பீகார் ஆளுநர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களே,
மங்கோலியாவில் இருந்து வருகை புரிந்துள்ள மேதகு. கம்பா லாமா ச. டெம்பிரல் அவர்களே,
தைவானில் இருந்து வருகை புரிந்துள்ள மேதகு. மிங் குவாங் ஷி அவர்களே,
வியாட்நாமில் இருந்து வருகை புரிந்துள்ள மதிப்புமிகு. திச் தியன் டம் அவர்களே,
ரஷ்யாவில் இருந்து வருகை புரிந்துள்ள மதிப்புமிகு. டெலோ துல்கு ரின்போச்சி அவர்களே,
இலங்கையில் இருந்து வந்துள்ள மேதகு பனகாலா உபாடிசா அவர்களே,
மேதகு லாமா லோக்சங் அவர்களே,
எனது அமைச்சரவை சகா திரு. கிரன் ரிஜிஜூ அவர்களே,
பூட்டான் அமைச்சர் லையோன்போ நாம்கே டோர்ஜி அவர்களே,
மங்கோலியா அமைச்சர் பயாசைகான் அவர்களே,
மகாசபாவின் மேதகு உறுப்பினர்களே, அயல்நாடுகளிலிருந்து வந்துள்ள அமைச்சர்களே, தூதரக அதிகாரிகளே,
உங்கள் மத்தியில் நான் இங்கு இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். புத்த கயாவில் நான் இங்கு வருகை புரிந்ததற்கு அருள்பெற்றதாக உணர்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேரு, அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் இந்த புனித தலத்திற்கு பயணம் மேற்கொண்ட பின்னர் எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறிப்பிடத்தகுந்த நாளான இன்று உங்களை சந்திப்பதில் பெருமை அடைகிறேன். இன்று இந்தியாவில் ஆசிரியர் தினத்தை கொண்டாடுகிறோம். நாட்டின் 2வது குடியரசுத் தலைவராக இருந்தவரும், மிகப் பெரிய அறிஞருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இன்று நடக்கும் மாநாட்டில் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக இருந்த கவுதம புத்தரைப் பற்றி நாம் பேசுகின்றோம். கடந்த சில நூற்றாண்டுகளாக அவரது போதனைகளை லட்சக்கணக்கான மக்கள் கேட்டு பயன் அடைந்துள்ளனர்.
இன்று பகவான் கிருஷ்ணர் பிறந்த ஜென்மாஷ்டமியும் கொண்டாடுகிறோம். பகவான் கிருஷ்ணரிடமிருந்து நாம் பலவற்றைக் கற்றுள்ளோம். பகவான் கிருஷ்ணரைப் பற்றி பேசும்போது அவர் ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியர் என்றும் ஆசானுக்கு எல்லாம் ஆசான் என்றும் அழைக்கிறோம். கவுதம புத்தரும், பகவான் கிருஷ்ணரும் உலகிற்கு பல போதனைகளை கூறியுள்ளனர். இவர்கள் அளித்த கொள்கைகளும், கோட்பாடுகளைப்பற்றியே இப்பொழுது இந்த மாநாட்டில் விவாதிக்க இருக்கிறோம்.
மகாபாரதம் போர் துவங்குவதற்கு முன்னால் கிருஷ்ணர் போதனைகளை அளித்தார். பகவான் புத்தர் போரை விரும்பாதவர். ஆனால், இருவரும் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே மக்களுக்கு போதனைகளைக் கூறியுள்ளனர்.
கோட்பாடுகளுக்கும், கொள்கைகளுக்கும் முக்கியத்துவத்தை இருவரும் அளித்தனர். கவுதம புத்தர் பஞ்சசீல கொள்கைகளையும், எட்டு வழிப் பாதையும் உலகிற்கு அளித்தார். கிருஷ்ணர் கர்ம யோகத்தின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்பதை போதித்தார். மக்கள் தங்களது வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டுமென்றும், அதுவே வாழ்க்கையில் வலுவை அளிக்கும் என்றும் இந்த இருவரும் தெரிவித்துள்ளனர். முன்பைக் காட்டிலும் தற்போது அவர்களது போதனைகள் எவ்வளவு கருத்துள்ளவைகளாக இருக்கின்றன என்பதும், அவை எவ்வளவு நிலையானவை என்பதும் நமக்கு தெரிய வருகிறது.
இன்று நாம் நடத்தும் இந்த மாநாடு மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. மனித இன வரலாற்றின் மிக முக்கியமான இடத்தை இந்த இடம் அதாவது புத்த கயா பெற்றுள்ளது. இந்த இடம் மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் புத்த கயா சித்தார்த்தா என்பவரைப் பெற்றது. ஆனால், அதே புத்த கயா உலகிற்கு அறிவு, அமைதி, கருணை ஆகியவை கொண்ட பகவான் புத்தரை அளித்தது.
இன்று ஆசிரியர் தினம் ஜென்மாஷ்டமி ஆகியவையும் கொண்டாடுவதால் இம்மாநாட்டில் பேச்சுவார்த்தைகளுக்கு உகந்த நாளாக உள்ளது. மோதலை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் விவாதிப்பதற்காக இந்து, புத்த மதங்களின் முதல் சர்வதேச மாநாட்டில் நான் கலந்து கொள்வது குறித்து பெருமை அடைகிறேன். இந்த மாநாடு விவேகானந்தா சர்வதேச அமைப்பும், டோக்கியோ சர்வதேச அமைப்பும் இணைந்து தில்லியில் உள்ள புத்த மத சர்வதேச கூட்டமைப்பின் ஆதரவுடன் நேற்று முந்தைய நாள் துவங்கியது.
மோதல் குறித்த தீர்மானத்தில் இருந்து மோதலை தவிர்ப்பது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல், சுற்றுப்புறச்சூழல் பற்றிய விதிமுறைகளில் இருந்து சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இவை இரண்டும் தற்போது மனித இனத்தின் அச்சுறுத்தலோடு நமக்கு சவாலாகவே விளங்குகின்றன. இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் எவ்வாறு உலக நாடுகள் புத்தரின் போதனைகளுக்கு ஏற்ப தீர்வு காண வேண்டும் என்று நான் முன்பே கூறியுள்ளேன். அதாவது மோதல் பற்றிய தீர்மானம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தீர்மானம் ஆகிய இரண்டையும் உலக நாடுகள் பின்பற்றி வருவதால் சவால்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது.
புத்த மத அமைப்புகளைச் சார்ந்த ஆன்மிக மற்றும் மத தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோர் இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு இரண்டு பிரச்சினைகளையும் ஆராய்ந்தார்கள். இரண்டு நாள் மாநாடு முடிவுற்ற பின்னர் டோக்கியோ அமைப்பு இதேபோன்ற மாநாட்டை 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப் போவதாக முடிவு செய்துள்ளது. புத்த மதத்தை பின்பற்றும் மற்ற நாடுகளும் அவரவர்கள் நாட்டில் இதுபோன்ற மாநாட்டை நடத்த உள்ளனர்.
பொருளாதாரம் மற்றும் நாகரீகம் ஆகியவற்றில் முன்னேறிவரும் ஆசியாவில் இதுபோன்ற ஒரு முயற்சி குறிப்பிடத்தகுந்ததாகும். இந்து, புத்த மத மாநாட்டில் கூறப்பட்ட கருத்துக்களான மோதலை தவிர்ப்பது மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய தத்துவங்கள் ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் சென்று அடையும்,
இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. மோதல் குறித்த பிரச்சினையில் ஒவ்வொருவரும் அவர்களது மதத்தை பின்பற்றுவதில் எவ்விதமான பிரச்சினையும் ஏற்படாது என்றும் ஆனால், இதில் உள்ள தீவிரவாத கருத்துக்களை உடையவர்கள் அவர்களது மதத்தை மற்றவர்களிடம் திணிப்பதால் மோதல் நிலை உருவாகிறது என்றும் இந்த மாநாட்டில் ஒருமித்தக் கருத்து உருவாகியுள்ளது.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த பிரச்சினையில் தர்மம் முக்கியமான தத்துவமாக உள்ளது என்றும் இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஒப்புக் கொண்டனர். நிலையான வளர்ச்சியை நாம் அடைய வேண்டுமெனில், நமது பாரம்பரியத்தை காப்பாற்றுவது அவசியம் என்றும் ஒப்புக் கொண்டுள்ளனர். உள்நாட்டில் உள்ள மக்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப செயல்படும் போது நிலையான வளர்ச்சியை பெற முடியும் என்ற ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளதை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.
பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட உலகில் வளர்ச்சியை ஏற்படுத்த இது சிறந்த திருப்பமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்து, புத்த மத அமைப்புகள் சுற்றுச்சூழல் பற்றி கூறிய ஒருமித்த கருத்துக்கள் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் சென்றடையும் என்றும் நான் நினைக்கிறேன். மோதல் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆகிய இரண்டு கருத்துக்கள் பற்றி இந்து, புத்த மத மாநாடு கூறியவை மிக முக்கியமானதாக உள்ளது. இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்து உலக நாடுகளிடையே போதுமான கருத்துக்கள் இல்லை என்று தெரிகிறது.
பகவான் புத்தரின் போதனைகளினால் இந்து மத தத்துவங்கள் பயன் அடைந்துள்ளன.
புத்த மதத்தினால் இந்து மதத்திற்கு எவ்விதமான தாக்கம் ஏற்பட்டது என்பதைக் குறித்து பல அறிஞர்கள் ஆராய்ந்து உள்ளனர்.
புத்தரது கருத்துக்களின் தாக்கத்தால் ஆதிசங்கரரையும் பிரசன்ன புத்தர் என்று பொருள்படும் சங்கரரும் புத்தரே என்றும் சிலர் கூறினர். இந்து மதத்தின் சிறந்த தத்துவ ஞானியான ஆதிசங்கரருக்கு இதுபோன்று புத்தமதத்தினால் தாக்கம் ஏற்பட்டது. ஜெயதேவா தனது கீர்த்தனையான கீத கோவிந்தத்தில் புத்தரை மகா விஷ்ணு ஆகவும் அகிம்சையை போதிக்க வந்த கடவுள் என்றும் கூறியுள்ளார். ஆகவே, புத்தரின் வருகைக்கு பின்னர் இந்து மதம் புத்த இந்து மதமாகவோ, அல்லது இந்து புத்த மதமாகவோ மாறியது. ஆகவே இவை இரண்டையும் இன்று பிரிக்க இயலாது.
சுவாமி விவேகானந்தரும் புத்தரைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.
புத்தர் பிறந்த ஊரில் இந்தியாவிற்கு ஆன்மிகத் தலைவர் ஒருவர் தேவையாக இருந்தது. வேதம், ஜாதி மதம், வழிபாட்டு முறைகள் ஆகிய எவற்றிற்கும் புத்தர் தலை வணங்கவில்லை. அனைத்திற்கும் காரணங்களையே அவர் தேடினார். உண்மையை அச்சமின்றி தேடினார். அதேபோல் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்ற அவரது கொள்கையை உலகம் அதுவரை கண்டதில்லை.
எந்த ஆசிரியரையும் விட அவர் உண்மையாகவும், தைரியமாகவும் செயல்பட்டார்.
நற்பண்புகளுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உலகிற்கு அளித்தவர் அவர்.
நன்மையானவற்றிற்கு நன்மையை செய்பவரும், அன்பிற்கு அன்பு காட்டுபவரும் அவர்.
அனைவரும் சமம் என்பதை போதித்தவர் புத்தர். ஆன்மிகத்தில் ஆணும் பெண்ணும் சமமான உரிமை பெற்றவர்கள் என்றார்.
புத்தரின் கொள்கைகளும் போதனைகளும் இந்தியாவில் பின்பற்றப்படுவதால் இந்தியாவை புத்த இந்தியா என்றே அழைக்கலாம் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.
இந்து மத தத்துவத்தில் சிறந்து விளங்கும் தத்துவ ஞானிகளில் ஒருவர் இவரை புகழ்ந்து கூறும் போது இன்றைய இந்து மதம் கொள்கைகளினால் புத்த இந்து மதம் என்று அழைப்பது தவறாகுமா?
இந்திய நாட்டின் கிரீடத்தில் இருக்கும் ஆபரணத்தைப் போன்றவர் புத்தர். அந்த ஆபரணம் எல்லா மதங்களின் வழிபாட்டு முறைகளையும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள இந்து மதத்தின் இத்தன்மை பல ஆன்மிகத் தலைவர்களின் கருத்தாக உள்ளது. அவற்றில் அவர்களின் தலைமையானவர் புத்தர். இந்தியாவின் மதசார்பற்ற நிலையை இதுவே காக்கிறது.
புத்த கயாவில் புத்தருக்கு ஏற்பட்ட ஞானம் இந்து மதத்திற்கும் ஒளியை அளித்தது.
பழமையான இந்நாட்டின் முதல் சேவகனான நான் புத்தரை இந்து மதத்தை சீர்த்திருத்த மட்டும் வந்தவர் என்று கருதாமல் உலகையே சீர்த்திருத்தியவர் என்று கருதுகிறேன். உலக நாடுகள் அனைத்திற்கும் புதிய வகையான கண்ணோட்டத்தையும் வாழும் வகையையும் புத்தர் தனது போதனைகள் மூலம் அளித்துள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் புத்த கயாவிற்கு ஆன்மிகப் பயணமாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை நான் உணர்கிறேன். இந்தியாவில் நாங்களும் புத்த கயாவை மேலும் மேம்படுத்தி, அதை ஆன்மிக தலைநகராக மாற்றவும் இந்தியாவிற்கும், உலகில் உள்ள புத்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தவும் விரும்புகிறேன். புத்த மத நாடுகளின் ஆன்மிக தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசு இந்த இடத்தை மேம்படுத்த எல்லா வசதிகளையும் அளிக்க நடவடிக்கைகளை எடுக்கும்.
புத்த மதத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர்கள் அளித்த அறிக்கை நான் படித்து மகிழ்ச்சி அடைந்தேன். பல விவாதங்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை உருவானது. உலக நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்த ஆவணம் உள்ளது. பொறுமை, கருணை, ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவை பற்றி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இந்த முயற்சிக்கு அவர் தொடர்ந்து அளிக்கும் ஆதரவு எங்களுக்கு மேலும் வலுவை அளிக்கிறது.
மீண்டும் உங்களை பாராட்டி உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன். உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் மோதல்கள் இல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த மாநாடு நம்பிக்கையை அளிக்கிறது. வருங்கால சந்ததியினர் அமைதியுடன் வாழ தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் உங்களுக்கு நான் மீண்டும் வாழ்த்து கூறுகிறேன். இது நமக்கு மட்டுமல்ல, மனித இனம் அனைத்தும் முன்னேறுவதற்கும் நமது பூமித்தாய் அளித்த அழகிய சுற்றுச்சூழல் உருவாவதற்கும் இது மிகவும் அவசியமாகும்.
உங்களுக்கு மீண்டும் நன்றி.
Some glimpses from Mahabodhi Temple. Feeling very blessed. pic.twitter.com/VF8oBml7EN
— Narendra Modi (@narendramodi) September 5, 2015
Some glimpses from Mahabodhi Temple. Feeling very blessed. pic.twitter.com/VF8oBml7EN
— Narendra Modi (@narendramodi) September 5, 2015