பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் மொரீசியஸ் பணியாளர் தேர்வாணையம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு தேர்வாணையங்களுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். பணியாளர் நியமனத்தில் இருதரப்பும் தங்களது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள பெரிதும் உதவும்.
இரு நாடுகளின் பணியாளர் தேர்வாணையங்களின் இடையிலான இணைப்பை இது மேம்படுத்தும். இரு ஆணையங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் வரையறுக்க உதவும். ஒத்துழைப்பின் அம்சங்கள் பின்வருமாறு.
1. மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் மொரிசீயஸ் தேர்வாணையம் ஆகியவற்றின் செயல்பாடு, பணியாளர் நியமனம் மற்றும் தேர்வு முறைகளில் நவீன அணுகுமுறையைப் பின்பற்றுவது குறித்த பகிர்தல்.
2. ரகசியம் அல்லாத புத்தகங்கள், கையேடுகள், ஆவணங்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல்.
3. எழுத்து தேர்வுக்கான ஆயத்தம், கணினி சார்ந்த தேர்வுகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றிய நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல்.
4. விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்து, முடிவெடுக்க ஒற்றைச்சாளர முறை அனுபவங்களை பகிர்தல்.
5. இயல்பான தேர்வு முறைகளில் காணப்படும் பல்வேறு நடைமுறைகள் குறித்த அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல்.
6. ஆணையங்களின் செயலகங்கள் மற்றும் தலைமையகங்களின் அதிகாரிகளுக்கு பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்வது.
7. அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு, பணியிடங்களுக்கான நியமனம் குறித்த அரசின் முகமைகள் மேற்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை கையாளுவதில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்.
பின்புலம்;
கடந்த காலங்களில் மத்திய பணியாளர் தேர்வாணையம், கனடா, பூடான் ஆகிய நாடுகளின் பணியாளர் தேர்வாணையங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. கனடாவுடனான ஒப்பந்தம் 15.3.2011 முதல் 14.4.2014 வரை செயல்பாட்டில் இருந்தது. பூடானின் ராயல் சிவில் பணியாளர் தேர்வாணையத்துடனான ஒப்பந்தம் 2005-ம் ஆண்டு நவம்பர் 10-ம்தேதி கையெழுத்தாகி மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருந்தது. அது 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி புதுப்பிக்கப்பட்டு, மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி காலாவதி ஆனது.
ஒப்பந்தங்களின் மூலம், பூடான் ராயல் சிவில் தேர்வாணைய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை மத்திய தேர்வாணையம் அளித்தது. அண்மையில், பூடானுடன் மூன்றாவது முறையாக 29.5.2017 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்றாண்டு காலத்துக்கு செல்லுபடி ஆகும் வகையில்,கையெழுத்தாகியது.