மாண்புமிகு பெருமக்களே,
இந்தியாவில் பேரிடர் அபாயக் குறைப்பு சம்பந்தமான விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கான நிதியை கணிசமாக நாங்கள் உயர்த்தி உள்ளோம். பேரிடர் அபாயக் கட்டுப்பாடு, தயார்நிலை, எதிர்ப்பு, மீட்சி மற்றும் புனரமைப்பு போன்ற பேரிடர் அபாய மேலாண்மையின் ஒட்டுமொத்த தேவைகளுக்கு ஆதரவளிப்பதற்கு நிதிக் கட்டமைப்பில் நாங்கள் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். எங்கள் மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் ஐந்து ஆண்டுகளில் (2021-2025) பேரிடர் அபாயத்தைக் குறைக்க சுமார் 6 பில்லியன் டாலர்களை பயன்படுத்தும் வசதியைப் பெற்றுள்ளன. இது, தயார் நிலை, எதிர்ப்பு மற்றும் மீட்சிக்கான 23 பில்லியன் டாலரை விட கூடுதலான தொகையாகும்.
புயல்களால் ஏற்படும் உயிரிழப்பை ஒரு தசாப்தத்தில் 2% வரை நாங்கள் குறைத்துள்ளோம். பல்வேறு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். முன்கூட்டிய எச்சரிக்கைக்கான அணுகலை நோக்கி நாங்கள் தீவிரமாகப் பணியாற்றுகிறோம். ‘2027-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் முன்கூட்டிய எச்சரிக்கைகள்‘ என்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் முன்முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.
மாண்புமிகு பெருமக்களே,
ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் பேரிடர் அபாய குறைப்புக்கான பணிக்குழுவை உருவாக்க உறுப்பு நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன. அனைவருக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை, நெகிழ்தன்மை உள்கட்டமைப்பு, பேரிடர் அபாயக் குறைப்புக்கு மேம்பட்ட நிதி, எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைப்புமுறை மற்றும் திறன் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்புக்கு சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறை ஆகிய 5 முன்னுரிமைகளை ஜி20 பணிக்குழு கண்டறிந்துள்ளது.
இது தவிர, இந்தியா மற்றும் அமெரிக்காவின் தலைமையிலான பேரிடர் நெகிழ்தன்மை உள்கட்டமைப்பு கூட்டணி, 21-ஆம் நூற்றாண்டில் உள்கட்டமைப்பு அமைப்புமுறைகளில் திட்டமிடல், வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் பராமரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. உள்நாட்டிலும், பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம் என்று உறுதியளிக்கிறேன்.
***
AD/RB/DL