Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மணிப்பூரில் நடைபெற்ற 105 –வது இந்திய அறிவியல் காங்கிரஸ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை.

மணிப்பூரில் நடைபெற்ற 105 –வது இந்திய அறிவியல் காங்கிரஸ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை.

மணிப்பூரில் நடைபெற்ற 105 –வது இந்திய அறிவியல் காங்கிரஸ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை.

மணிப்பூரில் நடைபெற்ற 105 –வது இந்திய அறிவியல் காங்கிரஸ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை.


மணிப்பூர் மாநில ஆளுநர் டாக்டர். நஜ்மா ஹெப்துல்லா அவர்களே,

முதலமைச்சர் திரு.என்.பிரன்சிங் அவர்களே,

மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்களே

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, பெரியோர்களே, தாய்மார்களே

அண்மையில் மறைந்த மதிப்பிற்குரிய இந்திய அறிவியல் அறிஞர் மூவர், பத்மவிபூஷண் பேராசிரியர் யஷ்பால்,

பத்மவிபூஷண் யு ஆர் ராவ் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் பல்தேவ்ராஜ் ஆகியோருக்கு எனது அஞ்சலியைச் செலுத்தி இந்த உரையை தொடங்குகிறேன். இந்திய அறிவியல் மற்றும் கல்விக்கு இவர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

அகிலத்தின் ஆகச்சிறந்த இயற்பியல் அறிஞர்களுள் ஒருவரான,

ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறைவிற்கு உலகுடன் இணைந்து நாமும் அஞ்சலி செலுத்துவோம்.

நவீன அண்டவியல் ஆராய்ச்சியின் சிறந்த நட்சத்திரம் அவர். இந்தியாவின் நண்பரான அவர் நமது நாட்டிற்கு இரண்டு முறைவந்துள்ளார்.

அண்டவெளியில் கருந்துளைகள் பற்றிய அவருடைய ஆராய்ச்சிக்காக மட்டுமின்றி பல்வேறு தடைகளையும் மீறிசிறந்த தன்னம்பிக்கையின் சின்னமாக அவர் செய்தசாதனைகளின் காரணமாக வேசாமானிய மனிதரும் ஹாக்கிங்கின் பெயரை அறிந்து வைத்துள்ளனர். உலகில் தோன்றிய மிகச்சிறந்த உந்துசக்தியாக அவர் என்றென்றும் அறியப்படுவார்.

நண்பர்களே,

105-வது இந்திய அறிவியல் காங்கிரஸில் பங்கேற்றிட நான் இம்பால் வந்திருப்பதற்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திடப்பாதை அமைத்திடும் அறிவியல் அறிஞர்களுக்கிடையே இருப்பதை எண்ணி நான் உவகை கொள்கிறேன்.

மணிப்பூர் பல்கலைக்கழகம் இந்த முக்கிய நிகழ்வை நடத்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாட்டின் வடகிழக்கு பகுதியில் உயர்கல்விக்கான முக்கிய இடமாக இந்தபல்கலைக்கழகம் உருவெடுத்துவருகிறது.

100 ஆண்டுக்காலத்தில் வடகிழக்குப் பகுதியில் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடத்தப்படுவது இது 2வது முறைமட்டுமே என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களின் மறுமலர்ச்சியின் அடையாளமாய் இதுதிகழ்கிறது.

இது எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும்.தொன்று தொட்டே வளர்ச்சி மற்றும் வளத்தின் மறுபெயராய் அறிவியல் விளங்குகிறது. இன்று இங்கே குழுமிஇருக்கும்,

நம் நாட்டின் மிகச்சிறந்த அறிவியல் திறமைகளான நீங்கள், பேரறிவு,

புதுமை மற்றும் செயல்திறனின் இருப்பிடங்கள். மாற்றங்களை உருவாக்கிடும் மாபெரும் சக்திகள். ,
ஆர் & டி எனப்படும் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பதன் பொருளை, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி என்று மாற்றவேண்டிய காலம் கனிந்துவிட்டது. அறிவியல் என்பது அடிப்படையில் ஒருமாபெரும் இலட்சியத்திற்கான வழிமுறையே ஆகும். மனித இனத்தின் முன்னேற்றத்தையும், நலவாழ்வையும் எளிதாக உருவாக்கி, மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதே அறிவியல்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வலிமையால் 125 கோடி இந்தியர்களின் வாழ்வை எளிதாக்கிடும் பணியினை விரைவுபடுத்திட, நாம் உறுதிபூண்டிடவும், காலம் கனிந்துவிட்டது.

1944 ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையினர், விடுதலை முழக்கம் செய்திட்ட,

வீர பூமியான மணிப்பூரில் நான் நின்று கொண்டிருக்கிறேன். மணிப்பூரிலிருந்து செல்லும் போது நமது நாட்டிற்காக என்றென்றும் நிலைத்திருக்கும் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற அதே அர்ப்பணிப்புணர்வை நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள் என்று நான் உறுதியாய் நம்புகிறேன்.

இங்கு நீங்கள் சந்தித்த அறிவியல் அறிஞர்களுடன் தொடர்ந்து இணக்கமாய்ப் பணியாற்று வீர்கள் என்றும் நம்புகிறேன்.

அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான பெரும் பிரச்னைகளுக்கு திறமையான தீர்வுகாணும் வேளையில், பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த அறிவியல் அறிஞர்களிடையே நெருங்கிய ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கான அறிவியல், வேளாண்மை சார்ந்த வானியல் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, கிராமப்புற வேளாண் அறிவியில் சேவைத் திட்டத்தின்கீழ், மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பலனளித்து வருகிறது. இந்தச் சேவையை வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நீட்டிக்க, நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல்வேறு புதிய மையங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான அறிவியல் தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றன. மணிப்பூரில் “ பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் “ ஒன்று அமைக்கப்படும். இந்த ஆராய்ச்சி மையம், வடகிழக்கு மாநிலங்களில் கிடைக்கும் நறுமண மற்றும் அரிய மருத்துவ குணமுடைய காட்டு மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும்.

மாநிலப் பருவநிலை மாற்ற மையங்கள், வடகிழக்குப் பகுதியில் உள்ள ஏழு மாநிலங்களிலும் அமைக்கப்படும். மர வகைகளின் பட்டியலிலிருந்து மூங்கில் விடுவிக்கப்பட்டு, அதன் அறிவியல் தன்மைகளின் அடிப்படையில், புல் வகைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக, மிகப் பழமையான சட்டத்தை மாற்றியுள்ளோம். இந்த திருத்தத்தின் மூலம், மூங்கில்களை தடையின்றி எடுத்துச்செல்ல வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், உற்பத்தி மையங்களையும் பயன்பாட்டு மையங்களையும் ஒருங்கிணைப்பதையும், இந்த திருத்தம் உறுதி செய்கிறது. மூங்கில் மூலம் கிடைக்கும் அனைத்து பயன்களையும் விவசாயிகள் அடையவும், இந்த திருத்தம் வழி செய்கிறது. தேசிய மூங்கில் இயக்கத்தையும் அரசு ரூ1,200 கோடி மதிப்பீட்டில், மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் மணிப்பூர் போன்ற மாநிலங்கள் அதிக பயனடையும்.

நண்பர்களே,

இந்திய அறிவியல் மாநாடு மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. இந்தியாவின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்களான ஆச்சார்யா ஜே.சி.போஸ், சி.வி.ராமன், மேக்நாத் சாஹா மற்றும் எஸ்.என்.போஸ் ஆகியோர் இதற்கு தலைமை வகித்துள்ளனர். இத்தகைய, தலைசிறந்த அறிவியல் அறிஞர்கள் ஆற்றிய ஆகச் சிறந்த பணிகள், புதிய இந்தியாவுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் நடத்திய கலந்துரையாடல்களின்போது, நாம் எதிர்நோக்கும் சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும்படி, அறிவியல் அறிஞர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குப் பயனளிக்கக்கூடிய சவாலான பணிகளை மேற்கொள்ளுமாறும், நான் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். அந்த வகையில், இந்த ஆண்டு இந்திய அறிவியல் மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருத்துருவான “திட்டப்பணிகள் சென்றடையாத மக்களுக்கு, அறிவியல் – தொழில்நுட்பம் மூலம் அதனை எடுத்துச் செல்வது” என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானதாகும். இந்தத் தலைப்பு எனது இதயத்தை தொடுவதாக உள்ளது.

2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்க கௌரவிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, சாலை அமைக்கும் அரிய திட்டத்தைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். இந்த முறையில் அமைக்கப்படும் சாலைகள், நீண்ட காலம் சேதமடையாமல் இருப்பதுடன், தண்ணீர் உட்புகாத வகையிலும் அதிக பாரத்தை தாங்கக் கூடியவையாகவும் உள்ளன. அதேவேளையில், பூதாகாரமாக உருவெடுக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் திட்டத்தையும் அவர் கண்டுபிடித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை பேராசிரியர் வாசுதேவன், அரசுக்கு இலவசமாகவே கொடுத்துள்ளார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஏற்கனவே 11 மாநிலங்களில், சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, அர்விந்த் குப்தா என்கிற அவர்களுக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி, அறிவியல் ஆய்வுகளுக்கான பொம்மைகளை தயாரித்து, மாணவ சமுதாயம் அறிவியலை கற்றுக்கொள்ள உந்துசக்தியாக திகழ்கிறார். 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட சிந்தகிந்தி மல்லேசம் கண்டுபிடித்த, லஷ்மி ASU இயந்திரம், புடவை நெசவில் நேரத்தையும், தொழிலாளர் தேவையையும், கணிசமாகக் குறைத்துள்ளது. எனவே, அறிவியல் அறிஞர்கள், நமது காலத்தில் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகாணவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், தேவையான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அறிவியல் ரீதியான சமூகப் பொறுப்புணர்வு தற்போது காலத்தின் தேவையாகும்.

நண்பர்களே,

மாநாட்டுத் தலைப்பு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு போதுமான அறிவியல் ஆற்றல் கிடைப்பதை நாம் உறுதி செய்துள்ளோமா? அவர்களது ஆற்றலை மேம்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோமா? நமது அறிவியல் சாதனைகள் சமூகத்திற்கு சிறந்த முறையில், எடுத்துச் செல்லப்பட்டதா? என்பதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது நமது இளைஞர்களிடையே அறிவியல் உணர்வை கற்பிக்க உதவும். அத்துடன், அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட, இளைஞர்களின் மனதை தூண்டி, அவர்களைப் கவரவும், இது வகைசெய்யும். நாட்டிலுள்ள தேசிய நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களை இளைஞர்கள் பயன்படுத்த அனுமதிக்கவேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுடன் கலந்துரையாடுவதற்கான நடைமுறையை வகுக்குமாறு அறிவியல் அறிஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், ஆண்டுதோறும் 100 மணிநேரத்தை 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுடன் செலவிட்டு, அறிவியல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கவேண்டும். 100 மணிநேரத்தில் 100 மாணவர்களை சந்திப்பதன் மூலம், எத்தனை அறிவியல் அறிஞர்களை நம்மால் உருவாக்கமுடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

நண்பர்களே,

2030ஆம் ஆண்டுக்குள், பெட்ரோலியம் அல்லாத எரிபொருளை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனை 40 சதவீதம் அதிகரிக்க நாம் உறுதிபூண்டுள்ளோம். சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் கண்டுபிடிப்பை ஓர் இயக்கமாக மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதுபோன்ற கூட்டணி, தூய்மையான எரிசக்தி பற்றிய ஆராய்ச்சிக்கு உந்துதலை ஏற்படுத்தும். அணுசக்தி துறை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, தலா 700 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட கனநீர் உலைகளை, 10 இடங்களில் அமைத்து வருகிறது. உள்நாட்டு அணுசக்தி தொழிலுக்கு இது, மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்தியா மிகப்பெரிய அணு உற்பத்தி நாடு என்ற பெயருக்கு வலுசேர்ப்பதாகவும், இந்த முயற்சி அமையும். அண்மைக் காலங்களில், இந்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ள கையடக்க பால் தர ஆய்வுக் கருவி, ஒவ்வொரு குடும்பத்தினரும் பாலின் தரத்தை சில வினாடிகளிலேயே பரிசோதிக்க பெரிதும் உதவுவதாக உள்ளது. மரபியல் ரீதியான சில அரிய நோய்களை கண்டறிவதற்கானக் கருவிகளைக் கண்டுபிடிப்பதிலும், இந்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் முன்னேற்றம் கண்டுள்ளது. உழவர்கள் பயன்படுத்தும், அதிக மதிப்புள்ள நறுமண மற்றும் மருத்துவத் தாவரங்கள் மூலம் அவர்களது வருவாயை அதிகரிக்க இந்த கருவி உதவும்.

இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான ஒருமித்த முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். சில தினங்களுக்கு முன்பு புதுதில்லியில் நடைபெற்ற காச நோய் ஒழிப்பு மாநாட்டில், காசநோயை முற்றிலும் ஒழிக்க உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள காலக்கெடுவான 2030ஆம் ஆண்டுக்கு 5 ஆண்டுகள் முன்னதாக, 2025ஆம் ஆண்டுக்குள்ளாகவே, இந்தியாவில் இந்நோயை ஒழிக்க உறுதிபூண்டுள்ளதை எடுத்துரைத்தோம். நமது விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் மூலம், ஒரே பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் ஆற்றலையும் வெற்றிகரமாக நிரூபித்துள்ளோம். இந்திய அறிவியல் அறிஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையாக உழைத்ததன் மூலமே, இந்தச் சாதனைகளை அடைய முடிந்தது.

சந்திராயன்-I வெற்றியடைந்ததை அடுத்து நாம் சந்திராயன் இரண்டை வரும் மாதங்களில் ஏவ இருக்கிறோம். முற்றிலும் உள்நாட்டு முயற்சியான இதில் நிலவில் தரையிறங்குதல், அதன் பரப்பில் ரோவர் வாகனத்தில் பயணம் செய்தல் போன்றவை அடங்கியிருக்கும். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு அலைகள் பற்றிய கொள்கையை வெளியிட்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தக் கொள்கை சரியானதே என்று சர்வதேச லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் புவியீர்ப்புயில் அலை உற்றுநோக்கல் ஒத்துழைப்பு அமைப்பில் பங்கேற்ற ஒன்பது இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த 37 இந்திய அறிவியல் அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். இது அடிப்படை அறிவியலின் லேசர்கள், ஒளி அலைகள் மற்றும் கணினி ஆகியவை குறித்த அறிவை விரிவாக்கம் செய்யும்.

நமது அறிஞர்கள் இதனை அடையும் வகையில் அயராது பாடுபட்டு வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நகரங்களில் முக்கிய அறிவியல் நிறுவனங்களைச் சுற்றி மீச்சிறப்புத் தொகுப்புகளை உருவாக்குவது குறித்து நான் பேசி வருகிறேன். இதன் நோக்கம் நகர அடிப்படையிலான கல்வி நிறுவனங்கள் முதல், பயிற்சி நிறுவனங்கள், தொழில் துறையினர், தொடக்கநிலை நிறுவனங்கள் வரை அனைத்து அறிவியல் தொழில்நுட்பப் பங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குவதாகும். இதனால் புதிய கண்டுபிடிப்புகள் மேம்படும், மற்றும் உலகளவில் போட்டியிடக் கூடிய துடிப்பான ஆராய்ச்சி மையங்கள் உருவாகும்.

நாம் சமீபத்தில் பிரதமரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளோம். இத்திட்டத்தின்படி, நாட்டின் ஐஐஎஸ்சி, ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்ஈஆர், ஐஐஐடி போன்ற மிகச்சிறந்த நிறுவனங்களில் உள்ள பேரறிவு படைத்த மாணவர்கள் ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சிக்களில் பிஹெச்டி படிப்பில் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தத் திட்டத்தினால் நமது நாட்டிலிருந்து சிறந்த அறிவாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். முன்னணி அறிவியல் தொழில்நுட்பப் பிரிவுகளில் உள்நாட்டு ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் இது பெரிதும் உதவியாக அமையும்.

அன்பர்களே,

இந்தியா பெரிய சமூகப் பொருளாதார சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்த சவால்கள் நமது மக்கள் தொகையில் பெரும்பான்மையை பாதிப்பவை.

இந்தியாவை தூய்மையானதாக பசுமையானதாக வளமிக்கதாகச் செய்வதற்கு நமக்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவி அவசியம். விஞ்ஞானிகளிடம் இருந்து நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை தெளிவாக்க விரும்புகிறேன். நமது பழங்குடி மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் சிக்கில் செல் அனிமியா எனப்படும் ஒருவகை ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் எளிமையான, குறைந்த செலவுத் தீர்வை நமது மருத்துவ அறிஞர்கள் கண்டுபிடிக்க முடியுமா? நம் நாட்டுக் குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு தேசிய ஊட்டச்சத்து இயக்கத் திட்டத்தை தொடங்கியுள்ளது. நீங்கள் அளிக்கும் ஆலோசனைகளும் தீர்வுகளும் இந்த இயக்கத்தின் நோக்கத்திற்கு உதவும்.
இந்தியாவிற்கு கோடிக்கணக்கான புதிய வீடுகள் தேவைப்படுகின்றன. இந்தத் தேவையை சமாளிக்கும் வகையில் நமது அறிவியல் அறிஞர்கள் 3-டி பிரிண்டிங் எனப்படும் முப்பரிமாண அச்சுத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உதவிட முடியுமா? நமது நதிகள் மாசுபட்டு உள்ளன. அவற்றைத் தூய்மைப்படுத்த உங்களது புதுமையான கருத்துக்களும், புதிய தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன.

திறம்பட்ட சூரியசக்தி, காற்றுசக்தி, சக்தி சேமிப்பு, மின்சாரம் கொண்டு செல்லும் தீர்வுகள், புகையில்லா தூய்மையான சமையல் நிலக்கரியை மெத்தனால் போன்ற தூய்மையான எரிபொருளாக மாற்றுதல், நிலக்கரியிலிருந்து தூய்மையான சக்தி, மின்சக்தி வினியோகிக்க திறன்மிகு வலை அமைப்புகள், குறு வலை அமைப்புகள், உயிரி எரிபொருள்கள் போன்றவை அனைத்திற்கும் நமக்கு பல்முனை அணுகுமுறை அவசியப்படுகிறது.

2022 வாக்கில் 100 கிகாவாட் சூரிய மின்சக்தி அமைப்புகள் ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது சந்தைகளில் கிடைக்கும் சூரிய சக்தி மின்சார உற்பத்தி அமைப்புகளின் திறன் 17 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை மட்டுமே உள்ளது. நமது ஆராய்ச்சியாளர்கள் மேலும் திறன்மிக்க சூரிய சக்தி மின்சார அமைப்புகளை உருவாக்க இயலுமா? இத்தகைய அமைப்புகளை இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் உற்பத்தி செய்ய இயலுமா? இத்தகைய நடவடிக்கைகளால் நாம் சேமிக்கக் கூடிய ஆதாரங்களின் அளவை கற்பனை செய்து பாருங்கள்.

இஸ்ரோ அமைப்பு விண்வெளியில் செயற்கைக் கோள்கள் இயக்கத்திற்கென மிகச்சிறந்த பாட்டரி அமைப்பை பயன்படுத்துகிறது. இதர நிறுவனங்கள் இஸ்ரோவுடன் இணைந்து மொபைல் போன்கள், மின்சார மோட்டார் வாகனங்கள் போன்றவற்றுக்கு மிகவும் திறன்பட்ட பாட்டரி அமைப்புகளை உருவாக்க இயலும்.

புதிய நடைமுறைகள், மருந்துகள், ஆட்கொல்லி நோய்களான மலேரியா, ஜப்பான் மூளைக்காய்ச்சல் போன்றவற்றுக்கு தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். யோகா, விளையாட்டுக்கள், பாரம்பரிய அறிவு ஆகியவற்றிலும் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும். சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வேலைவாய்ப்பு உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இன்றைய உலக போட்டிச்சூழலில் அவை அதிகளவு சவால்களை எதிர்நோக்கியுள்ளன. நமது அறிவியல் அறிஞர்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் குறு-சிறு-நடுத்தர தொழில்கள் துறைக்கு இவ்வகையில் உதவி செய்து, அவற்றின் நடைமுறைகள் உற்பத்திப் பொருட்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்க முடியுமா.

நண்பர்களே,

நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் அடிப்படையான எதிர்காலத்துக்கு உகந்த தொழில் நுட்பங்களை அமல்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும். கல்வி, மருத்துவப் பராமரிப்பு, வங்கிச் சேவைகள் ஆகியவற்றை அதிக அளவிலான குடிமக்களுக்கு கொண்டு சேர்க்க தொழில்நுட்பம் அவசியம். இத்தகைய தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் 5-ஜி பிராட்பேண்ட் தொலைத் தொடர்பு கட்டமைப்பு தரங்கள் மற்றும் உற்பத்திக்கும், 2020 வாக்கில் இந்தியா தயாராவதுடன், இவற்றில் முக்கிய இடத்தையும் பிடித்தாக வேண்டும். செயற்கை அறிவு, பிக்டேட்டா பகுப்பாய்வு, எந்திரக்கற்றல், கணினி இயற்பியல் அமைப்புகள், திறம்பட்ட தகவல் தொடர்பு ஆகியன அதிநவீன உற்பத்தி, அதிநவீன நகரங்கள், மற்றும் தொழிலியல் 4.0 ஆகிய திட்டங்களுக்கு முக்கிய மூலக்கூறுகளாகும். 2030 வாக்கில் உலக புதுமைப்படைப்புக் குறியீட்டில் முதல் 10 நாடுகளில் இந்தியாவை இடம்பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு உழைக்க வேண்டும்.

நண்பர்களே,

இன்னும் நான்கு ஆண்டுகளில் நாம் நமது விடுதலையின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளோம். நாம் அனைவரும் இணைந்து 2022–க்குள் புதிய இந்தியாவை அமைத்திட உறுதிபூண்டுள்ளோம். “எல்லோரும் இணைவோம், எல்லோரும் உயர்வோம்” வகையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட வளத்தை நோக்கி நாம் உழைப்பது அவசியம். இந்த இலக்கை அடைய உங்கள் ஒவ்வொருவரின் முழு மனத்துடனான பங்களிப்பு அவசியம். இந்தியப் பொருளாதாரம் தற்போது உயர்வளர்ச்சி வீத பாதையில் சென்று கொண்டுள்ளது. ஆனால், மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் நமது தரம் குறைந்ததாகவே உள்ளது. இத்தகைய முரண்பாடான நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் நிலவும் ஏற்றத்தாழ்வுகளே ஆகும். இதனைச் சரிசெய்ய 100-க்கும் மேற்பட்ட, அபிலாஷைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் செயல்பாட்டை மேம்படுத்த முழு வீச்சிலான முயற்சியை தொடங்கியுள்ளோம். முக்கியமான துறைகளான நலவாழ்வு, ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நீர் ஆதாரங்கள், உள்ளடக்கிய நிதிமுறை, திறன்மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு ஆகிய முக்கியத் துறைகளில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தத் துறைகள் அனைத்திற்கும் புதுமையான தீர்வுகள் அவசியம். இத்தகைய தீர்வுகள் உள்ளூர் சவால்களையும், தேவைகளையும் சந்திக்கக் கூடியவை. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை “அனைவருக்கும் ஒரே அளவு” என்ற அணுகுமுறை பயன்படாது. நமது விஞ்ஞான நிறுவனங்கள் இந்த அபிலாஷைகள் அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சேவை செய்ய இயலுமா? திறன்களையும், தொழில்முனைவுத் திறனையும் உருவாக்கும் தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவதிலும், பரப்புவதிலும் அவை வினை ஊக்கியாக செயல்பட இயலுமா?
இந்தியத் தாய்த் திருநாட்டுக்கே இது ஒரு மகத்தான சேவை. கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகிய இரண்டிலும் இந்தியாவிற்கு நீண்ட வரலாற்று அடிப்படையிலான, வளமான பாரம்பரியம் உண்டு. இந்தத் துறையில் முன்னணி நிலையில் இருக்கும் நாடுகளுடன் நமக்கு உரிமையுள்ள இடத்தை மீண்டும் பெறும் தருணம் வந்து விட்டது. சோதனைக் கூட ஆராய்ச்சியிலிருந்து நிலப்பரப்பு செயல்பாட்டுக்கு தனது நடவடிக்கையை விரிவாக்குமாறு அறிவியல் சமுதாயத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளின் மூலம் நாம் சிறந்த எதிர்காலத்துக்கான பாதையில் பயணத்தை தொடங்கியுள்ளோம். இந்த எதிர்காலமே நாம் நமக்கும், நமது குழந்தைகளுக்கும் விரும்புவது ஆகும்.

அனைவருக்கும் நன்றி

***