மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜி–பிளாக்கில் உள்ள இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைமை அலுவலகமான ஐஎன்எஸ் டவர்ஸ் கட்டடத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த புதிய கட்டடம் மும்பையில் நவீனமான, திறன் வாய்ந்த அலுவலக இடத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும். மேலும் மும்பையில் செய்தித்தாள் தொழில் துறைக்கு முக்கிய மையமாகவும் இது செயல்படும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புதிய கட்டடம் திறக்கப்படுவதற்காக இந்திய செய்தித்தாள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். புதிய இடத்தில் எளிதாக பணி செய்து இந்தியாவின் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார். சுதந்திரத்திற்கு முன்பே இந்திய செய்தித் தாள் சங்கம் (இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி) உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்த அமைப்பு இந்தியாவின் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பல்வேறு பயணங்களுக்குச் சாட்சியாக இருந்துள்ளது என்று தெரிவித்தார். அதோடு மட்டுமின்றி, அவற்றுடன் இணைந்து பயணித்து அந்தத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தும் வருகிறது என்று பிரதமர் கூறினார். எனவே, ஒரு அமைப்பாக இந்திய செய்தித் தாள் சங்கத்தின் பணிகளின் தாக்கம் நாட்டில் வெளிப்படையாகத் தெரியக் கூடியது என்று அவர் கூறினார்.
உலக நாடுகளின் நிலைமைகளை ஊடகங்கள் வெறும் பார்வையாளராக கவனிப்பது மட்டுமின்றி, அவற்றை மாற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன என்று பிரதமர் கூறினார். வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய அடுத்த 25 ஆண்டுகாலப் பயணத்தில் செய்தித்தாள்கள்களின் பங்கை அவர் எடுத்துரைத்தார். மக்களின் உரிமைகள், வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கை அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையின் வெற்றியை மேற்கோள் காட்டிய பிரதமர், தன்னம்பிக்கை மிக்க மக்கள் எவ்வாறு மகத்தான வெற்றியை அடைகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றார். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் முக்கிய நாடுகள் ஆர்வமாக உள்ளன என்று அவர் கூறினார். இந்த வெற்றிகளில் ஊடகங்களின் பங்களிப்பு உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தீவிரமான பிரச்சினைகள் குறித்துக் கருத்துகளைப் பேசி, விவாதங்களை உருவாக்குவதில் ஊடகங்களின் பொதுவான பங்கை பிரதமர் குறிப்பிட்டார். ஊடகங்களின் செயல்பாட்டில் அரசு கொள்கைகளின் தாக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, சுமார் 50 கோடி மக்களை வங்கி அமைப்புடன் இணைத்ததை அவர் சுட்டிக் காட்டினார். இந்தத் திட்டமும், டிஜிட்டல் இந்தியா திட்டமும் ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று அவர் கூறினார். அதேபோல், தூய்மை இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற முன்முயற்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பார்ப்பட்டவை என்று பிரதமர் கூறினார். இந்த இயக்கங்களை தேசிய விவாதத்தின் ஒரு பகுதியாக மாற்றியதற்காக ஊடகங்களை அவர் பாராட்டினார்.
இந்திய செய்தித்தாள் சங்கம் எடுத்துள்ள முடிவுகள் நாட்டின் ஊடகங்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், அரசால் தொடங்கப்படும் எந்தவொரு நிகழ்வும் அரசு நிகழ்வாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். அரசால் சொல்லப்படும் எந்தவொரு யோசனையும் அரசுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்றும் அவர் கூறினார். 75-ம் ஆண்டு விடுதலைப் பெருவிழா, இல்லம் தோறும் தேசியக் கொடி போன்ற இயக்கங்கள் அரசால் தொடங்கப்பட்டு, அவை ஒட்டுமொத்த தேசத்தாலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டதை அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டார். இதேபோல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதை பிரதமர் விளக்கினார். இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல எனவும் மனித சமூகத்தின் நலன் தொடர்பான பிரச்சினை என்றும் அவர் தெரிவித்தார். அண்மையில் தொடங்கப்பட்ட ‘தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல்‘ என்ற இயக்கம் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஜி7 உச்சி மாநாட்டின் போது உலகத் தலைவர்கள் இந்த திட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினர் என்று அவர் கூறினார். இளைய தலைமுறையினரின் சிறந்த எதிர்காலத்திற்காக அனைத்து ஊடக நிறுவனங்களும் இந்த இயக்கத்தில் சேர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நாட்டுக்கான முயற்சியாக இதுபோன்ற முயற்சிகளை ஊடக நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார். இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான மக்களின் கடமை உணர்வையும் விழிப்புணர்வையும் அதிகரிப்பதில் ஊடகங்களின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டினார்
சுற்றுலாவை மேம்படுத்த கூட்டாக விளம்பரப்படுத்துவதும், சந்தைப்படுத்துவதும் தேவை என்று பிரதமர் கூறினார். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்த செய்தித்தாள்கள் ஒரு மாதத்தை தேர்வு செய்யலாம் என்று அவர் ஆலோசனை கூறினார். இது மாநிலங்களிடையே பரஸ்பர ஆர்வத்தை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பத்திரிகைகள் தங்கள் உலகளாவிய செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். எதிர்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று கூறிய பிரதமர், இந்தியாவின் வெற்றியை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்ல வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு என்று கூறினார். ஒரு நாட்டின் உலகளாவிய தோற்றம் அதன் பொருளாதாரத்தில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் நிலை உயர்ந்து வருவதால் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் உலக முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கான அவர்களின் திறன் வளர்ந்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். ஐநா–வின் அனைத்து மொழிகளிலும் இந்திய வெளியீடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்தார். இந்திய வெளியீட்டு நிறுவனங்களின் இணையதளங்கள், சமூக ஊடக கணக்குகள் அந்த மொழிகளில் தொடங்கப்படலாம் என்றும் பிரதமர் யோசனை கூறினார்.
அச்சிடப்பட்ட பதிப்புகளில், பக்கங்கள் தொடர்பான சிக்கல்கள் உள்ளபோதும் டிஜிட்டல் வெளியீடுகளில் அது இல்லை என்பதால், டிஜிட்டல் பதிப்பை ஊடக நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இன்று தாம் அளித்த ஆலோசனைகளை ஊடக நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நீங்கள் அனைவரும் இந்த பரிந்துரைகளை பரிசீலிப்பீர்கள் என்று நம்புவதாகவும் புதிய சோதனைகளைச் செயல்படுத்தி, இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவீர்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எந்த அளவுக்கு வலுவாக உழைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நாடு முன்னேறும் என்று கூறிப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷைன், மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், திரு அஜித் பவார், இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவர் திரு ராகேஷ் சர்மா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
Speaking at the inauguration of The Indian Newspaper Society Towers in Mumbai. https://t.co/InFU4355OK
— Narendra Modi (@narendramodi) July 13, 2024
आज भारत एक ऐसे कालखंड में है जब उसकी अगले 25 वर्षों की यात्रा बहुत अहम है: PM @narendramodi pic.twitter.com/hO3uNbE2o5
— PMO India (@PMOIndia) July 13, 2024
जिस देश के नागरिकों में अपने सामर्थ्य को लेकर आत्मविश्वास आ जाता है...वो सफलता की नई ऊंचाई प्राप्त करने लगते हैं।
— PMO India (@PMOIndia) July 13, 2024
भारत में भी आज यही हो रहा है: PM @narendramodi pic.twitter.com/D6PbpfG2Am
विश्व में भारत की साख बढ़ी है। pic.twitter.com/NDngvPO015
— PMO India (@PMOIndia) July 13, 2024