எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இளைய பாரதம், இளைஞர்கள், அவர்களின் துடிப்பு, அவர்களின் தேசபக்தி, சேவையில் தங்களை அர்ப்பணித்திருக்கும் இவர்களிடமிருந்து நாம் இன்றைய மனதின் குரலை தொடங்கலாம். நவம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமையை ஒவ்வொரு ஆண்டும் NCC தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். பொதுவாக நமது இளைஞர்களுக்கு நண்பர்கள்-தினம் கண்டிப்பாக நினைவில் இருக்கும். அதுபோலவே பலருக்கு NCC தினம் பற்றியும் அதிகம் நினைவிருக்கும். ஆகையால் நாம் இன்று தேசிய மாணவர் படை பற்றிப் பேசுவோம் வாருங்கள். இதன் வாயிலாக என்னுடைய சில நினைவுகளையும் என்னால் பசுமைப்படுத்திக் கொள்ள முடியும். தேசிய மாணவர் படையின் அனைத்து முன்னாள் இன்னாள் கேடெட்டுக்களுக்கு முதற்கண் என் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நானும் உங்களைப் போலவே ஒரு கேடெட்டாக இருந்திருக்கிறேன், இன்றும் கூட என்னை நான் ஒரு கேடெட்டாகவே கருதி வருகிறேன். நம்மனைவருக்குமே நன்கு தெரியும், NCC என்றால் National Cadet Corps, அதாவது தேசிய மாணவர் படை என்று. உலகின் மிகப்பெரிய சீருடை அணியும் இளைஞர் அமைப்புக்களில் பாரதநாட்டு தேசிய மாணவர் படையும் ஒன்று. இது ஒரு முப்படை அமைப்பு, இதில் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியன அடங்கும். தலைமைப்பண்புகள், தேசபக்தி, சுயநலமற்ற சேவை, ஒழுங்குமுறை, கடும் உழைப்பு ஆகிய அனைத்தையும் உங்கள் பண்புகளாக ஆக்குதல், உங்கள் பழக்கங்களை சீரமைத்துக் கொள்ளும் ஒரு சுவாரசியமான பயணம், இது தான் NCC. இந்தப் பயணம் பற்றி மேலும் சில விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள இன்று சில தொலைபேசி அழைப்புகள் வாயிலாக, தங்களுக்கென ஒரு சிறப்பிடம் அமைத்துக் கொண்ட சில இளைஞர்களுடன் உரையாற்ற இருக்கிறோம். வாருங்கள் அவர்களோடு பேசுவோம்.
பிரதமர் : நண்பர்களே, நீங்கள் எல்லோரும் எப்படி
இருக்கிறீர்கள்?
தரன்னும் கான் : ஜெய் ஹிந்த் பிரதமர் அவர்களே.
பிரதமர் : ஜெய் ஹிந்த்
தரன்னும் கான் : சார், நான் தரன்னும் கான், ஜூனியர் அண்டர்
ஆஃபீசராக இருக்கிறேன்.
பிரதமர் : தரன்னும், நீங்கள் எந்தப் பகுதியைச்
சேர்ந்தவர்?
தரன்னும் கான் : நான் தில்லியில் வசிக்கிறேன் சார்.
பிரதமர் : நல்லது. NCCயில் எத்தனை ஆண்டுகளாக
இருக்கிறீர்கள், என்னமாதிரியான
அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள்?
தரன்னும் கான் : சார், நான் NCCயில் 2017ஆம் ஆண்டில்
சேர்ந்தேன். என்னுடைய இந்த மூன்றாண்டுகள் என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த காலம்.
பிரதமர் : பலே, கேட்கும் போதே அருமையாக
இருக்கிறது.
தரன்னும் கான் : சார், நான் ஒரு விஷயத்தை உங்களிடம்
தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு ஏற்பட்ட மிகச் சிறந்த அனுபவம் என்றால், அது ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாம்களில் என்று தான் சொல்ல வேண்டும். எங்களின் இந்த முகாம்கள் ஆகஸ்ட் மாதம் நடந்தன, அவற்றில் வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் வந்திருந்தார்கள். அவர்களோடு நாங்கள் பத்து நாட்கள் கழித்தோம். நாங்கள் அவர்களின் வாழ்க்கைமுறையைக் கற்றுக் கொண்டோம். அவர்களுடைய மொழி, அவர்கள் பாரம்பரியம், அவர்களின் கலாச்சாரம் என பல விஷயங்கள் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தன. எடுத்துக்காட்டாக, via zhomi என்றால் ஹெலோ, எப்படி இருக்கிறீர்கள் என்று பொருள். அதே போல எங்களுடைய கலாச்சார இரவு நிகழ்ச்சி…. இதில் அவர்கள் தங்களுடைய நடனத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள், தங்கள் நடனத்தை அவர்கள் தெஹ்ரா என்று அழைக்கிறார்கள். அதே போல எப்படி மேகாலாவை அணிய வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இதை அணிந்து கொண்டு நாங்கள் அனைவருமே மிக அழகாக இருந்தோம், அது தில்லிக்காரர்கள் ஆகட்டும், நாகாலாந்தைச் சேர்ந்த நண்பர்கள் ஆகட்டும். நாங்கள் அவர்களை தில்லியைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றோம். அவர்களுக்கு தேசிய போர் நினைவுச் சின்னம் மற்றும் இண்டியா கேட்டைக் காட்டினோம். தில்லியின் சாட் உணவை உண்ணச் செய்தோம், பேல் பூரி அளித்தோம், ஆனால் அவர்களுக்கு அது சற்று காரசாரமாக இருந்தது, ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் சூப்பையே உட்கொள்வதை விரும்புவார்களாம், சற்று வேகவைத்த காய்கறிகளை உண்கிறார்கள் ஆகையால் அவர்களுக்கு இந்த உணவு அந்த அளவுக்குப் பிடிக்கவில்லை; ஆனால் இதைத் தவிர நாங்கள் அவர்களுடன் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம், நிறைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
பிரதமர் : அவர்களுடன் நீங்கள் தொடர்பில்
இருக்கிறீர்களா?
தரன்னும் கான் : ஆமாம் சார், இப்போது வரை அவர்களுடன்
நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
பிரதமர் : சரி, நல்ல விஷயம் செய்தீர்கள்.
தரன்னும் கான் : ஆமாம் சார்.
பிரதமர் : சரி உங்களோடு வேறு யாரெல்லாம்
இருக்கிறார்கள்?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : ஜெய் ஹிந்த் சார்.
பிரதமர் : ஜெய் ஹிந்த்.
ஸ்ரீ ஹரி. ஜீ.வீ : நான் சீனியர் அண்டர் ஆஃபீசர் ஸ்ரீ ஹரி ஜீ.வீ.
பேசுகிறேன் சார். நான் கர்நாடகத்தின்
பெங்களூரூவில் வசிக்கிறேன்.
பிரதமர் : நீங்கள் எங்கே படிக்கிறீர்கள்?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ. : பெங்களூரூவின் க்ரிஸ்து ஜெயந்தி
கல்லூரியில் படிக்கிறேன் சார்.
பிரதமர் : அப்படியா, பெங்களூரூவைச் சேர்ந்தவரா
நீங்கள்?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : ஆமாம் சார்.
பிரதமர் : சரி சொல்லுங்கள்.
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : சார், நான் இளைஞர்கள் பரிமாற்றத்
திட்டப்படி நேற்றுத் தான் சிங்கப்பூர் சென்று திரும்பினேன்.
பிரதமர் : பலே சபாஷ்!!
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : ஆமாம் சார்.
பிரதமர் : சிங்கப்பூரில் உங்கள் அனுபவம் எப்படி
இருந்தது?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : அங்கே ஆறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள்
வந்திருந்தார்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ப்ரூனெய், ஹாங்காங் மற்றும் நேபாளம். இங்கே எங்களுக்கு போர்திட்டப் பாடங்கள் மற்றும் சர்வதேச இராணுவப் பயிற்சிகள் பரிமாற்றம் பற்றித் தெரிந்து கொண்டோம். இங்கே நமது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது சார். இவற்றில் எங்களுக்கு நீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகஸ நிகழ்ச்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன, நீரில் விளையாடும் போலோ விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது சார். மேலும் கலாச்சாரப் பிரிவிலும், நாம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக இருந்தோம் சார். நம்முடைய உடற்பயிற்சியும், ஆணை பிறப்பித்தல் செயல்பாடுகளும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன சார்.
பிரதமர் : நீங்கள் எத்தனை பேர்கள் இருந்தீர்கள் ஹரி?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : 20 பேர்கள் சார். நாங்கள் பத்துப் பேர்
ஆண்கள், பத்துப் பேர்கள் பெண்கள் சார்.
பிரதமர் : சரி, பாரதநாட்டைச் சேர்ந்த இவர்கள்
அனைவரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களா?
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : ஆமாம் சார்.
பிரதமர் : சரி, உங்கள் நண்பர்கள் அனைவரும் உங்கள்
அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சரி வேறு யாரெல்லாம் உங்களுடன் இருக்கிறார்கள்?
வினோலே கிஸோ: ஜெய் ஹிந்த் சார்.
பிரதமர் : ஜெய் ஹிந்த்.
வினோலே : என் பெயர் வினோலே கிஸோ, நான்
சீனியர் அண்டர் ஆஃபீசராக இருக்கிறேன். நான் வடகிழக்குப் பகுதியின் நாகாலாந்தைச் சேர்ந்தவள் சார்.
பிரதமர் : சரி வினோலே, உங்கள் அனுபவம் எப்படி?
வினோலே : சார், நான் தூய ஜோஸஃப் கல்லூரியில்
வரலாற்றுப் பிரிவில் இளங்கலை ஹானர்ஸ் படிப்பு படிக்கிறேன். நான் 2017ஆம் ஆண்டில் NCCயில் சேர்ந்தேன், என் வாழ்க்கையில் நான் மேற்கொண்ட மிகப்பெரிய, அருமையான முடிவு இதுதான் சார்.
பிரதமர் : NCC வாயிலாக இந்தியாவில் எங்கெல்லாம்
பயணிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது?
வினோலே : சார், நான் NCCயில் இணைந்து பல
விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது, பல வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, இவற்றிலிருந்து நான் உங்களுடன் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாமில் பங்கெடுத்துக் கொண்டேன், இது கோஹிமாவில் Sazolie கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில் 400 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
பிரதமர் : அப்படியென்றால் நாகாலாந்தைச் சேர்ந்த
உங்கள் நண்பர்கள் அனைவருக்குமே நீங்கள் இந்தியாவில் எங்கே சென்றீர்கள், என்னவெல்லாம் பார்த்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள், உங்கள் அனுபவத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுகிறீர்கள் இல்லையா?
வினோலே : கண்டிப்பாக சார்.
பிரதமர் : வேறு யாரெல்லாம் உங்களுடன்
இருக்கிறார்கள்?
அகில் : ஜெய் ஹிந்த் சார், என்னுடைய பெயர் அகில்,
நான் ஜூனியர் அண்டர் ஆஃபீஸராக இருக்கிறேன்.
பிரதமர் : சரி சொல்லுங்கள் அகில்.
அகில் : நான் ஹரியாணாவின் ரோஹ்தக்கில்
வசிக்கிறேன் சார்.
பிரதமர் : சரி…..
அகில் : நான் தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங்
கல்லூரியில் இயற்பியல் பிரிவில் ஹானர்ஸ் படிப்பு படித்து வருகிறேன்.
பிரதமர் : சரி… சரி…
அகில் : சார், NCCயில் எனக்கு மிகவும் பிடித்ததே,
அதில் இருக்கும் ஒழுங்குமுறை தான்.
பிரதமர் : சபாஷ்.
அகில் : இது என்னை மேலும் பொறுப்புணர்வுள்ள
குடிமகனாக ஆக்குகிறது சார். NCC மாணவன் என்ற முறையில் உடற்பயிற்சி, சீருடை ஆகியவற்றை நான் மிகவும் விரும்புகிறேன்.
பிரதமர் : எத்தனை முகாம்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு
உங்களுக்குக் கிடைத்திருக்கிறது, எங்கெல்லாம் நீங்கள் சென்றிருக்கிறீர்கள்?
அகில் : சார், நான் 3 முகாம்களில் கலந்து
கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் தேஹ்ராதூனில் இருக்கும் இந்திய இராணுவப் பயிற்சிக் கழகத்தில் attachment முகாமில் பங்கெடுத்துக் கொண்டேன்.
பிரதமர் : எத்தனை நாள் முகாம் அது?
அகில் : சார், இது 13 நாட்கள் முகாம்.
பிரதமர் : நல்லது.
அகில் : சார், நான் இந்திய இராணுவத்தில்
அதிகாரியாக விரும்புகிறேன், நான் இராணுவத்தை நெருக்கமாகப் பார்த்த பின்னர், நானும் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக வேண்டும் என்ற மனவுறுதி மேலும் அதிகமாகி இருக்கிறது சார்.
பிரதமர் : சபாஷ்.
அகில் : மேலும் சார், நான் குடியரசுத் திருநாள்
அணிவகுப்பிலும் பங்கு கொண்டேன், இது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகுந்த பெருமிதம் அளிக்கும் விஷயம்.
பிரதமர் : பலே.
அகில் : என்னை விட என் அம்மாவுக்குத் தான் அதிக
சந்தோஷம் சார். காலையில் 2 மணிக்கு எழுந்து ராஜ்பத்தில் நான் பயிற்சி மேற்கொள்ள செல்லும் போது எங்களிடம் இருக்கும் உற்சாகத்தை என்னால் சொற்களில் விளக்க முடியாது. மேலும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு ஊக்கமளிப்பார்கள், ராஜ்பத்தில் அணிவகுப்பில் கலந்து கொண்ட வேளையில் எங்கள் ரோமக்கால்கள் குத்திட்டு நின்றன சார்.
பிரதமர் : நல்லது உங்கள் நால்வரோடும் உரையாற்றக்
கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது, அதுவும் இந்த NCC நாளன்று. எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம். ஏனென்றால், என் சிறுவயதில் என் கிராமத்துப் பள்ளியில் NCC மாணவனாக நானும் இருந்திருக்கிறேன், இதன் ஒழுங்குமுறை, இதன் சீருடை, இதன் காரணமாக அதிகமாகும் தன்னம்பிக்கை ஆகிய இவை அனைத்தையும் அனுபவித்து உணரக்கூடிய நல்ல வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது.
வினோலே : பிரதமர் அவர்களே உங்களிடம் ஒரு
கேள்வி.
பிரதமர் : ஹாங்… கூறுங்கள்.
தரன்னும் : நீங்களும் NCCயின் அங்கத்தினராக
இருந்திருக்கிறீர்கள்.
பிரதம : யாரது? வினோலே தானே பேசுவது?
வினோலே : ஆமாம் சார், ஆமாம் சார்.
பிரதமர் : சரி வினோலே, சொல்லுங்கள்….
வினோலே : உங்களுக்கு எப்போதாவது தண்டனை
கிடைத்திருக்கிறதா?
பிரதமர் : (சிரித்துக் கொண்டே) அப்படியென்றால்
உங்களுக்கு எல்லாம் தண்டனை கிடைக்கிறது, இல்லையா?
வினோலே : ஆமாம் சார்.
பிரதமர் : இல்லை, எனக்கு எப்போதும் அப்படி
ஏற்பட்டதில்லை ஏனென்றால் நான் ஒருவகையில் ஒழுங்குமுறையை என்றைக்குமே ஏற்று நடப்பவன்; ஆனால் ஒருமுறை கண்டிப்பாக தவறான புரிதல் ஏற்பட்டதுண்டு. நாங்கள் முகாமில் இருந்த போது, நான் ஒரு மரத்தின் மீது ஏறிவிட்டேன். நான் ஏதோ விதிமுறையை மீறிவிட்டதாகத் தான் அனைவருக்கு பட்டது; ஆனால் ஒரு பறவை ஒரு காற்றாடியின் நூலில் சிக்கிக் கொண்டது என்று பின்னர் தான் அனைவர் கவனத்துக்கும் வந்தது. அதைக் காப்பாற்றவே நான் மரத்தின் மீது ஏறினேன். முதலில் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோன்றியது, ஆனால் பின்னர் எனக்குப் பாராட்டு மழை குவிந்தது. இந்த வகையில் என்னுடைய அனுபவம் வித்தியாசமாக அமைந்தது.
தரன்னும் கான் : ஆமாம் சார், இது எங்களுக்கு மிகவும்
பிடித்திருக்கிறது.
பிரதமர் : தேங்க்யூ.
தரன்னும் கான் : நான் தரன்னும் பேசுகிறேன்.
பிரதமர் : ஆ தரன்னும், சொல்லுங்கள்.
தரன்னும் கான் : நீங்கள் அனுமதி அளித்தால் நான் உங்களிடம்
ஒரு வினா எழுப்ப விரும்புகிறேன்.
பிரதமர் : ஆஹா, அவசியம் கேளுங்கள்.
தரன்னும் கான் : சார், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மூன்று
ஆண்டுகளில் 15 இடங்களுக்காவது சென்று பார்க்க வேண்டும் என்று நீங்கள் செய்தி விடுத்தீர்கள். நாங்கள் எங்கே செல்லலாம் என்று உங்களால் சொல்ல முடியுமா? எந்த இடத்துக்குச் சென்றால் உங்களுக்கு பிடித்திருக்கிறது?
பிரதமர் : சொல்லப் போனால் எனக்கு எப்போதுமே
இமயமலை மிகவும் பிடிக்கும்.
தரன்னும் கான் : சரி…
பிரதமர் : ஆனால் மீண்டும் நான் பாரதநாட்டு மக்களிடம்
கேட்டுக் கொள்வது என்னவென்றால், நீங்கள் இயற்கையை நேசிப்பவர் என்றால்….
தரன்னும் கான் : சரி…
பிரதமர் : அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் என ஒரு
வித்தியாசமான சூழலைக் கண்டுகளிக்க விரும்பினால் நீங்கள் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டிய இடம் என்றால் அது வடகிழக்குப் பகுதி தான்.
தரன்னும் கான் : சரி சார்.
பிரதமர் : இதன் காரணமாக வடகிழக்குப் பகுதியில்
சுற்றுலா வளர்ச்சியடையும், பொருளாதாரத்துக்குப் பெரும் ஆதாயம் ஏற்படும், மேலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கனவுக்கும் அங்கே பெரிய அளவில் பலம் சேரும் என்று நான் என்றைக்கும் கூறி வந்திருக்கிறேன்.
தரன்னும் கான் : சரி சார்.
பிரதமர் : ஆனால் இந்தியாவின் அனைத்து இடங்களுமே
மிகவும் பார்க்கத் தகுந்தவை தான், ஆய்வு செய்யப்படக்கூடியவை தான், ஒருவகையில் இவை உள்வாங்கிக் கொள்ளத்தக்கவை.
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : பிரதமர் அவர்களே, நான் ஸ்ரீ ஹரி பேசுகிறேன்.
பிரதமர் : சொல்லுங்கள் ஹரி….
ஸ்ரீ ஹரி ஜீ.வீ : அரசியல்வாதியாகவில்லை என்றால்
வாழ்க்கையில் நீங்கள் என்னவாகி இருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
பிரதமர் : இது மிகவும் கடினமான கேள்வி தான்
ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் பல கட்டங்கள் வருகின்றன. ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஒரு சமயம் தோன்றும், வேறு சமயத்தில் வேறு ஒன்றைச் செய்ய வேண்டும் என்று மனம் விரும்பும்; என்றைக்குமே அரசியலில் ஈடுபடுவதை நான் விரும்பியவன் இல்லை, ஈடுபடுவேன் என்று நினைத்துப் பார்க்கவும் இல்லை. ஆனால் இன்று அடைந்து விட்டேன் எனும் போது, உளப்பூர்வமாக நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருக்கிறது. ஆகையால் இங்கே இல்லை என்றால் எங்கே இருந்திருப்பேன் என்று நான் யோசிக்கவே கூடாது. நான் எங்கே இருந்தாலும் என் முழுமனதோடும் ஆன்மாவோடும் வாழ விரும்புகிறேன், ஈடுபட விரும்புகிறேன், முழு ஆற்றலோடு நாட்டுப்பணியில் ஈடுபட விரும்புகிறேன். இரவா, பகலா என்று பார்ப்பதில்லை, ஒரே நோக்கம்…. என்னை நான் முழுமையாக அர்ப்பணித்து விட்டேன்.
அகில் : பிரதமர் அவர்களே…
பிரதம : சொல்லுங்கள்.
அகில் : நீங்கள் நாள் முழுவதும் இத்தனை
சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கிறோம்; அப்படி இருக்கும் போது டிவி பார்க்கவோ, திரைப்படம் பார்க்கவோ, புத்தகம் படிக்கவோ எங்கிருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?
பிரதமர் : பொதுவாகவே எனக்கு புத்தகம் படிப்பதில்
ஈடுபாடு உண்டு. திரைப்படம் பார்ப்பதில் எனக்கு என்றுமே ஆர்வம் இருந்தது கிடையாது, அதே போல டிவி பார்ப்பதில் அதிக நாட்டம் கிடையாது. மிகவும் குறைவு தான். எப்போதாவது முன்பெல்லாம் டிஸ்கவரி சேனலைப் பார்ப்பதுண்டு, இது என் அறிவை வளர்த்துக் கொள்ள. புத்தகங்களைப் படித்து வந்தேன், ஆனால் இப்போதெல்லாம் படிக்கவே முடிவதில்லை; மேலும் கூகுள் காரணமாகவும் பழக்கங்கள் கெட்டுக் கொண்டு வருகின்றன. ஏனென்றால் ஏதோ ஒரு விஷயத்துக்கான குறிப்பு தேவைப்பட்டது என்றால், உடனடியாக குறுக்குவழியைத் தேடுகிறோம். இப்படி சில நல்ல பழக்கங்கள் அனைவருக்குமே அற்றுப் போய் விட்டன, எனக்கும் தான். சரி நண்பர்களே, உங்கள் அனைவரோடும் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்துவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உங்கள் வாயிலாக NCCயின் அனைத்து மாணவர்களுக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள் நண்பர்களே, தேங்க்யூ.
அனைவரும் : ரொம்ப ரொம்ப நன்றிகள் சார், தேங்க்யூ.
பிரதமர் : தேங்க்யூ, தேங்க்யூ.
அனைவரும் : ஜெய் ஹிந்த் சார்.
பிரதமர் : ஜெய் ஹிந்த்.
அனைவரும் : ஜெய் ஹிந்த் சார்.
பிரதமர் : ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்.
எனதருமை நாட்டுமக்களே, டிஸம்பர் மாதம் 7ஆம் தேதியன்று முப்படையினர் கொடிநாள் என்பதை நாம் என்றுமே மறந்துவிடக் கூடாது. இந்த நாள் தான் நமது வீரம்நிறைந்த இராணுவத்தினருக்கும், அவர்களின் பராக்கிரமத்துக்கும், அவர்களின் தியாகத்துக்கும் நாம் நன்றி செலுத்தி நினைவுகூரும் நாள், நமது பங்களிப்பை அளிக்கும் நாள். வெறும் மரியாதை செலுத்துவதோடு விஷயம் முடிந்து விடுவதில்லை. இதில் நமது பங்களிப்பை அளிக்க டிசம்பர் மாதம் 7ஆம் தேதியன்று அனைத்துக் குடிமக்களும் மனமுவந்து முன்வர வேண்டும். ஒவ்வொருவரிடமும் அன்றைய தினத்தன்று முப்படையினரின் கொடி இருக்க வேண்டும், அனைவரின் பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும். வாருங்கள், இந்த வேளையில் நாம் நமது முப்படையினரின் அளப்பரிய சாகஸம், வீரம், அர்ப்பணிப்பு உணர்வு ஆகிவற்றுக்கு நமது நன்றியறிதலை வெளிப்படுத்துவோம், நமது வீரமான இராணுவத்தினரை நினைவில் கொள்வோம்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது Fit India இயக்கம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் ஒரு பாராட்டுக்குரிய முயல்வை மேற்கொண்டிருக்கிறது. அதாவது Fit India வாரம். பள்ளிகள், Fit India வாரத்தை டிசம்பர் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடலாம். இதில் உடலுறுதி தொடங்கி பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் வினா விடை, கட்டுரை, சித்திரம், பாரம்பரியமான வட்டார விளையாட்டுக்கள், யோகாஸனம், நடனம், விளையாட்டுக்கள் ஆகியவற்றில் போட்டிகள் உண்டு. Fit India வாரத்தில் மாணவர்களுடன் அவர்களின் ஆசிரியர்களும், பெற்றோரும் கலந்து கொள்ளலாம். ஆனால் Fit India என்றால், அறிவுபூர்வமான முயல்வு, காகிதத்தோடு அடங்கிவிடும் செயல்பாடுகள் அல்லது கணிப்பொறி வாயிலான செயல்கள், அல்லது மொபைலில் உடலுறுதி தொடர்பான செயலிகளைப் பார்ப்பது என்பது மட்டுமல்ல. கண்டிப்பாக கிடையாது. வியர்வை சிந்த வேண்டும். உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டும். பெரும்பாலும் செயல்பாடுகளை ஆதாரமாகவே கொண்ட பழக்கம் ஏற்பட வேண்டும். நான் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிக்கல்வி வாரியங்களிடமும், பள்ளிகளிடமும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொரு பள்ளியும், டிசம்பர் மாதத்தில் Fit India வாரத்தைக் கொண்டாட வேண்டும். இதனால் உடலுறுதிப் பழக்கம் நம்மனைவரின் வாடிக்கையாகி விடும். Fit India இயக்கத்தில் உடலுறுதி தொடர்பாக பள்ளிகளின் தரவரிசைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தரவரிசையைப் பெறும் அனைத்துப் பள்ளிகளாலும் Fit India அடையாளச் சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த முடியும். Fit India வலைவாயிலுக்குள் சென்று, பள்ளிகள் தாங்களே தங்களை Fit என்று அறிவித்துக் கொள்ள முடியும். Fit India மூன்று நட்சத்திரம் மற்றும் Fit India 5 நட்சத்திர மதிப்பீடுகள் அளிக்கப்படும். அனைத்துப் பள்ளிகளும், இந்த Fit India மதிப்பீடுகளில் பங்கெடுக்க வேண்டும், Fit India என்பது நமது இயல்பாகவே மாற வேண்டும் என்று நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு மக்கள் இயக்கமாக பரிமளிக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது தேசம் மிகவும் விசாலமானது. ஏகப்பட்ட பன்முகத்தன்மைகள் நிறைந்தது. இது எத்தனை பழமையானது என்றால், இதன் பல விஷயங்கள் நம் கவனத்துக்கே கூட வருவதில்லை, இப்படி இருப்பது இயல்பாக நடப்பது தான். அந்த வகையில் நான் உங்களோடு ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில நாட்கள் முன்பாக, MyGovஇல் பதிவு செய்யப்பட்ட ஒரு கருத்தில் என் கவனம் சென்றது. இந்தக் கருத்தை நவ்கான்வில் ரமேஷ் ஷர்மா அவர்கள் பதிவிட்டிருந்தார். ”ப்ரும்மபுத்ரா நதியில் ஒரு கொண்டாட்டம் நடைபெறுகிறது, இதன் பெயர் ப்ரும்மபுத்ர புஷ்கரம். நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 16ஆம் தேதி வரை இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது, இந்த ப்ரும்மபுத்திரப் புஷ்கரத்தில் இடம்பெற நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் வந்தார்கள்” என்று எழுதியிருக்கிறார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் பாருங்கள்!! இத்தனை மகத்துவம் வாய்ந்த கொண்டாட்டத்துக்கு, நமது முன்னோர்கள் இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பொறுங்கள், இதன் முழுப் பின்னணியையும் நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்கள் ஆச்சரியம் கரைபுரண்டோடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்த அளவுக்கு இது பரந்துபட்ட வகையிலே தெரிந்திருக்க வேண்டுமோ, எந்த அளவுக்கு இது பற்றிய தகவல்கள் நாட்டின் அனைத்து மூலைகளிலும் பரவியிருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு இல்லை. இந்த மொத்த ஏற்பாடுமே நமக்கும், நாடு அனைத்துக்கும் அளிக்கும் செய்தி என்னவென்றால், நாமனைவரும் ஒன்று தான். இது அத்தகைய ஒற்றுமை உணர்வை, சக்தியை அளிக்கவல்லது.
நான் ரமேஷ் அவர்களுக்கு முதற்கண் என் பலப்பல நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நீங்கள் மனதின் குரல் வாயிலாக நாட்டுமக்களுக்கிடையே இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியிருக்கிறீர்கள். இத்தனை மகத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு பற்றிப் பரவலான வகையில் எந்த விவாதமும், பரிமாற்றமும் நடக்கவில்லை, பிரச்சாரம் இல்லை என்று உங்கள் வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறீர்கள். உங்கள் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, நாட்டுமக்கள் பெரும்பாலானோருக்கு இதுபற்றித் தெரியாது. ஆம், ஒருவேளை யாராவது இதை சர்வதேச நதிக் கொண்டாட்டம் என்று அழைத்திருந்தாலோ, பெரிய பெரிய பகட்டான சொற்களைப் பயன்படுத்தி இருந்தாலோ, ஒருவேளை நம் நாட்டில் சிலர் இதைப் பற்றிக் கண்டிப்பாக விவாதங்களில் ஈடுபட்டிருப்பார்கள், பிரச்சாரம் செய்திருக்கலாம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, புஷ்கரம், புஷ்கராலு, புஷ்கர: இந்தச் சொற்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இது என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? இவை நாட்டின் 12 நதிகளில் ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்களின் பல்வேறு பெயர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நதி இடம்பெறும்; அதாவது அந்த நதியின் முறை மீண்டும் 12 ஆண்டுகள் கழித்துத் தான் வரும். இந்த உற்சவம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் 12 நதிகளில் நடக்கிறது, ஒன்றன்பின் ஒன்றாக நடக்கிறது, இப்படி 12 நாட்கள் வரை நடக்கிறது, கும்பமேளாவைப் போலவே இந்தக் கொண்டாட்டமும் தேச ஒற்றுமைக்கு உரம் சேர்க்கிறது, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துக்கு ஒளிகூட்டுகிறது. புஷ்கரம் எப்படிப்பட்ட கொண்டாட்டம் என்றால், இதில் நதியின் பெருமை, அதன் கௌரவம், வாழ்க்கையில் நதியின் மகத்துவம் ஆகியன இயல்பான வகையிலே வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.
நம்முடைய முன்னோர்கள் இயற்கை, சுற்றுச்சூழல், நீர், நிலம், காடுகள் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துப் போற்றி வந்தார்கள். அவர்கள் நதிகளின் மகத்துவத்தைப் பற்றிப் புரிந்து வைத்திருந்தார்கள், நதிகளின்பால் ஆக்கப்பூர்வமான உணர்வை சமூகத்தால் எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும், இது ஒரு சம்பிரதாயமாக எப்படி ஆகும், நதியுடன் கலாச்சாரப் பெருக்கு என, நதியுடன் சமூகத்தை இணைக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்கள். மேலும் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால், சமூகங்கள் நதிகளுடனும் இணைந்தன, ஒன்றோடு ஒன்றும் இணைந்தன. கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் தாமிரபரணியில் புஷ்கரம் நடைபெற்றது. இந்த ஆண்டு இதற்கு ப்ரும்மபுத்ரா நதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; அடுத்துவரும் ஆண்டில் ஆந்திரத்தில் இருக்கும் துங்கபத்ரை நதியில், தெலங்கானாவிலும், கர்நாடகத்திலும் ஏற்பாடு செய்யப்படும். ஒருவகையில் நீங்கள் இந்த 12 இடங்களின் யாத்திரையை ஒரு சுற்றுலாச் சுற்றாக ஏற்பாடு செய்யலாம். இங்கே ஆஸாம் மக்களின் விருந்தோம்பல் குறித்து நான் என் பாராட்டுதல்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இவர்கள் நாடு முழுவதிலும் இருந்தும் வந்த தீர்த்த யாத்ரீகர்களுக்கு மிக அருமையான மரியாதை அளித்தார்கள். ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் தூய்மை பற்றி முழுக்கவனத்தை செலுத்தி இருந்தார்கள். நெகிழிப் பொருட்கள் இல்லாத இடங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். ஆங்காங்கே உயிரி கழிப்பறைகளுக்கான அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நதிகள் தொடர்பான இந்த வகையான உணர்வைத் தட்டி எழுப்ப, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது கொண்டாட்டங்கள், வருங்கால சந்ததிகளையும் இணைக்கும். இயற்கை, சுற்றுச்சூழல், நீர் என அனைத்து விஷயங்களையும் நாம் சுற்றுலா மையங்களாக மாற்றுவோம், நம் வாழ்க்கையின் அங்கமாக ஆக்குவோம்.
என் பாசம்மிகு நாட்டுமக்களே, நமோ செயலியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண்ணான ஷ்வேதா என்ன எழுதியிருக்கிறார், பார்க்கலாமா? “சார், நான் 9ஆம் வகுப்பு படிக்கிறேன், எனது 10ஆம் வகுப்புத் தேர்வுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இருந்தாலும் நான் exam warriors உட்பட, மாணவர்களுக்கான உங்கள் உரைகளைக் கேட்டு வருகிறேன். நான் ஏன் உங்களுக்கு இப்போது எழுதியிருக்கிறேன் என்றால், தேர்வு தொடர்பான அடுத்த விவாதம், உரையாடல் எப்போது இருக்கும் என்று இதுவரை நீங்கள் தெரிவிக்கவில்லை. தயவு செய்து தாங்கள் இதை விரைவாகவே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை முடிந்தால், ஜனவரியிலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்”, என்று எழுதியிருக்கிறார். நண்பர்களே, மனதின் குரல் தொடர்பாக எனக்கு இந்த விஷயம் தான் மிகவும் நெகிழச் செய்கிறது. என்னுடைய இளைய நண்பர்கள், எத்தனை உரிமையோடு, நேசத்தோடு கேள்வி கேட்கிறார்கள், ஆணையிடுகிறார்கள், ஆலோசனைகள் வழங்குகிறார்கள் பாருங்கள்!! இதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷம் மேலிடுகிறது. ஷ்வேதா அவர்களே, நீங்கள் சரியான சமயத்தில் இந்த விஷயத்தை எழுப்பி இருக்கிறீர்கள். தேர்வுகள் வரவிருக்கின்றன, ஒவ்வொரு ஆண்டைப் போலவும் நாம் தேர்வுகள் குறித்த விவாதங்கள் உரையாடல்களில் ஈடுபட வேண்டும். நீங்கள் கூறுவது சரிதான், இந்த நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பலர், இதை மேலும் அதிக தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாக ஆக்கத் தங்கள் ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்கள். மேலும் கடந்த முறை காலம் தாழ்த்தி வந்தது, தேர்வுகளுக்கு மிக நெருக்கமாக வந்தது என்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருக்கிறார்கள். ஷ்வேதாவின் ஆலோசனை சரியானது தான். அதாவது நான் இதை ஜனவரி மாதமே செய்ய வேண்டும். மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், MyGovஇன் குழுவும் இணைந்து இதனை ஒட்டிச் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த முறை தேர்வு பற்றிய விவாதம் ஜனவரியின் தொடக்கத்திலோ, இடையிலோ நடக்குமாறு பார்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். நாடு முழுவதிலும் மாணவர்கள்-நண்பர்களிடம் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. முதலாவதாக, தங்கள் பள்ளியிலிருந்தே இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கலாம். இரண்டாவதாக இங்கே தில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கலாம். தில்லியில் நடக்கும் நிகழ்ச்சிக்கான மாணவர்கள் தேர்வு, MyGov வாயிலாகச் செய்யப்படும். நண்பர்களே, நாமனைவரும் இணைந்து தேர்வு தொடர்பான அச்சத்தைப் போக்க வேண்டும். என்னுடைய இளைய நண்பர்கள், தேர்வுக்காலங்களில் புன்சிரிப்போடும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும், பெற்றோருக்கு எந்த அழுத்தமும் இருக்கக்கூடாது, ஆசிரியர்கள் கவலையில்லாமல் இருக்க வேண்டும், இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு கடந்த பல ஆண்டுகளாக, நாம் மனதின் குரல் வாயிலாக தேர்வுகள் மீதான விவாதத்தை, டவுன் ஹால் மூலமாகவோ, Exam Warriors புத்தகம் மூலமாகவோ தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த நோக்கத்துக்கு நாடு முழுவதிலும் இருக்கும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் வேகம் அளித்திருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வரவிருக்கும் தேர்வுகள் தொடர்பான விவாதங்கள் நிகழ்ச்சியில் நாம் இணைந்து பயணிப்போம், இது நான் உங்களுக்கு விடுக்கும் அழைப்பு.
நண்பர்களே, கடந்த மனதின் குரலில் நாம் 2010ஆம் ஆண்டு அயோத்தி விஷயம் தொடர்பாக இலாஹாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி விவாதம் செய்திருந்தோம். தீர்ப்பு வருவதற்கு முன்பாகவும் சரி, தீர்ப்பு வெளியான பிறகும் சரி, நாட்டில் எந்த வகையில் அமைதியும் சகோதரத்துவமும் காக்கப்பட வேண்டும் என்று நான் அதில் கூறியிருந்தேன். இந்த முறையும், நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்ட போது, 130 கோடி நாட்டுமக்களும், நாட்டுநலனை விட மேலானது வேறொன்றும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற விழுமியங்கள் தாம் அனைத்தையும் விட முக்கியமானவை. இராமர் கோயில் மீதான தீர்ப்பு வந்த போது, நாடு முழுவதும் இதைத் திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டது. முழுமையான இயல்புநிலையோடும் அமைதியோடும் இதைத் தனதாக்கிக் கொண்டது. இன்று மனதின் குரல் வாயிலாக நான் நாட்டுமக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், என் நன்றியறிதல்களைக் காணிக்கையாக்குகிறேன். அவர்கள் எந்த வகையில் பொறுமையையும், சுயக்கட்டுப்பாட்டையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள் என்பதைப் பார்க்கும் போது, என் விசேஷமான நன்றிகளை நான் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். ஒருபுறம், நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டப்பூர்வமான போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதே வேளையில், இன்னொரு புறத்தில் நீதிமன்றத்தின் மீது நாட்டின் மரியாதை மேலும் அதிகரித்திருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், நமது நீதிமன்றத்துக்குமே கூட இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல் என்று சொன்னால் அது மிகையில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வந்த பிறகு, இப்போது நாடு, புதிய எதிர்பார்ப்புக்கள், புதிய ஆசைகளுடன் புதிய பாதையில், புதிய இலக்குகளை நோக்கி முன்னேறத் தொடங்கி இருக்கிறது. புதிய இந்தியா என்ற இந்த உணர்வை நமதாக்கிக் கொண்டு அமைதி, ஒற்றுமை, சகோதர உணர்வு ஆகியவற்றை மனதில் பூண்டு நாம் முன்னேறுவோம். இதுவே என்னுடைய ஆசை, நம்மனைவரின் விருப்பமும் கூட.
எனதருமை நாட்டுமக்களே, நமது பண்பாடு, கலாச்சாரம், மொழிகள் ஆகியன உலகம் முழுவதற்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை அளிக்கின்றன. 130 கோடி நாட்டுமக்கள் கொண்ட இந்த தேசத்தில், தெருவுக்குத் தெரு நீரின் சுவையில் மாற்றம் இருக்கும், பேட்டைக்குப் பேட்டை மொழியே கூட மாறும் என்று கருதப்படுகிறது. நமது பூமியில் பலநூற்றுக்கணக்கான மொழிகள், பல நூற்றாண்டுகளாக மலர்ந்து மணம்வீசி வருகின்றன. ஆனால் அதே வேளையில் இந்த மொழிகளும், வழக்குகளும் எங்கேயாவது காணாமல் போய் விடக்கூடாதே என்ற கவலையும் நமக்கிருக்கிறது. கடந்த நாட்களில் உத்தராக்கண்டின் தார்சுலா பற்றிய ஒரு விஷயத்தை நான் படிக்க நேர்ந்தது. எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. எப்படி தங்களுடைய மொழிகளுக்கு ஊக்கமும் வலுவும் அளிக்கும் வகையில் மக்கள் முன்வருகிறார்கள் என்பது இந்த விஷயத்திலிருந்து தெரிய வந்தது. சில நூதனமான உத்திகள் கையாளப்படுகின்றன, தார்சுலா பற்றிய செய்தி மீது என் கவனம் ஏன் சென்றது என்றால், ஒரு காலத்தில் நான் தார்சூலாவில் தங்கியிருந்திருக்கிறேன். அந்தப் பக்கம் நேபாளம், இந்தப் பக்கம் காளீகங்கை. பித்தோராகட்டின் தார்சூலாவில் ரங் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் வசிக்கிறார்கள்; அவர்களுக்கு இடையே அவர்கள் உரையாடிக் கொள்ளும் மொழியின் பெயர் ரகலோ ஆகும். தொடர்ந்து இவர்களின் மொழியைப் பேசுவோர் குறைந்து வருவதாக இவர்கள் வருத்தப்படுகிறார்கள். ஆனால் என்ன நடந்தது, ஒரு நாள், இவர்கள் அனைவரும் தங்கள் மொழியைக் காப்பாற்ற உறுதியை மேற்கொண்டார்கள். சில காலத்திலேயே இந்த நோக்கத்தோடு ரங் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்….இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாக மட்டுமே இருக்கிறது. இது சற்றேறக்குறைய பத்தாயிரம் இருக்கலாம், ஆனால் ரங் மொழியைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்தார்கள். அவர் 84 வயதான மூத்தவரான திவான் சிங்காகட்டும் அல்லது 22 வயது நிரம்பிய இளைஞரான வைஷாலீ கர்ப்யால் ஆகட்டும், பேராசிரியராகட்டும், வியாபாரியாகட்டும்… அனைவரும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். இந்த நோக்கம் தொடர்பாக சமூக வலைத்தளம் முழுமையாகப் பயன்படுத்தப் பட்டது. பல வாட்ஸப் குழுக்கள் உருவாக்கப்பட்டன. பலநூற்றுக் கணக்கான மக்களை இதன் வாயிலாகவும் ஒன்றிணைத்தார்கள். இந்த மொழிக்கென எந்த எழுத்துவடிவும் கிடையாது. வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் கதைகள், கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவருக்கொருவர் தங்கள் மொழியைச் சீர் செய்தார்கள். ஒருவகையில் வாட்ஸப்பே கூட வகுப்பறையானது, இங்கே யாரும் ஆசிரியரும் இல்லை, யாரும் மாணவரும் இல்லை. ரங்க்லோக் மொழியைப் பாதுகாக்க வேண்டி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன, பத்திரிக்கை வெளியிடப்பட்டு வருகிறது, இதில் சமூக அமைப்புகளின் உதவியும் கிடைத்து வருகிறது.
நண்பர்களே, சிறப்பான விஷயம் என்னவென்றால், ஐக்கிய நாடுகள் சபையும் 2019ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டை சர்வதேச பூர்வகுடி மொழிகள் ஆண்டாக அறிவித்திருக்கிறது. அதாவது வழக்கொழிந்து போகும் அபாயத்தில் இருக்கும் மொழிகளைப் பாதுகாப்பது என்பது இதன் பொருள். 150 ஆண்டுகளுக்கு முன்னால், நவகால ஹிந்தியின் பிதாமகரான பாரதேந்து ஹரிவன்ஷ்ராய் அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போம் –
நிஜ பாஷா உன்னதி அஹை, சப் உன்னதி கோ மூல்,
பின் நிஜ்பாஷா-ஞான் கே, மிடத ந ஹிய கோ சூல்.
“निज भाषा उन्नति अहै, सब उन्नति को मूल,
बिन निज भाषा–ज्ञान के, मिटत न हिय को सूल ||”
அதாவது, தாய்மொழி அறிவு இல்லாமல் உயர்வு சாத்தியமில்லை. அப்படி இருக்கும் வேளையில், ரங் சமுதாயத்தின் இந்த முயற்சி உலகத்துக்கே ஒரு வழிகாட்டியாக அமையக்கூடியது. உங்களுக்கும் இந்த விஷயம் கருத்தூக்கம் அளிக்கிறது என்றால், இன்றிலிருந்தே, உங்கள் தாய்மொழி அல்லது வழக்கு மொழியையே பயன்படுத்தத் தொடங்குங்கள். குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் உத்வேகம் அளியுங்கள்.
மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அவர்கள் தமிழ் மொழியில் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம். அவரது இந்த வரிகள் நம்மனவைவருக்கும் பெரும் உத்வேகம் அளிப்பவையாக இருக்கின்றன.
முப்பது கோடி முகமுடையாள் உயிர்,
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்,
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற்,
சிந்தனை ஒன்றுடையாள்.
அந்தக் காலத்தில் பாடப்பட்டவை இவை. பாரத அன்னைக்கு 30 கோடி முகங்கள் உள்ளன, ஆனால் உடல் ஒன்று தான். அவளுக்கு 18 மொழிகள் இருக்கின்றன, ஆனால் எண்ணம் ஒன்று தான் என்று எழுதி இருக்கிறார்.
எனதருமை நாட்டுமக்களே, சில வேளைகளில் வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்கள்கூட நமக்கு மிகப்பெரிய செய்தியை அளித்துச் சென்று விடுகின்றன. இப்போது பாருங்கள், ஊடகங்களிலும் ஸ்கூபா டைவர்கள் பற்றிய ஒரு செய்தியை நான் படித்துக் கொண்டிருந்தேன். இந்தச் செய்தி நாட்டுமக்கள் அனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாக இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கல் தொடர்பான பயிற்சி அளிக்கும் ஸ்கூபா டைவர்கள், ஒருநாள் மங்கமரிப்பேட்டா கடற்கரை நோக்கி கடலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கடலில் சில ப்ளாஸ்டிக் பாட்டில்களும், பைகளும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தன. இவற்றைச் சுத்தம் செய்யும் போது, விஷயம் மிகவும் தீவிரமானதாக அவர்களுக்குப் பட்டது. நமது கடல்களில் எந்த அளவுக்குக் குப்பைகள் நிரம்பி இருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். கடந்த பல நாட்களாக இவர்கள் கடலில், கரையில், சுமார் 100 மீட்டர் தொலைவுக்குப் பயணித்து, ஆழமான நீரில் மூழ்குகிறார்கள், அங்கே இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வருகிறார்கள். 13 நாட்களிலேயே அதாவது இரண்டு வாரங்களிலேயே, சுமார் 4000 கிலோ எடையுள்ள நெகிழிக் கழிவுகளைக் கடலிலிருந்து வெளியெடுத்திருக்கிறார்கள். இந்த ஸ்கூபா டைவர்களின் இந்தச் சிறிய தொடக்கம், ஒரு பெரிய இயக்கமாக உருவெடுத்து வருகிறது. இவர்களுக்கு அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அக்கம்பக்கத்தில் இருக்கும் மீனவர்களும் அவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளை அளித்து வருகிறார்கள். சற்றே சிந்தியுங்கள், இந்த ஸ்கூபா டைவர்கள் அளித்த உத்வேகத்தால், நாமுமே கூட நம்மருகே இருக்கும் பகுதிக்கு நெகிழிக் கழிவுகளிலிருந்து விடுதலை அளிக்கும் மனவுறுதியை மேற்கொள்வோம், நெகிழிக் கழிவிலிருந்து விடுதலை அடைந்த பாரதம், உலகனைத்துக்குமே ஒரு புதிய எடுத்துக்காட்டாக மிளிரும்.
எனதருமை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் மாதம் 26ஆம் தேதி வரவிருக்கிறது. இந்த நாள் நாடனைத்திற்கும் மிகச் சிறப்பானது. நமது மக்களாட்சிக்குக் குறிப்பாக இது அதிக மகத்துவமானது ஏனென்றால், இந்த நாளன்று தான் நாம் அரசியலமைப்புச் சட்ட நாளைக் கொண்டாடுகிறோம். இந்தமுறை அரசியலமைப்புச் சட்ட நாளுக்கு மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த முறை அரசியலமைப்புச் சட்டத்தை நாம் அமல் செய்து 70 ஆண்டுக்காலம் நிறைவடைய இருக்கிறது. இந்தமுறை, இந்த வேளையில் நாடாளுமன்றத்தின் விசேஷக் கூட்டத்தொடருக்கு ஏற்பாடு செய்யப்படும், நாடு முழுவதிலும் ஆண்டு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். வாருங்கள், இந்த வேளையை முன்னிட்டு நாம் அரசியலமைப்புச் சட்டசபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நமது மரியாதைகலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும், மரியாதையையும் பாதுகாக்கிறது; இது நமது அரசியல் அமைப்புச் சட்ட வித்தகர்களின் தொலைநோக்கு காரணமாகவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அரசியலமைப்புச்சட்ட தினம் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களைப் பாதுகாப்பதோடு, நாட்டை நிர்மாணம் செய்வதில் நமது பங்களிப்பை அளிக்கும் வகையில் நமது அர்ப்பணிப்புக்கு வலுசேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தக் கனவைத் தானே நமது அரசியலமைப்புச்சட்ட நிறுவனர்கள் கண்டார்கள்!!
எனதருமை நாட்டுமக்களே, குளிர்காலம் தொடங்குகிறது, இளம்பனியை நம்மால் உணர முடிகிறது. இமயத்தில் சில பகுதிகள் பனிப்போர்வை போர்த்திக் கொள்ளத் தொடங்கி விட்டன. ஆனால் இந்தப் பருவநிலை, Fit India இயக்கத்துக்கானது. நீங்கள், உங்கள் குடும்பத்தார், உங்கள் நண்பர்கள், உங்கள் கூட்டாளிகள் என அனவைரும் இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டு விடாதீர்கள். Fit India இயக்கத்தை முன்னெடுத்துப் போக, இந்தப் பருவநிலையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பலப்பல நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றிகள்.
******
Today's #MannKiBaat begins with a special interaction with a few youngsters.
— PMO India (@PMOIndia) November 24, 2019
These are youngsters associated with the NCC.
PM Modi also conveys greetings to all NCC Cadets on NCC Day. https://t.co/omR3Qf3sSY
NCC Cadets are sharing their experiences with PM @narendramodi.
— PMO India (@PMOIndia) November 24, 2019
They are sharing how NCC has helped further national integration.
They are also narrating to PM about their recent visit to Singapore.
Do tune in. #MannKiBaat https://t.co/jjjScOqsPP
One of the NCC Cadets asks PM @narendramodi - were you ever punished while you were associated with the NCC?
— PMO India (@PMOIndia) November 24, 2019
Know what PM has to say. #MannKiBaat https://t.co/jjjScOqsPP
I have always liked being in the Himalayas.
— PMO India (@PMOIndia) November 24, 2019
But, if someone likes nature I would strongly urge you all to go to India's Northeast: PM @narendramodi #MannKiBaat
During #MannKiBaat, PM talks about the significance of Armed Forces Flag Day.
— PMO India (@PMOIndia) November 24, 2019
He pays tributes to the valour of our armed forces and at the same time appeals to the people of India to contribute towards the well-being of the welfare of the personnel of the armed forces.
Highlighting an interesting initiative by CBSE to promote fitness among youngsters.
— PMO India (@PMOIndia) November 24, 2019
PM @narendramodi also urges schools to follow a Fit India week in the month of December. #MannKiBaat pic.twitter.com/8HGflknTos
Do you know about Pushkaram?
— PMO India (@PMOIndia) November 24, 2019
A great festival held across various rivers, occurring once a year on the banks of each river.
It teaches us to respect nature, especially our rivers. #MannKiBaat pic.twitter.com/q10azETeb5
On the basis of valuable feedback, the 'Pariksha Pe Charcha' programme will be held earlier, sometime in January.
— PMO India (@PMOIndia) November 24, 2019
The feedback received after the last Town Hall Programme and from Exam Warriors book has been very valuable, says PM @narendramodi. #MannKiBaat pic.twitter.com/m9uZMmQFwT
PM @narendramodi once again thanks the 130 crore people of India for the manner in which the spirit of unity and brotherhood was furthered after the verdict on the Ram Janmabhoomi case. #MannKiBaat pic.twitter.com/ftmaoPsUYN
— PMO India (@PMOIndia) November 24, 2019
A news report from Uttarakhand's Dharchula caught PM @narendramodi's eye.
— PMO India (@PMOIndia) November 24, 2019
This was about how a group of people, across all age groups came together to preserve their language and further their culture. #MannKiBaat pic.twitter.com/ewxw8ZhN8t
A group of scuba divers made a strong contribution towards furthering cleanliness.
— PMO India (@PMOIndia) November 24, 2019
PM @narendramodi highlights their effort during #MannKiBaat. pic.twitter.com/8cATW4ClZk
A special Constitution Day this 26th.
— PMO India (@PMOIndia) November 24, 2019
Come, let us rededicate ourselves to the values enshrined in our Constitution. #MannKiBaat pic.twitter.com/kjSSzRG5Mx