Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மக்களுக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையில் மருந்துகளை வழங்குகிறது மக்கள் மருந்தகம் திட்டம் – பிரதமர்


பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் பயனாளிகள் மற்றும் மக்கள் மருந்தகங்களின் உரிமையாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (07.03.2020) கலந்துரையாடினார்.

மக்கள் மருந்தகம் நாள் என்பது, ஒரு திட்டத்தை கொண்டாடுவதற்கான நாள் மட்டுமல்ல, இந்தத் திட்டத்தால் பயனடைந்த லட்சக்கணக்கான இந்தியர்களை இணைப்பதற்கான நாள் என்று பிரதமர் கூறினார்.

ஒவ்வொரு இந்தியரின் ஆரோக்கியத்திற்காகவும் 4 இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். முதலாவது, ஒவ்வொரு இந்தியருக்கும் நோய் ஏற்படாமல் தடுப்பது. இரண்டாவதாக, உடல்நலம் பாதிக்கப்பட்டால் குறைந்த விலையில் மற்றும் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்வது. மூன்றாவதாக, நவீன மருத்துவமனைகள், சிகிச்சை அளிப்பதற்கு போதுமான அளவில் சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவது. நான்காவது இலக்கு என்பது, சவால்களை போர்க்கால அடிப்படையில் பணியாற்றி எதிர்கொள்வது,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் பேசும்போது, நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் சிறந்த மற்றும் குறைந்த விலையிலான சிகிச்சை வழங்குவதற்கு முக்கிய பிணைப்பாக மக்கள் மருந்தகம் திட்டம் இருப்பதாகக் கூறினார்.

“நாடு முழுவதும் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருப்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இணைப்பு வளர்ந்துகொண்டிருக்கிறது. எனவே, இதன் பலன்கள் அதிக அளவிலான மக்களை சென்றடையும். தற்போது, ஒவ்வொரு மாதமும், இந்த மையங்கள் மூலம், ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் மிகவும் குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்று வருகின்றன,” என்றார் பிரதமர்.

மக்கள் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலை, சந்தை விலையைவிட 50% முதல் 90% வரை குறைவாக இருப்பதாக பிரதமர் கூறினார். உதாரணமாக, புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்து, சந்தையில் ரூ.6,500-க்கு விற்கப்படும் நிலையில், மக்கள் மருந்தகம் மையங்களில் ரூ.800-க்கே கிடைக்கிறது என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக இருந்ததைவிட, தற்போது, சிகிச்சைக்கான செலவு குறைந்துள்ளது. மக்கள் மருந்தகங்களால் நாடு முழுவதும் இதுவரை ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் ரூ.2,200 கோடியை சேமித்துள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்,” என்றார் பிரதமர்.

இதில், மக்கள் மருந்தகங்களை நடத்திவருபவர்களின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மக்கள் மருந்தகம் திட்டத்தில் தொடர்புடையவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், விருது வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் கருவியாக மக்கள் மருந்தக திட்டம் மாறியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். பாரம்பரிய மருந்துகளை ஆய்வகங்களில் பரிசோதிப்பது முதல் பொது சுகாதார மையங்களில் கடைசிகட்ட விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வது வரை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியமர்த்தப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டில் சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மக்கள் மருந்தகம் திட்டத்தை மேலும் பயனுள்ள வகையில் மாற்றுவதற்கான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று பிரதமர் கூறினார்.

ஆரோக்கிய இந்தியா திட்டத்தின்கீழ், 90 லட்சம் ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். டயாலிஸிஸ் திட்டத்தின்கீழ், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட டயாலிஸிஸ் சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளன. மேலும், விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அத்தியாவசியமான மருந்துகளின் விலை குறைந்து, ரூ.12,500 கோடியை சேமிக்கச் செய்துள்ளது. ஸ்டென்ட்கள் மற்றும் மூட்டு மாற்று சிகிச்சைக்கான செலவை குறைத்ததன் மூலம், லட்சக்கணக்கான நோயாளிகள் புது வாழ்வு  பெற்றுள்ளனர்.

“2025-ல், நாட்டில் காசநோய் இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இந்தத் திட்டத்தின்கீழ், நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் நவீன சுகாதார மற்றும் நலவாழ்வு  மையங்கள் கட்டப்படுகின்றன. இன்றுவரை, 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன,” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

உடல் ஆரோக்கியத்தில் தனது கடமையை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நமது தினசரி வாழ்க்கை முறையில், சுத்தமாக இருத்தல், யோகா, சரிவிகித உணவு, விளையாட்டு, மற்ற உடற்பயிற்சிகள் ஆகியவற்றுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆரோக்கியத்தின் மீதான நமது முயற்சிகள், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் தீர்மானத்தை உறுதிப்படுத்தும்,” என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.

மக்கள் மருந்தக மையங்கள் குறித்து பிரதமருக்கு கோவையிலிருந்து  கேட்கப்பட்ட கேள்வி: ஏழை நோயாளிகளுக்கு குறைந்த மற்றும் சலுகை விலையில் மருந்துகளை வழங்கும் “மோடி கிளினிக்”குகளை மேலும் திறக்க திட்டம் உள்ளதா? @PMOIndia

 

 

நாட்டில் உள்ள அனைத்து பகுதியிலும் மக்கள் மருந்தக மையங்களை விரிவாக்கம் செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்: பிரதமர் @narendramodi

 

 

 

**********