Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லி கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை வீரர்களின் பேரணியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு. ராஜ்நாத் சிங் அவர்களே, திரு. அஜய் பட் அவர்களே, முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் செளகான் அவர்களே, முப்படைகளின் தளபதிகளே, பாதுகாப்புச் செயலாளர் அவர்களே, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் அவர்களே, மதிப்புமிக்க விருந்தினர்களே, தேசிய மாணவர் படையைச் சேர்ந்த எனது இளம் தோழர்களே!

இன்று நாட்டின் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான பஞ்சாயத்துத் தலைவர்கள் நம்மிடையே உள்ளனர். அவற்றை அரசு துடிப்பான கிராமங்களாக உருவாக்கி வருகிறது. இது தவிர, நாடு முழுவதிலுமிருந்து சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான சகோதரிகள் உள்ளனர். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

“ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற உணர்வை என்.சி.சி பேரணி தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. 2014-ஆம் ஆண்டில், 10 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். இன்று 24 நட்பு நாடுகளைச் சேர்ந்த  வீரர்கள் இங்குக் கூடியுள்ளனர். உங்கள் அனைவரையும், குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள இளம் தேசிய மாணவர் படை வீரர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

எனது இளம் நண்பர்களே,

இந்த ஆண்டு நாடு தனது 75-வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த வரலாற்று மைல்கல் நாட்டின் ‘மகளிர் சக்தி’க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் இவ்வளவு  அதிக எண்ணிக்கையில்  மகளிர் குழுக்கள் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். ஒரு காலத்தில் மகள்களின் பங்கேற்பு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே என மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இன்று, இந்தியப் பெண்கள் நிலம், கடல், வானம் மற்றும் விண்வெளியில் எவ்வாறு சிறந்து விளங்குகிறார்கள் என்பதை உலகம் காண்கிறது. இது கடந்த 10 ஆண்டுகாலத் தொடர் முயற்சிகளின் விளைவாகும். இந்தியப் பாரம்பரியத்தில் பெண்கள் எப்போதும் ஒரு சக்தியாகப் பார்க்கப்படுகிறார்கள். பாரத மண்ணில் ராணி லட்சுமிபாய், ராணி சென்னம்மா, வேலு நாச்சியார் போன்ற வீரப் பெண்கள் இருந்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பல பெண் புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களைத் தோற்கடித்தனர். கடந்த 10 ஆண்டுகளில், எங்கள் அரசு மகளிர் சக்திக்குத் தொடர்ந்து அதிகாரம் அளித்து வந்துள்ளது.

நண்பர்களே,

இந்தியாவில் உற்பத்தி, தற்சார்பு இந்தியா  ஆகிய  இரண்டு இயக்கங்களும் உங்களைப் போன்ற இளைஞர்களுக்கானவை. இந்த இரண்டு இயக்கங்களும் பாரதத்தின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட முயற்சிகளால், பாரதத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் நமது இளைஞர் சக்தியின் புதிய பலமாக, நமது இளைஞர் சக்தியின் புதிய அடையாளமாக மாறியுள்ளது. இன்று, இந்தியாவில் 1.25 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட புத்தொழில்  நிறுவனங்கள்  மற்றும் 100 க்கும் அதிகமான யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்பு, 2ஜி, 3ஜி-க்காக மட்டுமே நாம் போராடிக் கொண்டிருந்தோம். இன்று 5ஜி சேவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைகிறது.

எனது இளம் நண்பர்களே,

‘வளர்ச்சி அடைந்த பாரதத்தை’ உருவாக்கும் பணியில் உங்கள் பங்கேற்பு முக்கியமானது. உங்களைப் போன்ற இளைஞர்களுக்காக அரசு எனது பாரதம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இது 21-ஆம் நூற்றாண்டு பாரதத்தின் இளைஞர்களுக்கான மிகப்பெரிய அமைப்பாக மாறியுள்ளது. மூன்றே மாதங்களில், ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் இதில் பதிவு செய்துள்ளனர். நீங்கள் மைகவ் தளத்திற்கு வருகை தந்து ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ குறித்த உங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். உங்கள் பங்கேற்பின் மூலமே உங்கள் கனவுகள் நனவாகும். இந்த மகத்தான நிகழ்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்.

***

(Release ID: 2000077)

ANU/SMB/BR/RR