இந்திய அரசில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இதுபோன்று நடைபெற உள்ள 5 ஆலோசனைக் கூட்டங்களில், இது முதலாவதாகும்.
இந்த கலந்துரையாடலின்போது, டிஜிட்டல் மற்றும் சிறப்பான ஆளுமை, நிர்வாக வழிமுறைகள் மற்றும் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவது, திறன் மேம்பாடு, தூய்மை இந்தியா, நுகர்வோர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 2022-ம் ஆண்டில் புதிய இந்தியாவை கட்டமைத்தல் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தங்களது அனுபவங்களை அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர்.
குடிமக்களின் நலனுக்கும், அவர்களை திருப்திப்படுத்தவும் வளர்ச்சியுடன், சிறந்த ஆளுமையும் இணைந்து இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார். அதிகாரிகளுக்கு சிறந்த ஆளுமையே பிரதானமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சிறந்த பலன்களைப் பெறுவதற்கு அரசின் அனைத்துப் பிரிவுகளும் நல்லிணக்கத்துடனும், ஒன்றாகவும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். அனைத்து அதிகாரிகளும், முடிவுகளை எடுக்கும்போது, ஏழைகள் மற்றும் சாதாரண குடிமக்களை தங்களது மனதில் நிலைநிறுத்தி செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
நேர்மறையான எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை உலகம் உற்றுநோக்குவதாக பிரதமர் தெரிவித்தார். புவி சமநிலைத்தன்மைக்கு வெற்றிகரமான இந்தியா அவசியம் என்று ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள சாதாரண குடிமக்களிடமும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வலுவான உள்ளுணர்வு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். எளிமையான குடும்பத்தில் பிறந்த இளைஞர்கள், மிகவும் குறைவான வாய்ப்புகளைக் கொண்டே, போட்டித் தேர்வுகள் மற்றும் விளையாட்டுக்களில் சிறந்த நிலையை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திறமையை ஊக்குவிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தாங்கள் பணியில் சேர்ந்த முதல் மூன்று ஆண்டுகளில், தங்களுக்கு உள்ளே இருந்த ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
இது நாட்டின் நலனுக்காக சேவையாற்றுவதற்காக அதிகாரிகளுக்கு கிடைத்த தனிப்பட்ட வாய்ப்பு என்று பிரதமர் தெரிவித்தார். தடைகளை உடைத்தெறிந்து, அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையேயான தகவல் தொடர்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். முடிவுகளை எடுப்பதில் வேகமாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். நல்ல நோக்கத்துடன் நேர்மையான முறையில் எடுக்கப்படும் முடிவுகளை, மத்திய அரசு எப்போதுமே ஊக்குவிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 100 மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். இதன்மூலம், பல்வேறு வளர்ச்சி குறியீடுகளிலும் தேசிய சராசரி அளவுக்கு இந்த மாவட்டங்களை கொண்டுவர முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.