பலவகைப்பட்ட மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கிறது. யுவாசங்கமத்தின் முதல் சுற்றிலே கிட்டத்தட்ட 1200 இளைஞர்கள், தேசத்தின் 22 மாநிலங்களுக்குச் சென்று வந்திருக்கிறார்கள்.  எந்த இளைஞரெல்லாம் இதோடு தங்களை இணைத்துக் கொண்டார்களோ, அவர்கள் தங்களோடு கூடவே கொண்டு வந்திருக்கும் நினைவுகள், அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இதயங்களில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும்.  பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், வணிகத் தலைவர்கள் எல்லோரும் பாரதத்தில் பல இடங்களில் கழித்திருக்கிறார்கள்.  நான் பல நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் வேளைகளில், தங்களுடைய இளைய பருவகாலத்தில் சுற்றிப்பார்க்கத் தாங்கள் பாரதம் வந்திருப்பதாக அவர்கள் என்னிடத்தில் தெரிவித்ததுண்டு.   நிறைய கற்கவும், பார்க்கவும் நமது பாரத நாட்டிலே இருக்கிறது, இது உங்களுடைய உற்சாகத்தை மேலும் மேலும் அதிகரிக்க வல்லது.  இந்த உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்களைப் பற்றித் தெரிந்து, தேசத்தின் பல்வேறு பாகங்களுக்கும் யாத்திரைப்படும் பேரார்வம் உங்களுக்கும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். 

 

     என் அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக நான் ஜப்பான் நாட்டில் இருக்கும் ஹிரோஷிமா சென்றிருந்தேன். அங்கே இருக்கும் ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.  இது உணர்வுபூர்வமான ஒரு அனுபவம்.  நாம் வரலாற்றின் நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும் போது, இனிவரும் தலைமுறையினருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.  பல வேளைகளில் அருங்காட்சியகங்கள் நமக்கு புதிய பாடங்களைக் கற்பிக்கின்றன, பல வேளைகளில் பல கற்பித்தல்கள் நமக்குக் கிடைக்கின்றன. சில நாட்கள் முன்பாக, பாரதத்தில் சர்வதேச அருங்காட்சியக எக்ஸ்போவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே, உலகின் 1200க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களின் சிறப்புகள் காட்டப்பட்டன.  நமது பாரத நாட்டிலே பல்வேறு வகையான இப்படி பல அருங்காட்சியகங்கள் உண்டு, இவை நமது கடந்த காலத்தோடு தொடர்புடைய பல்வேறு கோணங்களை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக குருகிராமிலே ஒரு விநோதமான அருங்காட்சியகம் உண்டு – ம்யூசியோ கேமரா, இதிலே 1860ற்குப் பிறகு, 8000த்திற்கும் அதிகமான கேமிராக்களின் சேகரிப்பு இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டின் Museum of Possibilities என்பதனை, நமது மாற்றுத் திறனாளி சகோதரர்களை கவனத்தில் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள்.  மும்பையின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் வாஸ்து சங்கிரஹாலயம் எப்படிப்பட்ட அருங்காட்சியகம் என்றால் இதிலே 70,000ற்கும் மேற்பட்ட பொருட்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.  2010ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Indian Memory Project, இது ஒருவகையில் ஆன்லைன் அருங்காட்சியகம்.  உலகெங்கிலிருமிருந்தும் அனுப்பப்பட்ட படங்கள் மற்றும் கதைகள் வாயிலாக பாரதத்தின் பெருமிதமான வரலாற்றுக் கணங்களை இணைப்பதில் இது முனைந்திருக்கிறது. நாடு துண்டாடப்பட்ட போது அரங்கேறிய படுபயங்கரமான சம்பவங்களோடு தொடர்புடைய நினைவுகளையும் முன்னிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  கடந்த ஆண்டுகளிலும் நாம் பாரதத்தின் புதிய  புதிய வகையான அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி சகோதர சகோதரிகளின் பங்களிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட பத்து அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கோல்காத்தாவின் விக்டோரியா நினைவகத்தில், பிப்லோபீ பாரதம் அருங்காட்சியகமாகட்டும், அல்லது ஜலியான்வாலா பாக் நினைவகத்தின் புதுப்பித்தலாகட்டும், தேசத்தின் அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரதமர்கள் அருங்காட்சியகமாகட்டும், இன்று இது தில்லியில் அமைந்திருக்கிறது. தில்லியிலேயே தேசிய போர் நினைவுச் சின்னம் மற்றும் காவலர்கள் நினைவுச் சின்னம் ஆகியன ஒவ்வொரு நாளும் அநேகர்களின் உயிர்த்தியாகங்கள் பற்றிய நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தாண்டி யாத்திரைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தண்டி நினைவுச் சின்னமாகட்டும், ஒற்றுமைச் சிலை அருங்காட்சியகமாகட்டும்… சரி நான் இதோடு நிறுத்திக் கொள்கிறேன், ஏனென்றால் நாடெங்கிலும் இருக்கும் அருங்காட்சியகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது, முதன்முறையாக தேசத்தின் அனைத்து அருங்காட்சியகங்கள் பற்றியும் அவசியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.  அருங்காட்சியகம் எந்தக் கருப்பொருளை ஆதாரமாகக் கொண்டது, அங்கே எந்த வகையான பொருள் வைக்கப்பட்டிருக்கிறது, அங்கே தொடர்பு கொள்ளும் விபரங்கள் பற்றியெல்லாம் ஒரு ஆன்லைன் குறிப்பேடு தொகுக்கப்பட்டிருக்கிறது.  உங்கள் அனைவரிடத்திலும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் – உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது நமது தேசத்தின் இந்த அருங்காட்சியகங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். அங்கிருக்கும் கவரக்கூடிய படங்களை # (ஹேஷ்டேக்) மியூசியம் மெமரீஸில் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.  இதன் வாயிலாக நமது பெருமைமிக்க கலாச்சாரத்துடனான நம்முடைய பிணைப்பு மேலும் பலமாகும். 

 

     என் பாசமிகு நாட்டுமக்களே, நாம் பலவேளைகளில் ஒரு நற்றிணைப் பொன்மொழியைக் கேட்டிருப்போம் – நீரின்றி அமையாது உலகம். நீரில்லாமல் போனால் உலகமே இருக்காது, மனிதர்கள், நாடுகளின் வளர்ச்சி ஸ்தம்பித்துப் போகும்.  எதிர்காலத்தின் இந்தச் சவாலைக் கவனத்தில் கொண்டு, இன்று நாடெங்கிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  ஏன் நமது இந்த அமிர்த நீர்நிலைகள் விசேஷமானவை என்றால், இவை சுதந்திரத்தின் அமுதகாலத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன, இவற்றிலே மக்களின் அமுத முயற்சிகள் கலந்திருக்கின்றன.  50,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகள் இதுவரை அமைக்கப்பட்டு விட்டன என்ற செய்தி உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கலாம். இது நீர்ப்பாதுகாப்புத் திசையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முன்னெடுப்பாகும்.

 

     நண்பர்களே, ஒவ்வொரு கோடைக்காலத்திலும் நாம் இதைப் போலவே நீரோடு தொடர்புடைய சவால்கள் குறித்துப் பேசி வருகிறோம்.  இந்த முறையும் கூட இந்த விஷயத்தை மேற்கொள்வோம்; ஆனால் இந்த முறை நாம் நீர்ப்பாதுகாப்போடு தொடர்புடைய ஸ்டார்ட் அப்புகளைப் பற்றிப் பேசுவோம்.  ஒரு ஸ்டார்ட் அப்பின் பெயர் FluxGen.  இந்த ஸ்டார்ட் அப், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸால் இயக்கப்படுவது; இந்தத் தொழில்நுட்பம் மூலமாக, நீர் மேலாண்மை தொடர்பான மாற்றினை அளிப்பது.  இந்தத் தொழில்நுட்பம், பயன்பாட்டு விதங்களைத் தெரிவிக்கும், நீரைச் சிறப்பாகப் பயன்படுத்துவதில் உதவிகரமாக இருக்கும்.  மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பானது LivNSense.  இது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை ஆதாரமாகக் கொண்ட தளமாகும்.  இதன் துணையோடு நீர் பகிர்மானம் மீது திறமையான வகையிலே கவனத்தைச் செலுத்த முடியும்.  மேலும் எங்கே எவ்வளவு நீர் வீணாகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.  மேலும் ஒரு ஸ்டார்ட் அப் இருக்கிறது, இதன் பெயர் கும்பி காகஸ்.  இந்த கும்பி காகஸானதை உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.  இவர்கள் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள்.  இவர்கள் ஆகாயத் தாமரையிலிருந்து காகிதம் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  ஒரு காலத்தில் நீர்நிலைகளுக்கு ஒரு பிரச்சனையாகப் பார்க்கப்பட்ட இந்த ஆகாயத் தாமரையிலிருந்து இப்போது காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

 

     நண்பர்களே, பல இளைஞர்கள் நூதனக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் துணைக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.   பல இளைஞர்கள் சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். சத்திஸ்கட்டின் பாலோத் மாவட்டத்தின் இளைஞர்கள் இதற்கான ஒரு எடுத்துக்காட்டு. இங்கிருக்கும் இளைஞர்கள் நீரைப் பாதுகாக்க ஒரு இயக்கத்தைத் தொடக்கியிருக்கின்றார்கள்.  இவர்கள் வீடுதோறும் சென்று மக்களுக்கு நீர்ப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.   திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது, இளைஞர்களின் இந்தக் குழு அங்கே சென்று, நீரின் தவறான பயன்பாட்டை எப்படித் தடுக்க முடியும் என்பது தொடர்பான தகவல்களை அளிக்கிறார்கள்.  நீரின் சரியான பயன்பாட்டோடு தொடர்புடைய ஒரு ஊக்கமளிக்கும் முயற்சி ஜார்க்கண்டின் கூண்ட்டீ மாவட்டத்தில் நடைபெறுகிறது.  கூண்ட்டீ  பகுதியில் மக்கள், சாக்குமூட்டைத் தடுப்பு என்ற வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இந்தத் தடுப்பு காரணமாக நீர் சேகரிக்கப்படுவதன் காரணமாக இங்கே கீரை-காய்கறிகளையும் பயிர் செய்ய முடிகிறது.  இதனால் மக்களின் வருவாய் அதிகரிப்பதோடு, இந்தப் பகுதியின் தேவைகளும் நிறைவு செய்யப்படுகின்றன.   மக்களின் பங்களிப்புடன் கூடிய எந்த ஒரு முயற்சியும், எப்படி பல மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதற்கு, இந்தக் கூண்ட்டி பகுதி ஒரு கவனத்தை ஈர்க்கும் எடுத்துக்காட்டு.  இந்த முயற்சிக்காக இங்கிருக்கும் மக்களுக்குப் பலப்பல பாராட்டுக்களை நான் உரித்தாக்குகிறேன்.

 

     என் மனம்நிறை நாட்டுமக்களே, 1965ஆம் ஆண்டு யுத்தக்காலத்திலே, நமது முன்னாள் பிரதம மந்திரி லால் பஹாதுர் சாஸ்திரி அவர்கள், ஜய் ஜவான், ஜய் கிஸான் என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள்.  பின்னர் அடல் அவர்களும் இதிலே ஜய் விஞ்ஞான் என்பதனை இணைத்தார்.  சில ஆண்டுகளுக்கு முன்னால், தேசத்தின் விஞ்ஞானிகளோடு கூடவே ஜய் அனுசந்தான், அதாவது ஜய் ஆராய்ச்சி என்பதும் இணைக்கப்பட்டிருக்கிறது.   இன்றைய மனதின் குரலிலே, நாம் சந்திக்க இருக்கும் இந்த மனிதர் ஜய் ஜவான், ஜய் கிஸான், ஜய் விஞ்ஞான், ஜய் அனுசந்தான் என்ற நான்கையுமே பிரதிபலிக்கக்கூடிய ஒரு நபர்.  இந்த மனிதர், மஹாராஷ்டிரத்தின் திருவாளர் சிவாஜி ஷாம்ராவ் டோலே அவர்கள்.  சிவாஜி டோலே அவர்கள் நாஸிக் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்திலே வசிப்பவர்.  இவர் ஏழ்மையான பழங்குடியின குடியானவக் குடும்பத்தில் பிறந்தவர், ஒரு முன்னாள் இராணுவ வீரரும் கூட.    இராணுவத்திலே பணியாற்றிய போது, இவர் தன்னுடைய வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்தார்.  பணி ஓய்வு பெற்ற பிறகு, இவர் புதியதாக ஒன்றைக் கற்க வேண்டும் என்று முடிவெடுத்து, விவசாயத்தில் பட்டயப்படிப்பு முடித்து, ஜய் ஜவான், ஜய் கிஸான் என்ற நிலைக்கு முன்னேறினார்.  இப்போது ஒவ்வொரு கணமும் இவருடைய முயற்சி என்னவாக இருக்கிறது என்றால், எப்படி விவசாயத் துறையில் தன்னுடைய பங்களிப்பு அதிகமாக இருக்க முடியும் என்பதே.  தனது இந்த இயக்கத்தில் சிவாஜி டோலே அவர்கள் 20 நபர்கள் அடங்கிய ஒரு சின்னஞ்சிறிய குழுவை ஏற்படுத்தி, இதிலே சில முன்னாள் இராணுவத்தினரையும் இணைத்துக் கொண்டார்.  இதன் பிறகு இவருடைய இந்தக் குழுவானது, வெங்கடேஷ்வரா கூட்டுறவு ஆற்றல் மற்றும் வேளாண் பொருள் பதப்படுத்தல் நிறுவனம் என்ற பெயரிலே ஒரு கூட்டுறவு அமைப்பை கையகப்படுத்தியது.  இந்தக் கூட்டுறவு அமைப்பு செயலற்றுப் போயிருந்தது, இதற்குப் புத்துயிர் ஊட்டும் சவாலை இவர் மேற்கொண்டார். சில காலத்திலேயே இன்று வெங்கடேஷ்வரா கூட்டுறவு விரிவுபடுத்தப்பட்டு பல மாவட்டங்களிலும் பல்கிப் பெருகி விட்டது.   இன்று இந்தக் குழுவானது மஹாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் பணியாற்றி வருகிறது. இதோடு கிட்டத்தட்ட 18,000 பேர் இணைந்திருக்கிறார்கள், இவர்களில் கணிசமானோர் நமது முன்னாள் படையினர்.  நாஸிக்கின் மாலேகான்விலே இந்தக் குழுவின் உறுப்பினர்கள் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் விவசாயப் பண்ணைகளை நடத்தி வருகிறார்கள். இந்தக் குழுவானது நீர் பாதுகாப்பிற்காகவும் கூட பல குளங்களையும் ஏற்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறது.  சிறப்பான விஷயம் என்னவென்றால் இவர்கள் உயிரி பண்ணைமுறை மற்றும் பால்பண்ணையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.  இவர்கள் விளைவித்திருக்கும் திராட்சைகள் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் குழுவின் இரண்டு சிறப்பம்சங்கள் என் கவனத்தை அதிகம் கவர்கின்றன – இவை ஜய் விஞ்ஞான் மற்றும் ஜய் அனுசந்தான்.   இதன் உறுப்பினர்கள் தொழில்நுட்பம் மற்றும் நவீன விவசாய வழிமுறைகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.  இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால், ஏற்றுமதிக்குத் தேவையான பலவகையான சான்றளிப்புக்களின் மீதும் இவர்களின் கவனம் இருக்கிறது. கூட்டுறவிலிருந்து தன்னிறைவு என்ற உணர்வோடு செயலாற்றி வரும் இந்தக் குழுவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த முயற்சியால் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அதிகாரப்பங்களிப்பு ஏற்படுத்தப்படுவதோடு, வாழ்வாதாரத்துக்கான பல வழிவகைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சியானது மனதின் குரலின் அனைத்து நேயர்களுக்கும் கருத்தூக்கம் அளிக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

 

     என் கனிவான நாட்டுமக்களே, இன்று மே மாதம் 28ஆம் தேதியானது, மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான வீர் சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாளாகும். அவருடைய தியாகம், சாகஸம் மற்றும் மனவுறுதியோடு தொடர்புடைய சம்பவங்கள் இன்றும் கூட, நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்க்கின்றன.  வீர சாவர்க்கர் அவர்கள் அந்தமானிலே கொடூரங்களை அனுபவித்த சிறைச்சாலையின் அறைக்குச் சென்ற தினத்தை என்னால் இன்றும் மறக்க முடியாது.  வீர சாவர்க்கரின் ஆளுமை, திடத்தன்மை மற்றும் பரந்துபட்ட மனம் ஆகியவை நிரம்பியது.  அவருடைய தைரியமான, சுயமரியாதை நிரம்பிய இயல்பு, அடிமைத்தன உணர்வுக்கு முற்றிலும் ஒவ்வாததாக இருந்தது. சுதந்திரப் போராட்டம் மட்டுமல்ல, சமூக சமத்துவம் மற்றும் சமூகநீதிக்காகவும் கூட வீர சாவர்க்கர் புரிந்த செயல்கள் இன்றும் கூட நினைவில் கொள்ளப்படுகின்றன.

 

     நண்பர்களே, சில நாட்கள் கழித்து ஜூன் மாதம் 4ஆம் தேதியன்று கபீர்தாசருடைய பிறந்த நாளும் வருகிறது.  கபீர்தாசர் காட்டிய மார்க்கமானது இன்றும் கூட, அன்றைப் போலவே பயனுடையதாக இருக்கிறது.  கபீர்தாசர் கூறுவதுண்டு,

 

கபீரா குவான் ஏக் ஹை, பானி பரே அநேக்.

பர்த்தன் மே ஹீ பேத் ஹை, பானி சப் மே ஏக்.

 

कबीरा कुआँ एक है, पानी भरे अनेक |

बर्तन में ही भेद है, पानी सब में एक ||”

 

அதாவது, குளத்தில் பலவகையான மக்கள் நீர் நிரப்ப வருவார்கள் என்றாலும், குளம் எந்த ஒரு வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை.  நீர் என்னவோ அனைத்துப் பாத்திரங்களிலும் ஒன்று போலவே இருக்கிறது.  புனிதரான கபீர், சமூகத்தைப் பிளவுபடுத்தும் அனைத்துப் பழக்கங்களையும் எதிர்த்தார், சமூகத்திலே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலே ஈடுபட்டார்.  இன்று, நாம் தேசத்தை முன்னேற்றும் உறுதிப்பாட்டோடு கூடவே முன்னேறி வருகிறோம் எனும் போது நாம் புனிதர் கபீரிடமிருந்து கருத்தூக்கம் பெறுவோம், சமூகத்தை சக்தி படைத்ததாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வோம். 

 

      எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, தேசத்தின் ஒரு மாபெரும் மனிதரைப் பற்றி நான் இப்போது உங்களிடம் விவாதிக்க இருக்கிறேன், இவர் அரசியல் மற்றும் திரைத் துறையில் தனது அற்புதமான திறமைகளை, ஆழமான முத்திரையை விட்டுச் சென்றிருக்கிறார்.  இந்த மகத்தான மனிதரின் பெயர் தான் என். டி. ராமாராவ், இவரை நாம் அனைவரும் என் டி ஆர் என்ற பெயரிலே நன்கறிவோம்.  இன்று என் டி ஆர் அவர்களின் 100ஆவது பிறந்த நாளாகும்.  தனது பல்நோக்குத் திறமைகளின் துணையால், இவர் தெலுகு திரைப்படங்களின் நாயகனாகவும் விளங்கியதோடு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கானோரின் இதயங்களையும் வென்றிருக்கிறார்.  இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா?   இவர் பல இதிகாசப் பாத்திரங்களுக்குத் தனது நடிப்புத் திறமையால், மீண்டும் உயிர்ப்பளித்திருக்கிறார்.  பகவான் கிருஷ்ணர், இராமர் போன்ற இன்னும் பிற பாத்திரங்களில் என் டி ஆரின் நடிப்புத் திறமையை மக்கள் எந்த அளவுக்கு விரும்பியிருக்கிறார்கள் என்றால், அவரை மக்கள் இன்றும் கூட நினைவில் வைத்திருக்கின்றார்கள்.  என் டி ஆர், திரையுலகோடு கூடவே அரசியலிலும் கூட தனது தனிப்பட்ட முத்திரையை ஏற்படுத்தியிருக்கிறார்.  இங்கேயும் கூட இவர் மக்களின் முழுமையான அன்பு மற்றும் ஆசிகளைப் பெற்றிருக்கிறார்.  உலகெங்கிலும் உள்ள இலட்சோபலட்சம் மக்களின் இதயங்களில் இன்றும் இடம் பிடித்திருக்கும் என் டி ராமராவ் அவர்களுக்கு நான் இன்று பணிவான நினைவாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.

 

      எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரல் இன்று இம்மட்டே.  அடுத்த முறை, மேலும் சில புதிய விஷயங்களோடு உங்களிடையே வருவேன், அதற்குள் சில பகுதிகளில் வெப்பம் மேலும் அதிகரித்திருக்கும்.   பல இடங்களில் மழையும் தொடங்கியிருக்கும்.  எந்தப் பருவச்சூழலிலும் நீங்கள் உங்கள் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  ஜூன் 21ஆம் தேதியை நாம் உலக யோகக்கலை தினமாகக் கொண்டாடுவோம்.  இதற்கான தயாரிப்புக்கள் நம்நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி நடந்தேறி வருகின்றன.  நீங்கள் இந்தத் தயாரிப்புக்கள் குறித்து, உங்கள் மனதின் குரலை எனக்கு எழுதி வாருங்கள்.   எந்த ஒரு விஷயம் குறித்தும் தகவல் ஏதும் கிடைத்தால், உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துங்கள்.  அதிகபட்ச ஆலோசனைகளை மனதின் குரலில் செயல்படுத்துவதே என் பிரதான முயற்சியாக இருக்கும்.  மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.  அடுத்த மாதம் சந்திப்போம், அதுவரை எனக்கு விடை தாருங்கள், வணக்கம்.

***

AD/DL