பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட வேலைகளை மேற்கொள்ள தனது ஒப்புதலை அளித்தது. 31.254 கிலோமீட்டர் நீளமுள்ள, இரண்டு வழிகளைக் கொண்டதாக புனே மெட்ரோ ரயில் பாதை அமையும். இதில் (பிம்ப்ரி சின்ச்வாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (பிசிஎம்சி) முதல் ஸ்வர்கேட் வரையான முதல் வழி 16.589 கிலோமீட்டர் நீளமுள்ளதாக ( 11.57 கிலோமீட்டர் தூரத்திற்கு தரைக்கு மேலாகவும், 5.019 கிலோமீட்டர் தூரத்திற்கு தரைக்குக் கீழாகவும் அமைந்த வகையில்) இருக்கும். (வனஸ் முதல் ராம்வாடி வரையிலான) இரண்டாவது வழி 14.665 கிலோமீட்டர் தூரமுள்ளதாகவும், முற்றிலும் தரைக்கு மேலாகச் செல்வதாகவும் அமைந்திருக்கும்.
இந்த மெட்ரோ ரயில் பாதையை முழுமையாக நிறைவேற்றுவதற்கான செலவு ரூ. 11,420 கோடியாகும். புனே பெருநகரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள்.
விரிவான திட்ட அறிக்கையின்படி, இந்தத் திட்டம் துவங்கிய நாளிலிருந்து ஐந்தாண்டுகளில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பாதைகள் பயணிகளுக்கு தேவைப்படும் தொடர்பு வசதிகளை வழங்குவதாக, புனே பெருநகரப் பகுதியின் மிக நெருக்கமான, போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளின் வழியாகச் செல்லும். இது போக்குவரத்து நெருக்கடியை பெருமளவிற்குக் குறைக்கும் என்பதோடு, விரைவான, வசதியான, பாதுகாப்பான, மாசற்ற, செலவு குறைவான மக்கள் போக்குவரத்தை இந்த நகருக்கு கொண்டுவருவதாகவும் இருக்கும். இந்த ஏற்பாடு இப்பகுதி மேலும் அதிகமாக வளர்ச்சி பெறவும், புனே பெருநகரப் பகுதிக்கு வளத்தைக் கொண்டுவருவதாகவும் அமையும். மேலும் நாட்டின் வளம், மேம்பாடு ஆகியவற்றுக்கும் பங்களிப்பதாகவும் இது அமையும்.
மத்திய அரசு- மகாராஷ்டிரா மாநில அரசு ஆகியவற்றுக்குச் சொந்தமான, அவற்றின் 50-50 சதவீத முதலீட்டிலான மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (மஹா மெட்ரோ) நிறுவனத்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படும். மெட்ரோ ரயில்வேஸ் (கன்ஸ்டர்க்ஷன் ஆஃப் வொர்க்ஸ்) சட்டம், 1978; மெட்ரோ ரயில்வேஸ் (ஆபரேஷன் அண்ட் மெயின்டனன்ஸ்) சட்டம், 2002; மற்றும் ரயில்வேஸ் சட்டம், 1989 ஆகிய சட்டங்களுக்கு உட்பட்டு, இந்த சட்டங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மும்பை பெருநகரப் பகுதிக்கு வெளியே, புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் உள்ளிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து மெட்ரோ திட்டங்களையும் நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசு ஆகியவற்றின் கூட்டான சிறப்பு செயல் அமைப்பாக தற்போதுள்ள நாக்பூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.எம்.ஆர்.சி.எல்) என்ற அமைப்பு மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (மஹா மெட்ரோ) என்பதாக மாற்றி அமைக்கப்படும். தில்லி, பெங்களூரு, சென்னை, கொச்சி, நாக்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களில் பெற்ற அனுபவங்கள், பாடங்கள் ஆகியவற்றிலிருந்து பயன் பெறுவதாக இத்திட்டம் அமையும்.
பின்னணி:
புனே பெருநகரப் பகுதி என்பது புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி), பிம்ப்ரி சின்ச்வாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (பிசிஎம்சி) ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். புனே, காட்கி ஆகிய இரண்டு ராணுவ படைப்பிரிவுப்பகுதிகளுமே மிக வேகமான மக்கள் தொகைப் பெருக்கத்தை சந்தித்து வருகின்றன. 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35 லட்சத்து 70ஆயிரமாக இருந்த புனே நகர்ப்புற ஒன்றியப்பகுதியின் மக்கள் தொகை 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 49 லட்சத்து 90ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதே விகிதத்தில் பார்க்கும்போது இது 2021இல் 69 லட்சமாகவும், 2031இல் 77 லட்சத்து 30 ஆயிரமாகவும் உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பல பத்தாண்டுகளில் ஏற்பட்ட துரிதமான தொழில்மயம் மற்றும் தீவிரமான வணிக ரீதியான மேம்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக பயணத்திற்கான தேவைகளை மிக அதிகமான அளவிற்கு உயர்த்தியுள்ளன. இதன் விளைவாக புனேயின் போக்குவரத்து கட்டமைப்பு பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பகுதியின் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிப்பது குறித்த கணிப்பை கணக்கில் எடுக்கையில் தற்போதுள்ள போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தி, வளப்படுத்துவதென்பது அவசரமாக மேற்கொள்ளவேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரம், போதுமானதாக இல்லாத பொது போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றால் பயணிகள் தனிப்பட்ட போக்குவரத்து முறைகளுக்கு மாறிச் செல்வார்கள். இந்தப் பகுதியில் அதிகமான அளவிற்கு தனியாருக்குச் சொந்தமான வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் போக்கும் ஏற்கனவே தென்பட்டு வருகிறது. இது தெருக்களின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்பதோடு, காற்று மாசுபடுவதையும் அதிகரிக்கும். எனவே, மெட்ரோ ரயில் முறை என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.