Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“பெண்களுக்கு பொருளாதார அதிகாரவழிமளித்தல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

“பெண்களுக்கு பொருளாதார அதிகாரவழிமளித்தல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில்  பிரதமர் உரையாற்றினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, “பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல்” என்பது குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றினார். 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட  பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு  வரிசையில் இது 11-வது கருத்தரங்காகும்.

2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்த ஆண்டு பட்ஜெட் காணப்படுவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். “வருங்கால அமிர்த காலத்தின் பார்வையில் பட்ஜெட் நோக்கப்பட்டு, சோதிக்கப்பட்டது. நாட்டின் குடிமக்களும் அடுத்த 25 ஆண்டுகளை இத்தகைய இலக்குகளுடன் தங்களை இணைத்துக்கொண்டு பார்ப்பது நாட்டிற்கு ஒரு நல்ல அறிகுறியாகும்,” என்று அவர் கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாடு முன்னேறியுள்ளதாக பிரதமர்  தெரிவித்தார். இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி-20 கூட்டத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதால், இந்த முயற்சிகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளதாக அவர் கூறினார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்த ஆண்டின் பட்ஜெட் முன்முயற்சிகள் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.

பெண்கள் சக்தியின் உறுதிப்பாட்டு வலிமை, மன உறுதி, கற்பனைத்திறன், இலக்குகளுக்காக உழைக்கும் திறன் மற்றும் அதீதமான கடின உழைப்பு ஆகியவை பெண்கள் சக்தியின் பிரதிபலிப்பு என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நூற்றாண்டில் இந்தியாவின் வேகம் மற்றும் அளவை அதிகரிப்பதில் இந்த நற்குணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றார் அவர்.

பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முயற்சிகளின் பலன்கள் இன்று காணப்படுவதாகவும், நாட்டின் சமூக வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை நாம் உணர்கிறோம் என்றும் பிரதமர் கூறினார். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த 9-10 ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளி மற்றும் அதற்கு மேல் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் பெண்களின் சேர்க்கை இன்று 43 சதவீதமாக உள்ளது. இது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளை விட அதிகமாகும். மருத்துவம், விளையாட்டு, வணிகம் அல்லது அரசியல் போன்ற துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாமல் அவர்கள் முன்னின்று வழி நடத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

70 சதவீத முத்ரா கடன் பயனாளிகள் பெண்கள் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதேபோல், ஸ்வாநிதியின் கீழ் பிணையமற்ற கடன் ஊக்குவிப்பு, கால்நடை வளர்ப்பு, மீன்வளம், கிராமத் தொழில்கள், விவசாய உற்பத்தி அமைப்புகள்,  விளையாட்டுகள் போன்ற ஊக்குவிப்புத் திட்டங்களால் பெண்கள் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேரின் உதவியுடன் நாட்டை எப்படி முன்னேற்ற முடியும், பெண்களின் ஆற்றலை எப்படி அதிகரிக்க முடியும் என்பது பற்றிய பிரதிபலிப்பு இந்த பட்ஜெட்டில் தெரிகிறது” என்று திரு மோடி கூறினார். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் பெண்களுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். “80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் வழங்கப்பட்ட 3 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் அளிக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற திசையிலான ஒரு கட்டம்” என்று திரு மோடி தெரிவித்தார். பாரம்பரியமாக, பெண்களின் பெயரில் எந்த சொத்தும் இல்லாத சூழ்நிலையில், பிரதமர் வீட்டுவசதித் திட்டம்  அவர்களுக்கு அதிகாரமளித்துள்ளதாக பிரதமர் கூறினார். “பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், குடும்பத்தின் பொருளாதார முடிவுகளில் பெண்களுக்கு ஒரு புதிய அதிகாரத்தை அளித்துள்ளது” என்று அவர் கூறினார்.

சுயஉதவி குழுக்களிடையே புதிய யுனிகார்ன்களை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். மாறிவரும் சூழல்களுக்கேற்ப பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான நாட்டின் கண்ணோட்டம் குறித்து பிரதமர் விளக்கினார். இன்று  பண்ணை அல்லாத தொழில்களில் ஐந்தில் ஒன்று,  பெண்களால் நடத்தப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் 7 கோடிக்கும் அதிகமான பெண்கள், சுயஉதவிக் குழுக்களில் சேர்ந்துள்ளனர். இந்த சுயஉதவி குழுக்கள் ரூ.6.25 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளதை வைத்து, அவற்றின் மதிப்பு உருவாக்கம் மற்றும் மூலதனத்தேவையை புரிந்து கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இப்பெண்கள் சிறு தொழில் முனைவோராக மட்டுமன்றி, திறமைமிக்க தொழில் ஆதரவாளர்களாகவும், பங்களிப்புச் செய்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். கிராமங்களின் புதிய பரிமாண வளர்ச்சியை அளவிடுவதற்காக வங்கி சகி, கிருஷி சகி மற்றும் பசு சகி திட்டங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கூட்டுறவுத் துறையில் மாற்றம், அத்துறையில் பெண்களின் பங்கு குறித்து பிரதமர் விளக்கினார். “வரும் ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பல்நோக்கு கூட்டுறவு, பால் கூட்டுறவு மற்றும் மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள்,  உருவாக்கப்பட உள்ளன. ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துடன் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர் குழுக்கள் இதில் பெரும் பங்கு வகிக்க முடியும்” என்று பிரதமர் கூறினார்.

ஸ்ரீ அன்னா எனப்படும் சிறுதானியங்களை ஊக்குவிப்பதில் மகளிர் சுயஉதவி குழுக்களின் பங்கை திரு மோடி விரிவாக எடுத்துரைத்தார். ஸ்ரீ அன்னா  தானியங்களில் பாரம்பரிய அனுபவமுள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பழங்குடியினப் பெண்கள் இந்த சுயஉதவிக் குழுக்களில் அங்கம் வகிக்கின்றனர் என்றார் அவர். “ஸ்ரீ அன்னா சிறுதானியங்களை சந்தைப்படுத்தல் தொடர்பான வாய்ப்புகளை அதிலிருந்து தயாரிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல இடங்களில் சிறு வன விளைபொருட்களை பதப்படுத்தி சந்தைக்கு கொண்டு வர அரசு அமைப்புகள் உதவிவருகின்றன. இன்று, தொலைதூரப் பகுதிகளில் பல சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அதை நாம் விரிவு படுத்த   வேண்டும்,” என்றார் பிரதமர்.

திறன் மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விஸ்வகர்மா திட்டம், பெண்களுக்கு அதிகாரமளித்தலில் பாலமாக செயல்பட்டு, ஒரு முக்கியப் பங்கை ஆற்றும் என்று  கூறினார்.   இதேபோல், ஜிஇஎம் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவை பெண்களின் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளாக மாறி வருகின்றன, சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் புதிய தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வோடு நாடு நகர்கிறது என்று பிரதமர் கூறினார். நாட்டின் புதல்விகள் தேசிய பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், ரஃபேல் விமானங்களை ஓட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றனர். தொழில்முனைவோராக மாறும் போது, திடமான முடிவுகளை எடுக்கின்றனர். ​​அவர்களைப் பற்றிய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சமீபத்தில் நாகாலாந்தில் முதல்முறையாக இரண்டு பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், அவர்களில் ஒருவர் அமைச்சராகவும் பதவியேற்றிருக்கிறார் என்றார். “பெண்களின் மரியாதை மற்றும் சமத்துவ உணர்வின் அளவை உயர்த்துவதன் மூலம் மட்டுமே இந்தியா முன்னேற முடியும். அனைத்து பெண்கள்-சகோதரிகள்-புதல்விகள் வழியில் வரும் அனைத்து தடைகளையும் நீக்கும் உறுதியுடன் முன்னோக்கிச் செல்லுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தில் குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டிய பிரதமர், தமது உரையை நிறைவுசெய்தார். “முன்னேற்றத்தை விரைவுபடுத்துவது நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. எனவே, இன்று, உங்கள் குடும்பம், சுற்றுப்புறம் அல்லது பணியிடத்தில் – ஒரு பெண்ணின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வகையிலும், அவர்கள் வாழ்க்கையில்  முன்னேறிச்செல்லும் வகையிலும், அந்த மாற்றம் இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த வேண்டுகோளை இதயத்தில் இருந்து நேரடியாக விடுக்கிறேன்” என்று குடியரசுத் தலைவர் எழுதியிருந்தார்.

***

AD/PKV/AG/RR