Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மதுராவில் புனித மீரா பாயின் 525 வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

மதுராவில் புனித மீரா பாயின் 525 வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நிகழ்த்திய  உரையின் தமிழாக்கம்


ராதே-ராதே! ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

பிரஜ் பகுதியின் மதிப்பிற்குரிய துறவிகளே, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் அவர்களே, நமது இரண்டு துணை முதலமைச்சர்களே, அமைச்சரவையின் பல உறுப்பினர்களே, மதுரா நாடாளுமன்ற உறுப்பினர், சகோதரி ஹேமமாலினி அவர்களே, மற்றும் பிரஜின் எனது அன்பான குடியிருப்பாளர்களே!

முதலாவதாக, ராஜஸ்தானில் தேர்தல் பேரணியில் பிஸியாக இருந்ததால் இங்கு வர தாமதமானதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அங்கிருந்து நேரடியாக இந்தப் பக்தி சூழலுக்கு வந்துள்ளேன். இன்று பிரஜ் மக்களைச் சந்திப்பதில், பிரஜுக்கு வணக்கம் செலுத்துவதில் நான் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் கிருஷ்ணரும் ராதையும் சைகை செய்தால் மட்டுமே ஒருவர் செல்லக்கூடிய நிலம் இது. இது சாதாரண நிலம் அல்ல. பிரஜ் எங்கள் ‘சியாமா-ஷ்யாம் ஜூ’வின் இருப்பிடம். ‘லால் ஜி’, ‘லாட்லி ஜி’ ஆகியோரின் அன்பின் வெளிப்பாடுதான் பிரஜ். பிரஜ் என்பது உலகம் முழுவதும் வணங்கப்படும் இடமாகும். பிரஜின் ஒவ்வொரு துகள்களிலும், ராதா ராணி வாசம் செய்கிறாள், கிருஷ்ணர் இங்குள்ள ஒவ்வொரு புள்ளியிலும் இருக்கிறார். எனவே, மதுரா, பிரஜ் ஆகிய இடங்களுக்குச் செல்வதன் நன்மைகள் உலகில் உள்ள அனைத்து புனித யாத்திரைகளின் நன்மைகளையும் விட அதிகம் என்று நமது  வேதவசனங்கள் கூறுகின்றன. இன்று, பிரஜ் ராஜ் மஹோத்சவ் மற்றும் புனித மீரா பாய் அவர்களின் 525 வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மீண்டும் பிரஜ் நகரில் உங்களுடன் இருக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பகவான் கிருஷ்ணர் மற்றும் பிரஜின் ராதா ராணிக்கு நான் முழு அர்ப்பணிப்புடன் தலை வணங்குகிறேன். மீரா பாய் அவர்களின் பாதங்களுக்கும், பிரஜின் அனைத்துப் புனிதர்களுக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வெறும் எம்.பி மட்டுமல்ல; அவர் பிரஜ் உடன் ஒன்றி விட்டார். ஹேமா அவர்கள்  ஒரு எம்.பி.யாக பிரஜ் ராஸ் மஹோத்சவத்தை ஏற்பாடு செய்வதில் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பது மட்டுமல்லாமல், கிருஷ்ண பக்தியில் தன்னை மூழ்கடித்து, கொண்டாட்டத்தின் பிரம்மாண்டத்தை அதிகரிக்க தீவிரமாகப் பணியாற்றுகிறார்.

எனது  குடும்ப உறுப்பினர்களே,

என்னைப் பொறுத்தவரை, இந்த நிகழ்வில் கலந்துகொள்வது மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பு வாய்ந்தது. கிருஷ்ணர் முதல் மீரா பாய் வரை குஜராத்துக்கும் பிரஜுக்கும் ஒரு தனித்துவமான தொடர்பு உள்ளது. மதுராவின் கன்ஹா குஜராத்தில் மட்டுமே துவாரகாதீஷ் ஆனார். ராஜஸ்தானில் இருந்து வந்து மதுரா-பிருந்தாவனத்தில் அன்பைப் பரப்பிய புனித மீரா பாய் அவர்களும் தனது இறுதி ஆண்டுகளை துவாரகாவில் கழித்தார். பிருந்தாவன் இல்லாமல் மீராவின் பக்தி முழுமையடையாது. பிருந்தாவன பக்தியால் நெகிழ்ந்து போனதாக  புனித  மீரா பாய் கூறினார்  எனவே, குஜராத் மக்கள், உ.பி மற்றும் ராஜஸ்தானில் பரவியுள்ள பிரஜை பார்வையிடும் வாய்ப்பைப் பெறும்போது, அதைத் துவாரகாதீஷின் ஆசீர்வாதமாகக்   கருதுகிறார்கள். நான் கங்கைத் தாயால்  அழைக்கப்பட்டேன், துவாரகாதீஷின் அருளால், நான் 2014 முதல் உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டு  உங்களுடன் இருக்கிறேன்.

எனது குடும்ப உறுப்பினர்களே,

மீராபாயின் 525-வது பிறந்த நாள் என்பது ஒரு துறவியின் பிறந்த நாள் மட்டுமல்ல. இது பாரதத்தின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தின் கொண்டாட்டம். இது பாரதத்தின் காதல் மரபின் கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டம் மனிதனுக்கும் கடவுள், வாழ்க்கை மற்றும் சிவன், பக்தன் மற்றும் தெய்வம் ஆகியவற்றில் ஒற்றுமையைக் காணும் இருமையற்ற சிந்தனையின் கொண்டாட்டமாகும், இது அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது. இன்று, புனித மீரா பாய் பெயரில் நினைவு நாணயம் மற்றும் டிக்கெட்டை வெளியிடுவதில் நான் அதிர்ஷ்டசாலி. நமது பாரதம் எப்போதுமே ‘மகளிர் சக்தியை’ப்  போற்றும் நாடாக இருந்து வருகிறது. பிரஜ் குடியிருப்பாளர்கள் மற்றவர்களை விட இதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். 

நண்பர்களே,

சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் புனித மீரா பாய் அவர்கள் பாதையைக் காட்டினார். இந்தியாவில் இதுபோன்ற சவாலான காலங்களில், ஒரு பெண்ணின் சுயமரியாதை முழு உலகையும் வழிநடத்தும் சக்தி கொண்டது என்பதை மீரா பாய் நிரூபித்தார். அவர் துறவி  ரவிதாஸை தனது குருவாகக் கருதி வெளிப்படையாகச் சொன்னார் -எனவே, மீரா பாய் இடைக்காலத்தின் சிறந்த பெண் மட்டுமல்ல; சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வழிகாட்டிகளில் ஒருவராகவும் இருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பாரத தேசத்தின் இன்னொரு சிறப்பு அம்சத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்திய மண்ணின் நம்பமுடியாத திறன் என்னவென்றால், அதன் உணர்வு தாக்கப்படும் போதெல்லாம், அதன் உணர்வு பலவீனமடையும் போதெல்லாம், நாட்டில் எங்காவது விழித்தெழுந்த ஓர் ஆற்றல்  உறுதி எடுத்து பாரதத்திற்கு வழிகாட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. சிலர் போர்வீரர்களாகவும், மற்றவர்கள் இந்தப் புனிதப் பணிக்காக புனிதர்களாகவும் ஆனார்கள். பக்தி யுகத்தைச் சேர்ந்த நமது மகான்கள் இதற்கு இணையற்ற உதாரணம். அவர்கள் துறவு மற்றும் பற்றற்ற தன்மையின் அடித்தளங்களைக் கட்டினர், அதே நேரத்தில், நமது பாரதத்தை பலப்படுத்தினர். பாரதத்தின் முழுமையையும் பாருங்கள்: தெற்கில் ஆழ்வார், நாயன்மார்  போன்ற மகான்களும், ராமானுஜர் போன்ற அறிஞர்களும் இருந்தனர்! வடக்கில் துளசிதாசர், கபீர், ரவிதாஸ், சூர்தாஸ் போன்ற மகான்கள் இருந்தார்கள்! பஞ்சாபில் குருநானக் தேவ் இருந்தார். கிழக்கில், வங்காளத்தில் சைதன்ய மகாபிரபு போன்ற மகான்கள் …. இன்னும் உலக அளவில் தங்கள் ஒளியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேற்கில், குஜராத்தில், நர்சிங் மேத்தா போன்ற துறவிகள் இருந்தனர். மகாராட்டிரத்தில் துக்காராம், நாமதேவர் போன்ற மகான்கள் இருந்தார்கள்! ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் இருந்தன. ஆனாலும், அவர்களின் செய்தி ஒன்றுதான், அவர்களின் குறிக்கோள் ஒன்றுதான். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தி மற்றும் அறிவின் வெவ்வேறு சிந்தனைகள் தோன்றிய போதிலும், அவை ஒட்டுமொத்த பாரதத்தை  ஒன்றிணைத்தன.

சகோதர சகோதரிகளே,

சுதந்திரத்தின் ‘அமிர்த காலத்தால்’ முதல் முறையாக அடிமைத்தன மனநிலையில் இருந்து நாடு இன்று வெளியே வந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து ஐந்து உறுதிமொழி எடுத்துள்ளோம். நமது பாரம்பரியத்தை பெருமைப்படுத்தி நாம் முன்னேறி வருகிறோம். காசியில் உள்ள விஸ்வநாதரின் புனித இருப்பிடம் இன்று அற்புதமான வடிவத்தில் நம் முன் உள்ளது.  உஜ்ஜயினியில் உள்ள மகாகால் கம்பீரத்துடன் இருப்பதை  நாம் காண்கிறோம். இன்று லட்சக்கணக்கான மக்கள் கேதார்நாத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலின் குடமுழுக்கு தேதியும் வந்துவிட்டது. மதுராவும், பிரஜும் இந்த வளர்ச்சிப் பந்தயத்தில் இனி பின்தங்காது. பிரஜ் பகுதியிலும் பிரம்மாண்டம் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பிரஜின் வளர்ச்சிக்காக ‘உத்தரப்பிரதேச பிரஜ் தீர்த்த விகாஸ் பரிஷத்’ நிறுவப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  மீராபாயின் 525-வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி!

ராதே-ராதே! ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

**** 

(Release ID: 1979266)