Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போர்த்துகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக பிரதமரின் அறிக்கை


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் போர்த்துகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கான பயணத்தை நாளை துவக்குகிறார். பல்வேறு துறைகளிலும் இருதரப்பு செயல்பாடுகளையும் மேம்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் குறிப்பிட்டார்.

“ ஜூன் 24, 2017 அன்று நான் போர்த்துகலுக்கு செயல்முறை பயணம் மேற்கொள்கிறேன். கடந்த ஜனவரி 2017-ல் மேதகு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா மேற்கொண்ட இந்தியப் பயணத்திற்குப் பிறகு வரலாற்றுபூர்வமான, நட்புரீதியான நமது நெருங்கிய உறவுகள் மேலும் வேகம் பெற்றுள்ளது.

பிரதமர் கோஸ்டாவுடனான எனது சந்திப்பை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். எங்களது சமீபத்திய கலந்துரையாடல்களை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் இதுவரையில் எடுக்கப்பட்ட பல்வேறு கூட்டு முன்முயற்சிகள், முடிவுகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் நாங்கள் பரிசீலிக்கவிருக்கிறோம். குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகியவற்றின் இருநாடுகளின் செயல்பாடுகளை மேலும் முன்னேற்றுவதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் விவாதிக்கவிருக்கிறோம். பயங்கர வாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் இரு நாடுகளின் நலன்களுக்கு உகந்த சர்வதேச பிரச்சனைகளிலும் நமது ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் விவாதிக்கவிருக்கிறோம். இருதரப்பு வர்த்தகம், முதலீடு ஆகிய உறவுகள் மேலும் ஆழமாவதற்கான வாய்ப்பு இருப்பதையும் குறிப்பாக என்னால் காண முடிகிறது.

இந்தப் பயணத்தின்போது போர்த்துகலில் உள்ள இந்திய இனத்தவருடன் தொடர்பு கொள்வதிலும் நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்” என பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் ஜூன் 24 முதல் 26 வரை வாஷிங்டன் டி.சி.க்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

“அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. ட்ரம்ப் அவர்களின் அழைப்பிற்கிணங்க ஜூன் 24 முதல் 26 வரை நான் வாஷிங்டன் நகருக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். இதற்கு முன்பாக நானும் அதிபர் ட்ரம்ப்பும் தொலைபேசி மூலமாக உரையாடினோம். இரு நாட்டு மக்களின் நலனுக்காக அனைத்து வகையிலான நமது தொடர்புகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது என்ற பொதுவான நோக்கத்தைத் தொடுவதாகவே எங்களது உரையாடல் அமைந்திருந்தது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பல்வேறு தளங்களிலும் நிலவும் துடிப்பான கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது பற்றிய கருத்துக்களை மேலும் ஆழமாகப் பரிமாறிக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதிலும் நான் ஆவலாக உள்ளேன்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டணி என்பது பல அடுக்குகளைக் கொண்டது என்பதோடு பலவகைப்பட்டதும் ஆகும். இது சம்பந்தப்பட்ட அரசுகளால் மட்டுமல்ல, இரு தரப்பிலும் இவை தொடர்பான துறையினரின் வலுவான ஆதரவைப் பெற்றதாகவும் உள்ளன. நமது கூட்டணிக்கான முன்னோக்கிய தொலைநோக்கை அதிபர் ட்ரம்ப் தலைமையின் கீழ் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் இணைந்து மேலும் வளர்த்தெடுக்கவும் நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.

அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோருடனான அதிகாரபூர்வமான சந்திப்புகள் மட்டுமின்றி, அமெரிக்காவின் சில முக்கியமான தொழில்துறை தலைவர்களையும் நான் சந்திக்கவிருக்கிறேன். கடந்த காலத்தைப் போலவே அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்திக்கவும் நான் மிகுந்த ஆவலோடு உள்ளேன்.”

ஜூன் 27, 2017 அன்று பிரதமர் நெதர்லாந்துக்கும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

“ஜூன் 27, 2017 அன்று நான் நெதர்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இந்த ஆண்டில் இந்திய-டச்சு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் துவங்கி 70 ஆண்டுகள் முடிவுற்றதை நாம் கொண்டாடுகிறோம். இந்தப் பயணத்தின்போது டச்சுப் பிரதமர் மேதகு திரு. மார்க் ருட்டேவை நான் அதிகாரபூர்வமாக சந்திக்கவிருக்கிறேன். அதைப்போன்றே டச்சு அரசர் வில்லெம் அலெக்சாண்டர், அரசி மாக்சிமா ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவிருக்கிறேன்.

பிரதமர் ருட்டேவை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பரிசீலிப்பதில் மிகுந்த ஆவலோடு உள்ளேன். பயங்கரவாத எதிர்ப்பு, பருவநிலை மாற்றம் ஆகிய உள்ளிட்ட முக்கியமான சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் ருட்டேவுடன் நான் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவிருக்கிறேன்.

நமது இருதரப்பு உறவுகளில் பொருளாதார உறவுகள் மையமான இடத்தைப் பெற்றதாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் நம்முடன் பெருமளவில் வர்த்தக கூட்டாளியாக இருக்கும் நாடுகளில் 6வது பெரிய நாடாக நெதர்லாந்து விளங்குகிறது. நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, விவசாயம், உணவுப் பதனிடுதல், மறுசுழற்சிக்கான எரிசக்தி, துறைமுகங்கள், கப்பல் கட்டுதல் ஆகிய துறைகளில் அந்நாடு தனித்திறமை பெற்றுள்ளது என்ற வகையில் இவை நமது வளர்ச்சிக்கான தேவைகளுக்கு உகந்ததாகவும் அமைகின்றன. இந்திய-டச்சு பொருளாதார உறவு என்பது இரண்டு நாடுகளுக்குமே பயனுள்ளதாகும். இந்தத் திறமைகளை இரு நாடுகளும் மேலும் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு இரு தரப்பினரும் எவ்வாறு பாடுபட வேண்டும் என்பது பற்றியும் பிரதமர் ருட்டேவுடன் நான் விவாதிக்கவிருக்கிறேன். நெதர்லாந்தைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களையும் நான் சந்திக்கவிருக்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் அவர்களை இணையுமாறு ஊக்கப்படுத்தவும் இந்த சந்திப்பைப் பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறேன்.

ஐரோப்பாவில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக நெதர்லாந்து அமைந்துள்ள நிலையில் இந்த இரண்டு நாடுகளின் மக்களுக்கும் இடையே வலுவான உறவும் இருந்து வருகிறது. நெதர்லாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் தொடர்பு கொள்வதிலும் நான் மிகுந்த ஆவலோடு உள்ளேன்” என பிரதமர் குறிப்பிட்டார்.

*****