Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமரின் கருத்துகள் 

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமரின் கருத்துகள் 


இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும். இந்த பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் கனவுகளையும் நிறைவேற்றுகிறது. இளைஞர்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. சாதாரண குடிமக்கள் வளர்ந்த இந்தியா என்ற குறிக்கோளை முன்னெடுப்பார்கள். இந்த பட்ஜெட், சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும் வலிமைக் கொண்டது. மக்களின் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்.
பொதுவாக, பட்ஜெட்டின் கவனம் அரசின் கருவூலத்தை எவ்வாறு நிரப்புவது என்பதில் இருக்கும். இருப்பினும், இந்த பட்ஜெட் மக்களின் பைகளை எவ்வாறு நிரப்புவது, அவர்களின் சேமிப்பை எவ்வாறு அதிகரிப்பது, நாட்டின் வளர்ச்சியில் அவர்களை எப்படி பங்காளிகளாக்குவது என்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த பட்ஜெட் இந்த இலக்குகளுக்கு அடித்தளம் அமைக்கிறது..
இந்த பட்ஜெட்டில் சீர்திருத்தங்களை நோக்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அணுசக்தியில் தனியார் துறையை ஊக்குவிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு,. எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு சிவில் அணுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை உறுதி செய்யும். பட்ஜெட்டில் அனைத்து வேலைவாய்ப்புத் துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 
கப்பல் கட்டுமானத்திற்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது இந்தியாவில் பெரிய கப்பல்களின் கட்டுமானத்தை அதிகரிக்கும். தற்சார்பு இந்தியா இயக்கத்தை துரிதப்படுத்தும். மேலும் உள்கட்டமைப்பு பிரிவின் கீழ், 50 சுற்றுலா தலங்களில் ஹோட்டல்களைச் சேர்க்கும். சுற்றுலாவை கணிசமாக மேம்படுத்துவதோடு, மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையான விருந்தோம்பல் துறைக்குப் புதிய ஆற்றலை வழங்கும். வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் நாடு முன்னேறி வருகிறது. ஞான பாரதம் இயக்கம் தொடங்கப்பட்டதன் மூலம் ஒரு கோடி கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்திய அறிவு மரபுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும்..
விவசாயிகளுக்காக பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் விவசாயத் துறையிலும் முழு கிராமப்புற பொருளாதாரத்திலும் ஒரு புதிய புரட்சிக்கு அடித்தளமிடும். பிரதமரின் தனம்-தானியா வேளாண் திட்டத்தின் கீழ், நீர்ப்பாசனம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு 100 மாவட்டங்களில் நடைபெறும். உழவர் கடன் அட்டையின் வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவது விவசாயிகளுக்கு அதிக பயனை அளிக்கும்.
பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வருமானக் குழுக்களுக்கும் வரி குறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. இது நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் .
தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களை வலுப்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உற்பத்தியில் ஒட்டு மொத்த கவனம் செலுத்தும் வகையில் பட்ஜெட் உள்ளது. தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ், சுத்தமான தொழில்நுட்பம், தோல், காலணிகள் மற்றும் பொம்மைத் தொழில் போன்ற துறைகள் சிறப்பு ஆதரவைப் பெற்றுள்ளன. உலகச் சந்தையில் இந்தியத் தயாரிப்புகள் பிரகாசிப்பதை உறுதி செய்வதே இலக்கு என்பது தெளிவாக உள்ளது.
மாநிலங்களில் துடிப்பான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த முதலீட்டு சூழலை உருவாக்குவதற்கு பட்ஜெட் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத்தை இரட்டிப்பாக்கும். எஸ்சி, எஸ்டி மற்றும் முதல் முறையாக தொழில் தொடங்கும் பெண்களுக்கு உத்தரவாதம் இல்லாமல் ரூ.2 கோடி வரை கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான குறிப்பிடத்தக்க அறிவிப்பு, அவர்கள் முதல் முறையாக இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்து, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அணுக முடியும். இது உழைப்பின் கண்ணியத்திற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.. மக்கள் நம்பிக்கை 2.0 போன்ற ஒழுங்குமுறை மற்றும் நிதி சீர்திருத்தங்கள், குறைந்தபட்ச அரசு மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.
இந்த பட்ஜெட் நாட்டின் தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கு தயாராகவும் உதவுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டிற்காக அனைத்து குடிமக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

************** 

PKV/KV