Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்


போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார். ரூ. 710 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய முனையக் கட்டிடம் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாகும்.

இந்த நிகழ்வில், திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், இன்றைய நிகழ்வு போர்ட்பிளேரில் நடைபெற்ற போதும்வீர் சாவர்க்கர் சர்வதேவ விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருப்பதால் ஒட்டுமொத்த தேசமும் இந்த யூனியன் பிரதேசத்தை ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் உற்சாகமான சூழலையும் மகிழ்ச்சியான முகங்களையும் காண்கின்ற இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கான தமது விருப்பத்தையும் பிரதமர் வெளியிட்டார். அந்தமானுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரும் இந்த விமான நிலையத்தின் திறன் விரிவடைய வேண்டும்என்று கோரியதாக அவர் குறிப்பிட்டார்.

போர்ட்பிளேரில் உள்ள இந்த விமான நிலையத்தின் வசதிகளை விரிவாக்குவதற்கான விருப்பங்கள் அதிகரித்திருப்பது பற்றி கூறிய பிரதமர், தற்போதுள்ள முனையம் 4,000 சுற்றுலாப் பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளதாகவும் புதிய முனையம் இந்த எண்ணிக்கையை 11,000-ஆக உயர்த்தும் என்றும் எந்த நேரத்திலும் 10 விமானங்ளை நிறுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.  கூடுதலான விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளால் இந்தப் பகுதியில் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவர் கூறினார். போர்ட்பிளேரின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் பயணத்தை எளிதாக்கி, வணிகத்தை மேம்படுத்தி, போக்குவரத்து தொடர்பையும் அதிகரிக்கும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் பெரிய நகரங்களின் வளர்ச்சிக்கான நம்பிக்கை நீண்டகாலமாக வரம்புக்குட்பட்டு இருந்ததுஎன்று கூறிய பிரதமர், ஆதிவாசிகள் வாழும் மற்றும் நாட்டின் தீவுப் பகுதிகள் வளர்ச்சியிலிருந்து நீண்டகாலத்திற்கு விலக்கி வைக்கப்பட்டிருந்தன என்பதை எடுத்துரைத்தார். கடந்த 9 ஆண்டுகளில்தற்போதுள்ள அரசு முந்தைய அரசுகளின் தவறுகளை உணர்வுபூர்வமாக சரிசெய்து வருவது மட்டுமின்றி புதிய நடைமுறையையும் வகுத்துள்ளது என்று அவர் கூறினார்.  இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான புதிய மாதிரி உருவாகியுள்ளது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்என்பது இந்த மாதிரிஎன்று பிரதமர் தெரிவித்தார்.  இந்த மாதிரியான வளர்ச்சி மிகவும் விரிவானது, அனைத்து பிராந்தியங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வளர்ச்சியையும், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது என்று அவர் விவரித்தார்.

கடந்த 9 ஆண்டுகளில், அந்தமானில் வளர்ச்சியின் புதிய கதை எழுதப்படுகிறது என்று பிரதமர் கூறினார். முந்தைய அரசின் 9 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் ரூ.23,000 கோடி நிதியைப் பெற்ற நிலையில், தற்போதைய அரசின் 9 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ரூ. 48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். அதேபோல், முந்தைய அரசின் 9 ஆண்டுகளில் 28,000 வீடுகள், குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50,000 ஆகியுள்ளது என்று அவர் கூறினார். தற்போது அந்தமான் நிக்கோபாரில் உள்ள அனைவரும் வங்கிக்கணக்கை வைத்திருப்பதோடு, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற வசதியையும் பெற்றிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஏற்கனவே இந்த யூனியன் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத நிலையில், போர்ட்பிளேரில் மருத்துவக் கல்லூரி அமைந்ததற்கு தற்போதைய அரசே பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே இணையதள வசதிக்கு செயற்கைக் கோள்களையே நம்பியிருக்க வேண்டிய நிலையிருந்தது. தற்போதுள்ள அரசு பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் முன்முயற்சியை மேற்கொண்டது என்று பிரதமர் மோடி கூறினார்.

இவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட வசதிகள் இங்கு சுற்றுலாவிற்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக பிரதமர் கூறினார். செல்பேசி இணைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, விமானநிலைய வசதிகள், சாலைகள் முதலியவை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வருவதை ஊக்குவிக்கின்றன. இதனால்தான், 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என்று திரு மோடி தெரிவித்தார். சாகச சுற்றுலாவுக்கும் வரவேற்பு கிடைத்து வருவதோடு, வரும் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.

வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இணைந்த சீரான முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தின் வாழும் உதாரணமாக அந்தமான் விளங்குகிறது”, என்று பிரதமர் குறிப்பிட்டார். செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்பே அந்தமானில் ஏற்றப்பட்டாலும், தீவுப் பகுதியில் அடிமைப் போக்கின் சின்னங்களே காணப்பட்டதாக பிரதமர் கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ணக் கொடியை ஏற்றிய அதே இடத்தில், கொடியேற்றும் வாய்ப்பு தமக்கும் கிடைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். ராஸ் தீவை நேதாஜி சுபாஷ் தீவு என்றும், ஹாவ்லாக் தீவை ஸ்வராஜ் தீவு என்றும் நீல் தீவை ஷாகித் தீவு என்றும் தற்போதைய அரசு பெயர் மாற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது வென்றவர்களின் பெயர்களை சூட்டியது பற்றியும் அவர் பேசினார். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வளர்ச்சி, நாட்டு இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் ஆதார சக்தியாக மாறி உள்ளது”, என்றார் அவர்.

 

இந்தியர்களின் திறனின் மீது தமக்குள்ள அதீத நம்பிக்கையைக் குறிப்பிட்டு, கடந்த 75 ஆண்டுகாலத்தில் சுதந்திர இந்தியா புதிய உயரத்தை நிச்சயம் எட்டி இருக்கும் என்று கூறினார். இருந்த போதும், ஊழல் மற்றும் வாரிசு அரசியல் போன்றவை சாமானிய மக்களின் நலனுக்கு எப்போதுமே அநீதி இழைத்ததாக அவர் தெரிவித்தார். சில கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலையும் அவர் சுட்டிக்காட்டினார். சாதி மற்றும் ஊழல் சார்ந்த அரசியலையும் அவர் விமர்சித்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்ட அல்லது  பிணையில் உள்ளவர்களை ஏற்றுக்கொள்ளும் போக்கையும் அவர் சாடினார். அரசியலமைப்பை பிணையக் கைதியாக வைத்திருக்கும் மனநிலையையும் அவர் தாக்கிப் பேசினார். இது போன்ற சக்திகள், சாமானிய மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், குடும்ப சுயநல ஆதாரத்திற்கே முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பாதுகாப்பு மற்றும் புத்தொழில்கள் துறையில் இந்திய இளைஞர்களின் ஆற்றலை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, அவர்களின் இந்த திறமைக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

 

தமது உரையின் நிறைவுப் பகுதியில், நாட்டின் முன்னேற்றத்திற்கு நம்மை நாமே அர்ப்பணிப்பதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை உலகில் உள்ள ஏராளமான தீவுகளும், சிறிய கடலோர நாடுகளும் எட்டி இருப்பதை பிரதமர் உதாரணமாகக் குறிப்பிட்டார். வளர்ச்சிக்கான பாதை சவால்கள் நிறைந்ததாக இருப்பினும், அனைத்து வகையான தீர்வுகளுடன் வளர்ச்சியை அடையலாம் என்று அவர் கூறினார். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் ஒட்டுமொத்த பிராந்தியத்தை வலுப்படுத்தும் என்று  அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

பின்னணி:

போக்குவரத்து தொடர்புக்கான கட்டமைப்பை விரிவுபடுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும். சுமார் ரூ. 710 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பன்னாட்டு விமானநிலையம் அந்தமான் தீவின் வளர்ச்சிக்கு வழிவகுக்க முக்கியக் கருவியாக இருக்கும். 40,800 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முனையம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ரூ.80 கோடி  மதிப்பீட்டில் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் 2 போயிங் விமானங்கள், 2 ஏர்பஸ் விமானங்கள் இறங்க மற்றும் ஏறும் வகையில் ஓடுபாதை அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்த முடியும்.

இயற்கையால் ஊக்குவிக்கப்பட்டு, கடல் மற்றும் தீவுகளை சித்தரிக்கும் வகையில் சிப்பி வடிவில் இந்த விமான நிலைய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தைக் குறைக்கும் வகையிலும், பகல் நேரங்களில் மின்விளக்குப் பயன்பாட்டை பெருமளவு குறைத்து சூரிய ஒளி வெளிச்சம் கிடைக்கும் வகையிலும், இரட்டை அடுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு எல்.இ.டி மின் விளக்குகள், வெப்பத்தைத் தடுப்பதற்கான கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு மழைநீரை சேகரிக்க ஏதுவாக பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தண்ணீர் தொட்டி, விமான நிலையத்திலேயே 100% முழுமையாக கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான ஆலை, 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி மையம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கான கட்டமைப்புகள் போன்ற எண்ணற்ற நீடித்த மற்றும் நிலையான அம்சங்கள் இந்தப் புதிய விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தமான் நிகோபார் தீவுகளின் பழம்பெரும் நுழைவாயிலாக உள்ள போர்ட் பிளேர், சுற்றுலாவுக்கான முக்கிய இடமாகத் திகழ்கிறது. விரிவான பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பன்னாட்டு விமான முனையம், விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதோடு சுற்றுலாவையும் மேம்படுத்தும். மேலும் இந்த விமான நிலையம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு இந்தத் தீவின் பொருளாதார மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும்.

——

SM/AP/SMB/BR/RJ/KPG