பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் (30.05.2019) பூட்டான் பிரதமர் டாக்டர் லோட்டே ஷெரிங் கலந்து கொண்டார்.
இன்று (31.05.2019) நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல்களில் அசைக்க முடியாத வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றிருக்கும் திரு மோடிக்கு டாக்டர் லோட்டே ஷெரிங் பாராட்டுத் தெரிவித்தார். பூட்டான் மன்னர் மற்றும் பூட்டான் மக்களின் நல்வாழ்த்துக்களையும் அவர் இந்திய பிரதமருக்கு தெரிவித்தார். இந்திய அரசுடனும், பிரதமர் திரு மோடியுடனும் நெருக்கத்துடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக டாக்டர் ஷெரிங் கூறினார். விரைவில் பூட்டானுக்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் திரு மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காகவும் நல்வாழ்த்துக்களை தெரிவித்ததற்காகவும் பூட்டான் பிரதமருக்கு, பிரதமர் திரு மோடி அன்புடன் நன்றி கூறினார். புனல் மின்சாரத் துறை உள்ளிட்டவற்றில் பூட்டானுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா மிகுந்த விருப்பம் கொண்டுள்ளது என்பதை அவர் வெளிப்படுத்தினார். மகத்தான வளத்தையும், நல்வாழ்வையும் தேடும் பூட்டானின் உறுதிமிக்க கூட்டாளியாக இந்திய அரசு இருக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். பரஸ்பரம் வசதியாக இருக்கும் தேதியில் பூட்டான் பயணத்திற்கான அழைப்பை பிரதமர் திரு மோடி ஏற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பு அன்பான, நட்பு ரீதியான சூழலில் நடைபெற்றது. இது நம்பிக்கை உணர்வையும், ஒத்துழைப்பையும், இருநாடுகளுக்கு இடையே நெருக்கமான நட்புமிக்க உறவுகளைப் புரிந்து கொள்வதையும் பிரதிபலித்தது.