Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை


மணிப்பூர் ஆளுநர் திருமதி.நஜ்மா ஹெப்துல்லா அவர்களே; செல்வாக்கு மிகுந்த மணிப்பூர் முதலமைச்சர் திரு.என்.பிரேன் சிங் அவர்களே; எனது அமைச்சரவை சகாக்களான திரு.கஜேந்திர சிங் செகாவத், திரு.ஜிதேந்திர சிங், திரு.ரத்தன்லால் கட்டாரியா அவர்களே; மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த எனது அருமை சகோதர, சகோதரிகளே!!

இந்த கொரோனா நெருக்கடி காலத்திலும் கூட, நாடு நின்றுவிடவில்லை; சோர்வடைந்து விடவில்லை என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி ஓர் உதாரணமாக உள்ளது. தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்படும் வரை, கொரோனாவுக்கு எதிராக நாம் தீவிரமாகப் போராடுவதுடன், வெற்றிபெற வேண்டியதும் அவசியம். அதேநேரத்தில், வளர்ச்சிப் பணிகளை முழுமூச்சுடன் மேற்கொள்ள வேண்டும். இந்த முறை, இரண்டு விதமான சவால்களை கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இந்த ஆண்டும் கூட, வடகிழக்குப் பகுதி, கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான தருணத்தில், அவர்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் ஆதரவாக நிற்கிறது என்பதை உங்களுக்கு நான் உறுதியாக கூறுகிறேன். தேவையான அனைத்துப் பணிகளையும் அனைத்து மாநில அரசுகளுடன் தோளோடு தோள் நின்று செயல்படுத்த இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நண்பர்களே,

மணிப்பூரில் கொரோனா வைரசின் பரவலையும், வேகத்தையும் கட்டுப்படுத்த மாநில அரசு இரவு பகலாக உழைத்து வருகிறது. பொதுமுடக்கக் காலத்தில் மணிப்பூர் மக்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யவும், தவித்துவரும் மக்களைத் திரும்ப அழைத்து வரவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ், மணிப்பூரைச் சேர்ந்த 25 லட்சம் ஏழை சகோதர, சகோதரிகள், அதாவது, 5-6 லட்சம் ஏழைக் குடும்பங்கள், இலவச உணவு தானியங்களைப் பெற்றுள்ளன. அதே போல, உஜ்வாலா திட்டத்தின்கீழ், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சகோதரிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதே போன்று, இந்த நெருக்கடி காலத்தில், மத்திய அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு தொடர்ந்து உதவியாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

நண்பர்களே,

இம்பால் உள்ளிட்ட மணிப்பூர் முழுவதையும் சேர்ந்த லட்சக்கணக்கான நண்பர்களுக்கு, குறிப்பாக, நமது சகோதரிகளுக்கு இன்று மிகப்பெரும் நாள்.  ராக்கி திருநாள் கொண்டாடப்பட உள்ள சூழலில், மணிப்பூரைச் சேர்ந்த சகோதரிகள், மிகப்பெரும் பரிசைப் பெற உள்ளனர். ரூ.3,000 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ள மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டமானது, இங்குள்ள மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்க உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பெருநகர இம்பால் உள்ளிட்ட 25 நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும், 1,700-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்க உள்ளது. மிக முக்கியமாக, இன்றைய தேவையை மட்டுமன்றி, அடுத்த 20-22 ஆண்டுகளின் தேவையைக் கருத்தில் கொண்டும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், லட்சக்கணக்கான மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பது மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது. தூய்மையான நீரை குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், நோய்க்கு எதிரான தடுப்பை அது ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, இதன் பயன்பாடு என்பது குழாய் வழி நீர் விநியோகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை.  ஒவ்வொரு குடும்பத்துக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது என்ற நமது விரிவான இலக்குக்கு இந்தத் திட்டம், நிச்சயமாக உத்வேகம் அளிக்கும். இந்தக் குடிநீர்த் திட்டத்துக்காக மணிப்பூர் மக்கள், குறிப்பாக, மணிப்பூரைச் சேர்ந்த நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நாட்டில் ஜல்ஜீவன் இயக்கத்தை கடந்த ஆண்டில் தொடங்கி வைத்த போது, முந்தைய அரசுகளை விட பல மடங்கு வேகமாக நாம் பணியாற்றுவோம் என்று நான் தெரிவித்தேன். 15 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் நீர் விநியோகிக்க வேண்டிய நிலையில், ஒரு தருணத்திலும் கூட பணிகள் நின்றுவிடும் என்று கருத வேண்டியதில்லை. இதன் காரணமாக, பொதுமுடக்கக் காலத்திலும் கூட, குழாய் வழி இணைப்புகளை ஏற்படுத்தவும், கிராமப்புறங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பஞ்சாயத்துகளின் உதவியுடன் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டில் நாள்தோறும் ஒரு லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன என்பதே தற்போதைய நிலைமை. எனவே, ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் குடிநீர் தொடர்பான நெருக்கடிகளைக் குறைத்து வருகிறோம். இந்த ஒரு லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை எளிதாக மாறுகிறது. இது மிக விரைவில் சாத்தியப்பட உள்ளது. ஏனெனில், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் இயக்கமாக மாற உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், குழாய்களை எங்கு பதிக்க வேண்டும்? எங்கிருந்து நீர் எடுக்கப்பட வேண்டும்? தொட்டிகளை எங்கே அமைக்க வேண்டும்? இதற்கு எவ்வளவு தொகை தேவை? என்பது குறித்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக, சகோதரிகளும், மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து முடிவுசெய்கின்றனர்.

நண்பர்களே,

அரசின் அமைப்பு இந்த அளவுக்குப் பரவலாக்கப்படும் போது, அடிமட்ட அளவில் மேம்பாடு அடையும் போது, நீரின் சக்தியை உங்களால் யூகிக்க முடியும்.

நண்பர்களே,

சிறப்பான வாழ்க்கைக்கு, வாழ்வதை எளிதாக்குவது என்பது முக்கியமானது. பணம் வரும், போகும்; ஆனால், எளிதாக வாழ்வது என்பது ஒவ்வொருவரின், குறிப்பாக, ஒவ்வொரு ஏழை சகோதரர், தாய், சகோதரி, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமையாகும்.

எனவே, கடந்த ஆறு ஆண்டுகளில், எளிதாக வாழ்வதற்கான மிகப்பெரும் இயக்கமும் கூட, இந்தியாவில் தொடங்கியுள்ளது. தனது குடிமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏழைகள் மற்றும் சாதாரண மக்களை முன்னேறுவதற்கு  ஊக்குவிக்க ஒவ்வொரு மட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று, மணிப்பூர் உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்தியாவும், திறந்தவெளி மலக்கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்துக்கும் இன்று மின்சார இணைப்பு சென்றடைந்துள்ளது. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பமும் மின்சாரத்தால் இணைக்கப்பட்டுள்ளன. ஏழைகளிலும் ஏழைகளாக  உள்ள மக்களின் சமையலறைக்கு இன்று சமையல் எரிவாயு சென்றடைந்துள்ளது. ஒவ்வொரு கிராமமும் சிறந்த சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. வீடு இல்லாத ஒவ்வொரு ஏழைக்கும் நல்ல வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தூய்மையான குடிநீர் மட்டுமே மிகப்பெரும் பற்றாக்குறையாக உள்ளது; எனவே, இதனை நிறைவேற்றுவதற்காக குடிநீர் விநியோகப் பணிகள் அதிவேகமாக மேற்கொள்ளப்படுகின்றன.

நண்பர்களே,

சிறப்பான வாழ்க்கை, மேம்பாடு மற்றும் வளம் ஆகியவை இணைப்பு வசதிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவை. இங்குள்ள மக்கள், எளிதாக வாழ்வதற்கு மட்டுமன்றி, பாதுகாப்பான மற்றும் சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நிறைவேற்றுவதற்கும் வடகிழக்குப் பகுதிக்கு இணைப்பு அவசியமாகிறது. இது ஒரு புறம் மியான்மர், பூடான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் நமது சமூக மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதுடன், மறுபுறம், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையை ஊக்குவிக்கிறது.

இதன் மூலம், கிழக்கு ஆசியாவுடன் நமது பழமையான கலாச்சார நல்லுறவுக்கு நுழைவு வாயிலாக இருப்பதுடன், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறைக்கான எதிர்காலமாக வடகிழக்கு திகழ்கிறது. இந்த சிந்தனையுடன், மணிப்பூர் உள்ளிட்ட ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதிக்கும் இணைப்பு என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சாலைகள், நெடுஞ்சாலைகள், விமானப் பாதைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் அதிவேகத் தகவல் சேவை வழிகள் (I ways) மட்டுமன்றி, எரிவாயுக் குழாய், ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு, மின் தொகுப்பு போன்ற நவீனக் கட்டமைப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களும் வடகிழக்குப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதிக்கும் கட்டமைப்புக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்களை நான்கு வழிச்சாலை மூலமும், மாவட்டத் தலைமையகங்களை இருவழிச் சாலைகள் மூலமும், கிராமங்களை அனைத்து வானிலைக்கும் ஏற்ற சாலைகள் மூலமும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, 3,000 கிலோமீட்டர் தொலைவுக்கான சாலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. 6,000 கிலோமீட்டர் தொலைவுக்கான சாலைகளை அமைக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

வடகிழக்கில் ரயில்வே கட்டமைப்புத் துறையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடியும். ஒருபுறம், புதிய ரயில் நிலையங்களுக்கு ரயில்கள் சென்று சேர்வதுடன், மறுமுனையில், வடகிழக்கில் உள்ள ரயில்வே பாதைகள், அகலப்பாதையாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த மாற்றத்தை நீங்கள் அனைவரும் உணர முடியும். ரூ.14,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் ஜிரிபம்-இம்பால் ரயில் பாதைக் கட்டுமானப் பணிகள், மணிப்பூரில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. அதே போல, வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரையும் சிறந்த ரயில்வே வழித்தடங்கள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணைப்பதற்கான பணிகள் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

சாலை மற்றும் ரயில் பாதைகளைப் போன்றே, வடகிழக்கின் விமானப் போக்குவரத்தும் கூட முக்கியத்துவம் வாய்ந்தது. வடகிழக்குப் பகுதியில் தற்போது மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய விமான நிலையங்கள் உள்ளிட்ட 13 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இம்பால் விமான நிலையம் உள்ளிட்ட வடகிழக்கில் ஏற்கனவே உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யவும், நவீன வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.3,000 கோடிக்கும் மேலான தொகை செலவிடப்படுகிறது.

நண்பர்களே,

வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றொரு மிகப்பெரும் பணியாக உள்நாட்டு நீர்வழித் தடங்கள் உள்ளன. மிகப்பெரும் புரட்சியை என்னால் பார்க்க முடிகிறது. தற்போது 20-க்கும் மேற்பட்ட தேசிய நீர்வழிப்பாதைகள் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில், சிலிகுரி முனையத்துடன் மட்டும் இணைப்பு என்பது நின்றுவிடாது.  கடல் மற்றும் ஆறுகள் இணைப்பு மூலம், தடையில்லா இணைப்புக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இணைப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பதன் மூலம், நமது விவசாயிகளும், நமது தொழில்முனைவோரும் அளவில்லாப் பயனை அடைந்து வருகின்றனர். இது வடகிழக்குப் பகுதியின் போக்குவரத்து நேரத்தைக் குறைக்கிறது. அதற்கும் மேலாக, வடகிழக்கில் உள்ள கிராமங்களுக்கும், விவசாயிகளுக்கும், பால், காய்கறிகள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற பொருள்களுக்கு நாட்டில் உள்ள மிகப்பெரும் சந்தைகள் மற்றும் வெளிநாடுகளுடன் நேரடித் தொடர்பு கிடைத்துள்ளது.

நண்பர்களே,

வடகிழக்கு இந்தியாவின் இயற்கையான மற்றும் கலாச்சார வேற்றுமையே, கலாச்சார பலத்தின் மிகப்பெரும் அடையாளமாக உள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரும் பெருமை. இது போன்ற சூழ்நிலையில், நவீன கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் போது, சுற்றுலாவுக்கும் மிகப்பெரும் ஊக்குவிப்பு கிடைக்கிறது.  மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களின் சுற்றுலாத் திறன் இதுவரை முழுமையாகக் கண்டறியப்படவில்லை. தற்போது, சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், வெளிநாடுகளுக்கும் வடகிழக்கு இந்தியாவின் காட்சிகள் சென்று சேரும் திறன் இருப்பதை நான் தற்போது காண்கிறேன். வடகிழக்கில் இன்னும் சென்றடையாத இடங்கள் குறித்த வீடியோக்கள், மக்களை ஆச்சரியப்படுத்துகின்றன. இந்த இடம் நமது நாட்டில் உள்ளதா? என்று மக்கள் சிந்திக்கின்றனர். இந்த சக்தியின் பலனை வடகிழக்குப் பகுதி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நண்பர்களே,

நாட்டின் வளர்ச்சியில் ஊக்குவிப்புக் கருவியாக மாறும் திறன் வடகிழக்குப் பகுதிக்கு உள்ளது. ஒவ்வொரு நாளும் எனக்கு நம்பிக்கை வலுப்பட்டு வருகிறது. ஏனெனில், ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியிலும் தற்போது அமைதி நிலவிவருகிறது. எதிர்மறையான செய்திகளை மட்டுமே வழங்கிய அதே இடத்தில், தற்போது அமைதி, வளம், முன்னேற்றம் என்ற மந்திரம் எதிரொலிக்கிறது.

மணிப்பூரில் தடுப்புப் போராட்டங்கள் (blockade) என்பது வரலாற்றின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. இதே கருத்தை தற்போது முதலமைச்சர் கூறினார். எங்களுக்கு ஆதரவு அளித்து, ஊக்குவித்த வடகிழக்குப் பகுதி மக்கள், குறிப்பாக மணிப்பூர் பகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தடுப்புப் போராட்டங்கள் என்பது கடந்தகாலச் செயலாக மாறிவிட்டது. அசாமில், பல ஆண்டுகளாக நீடித்த வன்முறை முடிவுக்கு வந்துள்ளது. திரிபுரா மற்றும் மிசோரமிலும் கூட, இளைஞர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டுள்ளனர். தற்போது புரூ-ரீங் அகதிகள், சிறந்த வாழ்க்கையை நோக்கி மாறிவருகின்றனர்.

நண்பர்களே,

சிறந்த கட்டமைப்பு, இணைப்பு மற்றும் அமைதி ஆகிய மூன்று விஷயங்களை ஏற்படுத்திவிட்டால், தொழில் துறையினரின் முதலீடு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பல மடங்கு ஏற்படும். வடகிழக்குப் பகுதியில் இயற்கைப் பொருள்கள், மூங்கில் ஆகிய இரண்டு வகையான பொருள்கள் உள்ளன. சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் திறன், இந்த இரண்டு பொருள்களுக்கும் உள்ளன. மேலும், வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாய சகோதர, சகோதரிகளுடன் இன்று நான் பேச விரும்புகிறேன். நாட்டின் இயற்கைப் பொருள்களுக்கான தலைநகரமாக வடகிழக்குப் பகுதியால் மாற முடியும் என்று நான் கூறிவருகிறேன். நான் மேலும் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். ஒரு நாள், சில வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் பொருளாதார நிபுணர்களை நான் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் ஆச்சரியமளிக்கும் விஷயம் ஒன்றைத் தெரிவித்தனர். வடகிழக்குப் பகுதியில் உள்ள விவசாயிகள், செம்பனையை (பாமோலின்) விளைவிக்கத் தொடங்கினால், நாடும், வடகிழக்குப் பகுதியும் மற்றும் விவசாயிகளும் பெருமளவில் பயனடைவார்கள் என்று தெரிவித்தனர். இந்தியாவில் இன்று செம்பனை எண்ணெய்க்கு உறுதியான சந்தை உள்ளது. வடகிழக்குப் பகுதி விவசாயிகள் இயற்கை வேளாண்மையுடன் செம்பனையையும் விளைவித்தால், எந்த அளவுக்கு உங்களால் இந்தியாவுக்கு சேவையாற்ற முடியும் என்பதை நீங்கள் யூகித்துப் பாருங்கள். நமது பொருளாதாரத்துக்கு எவ்வாறு புதிய உத்வேகத்தை நம்மால் அளிக்க முடியும்? தங்களது மாநிலங்களில் செம்பனை இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநில அரசுகளையும் நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளுக்குக் கற்பித்து ஊக்குவியுங்கள். இந்த முயற்சியில் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதற்கு திட்டமிட, ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவோம். இது குறித்து நாம் சிந்திப்போம். இதன் காரணமாகவே, மணிப்பூரில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு நான் தற்போது கூறுகிறேன்.

வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகள், எப்போதுமே உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுக்கிறார்கள். அதுவும் அவர்கள் குரல் கொடுப்பதோடு நின்றுவிடவில்லை. வடகிழக்குப் பகுதி மக்களின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், உள்ளூர் பொருள்களால் அவர்கள் பெருமையடைகிறார்கள். இது போன்ற கழுத்து ஆடைகளை (scarves) நான் அணியும்போது, அதனை இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்கள், பெருமையாகக் கருதுகிறார்கள் என்று எனக்கு நினைவிருக்கிறது. உங்களது பொருள்கள் மீது பெருமை கொள்வது மிகப்பெரிய விஷயம். எனவே, உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுங்கள் என்று வடகிழக்குப் பகுதி மக்களுக்கு நான் சொல்வது சரியாக இருக்காது என்று நான் கருதுகிறேன்; ஏனெனில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே நீங்கள் நான்கு அடி முன்னே வைத்துள்ளீர்கள். உள்ளூர்ப் பொருள்களால் நீங்கள் மிகவும் பெருமையடைந்துள்ளீர்கள். இது நம்முடையது என்று பெருமையாக உணர நீங்கள் விரும்புகிறீர்கள். மேலும், இதுவே மிகப்பெரும் பலம்.

வடகிழக்குப் பகுதியில் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருள்களுக்கு சில நேரங்களில் மதிப்புக் கூடுதல், ஊக்குவிப்பு மற்றும் சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை. தற்போது சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்ளூர் பொருள்களுக்கு மதிப்பு கூட்டவும், சந்தைப்படுத்தவும் தொகுப்புகள் உருவாக்கப்படுகின்றன என்பது கூட மக்களுக்குத் தெரியாது. இந்தத் தொகுப்புகளில், புதிய வேளாண் தொழில் நிறுவனங்களுக்கும், பிற தொழிற்சாலைகளுக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. இது போன்ற சூழலில், வடகிழக்குப் பகுதி மக்களுக்கு, தங்களது இயற்கைப் பொருள்களை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லத் தேவையான ஒவ்வொரு வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

நண்பர்களே,

இந்தியாவின் மூங்கில் இறக்குமதியை, உள்ளூர் உற்பத்தி மூலம், மாற்றியமைக்கும் திறன் வடகிழக்குப் பகுதிக்கு உள்ளது. நாட்டில் ஊதுபத்திகளுக்கான தேவை மிகப்பெரும் அளவில் உள்ளது. ஆனால், இதற்கும் கூட, பல கோடி ரூபாய் மதிப்பிலான மூங்கில்களை இறக்குமதி செய்கிறோம். இந்தச் சூழ்நிலையை மாற்ற, நாட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், வடகிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களும் பயனடைய உள்ளன.

நண்பர்களே,

வடகிழக்குப் பகுதியில் மூங்கில் துறையை ஊக்குவிக்க மூங்கில் தொழில்துறைப் பூங்காவுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக, மூங்கிலிலிருந்து உயிரி எரிபொருளைத் தயாரிப்பதற்கான ஆலை, நுமாலிகரில் கட்டப்பட்டுள்ளது. மூங்கில் விவசாயிகள் மற்றும் கைவினைப் பொருள்களுடன் தொடர்புடைய கலைஞர்களுக்காகவும், மற்ற வசதிகளை ஏற்படுத்தவும் தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது வடகிழக்குப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கும், புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கும் மிகப்பெரும் அளவில் பயனளிக்கும்.

நண்பர்களே,

வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்களின் பலனை, தீவிரமாகச் செயல்படும் மாநிலங்களால் மட்டுமே பெறமுடியும். மணிப்பூரில் எல்லையில்லா வாய்ப்புகள் உள்ளன. இதனை மணிப்பூர் மாநிலம் விட்டுவிடாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். இது இங்குள்ள விவசாயிகள் மற்றும் இளம் தொழிலதிபர்களுக்கு மிகுந்த பயனை அளிக்க உள்ளது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உள்ளூர் அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யவே நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சுகாதாரம், கல்வி, திறன்மேம்பாடு, புதிய தொழில்கள் மற்றும் பிற பயிற்சிகள் ஆகியவற்றுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்கள் தற்போது தொடங்கப்படுகின்றன.

விளையாட்டுப் பல்கலைக்கழகம், உலகத்தரம் வாய்ந்த மைதானங்கள் ஆகியவற்றை அமைத்ததன் மூலம், நாட்டில் விளையாட்டுத் துறையில் திறன் வாய்ந்தவர்களைக் கொண்ட மிகப்பெரும் மையமாக மணிப்பூர் மாறியுள்ளது. அதற்கும் மேலாக, நாட்டின் மற்ற பகுதிகளிலும் கூட, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து இளைஞர்களுக்கும், சிறந்த தங்கும் விடுதிகள் போன்ற சிறந்த வசதிகள் இன்று செய்து தரப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கான பாதையை நாம் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இந்தப் புதிய குடிநீர்த் திட்டத்துக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசிகளை நான் எதிர்பார்க்கிறேன். இதன் மூலமே, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கும் நமது கனவை நிறைவேற்ற எந்தத் தடையும் இருக்காது. மேலும், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே நம்மால் செயல்படுத்த முடியும். தாய்மார்களும், சகோதரிகளும் எங்களுக்கு ஆசி வழங்குங்கள்! நாங்கள் பணியாற்ற விரும்புகிறோம். இந்தப் பணியை மேற்கொள்ள எங்களுக்கு ஆசி வழங்குங்கள். உங்களது ஆசி, எங்களுக்கு மிகப்பெரும் பலத்தை அளிக்கும். ரக்சாபந்தன் திருவிழா, விரைவில் வர உள்ளது. எனவே, உங்களிடம் ஆசி பெற விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். தூய்மை விவகாரத்தில் வடகிழக்குப் பகுதி எப்போதுமே மிகவும் தீவிரமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும். இது நாட்டுக்கே முன்மாதிரியைப் போன்றது. இன்று நாம் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறோம். இந்தச் சூழலில், ஆறு அடி இடைவெளி அல்லது தனி நபர் இடைவெளி, முகக்கவசம், கைகளை அடிக்கடிக் கழுவுதல் ஆகியவற்றைக் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும்; பொது வெளிகளில் எச்சில் துப்பக்கூடாது. இன்று, கொரோனாவுக்கு எதிராகப் போராட இதுவே பலம் வாய்ந்த ஆயுதம். கொரோனாவுக்கு எதிராகப் போராட இது நமக்கு தொடர்ந்து உதவும்.

மிக்க நன்றி!!!

===========================