Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெட்ரோலியம் மற்றும் ஹைட்ரோகார்பன் துறைக்கு உந்துசக்தி அளிப்பதற்கான முக்கிய கொள்கை முடிவுகள்.


பெட்ரோலியம் மற்றும் ஹைட்ரோகார்பன் துறைகளுக்கு உந்துசக்தி அளிப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று கூடி கீழ்கண்ட முடிவுகளை எடுத்தது. :

1) ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கும் கொள்கை. ஒரே அனுமதி லைசென்சில் எண்ணை, எரிவாயு, மீத்தேன் போன்ற அனைத்துக்கும் அனுமதி தரும் வகையில் ஒரு சீரான லைசென்ஸ் முறையை வருங்காலத்தில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2) ஆழ் நீர், மிகவும் ஆழ் நீர் மற்றும் அதிக வெப்பமுள்ள பகுதிகளில் செய்யப்படும் எரிவாயு உற்பத்திக்கான விலை நிர்ணயம் மற்றும் சந்தைப் படுத்துதலில் சுதந்திரம்.

3) சிறிய மற்றும் நடுத்தர எரிவாயுக்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை பகிர்ந்து கொள்ள செய்யப்படும் ஒப்பந்தங்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு.

4) ரத்னா எரிவாயு படுக்கையில் எரிவாயு எடுக்க தற்போது லைசென்ஸ் வைத்துள்ள எஸ்ஸார் நிறுவனத்துக்கான அனுமதியை ரத்து செய்து, இதற்கு முன் இந்த லைசென்ஸை வைத்திருந்த ஓ.என்.ஜி.சி. யிடம் மீண்டும் அளிப்பது.

ஹைட்ரோகார்பன் எடுக்க லைசென்ஸ் வழங்கும் கொள்கையில், வருங்காலத்திற்கான புதிய கொள்கை.

எண்ணை மற்றும் எரிவாயு எடுப்பதற்கான லைசென்ஸ் முறை கடந்த 18 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இது பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

தற்போது ஒவ்வொரு வகையான ஹைட்ரோகார்பனுக்கும் தனித்தனியான லைசென்ஸ் வழங்கும் கொள்கை உள்ளது. எண்ணை, எரிவாயு, மீட்தேன், ஷேல் எண்ணை, எரிவாயு மற்றும் எரிவாயு ஹைட்ரேட்டுகள் ஆகியவற்றை எடுப்பதற்கு தனித்தனியான கொள்கைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான ஹைட்ரோகார்பன்களை எடுப்பதற்கு, நிதி தொடர்பான பல்வேறு விதிகளும் உள்ளன. நடைமுறையில் இது குறித்த பல்வேறு ஒப்பந்தங்கள், ஒன்றுடன் ஒன்று முரண்படும் வகையில் உள்ளன. இது தொடர்பான கொள்கைகள் உருவாக்கப்படுகையில் ஷேல் எண்ணை மற்றும் ஷேல் எரிவாயு கண்டுபிடிக்கப்படவேயில்லை. குறைபாடுள்ள ஹைட்ரோகார்பன் தொடர்பான கொள்கைகள் காரணமாக இயற்கை வளங்களை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு ஒரு வகையான ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான லைசென்ஸ் கொடுக்கப்பட்டு, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகையில், வேறு வகையான ஹைட்ரோகார்பன் கிடைத்தால், அதற்கு தனியாக லைசென்ஸ் பெற வேண்டும். இது உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.

லாபத்தை பங்கிடுவதன் அடிப்படையில் உற்பத்தியை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தங்கள் இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருந்தன. ஒரு நிறுவனம் எண்ணை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, எண்ணை கிடைத்தது என்றால், அந்நிறுவனம், அவருக்கு ஒதுக்கப்பட்ட சதவிகிதத்தின் அடிப்படையில், அரசோடு அதை பகிர்ந்து கொள்ள வேண்டும். லாபம் கிடைக்கும் வரையில், அரசுக்கு எந்த பங்கும் அளிக்கப்படுவதில்லை. வரி மற்றும் காப்புரிமைக்கான தொகை மட்டுமே அளிக்கப்படும். லாபத்தில் அரசுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளதால், உற்பத்திக்கான செலவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரசு இதை தொடர்ந்து கண்காணித்து வரும். அரசின் வருவாய்க்கு நஷ்டம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், நிறுவனங்கள் அரசை ஏமாற்றுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று விதி உள்ளது. ஒப்புதல் வழங்கப்படும் வரையில், நிறுவனம் உற்பத்தியை தொடங்க முடியாது. அரசிடம் உள்ள இத்தகைய கட்டுப்பாட்டின் காரணமாக, பல்வேறு சிக்கல்களும், தாமதங்களும் ஏற்பட்டு வந்தன. விலை நிர்ணயம் செய்வதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பல்வேறு திட்டங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன.

இந்த கொள்கையின் மற்றொரு பகுதி, அரசு டெண்டர் விடும் பகுதிகளில் மட்டுமே எண்ணை எடுக்க முடியும் என்று கூறுகிறது. சில நேர்வுகளில், நிறுவனங்கள் வேறு இடங்களில் எண்ணை எடுப்பது தொடர்பாக ஆர்வம் காட்டுவது உண்டு. தற்போது உள்ள கொள்கைகளின்படி, அரசு ஒரு பகுதியை ஏலத்திற்கு விட்டால் மட்டுமே அங்கே எண்ணை எடுக்க முடியும்.

தற்போது எரிவாயுக்கான விலை நிர்ணயம் செய்யும் கொள்கை பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. இது தொடர்பாக பல வழக்குகளும் உள்ளன. தற்போது உள்ள கொள்கைகளின்படி, அரசு நிர்வாக ரீதியாக எரிவாயுக்கான விலையை நிர்ணயிக்கிறது. இதன் காரணமாக வருவாய் இழப்பும், நீதிமன்றத்தில் வழக்குகளும் ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள கொள்கை, ஆழமற்ற இடங்களில் எண்ணை எடுப்பதையும் (இதற்கு செலவு அதிகம் பிடிப்பதில்லை) ஆழமான, மிக அதிக ஆழமான இடங்களில் (செலவு அதிகம் பிடிக்கும்) எண்ணை எடுப்பதையும் ஒரே தரத்தில் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

தற்போது நாடு உள்ள சூழல் என்னவென்றால், மிக அதிகமான அளவில் எண்ணை மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. எண்ணை உற்பத்தி நின்று விட்டது. எரிவாயு உற்பத்தி குறைந்து விட்டது. உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க ஒரு மாறுபட்ட கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்த சிக்கல்களை மனதில் கொண்டு, அரசு எண்ணை மற்றும் எரிவாயு எடுப்பது தொடர்பாக ஹைட்ரோ கார்பன் எடுக்க லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக புதிய கொள்கை முடிவு எடுத்துள்ளது. அந்த புதிய கொள்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

எரிவாயு, எண்ணை, மீத்தேன் போன்ற அனைத்து வகையான ஹைட்ரோகார்பன்கள் எடுப்பதற்கும் ஒரே லைசென்ஸ் வழங்கப்படும்.

வருவாய் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் ஒப்பந்தங்கள் அமைய வேண்டும். வருவாய் பங்கிடும் விதத்தை டெண்டரிலேயே குறிப்பிட வேண்டும். இந்த வருவாய் பங்கிடும் முறை, டெண்டர் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். குறைந்த வருவாய் பகிர்வு, அதிக வருவாய் பகிர்வு, ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய கொள்கை செயல்படும். எண்ணை எடுக்கப்படும் ஆழத்தின் அடிப்படையில் இதற்கு இடையே உள்ள விவகாரங்கள் கணக்கிடப்படும். அரசுக்கு அதிக வருவாய் பகிர்வை அளிக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் முடிவு செய்கைளில் அதிக மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

இது வரை எண்ணை எடுக்கப்படாத இடங்களில் நிலப்பரப்பின் அடிப்படையில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக கூறப்படும் காரணங்கள் மற்றும் நிறுவனங்களின் விருப்பத்தின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும். டெண்டர் வழங்க ஏற்றது என்று அரசு முடிவு செய்தால், வெளிப்படையான முறையில் டெண்டர் வெளியிடப்பட்டு, தேவையான சுற்றுச் சூழல் அனுமதி இதர அனுமதிகள் ஆகியவை பெறப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்படும். இந்த முறையின் மூலம், அதிகமான நிலப்பரப்பில் எண்ணை மற்றும் எரிவாயு எடுக்க அனுமதி வழங்க முடியும்.

ஆழமான மற்றும் மிக ஆழமான நீரில் எண்ணை எடுக்கப்படுகையில் சலுகையான கட்டணங்களில் அனுமதி வழங்கப்படும். இது போன்ற இடங்களில் முதல் ஏழு ஆண்டுகளுக்கு எந்த கட்டணமும் இருக்காது. அதன் பிறகு ஆழ் நீருக்கு 5 சதவிகிதமும், மிக அதிகமான ஆழ் நீருக்கு 2 சதவிகிதம் என்ற விகிதத்தில் அனுமதி வழங்கப்படும். ஆழமற்ற நீர் உள்ள இடங்களில், கட்டணம் 10 முதல் 7.5 சதவிகிதம் வரை குறைக்கப்படும்.

நிறுவனங்கள் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கான விலையை நிர்ணயம் செய்கையில் ஒரு அளவுகோலின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய அனுமதிக்கப்படும். அரசின் வருவாயை பாதுகாப்பதற்காக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையின் அடிப்படையில் லாபம் கணக்கிடப்படும்.

எண்ணை மற்றும் எரிவாயுத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இந்த புதிய கொள்கை உருவாக்கியுள்ளது. எண்ணை வளங்களை கண்டெடுப்பது மற்றும் எரிவாயு உள்ளிட்ட இதர ஹைட்ரோகார்பன்களை கண்டெடுப்பதில் இது ஒரு பெரும் ஊக்கமாக அமையும். இது இறக்குமதியை பெருமளவில் குறைக்கும். மேலும், இது கணிசமான வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வருவாய் பகிர்வுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்பு, “குறைந்த அரசு, அதிக நிர்வாகம்” என்ற லட்சியத்தை நோக்கிய படியாகும். நிறுவனங்கள் எண்ணை எடுப்பதற்கு ஆகும் செலவை, அரசு கண்காணிக்க வேண்டியதில்லை என்பது கூடுதல் பலமாகும். சந்தைப் படுத்துதல் மற்றும் விலை நிர்ணயத்தில் உள்ள சுதந்திரம், இதில் உள்ள பல்வேறு சிக்கல்களை தீர்க்கும். அரசுத் தரப்பில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, சிக்கல்களை குறைத்து, ஊழலுக்கான வாய்ப்பை குறைத்து, நிர்வாக தாமதங்களையும் குறைக்கும்.

ஆழ்நீர் மற்றும் அதிக ஆழ்நீரில் அகழ்வுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சந்தை சுதந்திரம் மற்றும் விலை நிர்ணயிப்புக்கான சுதந்திரம், இத்துறையை மேலும் முன்னேற்றும்.

ஹைட்ரோகார்பன் இறக்குமதி நமது இறக்கமதியில் பெரும்பங்கு வகிக்கிறது. தற்போது கச்சா எண்ணை தேவையில் முக்கால் பாகமும், எரிவாயுத் தேவையில் மூன்றில் ஒரு பாகமும் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பொருளாதார தாக்கத்தை குறைப்பதற்கும் ஹைட்ரோகார்பனில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகும்.

இதுவரை கண்டெடுக்கப்படாத எண்ணை மற்றும் எரிவாயு வளங்கள், ஆழ்நீர் மற்றும் மிக ஆழ்நீரின் அடியிலோ, அல்லது உயர் அழுத்தம் / உயர் வெப்பப் பிரதேசங்களிலோ உள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 18.10.2014 அன்று, இயற்கை எரிவாயுவுக்கான விலை நிர்ணயம் தொடர்பான புதிய முறையை அறிமுகப்படுத்தியது. ஆழ்நீர் மற்றும் மிக ஆழ்நீரின் அடியிலோ, அல்லது உயர் அழுத்தம் / உயர் வெப்பப் பிரதேசங்களிலோ எடுக்கப்படும் எரிவாயுவை எடுப்பதற்கான செலவு அதிகமாகும் என்பதை கவனத்தில் கொண்டு கூடுதல் விலை நிர்ணயம் செய்வதற்கு கொள்கை அளவில் அனுமதி அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவைக் குழுவின் முடிவுக்குப் பின்னால், சர்வதேச கச்சா எண்ணை மற்றும் எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்து, பத்தாண்டுகளுக்கு முன்பு உள்ள விலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் ஆர்வம் குறைந்துள்ளது. ஆழ்நீர் மற்றும் மிக ஆழ்நீரின் அடியிலோ, அல்லது உயர் அழுத்தம் / உயர் வெப்பப் பிரதேசங்கள் இது வரை கண்டெடுக்கப்படாத எரிவாயு மற்றும் எண்ணை உள்ளது. ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்கள், இத்தகைய இடங்களில் எடுக்கப்படும் வாயு மற்றும் எண்ணைக்கு கூடுதல் விலை தர வேண்டும் என்றும், இல்லையென்றால், அவ்வாறு எடுப்பது சாத்தியமாகாது என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உள்ளூர் வாயு உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 17 சதவிகிதம் குறைந்துள்ளது. 2012இந்நிலையில், உள்ளூர் வாயு உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 17 சதவிகிதம் குறைந்துள்ளது. 2012-13ல் 40.66 பிசிஎம்ஆக இருந்த உற்பத்தி 2014-15ல் 33.65 பிசிஎம் ஆக குறைந்துள்ளது. பொருளாதாரம் 7 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஒரு புறம் உற்பத்தி வீழ்ச்சி, மறுபுறம் தேவை அதிகரிப்பு என்பதன் காரணமாக, இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தப் பின்னணியில், கூடுதலாக விலை அளிப்பதற்கு பதிலாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி தொடங்காத எண்ணை வயல்களிலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட உள்ள எண்ணைப் படுகைகளிலும் சந்தையில் விலை நிர்ணயம் செய்து கொள்ளும் சுதந்திரத்தை அளிப்பது அதிக பலன் தரும் என்று பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சர்வதேச விலை வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார, சுற்றுச்சூழலிய காரணிகளை கணக்கில் கொண்டு, உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றின் நலனையும் கருத்தில் கொண்டு, ஒரு புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

ஆழ்நீர் மற்றும் மிக ஆழ்நீரின் அடியிலோ, அல்லது உயர் அழுத்தம் / உயர் வெப்பப் பிரதேசங்களிலோ 1.1.2016 அன்று உள்ளபடி உற்பத்தி தொடங்காத கண்டுபிடிப்புகளுக்கு உரிமையான நிறுவனங்கள் சந்தை நிலவரப்படி விலை நிர்ணயித்துக் கொள்ள சுதந்திரம் வழங்கப்படுகிறது.

சந்தையின் ஏற்ற இறக்கங்களின்படி, நிறுவனங்கள் பாதிக்காத வகையில் மாற்று எரிபொருட்களின் அதிகபட்ச விலையின்படி, விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கான விலை, இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவுக்கான விலைக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதி, பொருளாதார முன்னேற்றத்துக்கும், புதிய வேலை வாய்ப்புகளுக்கும், ஜி.டி.பி வளர்ச்சிக்கும், இறக்குமதி குறைவுக்கும் பயன்படுவதோடு, இதை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கும் விலை சராசரி ஆவதன் மூலம் பயன் தரும்.

இந்த உச்சவரம்பு மாற்று எரிபொருட்களின் விலையின் அடிப்படையில் வெளிப்படையான முறையின் மூலம் கணக்கிடப்படும்.

இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை, இறக்குமதி செய்யப்படும் மாற்று எரிபொருள் (நிலக்கரி, எண்ணை, மற்றும் நாப்தா) இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் சராசரி விலையின் அடிப்படையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும். நிலக்கரியின் விலை இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை, இறக்குமதி செய்யப்படும் மாற்று எரிபொருள் (நிலக்கரி, எண்ணை, மற்றும் நாப்தா) இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் சராசரி விலையின் அடிப்படையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும். நிலக்கரியின் விலை 0.3 X + 0.4 கச்சா எண்ணையின் விலை + 0.3 நாப்தாவின் விலை என்ற முறையில் விலை கணக்கிடப்படும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் எரிவாயுவின் விலையை நிர்ணம் செய்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவிக்கை வெளியிடும்.

1.1.2016 அன்று உள்ளபடி, இது வரை வணிக ரீதியில் உற்பத்தி தொடங்காமல், விலை நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நேர்வுகளில், வழக்குகளை வாபஸ் பெறுவதன் அடிப்படையில் இந்த புதிய கொள்கை செயல்படுத்தப்படும்.

ஏற்கனவே வாயு உற்பத்தி செய்யப்பட்டு வரும் எண்ணை வயல்களில், ஏற்கனவே உள்ள விலை நிர்ணயக் கொள்கை தொடரும்.

உற்பத்தி அதிகரிப்பு :

இந்த புதிய முடிவு, வாயு கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்திக்கு தயாராக இருக்கும் இடங்களில் உற்பத்தி அதிகரிக்கவும், எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் வாயு வயல்களில் வணிக ரீதியாக உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும். இது வரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள வாயு வயல்கள், 6.75 டிசிஎப் அல்லது 190 பி.சி.எம். அல்லது 35 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. அளவில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு வணிக ரீதியில் உற்பத்தி செய்ய முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாயு வயல்கள், 28.35 பில்லியன் டாலர்கள் (1,80,000) கோடி) மதிப்பிலானது என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் வாயு உற்பத்தி 90 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. இவற்றைத் தவிர, மேலும் 10 புதிய வாயு வயல்கள் அடையாளம் காணப்பட்டு சோதனைக்காக காத்திருக்கின்றன.

இந்த புதிய வயல்களில் உற்பத்தி தொடங்குகையில் கணிசமான வேலை வாய்ப்புகள் உருவாகும். உதாரணத்துக்கு KG-DWN-98/2 என்ற வாயு வயலில் 3850 திறனுள்ள பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஓ.என்.ஜி.சி. மதிப்பிட்டுள்ளது. இது தவிர, கட்டுமானம் தொடங்குகையில் மேலும் 20,000 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்த பணியாளர்கள் பணிக் கூடம், கட்டுமானப் பணி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவார்கள்.

சிறு மற்றும் நடுத்தர வாயு வயல்களில் வாயு உற்பத்திக்கு உற்பத்தி பகிர்வு அடிப்படையில் அனுமதி நீட்டிப்பு கொள்கை

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 28 நடுத்தர மற்றும் சிறு வாயு வயல்களுக்கான உற்பத்தி அனுமதி, உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 1994 முதல் 1998 வரையிலான நான்காண்டு காலததுக்கு 18 முதல் 25 ஆண்டுகளுக்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களோடு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் செயல்படுத்தப்படும். முதல் ஒப்பந்தம் 1994ல் கையெழுத்திடப்பட்டது. மொத்தம் உள்ள 28 ஒப்பந்தங்களில் இரண்டில் 2013ம் ஆண்டு ஒப்பந்த காலம் முடிவடைந்து 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஒப்பந்தங்கள் 2018 காலகட்டத்தில் முடிவடையும்.

இவற்றில் பல வாயு வயல்களில் ஒப்பந்த காலம் முடிவடைவதற்குள் உற்பத்தி தொடங்க இயலாது. கூடுதலாக எடுக்கப்படும் ஹைட்ரோகார்பன்கள், மூலதனம் அதிகரித்து எண்ணை உற்பத்தி செய்யும் திட்டங்களின் மூலமாகவே செயல்படுத்த முடியும். இதில் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே விலையை அளிக்க முடியும்.

மீதம் உள்ள வாயுப் படுகைகளில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏதுவாக ஒரே மாதிரியான வெளிப்படையான ஒரு கொள்கை தேவைப்படுகிறது. இந்த கொள்கை, முடிவெடுப்பதை விரைவுபடுத்தி, தாமதத்தை தவிர்த்து, எண்ணை மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும்.

சிறு மற்றும் நடுத்தர வாயுப் படுகைகளில் உற்பத்தி செய்யப்படும் வாயு தொடர்பாக கீழ்கண்ட கொள்கை செயல்படுத்தப்படுகிறது. :

1) ஒப்பந்த காலம் முடிவடைய 2 வருடங்கள் இருக்கும் முன்பாக, ஆனால் 6 வருடங்கள் முன்னதாக இல்லாமல், சம்பந்தப்பட்ட நிறுவனம் கால அவகாச நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்த 6 மாதங்களுக்குள், ஹைட்ரோகார்பன் இயக்குநர் அது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பார். இந்த பரிந்துரை கிடைக்கப்பெற்ற 3 மாதங்களுக்குள் அரசு ஒரு முடிவெடுக்கும்.

2) நீட்டிப்பு கிடைத்த பிறகு, நீட்டிக்கப்படும் காலத்தில் அரசுக்கு 10 சதவிகிதம் அதிகமாக ஏற்கனவே உள்ள உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்கு வழங்க வேண்டும். உதாரணமாக தற்போது பகிரும் பங்கு 10 அல்லது 20 சதவிகிதமாக இருந்தால் இது 20 அல்லது 30 சதவிகிதமாக அதிகரிக்கும்.

3) நீட்டிக்கப்பட்ட ஒப்பந்த காலத்தில் ராயல்டி மற்றும் வரி, அப்போது உள்ள விலைகளின்படி அளிக்கப்பட வேண்டும். சலுகை விலையில் அளிக்கப்படக் கூடாது.

4) எண்ணை அல்லது வாயுப்படுகையின் ஆயுள் காலமோ, அல்லது 10 ஆண்டுகளோ, எது முன்னதாக வருகிறதோ அது வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.

உற்பத்தி அதிகரிப்பு :

இந்த புதிய கொள்கையின் அடிப்படையில் தற்போது உள்ள ஒப்பந்த காலத்துக்கு பின்னரும் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்யப்படும். இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயு 15.7 எம்எம்டி எண்ணை மற்றும் 20.6 எரிவாயு அளவுக்கு வணிகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 8.25 டாலர்கள் (53,000 கோடி) அளவுக்கு இந்த ஹைட்ராகார்பன்கள் வணிகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு கூடுதலாக 3 முதல் 4 பில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்படும்.

வேலை வாய்ப்பு உருவாக்கும் திறன் :

இந்த ஒப்பந்தங்களின் கால அவகாசம் நீட்டிப்பு கூடுதல் முதலீடுகளையும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது உள்ள வேலை வாய்ப்புகளை மேலும் நீண்ட காலத்துக்கு நீட்டிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடுத்தர அளவிலான படுகைகள் 300 களப் பணியாளர்களுக்கும் சிறு அளவிளான படுகைகள் 40 முதல் 60 களப்பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு தருகிறது.

இப்படுகைகளில் செய்யப்படும் முதலீடுகள் காரணமாக கட்டுமானப் பணிகள் அதிகரித்து, திறனுள்ள பணியாளர்களோடு, திறனற்ற பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் குறைந்த அரசு நிறைந்த நிர்வாகம் :

உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு தொடர்பாக முடிவுகள் எடுப்பதை விரைவுபடுத்துவதற்காக அனுமதிக்கான கால நீட்டிப்பு வெளிப்படையான முறையில் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதலீட்டுக்கான சூழலை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அனுமதிக்கான கால அவகாச நீட்டிப்பு கொள்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

ரத்னா படுகைகள்

மும்பையின் தென்மேற்கு திசையில் அமைந்நதுள்ள ரத்னா கடல்படுகை 1971ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பின்னாளில் எஸ்ஸார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நிர்வாக மற்றும் சட்டரீதியான பிரச்சினைகளின் காரணமாக, இந்த ஒப்பந்தம் முழுமை பெறவேயில்லை. ஒப்பந்தம் வழங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த பின்னும் உற்பத்தி தொடங்கப்படாமல் இருந்த காரணத்தால், இந்த படுகையை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு வழங்குவது என்று அரசு முடிவெடுத்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்தப் படுகையில் உற்பத்தியை தொடங்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவும்.