மேதகு லயன்ச்சென் டாக்டர் லோட்டே ஷெரிங், பூடான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளே, வணக்கம்.
அனைத்து இந்தியர்கள் மாதிரி, எனக்கும், பூடான் மீது சிறப்பு அன்பும், உறவும் உள்ளது. உங்களை சந்திக்கும்போதெல்லாம், எனக்கு பற்று ஏற்படுகிறது.
கடந்தாண்டு எனது பூடான் பயணம், மறக்கமுடியாத நினைவாக உள்ளது. நமது ஒத்துழைப்பில் டிஜிட்டல், விண்வெளி மற்றும் புதிய தொழில்நுட்ப துறையை சேர்ப்பதில் பல முக்கிய முடிவுகள் எடுத்தோம்.
21ம் நூற்றாண்டில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய இணைப்பு ஏற்படும், குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு. எனது முதல் பயணத்தில், இரு நாடுகள் இடையே ரூபே அட்டையின் முதல் கட்டத் திட்டத்தை நாம் தொடங்கினோம்.
இதன் மூலம், இந்தியர்கள், தமது இந்திய வங்கிகள் வழங்கிய கார்டு மூலம், பூடானுக்கு பணம் செலுத்த உதவிகரமாக இருந்தது. இதுவரை 11,000 பண பரிமாற்றங்கள் ரூபே அட்டை மூலம் நடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கொவிட்-19 தொற்று ஏற்பட்டு இருக்காவிட்டால், இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும்.
இன்று 2ம் கட்ட லட்சியத் திட்டத்தை நாம் தொடங்குகிறாம். இதன் மூலம் எங்கள் ரூபே நெட்வொர்க்குக்குள் பூடானை நாங்கள் வரவேற்கிறோம். இந்த சாதனைக்காக, அனைத்து பூடான் மற்றும் இந்திய அதிகாரிகளை பாராட்டுகிறேன்.
இன்று முதல், பூடான் தேசிய வங்கியால் வழங்கப்பட்ட ரூபே அட்டை வைத்திருப்பவர்கள், இந்தியாவில் உள்ள ஒரு லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் 20 லட்சம் விற்பனை மையங்களைப் பயன்படுத்த முடியும். இது இந்தியாவில் கல்வி, சுகாதாரம், புனித பயணம் மற்றும் சுற்றுலா மேற்கொள்ளும் பூடான் மக்களுக்கு வசதியாக இருக்கும்.
மேலும், பூடானில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரிக்கவும் இது உதவும். இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரித்தது, கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
நம் நாடுகள் இடையேயான இணைப்பை வலுப்படுத்துவதில் மற்றொரு முக்கியத்துறை விண்வெளி. இந்தியா எப்போதும், வளர்ச்சிக்கு, விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த நோக்கத்தை இந்தியாவும், பூடானும் பகிர்ந்து கொள்கின்றன.
பூடானில் தெற்கு ஆசிய செயற்கைகோள் பயன்பாட்டுக்கான, தரை கட்டுப்பாட்டு மையத்தை நான் கடந்தாண்டு தொடங்கி வைத்தேன். அதை பூடானின் ஒலிபரப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு அதிகம் பயன்படுத்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு, விண்வெளியைப் பயன்படுத்துவதில், நமது ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் நேற்று நாம் கையெழுத்திட்டோம். இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கு இது வழிவகுக்கும்.
பூடான் செயற்கை கோளை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள், இஸ்ரோ மையத்தில் வேகமாக நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக, பூடான் விண்வெளி இன்ஜினியர்கள், டிசம்பர் மாதம் இஸ்ரோ வரவுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். பூடான் வளர்ச்சிக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மேதகு பூடான் மன்னர் ஆர்வமாக உள்ளார் என்பதை நான் அறிவேன். இதை அவர் ஊக்குவிக்கிறார். இது தொடர்பான தொலைநோக்கும் அவருக்கு உள்ளது.
இந்த தொலைநோக்கு நனவாக, தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள, இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. பூடானுக்கு சர்வதேச இன்டர்நெட் இணைப்பை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தையும் நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
கொவிட் நெருக்கடி நேரத்தில் பூடான் பின்பற்றிய அமைதி மற்றும் ஒழுங்கு பாராட்டுக்குரியது. நீங்கள் ஆரோக்கியத்துடன் வெற்றி பெற இந்தியாவின் 130 கோடி மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில், பூடானுக்கு நாங்கள் துணை நிற்போம். உங்களின் தேவைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறோம்.
உங்களுக்கு, மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
மன்னர் குடும்பமும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.
குறிப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
Boosting ties with Bhutan. https://t.co/LvRhjJNvoE
— Narendra Modi (@narendramodi) November 20, 2020