ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த போதை பொருட்கள் இல்லாத இந்தியாவுக்கான கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி செய்தி மூலம் உரையாற்றினார். ஹிசாரில் உள்ள குரு ஜம்புகேஸ்வரர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவரது காணொலி செய்தி ஒளிபரப்பப்பட்டது.
இந்த உரையில், போதைப்பொருட்கள் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் அவரின் ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பு மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.
போதைப்பொருட்கள் சமூகத்தின் பெரிய பிரச்சினையாக உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், உலக சுகாதார அமைப்பின் தரவின் படி உலகம் முழுவதும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாகக் கூறினார்.
போதை பொருட்களுக்கு பல இளைஞர்கள் அடிமையாவது அதிர்ச்சியாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். போதைப் பொருள் பயன்பாடு சாதனை அல்ல. போதைப்பொருள் பயன்படுத்துவது நவீனமான கலாச்சாரம் என்ற தவறான கருத்து நிலவி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பழக்கத்தினால் உடல்நலப் பிரச்சனைகளும், குடும்பங்கள் சிதைந்து போவதும் இல்லாமல், இந்த வர்த்தகம் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும் போதைப் பொருள் வர்த்தகம் தீவிரவாதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் வருவாய் ஈட்டித் தரும் பெரிய ஆதாரமாகவும் உள்ளது. இதன் மூலம் அவர்கள் ஈட்டும் வருவாயானது நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க பயன்படுத்தப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
ஆரோக்கியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்பம், சிறந்த வருங்காலம், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இளைய தலைமுறை போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். தன்னம்பிக்கை உள்ள யாரும் எளிதில் போதை பழக்கத்தில் சிக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டுவர இளையதலைமுறையினர் அவர்களுக்கு தேவையான ஆதரவும் உதவியும் அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். கலந்துரையாடல்கள், ஆற்றுப்படுத்துதல், தொடர் அன்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றின் வாயிலாக இவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
போதைப் பழக்கத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் விவரித்தார். இதன் பின்னணியில், 2018 -இல் கொண்டுவரப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான தேசிய செயல்திட்டம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் வளர்ச்சி, மறுவாழ்வு மற்றும் 2023-ம் ஆண்டுக்குள் போதைப்பொருளை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் பிரதமரின் இந்த உரையை காணொலி மூலம் கண்டுகளித்தனர்.
******