பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இன்று புது தில்லியில் மத்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக் கழகத்தை கலைத்து விடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிறுவனத்துக்கான தாமாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் அமைச்சரவையின் 24.12.2014 தேதியிட்ட முடிவின்படி 2015 – ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.
மத்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக் கழகம் இந்திய அரசினால் 1956 – ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 1967 பிப்ரவரி 22 – ந் தேதி கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. கொல்கத்தா உயர்நீதி மன்றம் ஒப்புதல் அளித்த திட்டத்தின்படி முன்ப இருந்த ஆற்று நீராவிக் கப்பல் கம்பெனியின் சொத்துக்கள் மற்றும் கடன்களை மத்திய அரசு அப்போது ஏற்றுக் கொண்டது. இந்த நிறுவனம் உருவாகும் போதே இருந்த குறைபாடுகள் அடிப்படை வசதி சிக்கல்கள் ஆகியவை காரணமாக இந்த நிறுவனம் ஒருபோதும் லாபகரமானதாக இருக்க இயலவில்லை. தொடக்கத்திலிருந்தே நஷ்டத்திலேயே இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் தற்போது 5 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் நலிந்தவற்றுக்கு புத்துயிர் ஊட்டுதல் இயலாத நிலையில் நிறுவனங்களை மூடிவிடுதல் என்ற இந்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப மத்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக் கழகத்தைக் கலைத்துவிடும் நடவடிக்கை அதன் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்றபின் மேற்கொள்ளப்படும். இதனை அடுத்து சொத்துக்கள் விடுவிக்கப்பட்டு மக்கள் நலனுக்கென வேறு நல்ல வழிகளில் பயன்படுத்தப்படும். இந்த சொத்துக்களில் பல இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டு பிரம்மபுத்திரா ஆற்றில் சேவை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்.