Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை

‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை


இந்த நிகழ்ச்சியில் என்னுடன் இணையும் எனது சக அமைச்சர்களான திரு டி வி சதானந்த கவுடா, திரு மன்சுக் மாண்டவியா, திரு அனுராக் தாகூர், ஹிமாச்சல பிரதேச முதல்வர் திரு ஜெயராம் தாகூர், மேகாலயா  முதல்வர் திரு கான்ராட் கே சங்மா, துணை முதல்வர் திரு பிரஸ்டோன் டைன்சாங், குஜராத் துணை முதல்வர் திரு நிதின் பட்டேல், நாடு முழுவதும் உள்ள மக்கள் மருந்தகம் மையங்களின் பயனாளிகளே மருத்துவர்களே, சகோதர சகோதரிகளே!

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ள மக்கள் மருந்தகத் திட்ட பயனாளிகளுடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றேன். அவர்களுடனான ஆலோசனை, இந்தத் திட்டம் ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

சேவை மற்றும் வேலைவாய்ப்பின் ஊடகமாக இத் திட்டம் வளர்ந்து வருகிறது. குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதுடன் இந்த மக்கள் மருந்தக மையங்களின் வாயிலாக நமது இளைஞர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது.

இந்த மையங்களில் சானிட்டரி நாப்கின்கள் வெறும் ரூ 2.5 க்கு கிடைப்பது நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் சுகாதாரத்தில்  நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 11 கோடிக்கும் அதிகமான சானிட்டரி நாப்கின்கள் இந்த மையங்களில் விற்பனையாகியுள்ளன.

அதேபோல கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு வகைகளும் இந்த மையங்களில் வழங்கப்படுகின்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் பெண்களால்  நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டம் பெண்களிடையே தற்சார்பை ஊக்குவிப்பதாக அமைகிறது.

சகோதர சகோதரிகளே,

இந்தத் திட்டத்தின் மூலம் மலைவாழ் பகுதிகள், வடகிழக்கு மற்றும் பழங்குடியின  பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

7500-வது மையம் ஷில்லாங்கில் இன்று துவக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பகுதிகளில் இந்த மையங்களின் வளர்ச்சியை இது எடுத்துக் காட்டுகிறது.

நண்பர்களே,

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை நாட்டில் நூற்றுக்கும் குறைவான மையங்கள் மட்டுமே செயல்பட்டதால் 7500 என்ற மைல்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த எண்ணிக்கையை விரைவில் 10,000மாக  உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

அதேபோல பயனாளிகளின் எண்ணிக்கையும்  அதிகரிக்க வேண்டும். மக்கள் மருந்தக மையங்கள் பயனாளிகளின் எண்ணிக்கையை 2 முதல் 3 மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர், அதிக விலையிலான மருந்துகளில் ஆண்டுக்கு ரூ. 3,600 கோடியை சேமிக்க இந்த மையங்கள் உதவுகின்றன.

நண்பர்களே,

மக்கள் மருந்தகத் திட்டத்தை வேகமாக  ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகையானது, ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தலித், ஆதிவாசி பெண்கள் மற்றும் வடகிழக்குப் பகுதி மக்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.

நண்பர்களே,

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளுக்கான தேவைகள் இன்று அதிகரித்துள்ளன. அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உற்பத்தியும் அதிகரித்து வருகின்றது.

அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஹோமியோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்டவை அடங்கிய  75 ஆயுஷ் மருந்துகளையும் மக்கள் மருந்தகங்களில் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆயுஷ் மருந்துகளை குறைந்த விலையில் பெற்று மக்கள் பயனடைவதுடன், ஆயுர்வேதம் மற்றும் ஆயுஷ் மருந்துகள் துறையும் பயனடையும்.

நண்பர்களே,

நீண்ட காலங்களாக மருத்துவ சிகிச்சையை வெறும் நோய்கள் மற்றும் சிகிச்சையுடன் தொடர்புடையதாகவே அரசு எண்ணியது. எனினும் சுகாதாரம் என்பது நோயிலிருந்து குணமடைவது மற்றும் சிகிச்சையுடன் சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல, இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பையும்  பாதிக்கிறது.

நாட்டில் ஆரோக்கியமான மக்கள் தொகை அதிகரிக்கும் போது, அதன் திறமையும் சமமாக அதிகரிக்கிறது.

எனவே சிகிச்சை வசதிகளை அதிகரிக்கும் அதே வேளையில், நோயை ஏற்படுத்தும் காரணிகளிலும் நாங்கள் அதிகமாக  கவனம் செலுத்துகிறோம்.

தூய்மை இந்தியா திட்டம், கோடிக்கணக்கான கழிவறைகளை கட்டமைக்கும் பணிகள், இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், இந்திரதனுஷ் திட்டம், ஊட்டச்சத்து திட்டம்போன்ற திட்டங்களுக்கு பின்னணியில் இந்த எண்ணமே மேலோங்கியிருந்தது.

சுகாதாரத்தை நோக்கி முழுமையான அணுகுமுறையில் நாங்கள் பணியாற்றினோம்.

உலக அளவில் யோகாவிற்கு புதிய அடையாளம் கிடைப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். தற்போது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளிட்ட இந்தியாவின் செயல் திறன்களை உலகம் தற்போது அங்கீகரித்து வருகிறது. நம் நாடு ஏராளமான தினை வகைகளில் வளமான பாரம்பரியத்தைப் பெற்றுள்ளது.

தற்போது தினை வகைகளை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியாவின் முன்முயற்சியால் 2023 ஆம் வருடத்தை சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. சிறு தானியங்கள் போன்ற தினை வகைகளில் கவனம் செலுத்தப்படுவதன் மூலம் , ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதுடன் நமது விவசாயிகளின் வருமானமும் பெருமளவு உயரும்.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளில், சிகிச்சையில் ஏற்படும் அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நாட்டின் ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. 

அத்தியாவசிய மருந்துகளின் விலைகள், இருதய ஸ்டென்ட்கள், மூட்டு அறுவை சிகிச்சை தொடர்பான உபகரணங்கள் ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 12,000 கோடி அளவில் மக்கள் சேமிக்கின்றனர்.

ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 50 கோடிக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இதன்மூலம் சுமார் 1.5 கோடி மக்கள் பயனடைந்து, ஏறத்தாழ ரூ. 30,000 கோடியை சேமித்துள்ளனர்.

நண்பர்களே,

இந்தியா உலகின் மருந்தகமாக விளங்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்துகளின் ஆற்றலை கொரானா காலகட்டத்தில் உலகநாடுகள் அனுபவித்துள்ளன.

நண்பர்களே,

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, உலகத்திற்கும் உதவும் வகையில் அவற்றை உருவாக்கிய விஞ்ஞானிகளை எண்ணி நாடு பெருமை கொள்கிறது.

 

நமது நாட்டின் ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. அரசு மருத்துவமனைகளில்  தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் உலகிலேயே மிகக் குறைந்த கட்டணமாக ரூ.250-க்கு வழங்கப்படுகிறது.

நண்பர்களே,

நாட்டில் குறைந்த விலையில் தரமான சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன் போதிய மருத்துவப் பணியாளர்களின் சேவைகள் வழங்கப்படுவதும் அவசியம். எனவே கிராம மருத்துவமனைகள், எய்ம்ஸ் போன்ற மருத்துவ கல்லூரிகளின் கட்டமைப்பு வரை ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய  பணிகளை அரசு தொடங்கி உள்ளது.

அதன்படி கிராமங்களில் நிறுவப்பட்டுள்ள 1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் 50,000 மையங்கள் ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டன.

நண்பர்களே,

முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கு மிகப் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ள தோடு, மருத்துவப் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வை ஏற்படுவதற்காக பிரதமர் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனை மையங்களும், 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அவசரகால மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

3 மக்களவைத் தொகுதி களுக்கு இடையே ஒரு மருத்துவக் கல்லூரியை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 180 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் 55,000-ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் கூடுதலாக 30,000-க்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் 30,000-ஆக இருந்த முதுநிலை படிப்புகளுக்கான இடங்களுடன் புதிதாக 24,000 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மருத்துவ சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில், சாமானிய மக்கள் எளிதில் பெறும் வகையில் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.

நீங்கள் எனது குடும்பத்தினர், உங்களுக்கு உடல் நலிவு ஏற்படுவது எனது குடும்பத்தாருக்கு ஏற்படுவதைப் போல, அதனால் தான் எனது நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

அதற்காக முறையான சுகாதாரத்தையும் உணவுப் பழக்கங்களையும் பின்பற்றுவது அவசியம். யோகா, உடற்பயி்ற்சி ஆகியவற்றை மேற்கொள்வதுடன் ஃபிட் இந்தியா இயக்கத்திலும் இணையுங்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

நன்றி!

குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*******************