Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லியில் வனிஜ்யா பவன் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை


அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எனது சகாக்களான, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி அவர்களே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் திரு.சி.ஆர்.சவுத்ரி அவர்களே, வர்த்தக அமைச்சகம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகளே, இங்கு கூடியிருக்கும் உயர்பதவியில் இருப்பவர்களே…

      முதலாவதாக, வனிஜ்யா பவனுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வனிஜ்யா பவன் கட்டி முடிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். இதன் பலன்களை பொதுமக்கள் மிக விரைவில் பெறத் தொடங்குவார்கள்.

      நண்பர்களே, மற்ற அனைத்தையும் விட காலத்தை மட்டும் குறிப்பிட்டு நான் பேசுவதற்கு காரணம், இந்த அரசின் பதவிக்காலத்தில் அடிக்கல் நாட்டுவதற்கு அல்லது திறந்துவைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தபோது, ஒரு விஷயம் பொதுவானதாக இருந்துள்ளது. பொதுவான விஷயம் என்பது, குறிப்பிட்ட அரசுகள் பணியாற்றும் விதத்தை இந்தக் கட்டிடங்கள் பிரதிபலிப்பதாக இருந்துள்ளன. புதிய இந்தியாவை நோக்கிச் செல்லும் நாட்டுக்கும், பழைய முறைக்கும் இடையே உள்ள இடைவெளியை இதன் மூலம் அளவிட முடிகிறது.

      நண்பர்களே, நான் சில உதாரணங்களை உங்களிடம் குறிப்பிட விரும்புகிறேன். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மையம், மக்களுக்காக 2016-ம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்டது என்பது எனது நினைவில் உள்ளது. எனினும், இதற்கான அறிவிப்பு அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் வெளியிடப்பட்டது. கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு 12 ஆண்டுகள் பிடித்தது. நாட்டு மக்களுக்கு கடந்த ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை கட்ட 1992-ம் ஆண்டில் முடிவுசெய்யப்பட்டது. எனினும், இதற்கு 2015-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இது நாட்டு மக்களுக்கு 2017-ம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்டது. அதாவது, இதனை கட்டி முடிப்பதற்கு 23-24 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நண்பர்களே,

      மத்திய தகவல் ஆணையத்துக்கான புதிய கட்டிடத்தை நாட்டுக்கு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அர்ப்பணித்தேன். மத்திய தகவல் ஆணையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை, 12 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. எனினும், கட்டுமானப் பணிகள், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலேயே தொடங்கப்பட்டன. மேலும், திட்டமிடப்பட்ட காலத்துக்குள்ளேயே கட்டி முடிக்கப்பட்டது.

      அலிப்பூர் சாலையில் அம்பேத்கர் தேசிய நினைவகம் கட்டப்பட்ட மற்றொரு உதாரணமும் உண்டு. இந்தக் கட்டிடமும் கூட, நாட்டு மக்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்டது. இந்த நினைவகத்தை கட்டுவது குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில், இதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இருந்தாலும், அதற்குப் பிறகு, அனைத்துப் பணிகளும் 10-12 ஆண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டன.

      இந்த நான்கு அடையாளங்களின் வரலாறு என்பது, டெல்லியில் உள்ள கட்டிடங்களில், அரசு தனித்தனியாக செயல்படாதபோது, அனைத்து துறைகளும், அனைத்து அமைச்சகங்களும் தனிமையிலிருந்து விடுபட்டு, ஒன்றாக இணைந்து பணியாற்றும்போது, பணிகள் வேகமாக நிறைவடைகின்றன என்பதைக் காட்டுகிறது. தடைகளை ஏற்படுத்துவது, குழப்பங்களை உருவாக்குவது, தாமதப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது ஆகியவற்றிலிருந்து நாடு முன்னேறி வருகிறது.

      டெல்லியில் ஐந்தாவது அடையாளத்தை சேர்ப்பதற்கான தொடக்கம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

      வர்த்தகத் துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் உள்ள தனிமையை உடைக்கும் பணிகள், ஒரே கூரையின் கீழ், சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இது நடைமுறைப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.

      நண்பர்களே, இந்தியா இன்று மிகவும் முக்கியமான சூழலில் உள்ளது. நமது நாட்டில் பணியாற்றும் வயதில் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, எந்தவொரு நாட்டுக்கும் கோபத்தை ஏற்படுத்தும். நமது ஜனநாயகத்துக்கு நமது இளைஞர்கள் புதிய சக்தியை வழங்குகிறார்கள். 21-ம் நூற்றாண்டுக்கான இந்தியாவின் அடித்தளமாக இந்த இளைஞர்கள் திகழ்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் நிறைவேற்றுவதில் ஒரு குறிப்பிட்ட சில அமைச்சகங்களுக்கு மட்டுமே பொறுப்பு இருப்பதாக கூற முடியாது. இது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு ஆகும்.

                கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளின் பலனை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது. இதற்கு அந்தக் காலத்தில் இருந்த பல்வேறு காரணங்கள் உண்டு. இருந்தாலும், இந்த நூற்றாண்டில் ஏற்படும் தொழில்புரட்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதற்கு தற்போது பல்வேறு காரணங்கள் உள்ளன. நான்காவது தொழில் புரட்சிக்கு அடிப்படையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளது. இந்தத் துறையில் பல நாடுகளைவிட முன்னணியில் இந்தியா உள்ளது.

      வர்த்தக அமைச்சகம் நிறைவேற்றியுள்ள அனைத்து செயல்பாடுகள் உள்பட அனைத்து இலக்குகளையும் நிறைவேற்றுவதற்கு முக்கியமானதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் இருப்பதை உங்களால் காண முடியும். இந்த வனிஜ்யா பவனை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கட்டிடம் கட்டப்பட உள்ள நிலம், இதற்கு முன்னதாக, விநியோகம் மற்றும் அகற்றல் பிரிவு தலைமை இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது, 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அமைப்பு மூடப்பட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அமைப்பாக – அரசின் மின்னணு சந்தைப் பகுதியாக மாறியுள்ளது. அரசுக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கான வழியை அரசின் மின்னணு சந்தைப் பகுதி (Government-e-Marketplace- GeM) முற்றிலும் மாற்றியமைத்துவிட்டது.

      இன்று, சிறு, பெரு விற்பனையாளர்கள் என 1.17 லட்சத்துக்கும் மேலான நிறுவனங்கள், இந்த அடித்தளத்தில் இணைந்துள்ளன. அரசு மின்னணு சந்தைப்பகுதி மூலம், இந்த விற்பனையாளர்களுக்கு 5 லட்சத்துக்கும் மேலான ஆர்டர்கள் கிடைத்துள்ளன. மிகவும் குறுகிய காலத்தில், அரசின் மின்னணு சந்தைப் பகுதி மூலம், ரூ.8,700 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

      நாட்டின் மிகவும் தொலைதூரப் பகுதியில் உள்ள சிறு தொழில்முனைவோர்கூட, அரசுக்கு நேரடியாக தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியதற்காக வர்த்தக அமைச்சகம் பாராட்டுக்குரியது. எனினும், மக்களாகிய உங்களுக்கான நீண்ட பயணத்தின் தொடக்கமாகவே இதனை நான் கருதுகிறேன்.

      அரசின் மின்னணு சந்தைப்பகுதியை எவ்வாறு விரிவுபடுத்துவது, இதனால், நாட்டின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை மற்றும் சிறு தொழில்முனைவோரை சர்வதேச வணிகத்தின் பக்கம் கொண்டு செல்ல முடியும் என்பதை நிறைவேற்ற, இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இன்று, பயன்பாட்டில் உள்ள 40 கோடிக்கும் மேலான ஸ்மார்ட்போன்கள், இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைந்த விலையில் கிடைக்கும் டேட்டா ஆகிய அனைத்தும் உங்களது பணியை மிகவும் எளிதாக மாற்றியுள்ளன.

      நண்பர்களே, நமது நாட்டில் Bharah Samarthanam Kim Door Vyavasayinam என்று கூறப்படுவது உண்டு. அதாவது, சக்திவாய்ந்த நபருக்கு எதுவும் கனமானதாக இருக்காது என்பதே இதன் அர்த்தம். அதேபோல, வர்த்தகர்களுக்கு எந்த இடமும் தொலைவானதாக இல்லை. இன்று, வர்த்தகத்தை தொழில்நுட்பம் மிகவும் எளிதாக மாற்றியுள்ளது. நாளுக்கு நாள் தொலைவு என்பது குறைவானதாக மாறி வருகிறது. நாட்டின் வர்த்தகத்தில் எந்த அளவுக்கு தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகிறோமோ, அதற்கு ஏற்ப பலன்களும் அதிகமாக கிடைக்கும்.

      ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குள், இந்தியாவில் தொழில் செய்வதை ஜிஎஸ்டி எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை நாம் பார்த்துள்ளோம். தொழில்நுட்பம் இல்லாமல் இருந்திருந்தால், இதனை நிறைவேற்றியிருக்க முடியுமா? இல்லை. இன்று மறைமுக வரி அமைப்புக்குள் வந்த ஏராளமான நபர்கள், தங்களை அதிவேகமாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஜிஎஸ்டி-யே காரணம்.

      நாடு சுதந்திரமடைந்தது முதல், மறைமுக வரி முறையில் 60 லட்சம் பேர் மட்டுமே இணைந்திருந்த நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 11 மாதங்களுக்குள் 54 லட்சத்துக்கும் அதிகமானோர் அதில் இணைய விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஜிஎஸ்டி-யில் பதிவைப் பெற்றுள்ளனர். இதன்மூலம், பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, ஏற்கனவே ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. 

      செயல்பாடுகளை எளிமையாக்கும்போது, குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை என்ற வழியை பின்பற்றும்போது, நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இது காட்டுகிறது. வளர்ச்சிக்கான பாதையில் இணைவதற்கு அதிக அளவிலான மக்கள் தற்போது முன்வந்து கொண்டிருக்கின்றனர்.

      நண்பர்களே, கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களுக்கு ஏற்ற, வளர்ச்சிக்கு ஏற்ற மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதை நீங்கள் சிறப்பாக அறிந்துகொண்டிருக்கிறீர்கள். ஏராளமான சர்வதேச சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் பேரியல் பொருளாதார காரணிகள் தொடர்ந்து நிலையாக உள்ளது. பணவீக்கம் அல்லது நிதிப் பற்றாக்குறை அல்லது நடப்பு கணக்கு இருப்பு என இந்த அனைத்து காரணிகளும், முந்தைய அரசுகளுடன் ஒப்பிடும்போது, தற்போது நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளன.

      இன்று, உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த காலாண்டில், 7.7% என்ற அளவைத் தொட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு, நாட்டின் வெளிநாட்டு பரிமாற்ற கையிருப்பு ஆகியவை கடந்த நான்கு ஆண்டுகளில் சாதனை படைத்துள்ளன.

      இன்று, அந்நிய நேரடி முதலீட்டுக்கான நம்பகத்தன்மை குறியீட்டில், சிறப்பான முறையில் செயல்பட்டுவரும் முதல் இரண்டு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. எளிதாக தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் 142-வது இடத்திலிருந்து 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வர்த்தக சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு உள்ள நாடுகள் குறித்த குறியீட்டில் (Logistics Performance Index) 19 புள்ளிகள் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் போட்டியிடும் தன்மை குறித்த குறியீட்டில் (Global Competitiveness Index) 71-வது இடத்திலிருந்து 39-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சர்வதேச புத்தாக்க குறியீட்டில் 21 இடங்கள் முன்னேற்றம் பெற்றுள்ளது. இவையெல்லாம் அதே கனவின் மூலம் கிடைத்த பலன்கள் தான்.

      நிதி சேவைகளை வழங்குவதில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தும் (Fin Tech) முதல் 5 நாடுகளில் இந்தியாவும் அண்மையில் இடம்பிடித்துள்ளது என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். நாம் இப்போது பார்த்த நேர்மறையான குறியீடுகள் இருந்தபோதிலும், நம் முன்னே இருக்கும் மிகப்பெரும் கேள்வி, அடுத்தது என்ன என்பதுதான்.

      நண்பர்களே, வளர்ச்சி வீதத்தை 7-8% என்ற அளவையும் தாண்டி, இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெறுவதற்கான இலக்கை நிறைவேற்ற நாம் பணியாற்ற வேண்டும். இந்தியாவின் பொருளாதார அளவு 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டுவதற்கு, இந்தியா எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பதை உலகம் இன்று மிகவும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

      வர்த்தக அமைச்சகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இந்த இலக்கை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். பொருளாதார நிலையில் ஏற்படும் இந்த வளர்ச்சி, நாட்டில் உள்ள சாதாரண மனிதனின் வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புகொண்டுள்ளது.

      இதன் காரணமாகவே, எளிதில் வர்த்தகம் செய்வது, எளிதில் தொழில் செய்வது குறித்து நான் பேசும்போதெல்லாம், எளிதில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று பேசுவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட உலகில், ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் தொடர்புடையதாகவே உள்ளன.

    மின்சார இணைப்பை விரைவில் பெற முடியும்போது, கட்டுமானப் பணிக்காக அனுமதி விரைவில் வழங்கப்படும்போது, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆகியவை, தங்களது செயல்பாடுகளுக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளாதபோது, இதன்மூலம், சாதாரண மக்களும் பயனடைவார்கள். இதன் காரணமாக, இதுவும் உங்களுக்கு சவால்களாக உள்ளன. பல்வேறு துறைகளிலும் என்னென்ன இடையூறுகள் இருக்கின்றனவோ, எங்கெல்லாம் செயல்பாடுகள் தனித்தனியாக நடைபெறுகிறதோ, இவை அனைத்தும் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் சரிசெய்யப்பட வேண்டும். குறிப்பாக, கட்டமைப்புத் துறை எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளைக் கூறலாம். எங்கெல்லாம் பரிவர்த்தனை செலவு அதிகமாக உள்ளதோ, அவை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு தடையாக இருக்கும். இவை சேவைகளை பல்வேறு வகையிலும் வழங்குவதற்கு போதுமானதாக இல்லாத நிலையை ஏற்படுத்தும். இதனை முடிவுக்கு கொண்டுவந்து, மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது.

      சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான துறையில், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பொறுப்பை வணிகத் துறை, அண்மையில் ஏற்றுக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முயற்சி, நாட்டில் வர்த்தகச் சூழலை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்கை அளிக்கப் போகிறது.

      நண்பர்களே, ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துக்கான செயல் திட்டம் என்பது தற்போதைய தேவை. புதிய இந்தியாவுக்கும் இது அவசியமானது. கொள்கைகள் மற்றும் தற்போதுள்ள வழிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவருவது, நவீன கருவிகளின் பயன்பாட்டை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம், இந்த இலக்கை நிறைவேற்ற முடியும்.

      ஆன்லைன் வலைதளத்தை அமைப்பதற்கான பணிகளை வணிகத் துறை மேற்கொண்டுவருவதாக என்னிடம் தெரிவித்தனர். சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தவும், புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்லவும், அனைத்து மாநிலங்களும், அனைத்து அமைச்சகங்களும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியமானது. இதனையே “ஒட்டுமொத்த அரசும் செயல்படுவது” என்று அழைக்கிறோம். இதனை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது அவசியம்.

      சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான சூழலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படுத்த வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கான கவுன்சில் (Council for Trade Development and Promotion) முயற்சி மேற்கொண்டுவருவது சிறந்த நடவடிக்கையாக உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க நாம் விரும்பினால், இந்த விவகாரத்தில் மாநிலங்களை தீவிரப் பங்காளர்களாக உருவாக்க வேண்டியது கட்டாயம்.

      மாநில அளவிலான ஏற்றுமதி உத்திகளை வகுத்து, பொருளாதார உதவிகளை அளிப்பது மற்றும் அனைத்து தரப்பினரையும் ஒன்றுசேர்ப்பது, ஆகியவற்றின் மூலம், மாநில அளவிலான உத்திகளை தேசிய வர்த்தக கொள்கைக்கு இணங்க செயல்பட வைப்பதில் நாம் வேகமாக செயல்படும்போது, நாட்டுக்கு அதிக அளவில் பயன்கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். 

      நண்பர்களே, சர்வதேச சந்தையில் இந்தியாவின் இருப்பை அதிகரிக்கச் செய்ய, நமது பாரம்பரிய பொருட்கள் மற்றும் சந்தையை பராமரிப்பதுடன் புதிய பொருட்கள் மற்றும் புதிய சந்தையில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானது. நாட்டுக்குள் நிலவும் சூழ்நிலைகளை எதிர்கொள்வதுடன், நாட்டுக்கு வெளியே நிலவும் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில், நம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

      குறுகிய கால மேம்பாட்டு பலன்கள் மற்றும் நீண்டகாலம் நீடித்திருப்பது ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையை பராமரிப்பதுடன், முன்னோக்கி நாம் செல்லும்போது, அதன் பலன்களை நம்மால் காண முடியும். வெளிநாட்டு வர்த்தக கொள்கை தொடர்பான நடுத்தரகால மறுஆய்வை கடந்த ஆண்டில் நாம் மேற்கொண்டது, மிகவும் நேர்மறையான நடவடிக்கையாக நான் கருதுகிறேன். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகையை அதிகரிப்பது மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை வலுப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாற்றமும் பாராட்டுக்குரியது. இது நாட்டின் வேலைவாய்ப்பு தொடர்பான தேவைகளுடன் நேரடி தொடர்புடையது.

      மற்றொரு முக்கியமான விவகாரம் என்னவென்றால், பொருட்களின் தரம். இதன் காரணமாகவே, செங்கோட்டையில் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஆற்றிய உரையின்போது, குறைபாடுகள் இல்லாத – பாதிப்புகள் இல்லாத  Zero (Defect-Zero Effect) பொருட்களை தயாரிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன். சிறிய தொழிற்சாலையாக இருந்தாலும் அல்லது பெரிய தொழிற்சாலையாக இருந்தாலும், ஒவ்வொரு உற்பத்தியாளரையும், எந்தவொரு குறைபாடும் இல்லாத பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம், நாம் ஏற்றுமதி செய்த பொருளை யாரும் திருப்பி அனுப்ப மாட்டார்கள். இதற்கும் மேலாக, பாதிப்பு இல்லாத பொருட்களை தயாரிப்பது குறித்து நான் விவாதித்தேன். அதாவது, சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் நமது பொருட்கள் ஏற்படுத்திவிடக் கூடாது.

      தரமான பொருட்களை தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு வலுசேர்க்கும். மேலும், புதிய இந்தியாவின் அடையாளத்துக்கு வலுசேர்க்கும். நமது நாட்டில் மொபைல் போன்களை தயாரிப்பதற்காக கடந்த 2014-ம் ஆண்டில் 2 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 120-ஆக உயர்ந்துள்ளது என்பதைப் பார்த்து நீங்கள் பெருமையடைய வேண்டும். இந்த தொழிற்சாலைகள் மூலம், நமது நாட்டிலேயே உலகத் தரம் வாய்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

      நண்பர்களே, இது மனமார்ந்த சபதத்தை ஏற்றுக் கொள்வதற்கான நேரம். சவால்களை ஏற்றுக் கொள்வதற்கான நேரம். ஒட்டுமொத்த சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை இரண்டு மடங்காக, அதாவது தற்போதைய 1.6%-லிருந்து 3.4%-ஆக அதிகரிப்பதை உறுதிப்படுத்த வணிகத் துறை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உலகப் பொருளாதாரத்துக்கான பங்களிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி-க்கு இணையாக இருக்க வேண்டும். இது நமது நாட்டில் வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளை உருவாக்கும் மற்றும் நமது தனிநபர் வருமான அளவும் அதிகரிக்கும். இதனை நிறைவேற்ற அரசின் அனைத்து துறைகளும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

      இறக்குமதி விவகாரத்தில் மற்றொரு உறுதியை எடுக்க வேண்டும். சில துறைகளில் இறக்குமதியை நாம் சார்ந்திருப்பதை நம்மால் குறைக்க முடியுமா? எரிசக்தி அல்லது மின்னணு சாதனங்கள் அல்லது ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கருவிகள் அல்லது மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்கிறோமா? இதனை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா? உள்நாட்டு உற்பத்தியின் மூலம், இறக்குமதியில் 10%-ஐ குறைத்தாலே, நாட்டின் வருவாயை ரூ.3.5 லட்சம் கோடி வரை உயர்த்த முடியும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு சிறந்த வழியாக மாறும்.

      மின்னணு பொருட்கள் உற்பத்தி குறித்த உதாரணத்தை நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். நமது ஒட்டுமொத்த மின்னணு பொருட்களின் தேவையில், 65%-ஐ வெளிநாடுகளிலிருந்து நாம் இன்னும் வாங்க வேண்டும் என்பது உங்கள் அனைவருக்கும் சவாலாக இல்லையா? இந்த சவாலை ஏற்றுக் கொண்டு, மொபைல் போன் உற்பத்தித் துறையில் செய்ததைப் போன்று, மின்னணு உபகரணங்கள் உற்பத்தியில், நாட்டை சுயசார்பு கொண்டதாக உங்களால் மாற்ற முடியுமா?

      நண்பர்களே, இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் முக்கியமான நடவடிக்கையை நீங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளீர்கள். அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் சரக்கு மற்றும் சேவைகள் கொள்முதலை, உள்நாட்டு விநியோகிப்பாளர்களிடமிருந்தே வாங்க வேண்டும் என்று பொது கொள்முதல் (இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு முக்கியத்துவம்) உத்தரவு மூலம் வலியுறுத்தப்பட்டது. இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு முயற்சியையும் ஆர்வமுடன் மேற்கொள்ள வேண்டும்.

                இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும், அரசின் அனைத்துப் பிரிவுகளும் உங்களது கண்காணிப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மற்ற பல்வேறு முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவது அல்லது ஒழுங்குமுறை கட்டமைப்பை எளிதாக மாற்றுவது அல்லது முதலீட்டாளர்களுக்கு ஏற்ற கொள்கைகளை வகுப்பது, கட்டமைப்பை மற்றும் சரக்குப் போக்குவரத்தை வலியுறுத்துவது என அனைத்துமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம், இந்தியாவை சுயசார்புடையதாக மாற்ற முடியும்; எனவே, 21-ம் நூற்றாண்டின் தொழில்புரட்சியில் சிறிதளவு கூட இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படாது.

      இந்தப் பெருமை, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துடன் அதிகரிக்க வேண்டும் என்பது எனது ஒரே எதிர்பார்ப்பு. இது புதிதாக கட்டப்பட உள்ள வனிஜ்யா பவனுக்கு பெருமை தேடித் தருவதாக இருக்கலாம்.

                நண்பர்களே, நான் இங்கு வருவதற்கு முன்னதாக எனது கையால், உங்களுக்காக சிறப்பான செயலை செய்துள்ளேன். இந்த வளாகத்தில் மகிள  (Bakul or Maulshri) மரக்கன்றை நடும் அற்புதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. புராண காலம் முதலே மகிள மரத்துக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. இதில், முற்றிலும் மருத்துவக் குணங்கள் உள்ளன. பல ஆண்டுகாலத்துக்கு நிழல் தரும். இதோடு மேலும் ஆயிரம் மரங்களை இங்கு நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.

      நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அமைப்புடன் புதிய இந்தியாவை உருவாக்க நீங்கள் சிறந்த முயற்சியை மேற்கொள்ளலாம், அனைவருமே சிறப்பான முயற்சியை அளிக்க வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பைத் தெரிவித்து எனது உரையை முடிக்கிறேன். 

வனிஜ்யா பவனை கட்டுவதற்கான பணியைத் தொடங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,