Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் ரூ.32,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார் 

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் ரூ.32,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார் 


மகாராஷ்டிர மாநிலம் தானேயில் ரூ.32,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், மத்திய அரசு மராத்திக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. இது மகாராஷ்டிராவுக்கும்  மராத்தி மொழிக்கும்  மரியாதை அளிப்பது மட்டுமல்ல, அறிவு, தத்துவம், ஆன்மீகம், இலக்கியம் ஆகியவற்றின் வளமான கலாச்சாரத்தை இந்தியாவுக்கு அளித்த பாரம்பரியத்திற்கான மரியாதை என்றார். உலகெங்கிலும் உள்ள மராத்தி மொழி பேசும் அனைவருக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு திட்டங்களின் தொடக்கம்  மற்றும் அடிக்கல் நாட்டுதல் பற்றிக்  குறிப்பிட்ட பிரதமர், இன்று காலை வாஷிமுக்கு வருகை தந்ததாகவும், அங்கு நாட்டின் 9.5 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயி  கெளரவிப்பு நிதியை வழங்கியதாகவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததாகவும் கூறினார். மகாராஷ்டிராவின் நவீன வளர்ச்சியை நோக்கி தானேயில் புதிய மைல்கற்கள் எட்டப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இன்றைய நிகழ்ச்சி மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்தின் ஒரு பார்வையை அளிக்கிறது என்றார். மும்பையில் ரூ.30,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான மும்பை எம்.எம்.ஆர் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன என்றும் ரூ.12,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான தானே ஒருங்கிணைந்த சுற்றுவட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும் திரு மோடி தெரிவித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், மும்பை மற்றும் தானே-க்கு நவீன அடையாளத்தை இவை அளிக்கும் என்றார்.

மும்பையின் ஆரேவிலிருந்து பி.கே.சி வரையிலான அக்வா லைன் மெட்ரோ சேவையும் இன்று தொடங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். மும்பை மக்கள் இந்த மெட்ரோ ரயில் பாதையை நீண்ட காலமாக எதிர்பார்த்து வருவதாகவும் அவர் கூறினார். அக்வா மெட்ரோ ரயில் பாதைக்கு ஜப்பான் அரசும் ஜப்பானிய சர்வதேச கார்ப்பரேஷன் ஏஜென்சியும்  அளித்து வரும் ஆதரவுக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.  “இந்த மெட்ரோ ரயில் பாதை இந்தியா-ஜப்பான் நட்பின் அடையாளமாகவும் உள்ளது” என்று அவர் கூறினார்.

திரு பாலா சாஹேப் தாக்கரே, தானே மீது சிறப்பு பாசம் கொண்டிருந்தார் என்று திரு மோடி குறிப்பிட்டார். காலஞ்சென்ற திரு ஆனந்த் திகேயின் நகரமாகவும் தானே இருந்தது என்றும் அவர் கூறினார். “தானே இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷியை தந்தது” என்று திரு மோடி பெருமிதம் கொண்டார். இன்றைய வளர்ச்சிப் பணிகள் மூலம் தொலைநோக்குப் பார்வை கொண்ட இவர்களின் கனவுகளை நாம் நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார். இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக தானே, மும்பை மற்றும் மகாராஷ்டிரா மக்களை பிரதமர் பாராட்டினார்.

தற்போதைய மாநில அரசு மகாராஷ்டிராவின் வளர்ச்சியை தனது ஒரே நோக்கமாகக் கருதுகிறது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். மும்பை மெட்ரோ 2.5 ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டு ரூ .14,000 கோடி செலவுக்கு வழிவகுத்தது பற்றியும் முந்தைய அரசாங்கங்களின் தாமதமான அணுகுமுறை குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார். இந்த பணம் மகாராஷ்டிராவில் கடுமையாக உழைக்கும் வரி செலுத்துவோருக்கு சொந்தமானது என்று பிரதமர் கூறினார்.

முந்தைய அரசின் வரலாறு அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பதற்கு சான்றாக உள்ளது என்று கூறிய பிரதமர், அடல் சேதுவுக்கு எதிரான போராட்டங்கள், மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலை மூட சதி, மாநிலத்தின் வறட்சி பகுதிகளில் தண்ணீர் தொடர்பான திட்டங்களை நிறுத்தி வைத்தது போன்ற உதாரணங்களை எடுத்துரைத்தார். கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய பிரதமர், திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எச்சரிக்கை செய்தார்.

 நாட்டிற்கும், மகாராஷ்டிராவிற்கும் நேர்மையான மற்றும் நிலையான கொள்கைகளைக் கொண்ட அரசு தேவை என்றும்  தற்போதைய அரசு நவீன உள்கட்டமைப்பை உருவாக்கியது மட்டுமின்றி, சமூக உள்கட்டமைப்பையும் வலுப்படுத்தியுள்ளது என்றும்  அவர் கூறினார். நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் நாம் சாதனை படைத்துள்ளோம், 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். நாம் இன்னும் நாட்டை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறிய பிரதமர், மகாராஷ்டிராவின் ஒவ்வொரு குடிமகனும் இந்த தீர்மானத்துடன் நிற்கிறார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன்,  முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் திரு அஜித் பவார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். 

********************

SMB/KV